கற்காலப் பாதைக்கு போக வேண்டுமா?| Dinamalar

கற்காலப் பாதைக்கு போக வேண்டுமா?

Added : செப் 04, 2018

அதிகம் சர்ச்சையாக பேசப்பட்ட, 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தல், முன்கூட்டியே வந்து விடும் என்ற பேச்சு, இனி அதிகமாக முன்னிறுத்தப்படாது. இப்போதைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் இடம் பெற்ற, சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசக் கட்சி ெவளியேறியதால், இக்கூட்டணியே சீர்குலைந்ததாக பேசப்பட்டது. அது, நடப்பில் அவ்வளவு பெரிய சாதனைகளை காட்டவில்லை. பார்லிமென்டை சிறிது காலம் முடக்க உதவியது. அடுத்ததாக, மஹாராஷ்டிராவில் தேசிய ஜனநாயக கட்சியின் தலைவரான சரத்பவார், மிகவும் மூத்த அரசியல்வாதி. அவர் என்று ராஜிவை வேண்டாம் என கருதி, மாநிலக் கட்சியாக நிலைக்கலாம் என்று நினைத்தாரோ, அன்றே, தேசிய அரசியலில் அவரது முக்கியத்துவம் அழியத் துவங்கியது.இது ஒரு புறம் இருக்க, இன்றைய நிலையில், ராஷ்ட்ரீய லோக்தள ஜனதா கட்சியின், லாலுபிரசாத் யாதவ், 'எதற்கு அவசரம்... தேர்தல் முடிவு கள் வந்ததும் ஐந்து நிமிடத்தில் பிரதமரைத் தேர்வு செய்யலாம்' என்கிறார். மம்தா, ராகுல் உட்பட யாரும் இதற்கு பதில் சொல்லவில்லை. இது, பா.ஜ.,விற்கு ஒரு, 'அட்வான்டேஜ்!' அதனால், இப்போது உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், 'லோக்சபா தேர்தல் திட்டமிட்ட படி, 2019ல் நடக்கும். அதற்கான தேர்தல் பணிகள், அந்த ஆண்டின், மே, 15ல் முடிவாகும்' என, அறிவித்திருக்கிறார். மற்ற அரசியல் கட்சி கள் இன்னமும் ஒரு முடிவைக் காண முயற்சிக்காத நிலையில், தேர்தல் உத்திகளில், பா.ஜ., முந்தி நிற்பதால், ராஜ்நாத் சிங் பேச்சு அழுத்தம் தருகிறது. இன்றுள்ள நிலையில், பா.ஜ., மீது அதிக கண்டனங்கள், நாடு முழுவதும் எழுந்திருக்கிறது. அக்கண்டனக் கணைகளைத் தாண்டி, அக்கட்சி இதுவரை கால்பதிக்காத பகுதிகளில் காட்டும் வேகத்தைப் பார்க்கையில், சில சர்வேக்கள், அக் கட்சி தான் அதிகமான இடங்களை பிடிக்கும் என்கின்றன. இது, இன்று முடிவாகும் விஷயம் அல்ல.அத்துடன், நாடு முழுவதும் ஒரே தேர்தல் வருமா... என்ற விவாதம் அதிகரித்திருக்கிறது.இந்தியா சுதந்திரம் அடைந்ததும், 1951 - 52ல் சட்டசபைத் தேர்தலும், லோக்சபா தேர்தலும் ஒரு சேர நடந்தது. இது, 1957, 1962 அதற்கு அடுத்ததாக, 1967 வரை நீடித்தது. அதற்குப் பின், மாநில அரசுகள், கவர்னர் ஆட்சி தொடர்ந்தது. தமிழகம் உட்பட பல ஆட்சிகள் இதில் சிக்கின. அதற்கு அவ்வப்போது மத்திய அரசு கூறிய வாதங்கள், உள்துறை அமைச்சகம் எடுத்த முடிவுகள் காரணமாயின. அந்த நிலையில் பல்வேறு மாநிலங்களில் ஜனாதிபதி ஆட்சி முடிந்ததும், மாநில சட்டசபைத் தேர்தல் மட்டும், வழக்கமாகி விட்டது. அதன்படி, 45 ஆண்டுகளாக மாநிலங்களுக்கும், மத்திய அரசுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் என்பது இயலாத காரியம் ஆகிவிட்டது.சட்டக்கமிஷன் அமைப்பு, நாடு முழுவதும் ஒரே தேர்தலை எதிர்க்கவில்லை. ஆனால், தேர்தல் கமிஷன் கூறும் விஷயம் முக்கியத்துவம் பெற்றது. ஒரே நேரத்தில் சட்டசபைத் தேர்தலையும், லோக்சபா தேர்தலையும் நடத்துவதற்கு, அரசியல் சட்ட விதிகளை மாற்ற வேண்டும் என்பது, சரியான தகவல். ஆனால், சிரோண்மணி அகாலி தளம், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி, சமாஜ்வாதி ஆகிய கட்சிகள், இன்று தங்கள் பலத்தை சட்ட சபையில் மீண்டும் தக்க வைக்க விரும்பி, ஒரே தேர்தல் நடைமுறையை விரும்புகின்றன. தமிழகத்தில், அ.தி.மு.க., இதை ஆதரித்தாலும், தி.மு.க., ஆதரிக்கவில்லை. தவிரவும், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் பட்சத்தில், அகில இந்திய கட்சிகள், வேட்பாளர் தேர்வில் எளிதாக கையாள முடியும். தாங்கள் வெற்றி பெற சாத்தியம் இல்லாத மாநிலங்களில், தங்களுடன் அணி சேர்ந்த கட்சியுடன், அங்கே கூட்டணி ஆட்சி கிடைத்தால், அதனால் ராஜ்யசபாவில் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் கருதும். மாநிலக் கட்சிகள் தேர்தல் வீழ்ச்சியை சந்தித்தால், அதற்குப் பின் அடுத்த ஐந்தாண்டுகளில், அக்கட்சித் தலைவர்கள் காணாமலும் போகலாம். இவ்விவாதத்துடன் எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரம் குறித்த விவாதத்தில், ஆளும் கட்சியான, பா.ஜ., தவிர, எதிர்க்கட்சியான காங்கிரஸ், மீண்டும், ஓட்டுச் சீட்டு நடைமுறை தேவை என்பது அர்த்தமற்றது. தேர்தல் கமிஷன் தலைவர் ராவத் மற்றும் இதுவரை இருந்த தேர்தல் கமிஷனர்கள், 'இந்திய ஓட்டுப்பதிவு நடைமுறை, அதிக தலையீடு அற்றது; இந்த இயந்திரம் உள்நாட்டு அடிப்படைகளில் தயாரானது' என, தெரிவித்திருக்கின்றனர். அப்படி இருக்கும் போது, மீண்டும் ஓட்டுச்சீட்டு என்பது, பழைய கற்காலப் பாதைக்கு அடிவைப்பதாகும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X