நம்ம ஊரு கதைகளின் நாயகன் ரமேசின் கதை...| Dinamalar

நம்ம ஊரு கதைகளின் நாயகன் ரமேசின் கதை...

Updated : செப் 08, 2018 | Added : செப் 03, 2018
 நம்ம  ஊரு கதைகளின் நாயகன் ரமேசின் கதை...

வாழ்க்கையில் எப்போதாவது சோர்வு ஏற்படும் போது நான் இவரைத்தான் நினைத்துக் கொள்வேன் சோர்வு தீர்ந்து போகும் உற்சாகம் பிறந்துவிடும்
1br@மடியில்,‛ தசை சிதைவு நோய்' என்ற கொடிய மரணத்தைக் கட்டிக்கொண்டிருப்பவர் ஆனால் அதைப்பற்றி கவலையின்றி இன்றைக்கு நான் சந்தோஷமாக இருக்கிறேன் நாளையைப் பற்றிய கவலை எதற்கு என்று சொல்லும் மனிதர் இவர்.

இந்த எண்ணம் மட்டும் இவரை என் மனதில் உயர்த்தவில்லை, வாழும் இந்த வாழ்க்கையிலும், இந்த நாளிலும் தான் சார்ந்த இந்த சமூகத்திற்கு எப்படியாவது பயன்பட வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்கிறார் செயல்படுகிறார்.அவர் அப்படி என்ன செய்கிறார் செயல்படுகிறார் என்பதை பார்க்கும் முன் அவரைப்பற்றிய ஒரு சிறு குறிப்பு

நா.ரமேஷ்

27 வயது வரை சந்தோஷமாக சராசரியாக உலா வந்த எளிய குடும்பத்தின் இளைஞர்,சொந்த தொழில் செய்து வயதான பெற்றோரை தெய்வமாக மதித்து காப்பாற்றி வந்தவர்.

அடிக்கடி காலில் ஏற்பட்ட வலிக்கு காரணம் ‛மஸ்குலர் டிஸ்ட்ரபி' எனப்படும் தசை திசை நோய் என்பது தெரியவந்தது.இந்த நோய் வந்தால் நடக்க முடியாது, விழுந்தால் கை ஊன்றி எழ முடியாது, எங்கே போனாலும் ஊர்ந்து ஊர்ந்துதான் போகவேண்டும், அப்படி பத்தடி துாரம் போவதற்கே ஒரு மணிநேரமாகிவிடும் உடல் எடை கூடிக்கொண்டே போய் படுத்த படுக்கயைில் இருக்க நேரிடும் ஒரு நாள் இறக்கவும் நேரிடும்.

நாளாக நாளாக உடல் அவயங்களை ஒவ்வொன்றாக இந்த நோய் தின்று கொண்டே இருக்கும் சொல்லாமல் கொள்ளாமல் ஒரு நாள் இதய தசையை தாக்கி மரணத்திற்கு கொண்டு சென்றுவிடும் இன்னும் மருந்து கண்டுபிடிக்க முடியாத இ்ந்த நோய்க்கு ஆளானவர்களில் ஒருவர்தான் நமது ரமேஷ்.

இவரிடம் பாதிக்கபடாமல் இருப்பது நல்ல சிந்தனையும் எழுத்தாற்றாலும் மட்டும்தான் இதை வைத்து நிறைய துணுக்குகள் கதை கவிதைகள் எழுதி அது பிரசுரமாவதன் மூலம் வரும் வருமானத்தில்தான் தன்னையும் பார்த்துக்கொண்டு வயதான பெற்றோர்களையும் பராமரித்துக் கொண்டு வருகிறார்.

பழனியில் இருந்தவர் வாடகை கொடுத்து கட்டுப்படியாகததால் பக்கத்தில் உள்ள நெய்காரப்பட்டி என்ற கிராமத்திற்கு இடம் பெயர்ந்துவிட்டார் இந்த வீட்டையும் காலி செய்யச்சொன்னதால் இப்போது இன்னும் தள்ளி வீடு பார்த்துக்கொண்டு இருக்கிறார்.

இத்தனை சிரமங்களுக்கு நடுவிலும் இவர் செய்துவரும் சாதனையைப் பார்ப்போம்

இன்றைய இயந்திர உலகில் குழந்தைகளுக்கு என்ன வேண்டுமானாலும் கிடைக்கிறது ஆனால் கதை சொல்லத்தான் ஆளும் இல்லை அவர்களிடம் சொல்வதற்கு நல்ல கதையும் இல்லை.

குழந்தைகளை எவ்வளவு பிடிக்குமோ அந்த அளவிற்கு குழந்தைகளுக்கான கதைகள் எழுதவும் ரமேஷ்க்கு ரொம்பபிடிக்கும்

நல்லொழுக்கத்தை மையப்படுத்தி பண்பாட்டை வலியுத்தி இவர் எழுதும் சின்ன சின்ன கதைகளை படிக்கும் எந்த குழந்தையும் நி்ச்சயம் பெற்றோரை நேசிப்பர் மறந்தும் சிறு தவறு செய்யக்கூட யோசிப்பர்.

இவர் குழந்தைகளுக்காக எழுதிய கதைகளை தொகுத்து நம்ம ஊரு கதைகள் என்று ஒரு புத்தகம் வெளியிட்டார் அதன் தொடர்ச்சியாக பாகம் இரண்டும், இப்போது பாகம் மூன்றையும் வெளியிட்டுள்ளார்.

மூன்றாவது பாகத்தில் சிறுவர்களுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் நீதிக்கதைகள் சொல்லியிருக்கிறார்.குழந்தைகளுக்கான எந்த புத்தகத்திலும் இ்ல்லாத தனிச்சிறப்பு இவரது புத்தகத்தில் உண்டு அது புத்தகம் நெடுகிலும் காணப்படும் விலங்குள் பறவைகளுக்கு குழந்தைகளே வண்ணம் தீட்டி மகிழலாம் என்பதுதான்.

சிறுவர் கதைகளை படிக்கும் போதே அதன் போக்கும் முடிவும் தெரிந்துவிடும் என்பதால் பெரியவர்கள் இதனை படிப்பதில்லை ஆனால் ரமேஷின் கதைகளில் முடிவை ஊகிக்கமுடியாதபடி ‛ட்விஸ்ட்' என்ற சொல்லக்கூடிய சுவராசியமான திருப்பங்களும் இருக்கின்றன.

உதாரணமாக மழையில் நனையும் ஒரு பெரியவரை பார்க்கும் சிறுவன் தன் கையில் உள்ள குடையை கொடுத்து ‛வீட்டிற்கு நனையாமல் செல்லுங்கள் தாத்தா' என்று சொல்கிறான்.

‛மழைவிட்டதும் வீட்டில் கொண்டு வந்து தருகிறேன்' என்று சொல்லி தாத்தாவும் குடையுடன் செல்கிறார்,மழைவிட்டு சில நாளானபிறகும் குடையை தாத்தா திருப்பிக் கொடுக்கவில்லை

திடீரென ஒரு நாள் அந்த சிறுவன் தாத்தாவை தேடிவருகிறான் தாத்தா குற்றஉணர்வோடு நிற்கிறார் அடுத்து என்ன நடக்கும்! சிறுவன் குடையைக்கேட்டு தாத்தாவிடம் சண்டை போடப்போகிறான் என்றுதானே நினைப்பீர்கள்? அதுதான் இல்லை இப்போது சிறுவன் கையில் புதுக்குடை அதை தாத்தாவிடம் கொடுத்து,‛ உங்களிடம் நான் கொடுத்தது பழைய குடை அதில் மழை ஒழுகும் இந்தாருங்கள் புதுக்குடை' என்று தந்துவி்ட்டு நடப்பான்.என்னல்லாம் முடியுமோ எப்போதெல்லாம் முடியுமோ அதை மற்றவர்களுக்கு செய்யுங்கள் என்று சொல்லும் ‛ஈகை' நீதி்க்கதை இது.

கதைகளில் குரங்கு,முதலை,சிங்கம்,நரி,கிளி,கரடி மட்டுமல்ல ஒட்டடைக்குச்சியும் விளக்குமாறும் கூட பேசும், நீதி சொல்லும்

பெற்றோர்களின் சிரமங்களை உணராமல் இன்றைய குழந்தைகள் உயர்ந்த விலை செல்போன்கள் உள்ளீட்ட பொருள்களை கேட்கின்றனர் இந்த மாதிரி குழந்தைகளை ‛வளர்ப்பு' என்ற கதையில் வரும் ஆசிரியை எப்படி திருத்தினார் என்ற ஒரு விஷயத்திற்காகவாவது தமிழ் படிக்கத்தெரிந்த அத்தனை குழந்தைகளிடமும் இந்த கதைப்புத்தகம் போய்ச்சேரவேண்டும்.

எழுதத் தெரிந்த ரமேஷ்க்கு இந்த புத்தகங்களை விற்பனை செய்ய திராணியும் இல்லை தெம்பும் இல்லை ஆகவே ‛நம்ம ஊரு கதைகள்' என்ற இந்த கதைப்புத்தகத்தை நீங்கள்தான் கேட்டு வாங்கி படிக்கவேண்டும் மொத்தமாக வாங்கி குழந்தைகளுக்கு படிக்கக் கொடுக்கவேண்டும்.

உடுமலைப்பேட்டையில் உள்ள ஜி.வி.ஜி.,விசாலாட்சி பெண்கள் கல்லுாரி சமீபத்தில் இவரது திறமையை ஊக்கப்படுத்தும் வகையில் இவரை தமது கல்லுாரிக்கு நேரில் வரவழைத்து கவுரவித்து மகிழ்ந்ததுடன் இவரது புத்தகங்களையும் அதிகமாக வாங்கி மாணவியருககு விநியோகத்து மகிழ்ந்தது.
வேறு எந்த வகையிலும் கையேந்தாத தன்மானமிக்க எழுத்தாளர் ரமேஷ்க்கு நீங்கள் செய்யும் பெரிய உதவி இந்த புத்தகம் விற்க உதவுவதுதான்.

இவர் கையால் எழுத சிரமப்படுகிறார் என்று முன்பு ஒரு முறை இவரைப்பற்றி எழுதியபோது இவருக்கு வீடு தேடிப்போய் மடிக்கணணி வழங்கிய ஈரநெஞ்சம் மகேந்திரன் மற்றும் ப்ரீதிஜோதிகணேஷ் ஆகியோருக்கு இந்த நேரத்தில் நன்றியை பதிவு செய்கிறேன், நீங்கள் செய்யப்போகும் உதவியை அடுத்து பதிவு செய்கிறேன்,நன்றி!

எழுத்தாளர் தன்னம்பிக்கையின் சின்னம் ரமேஷிடம் பேசுவதற்கான எண்கள்:9750474698,8610877108. அவரது மெயில் முகவரி:rameshsudalai1980@gmail.com

-எல்.முருகராஜ்

murugaraj@dinamalar.in

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X