அதிகாரிகளோட ஆறு பேரு போட்டாங்க ஜோடி... அரசாங்கத்துக்கு இழப்பு மாசம் ஒரு கோடி!| Dinamalar

அதிகாரிகளோட ஆறு பேரு போட்டாங்க ஜோடி... அரசாங்கத்துக்கு இழப்பு மாசம் ஒரு கோடி!

Added : செப் 05, 2018
Share
தோழி துங்கபத்ராவின் அன்பு அழைப்பை ஏற்று, 'மேற்கு தொடர்ச்சி மலை' படத்துக்கு வந்திருந்த சித்ராவும், மித்ராவும், சரவணம்பட்டியிலுள்ள 'ஷாப்பிங் மால்' உட்புறத்திலுள்ள வளாகத்தில், காத்துக் கொண்டிருந்தனர். வெளியே இவர்கள் தேடிக் கொண்டிருக்க, உள்ளேயிருந்து வந்தாள் பத்ரா.''ஹாய் சித்து-மித்து...படம் போட ரொம்ப நேரம் இருக்கு; ஒரு 'ரவுண்ட்' அடிச்சிட்டு, 'காபி' சாப்பிட்டு
அதிகாரிகளோட ஆறு பேரு போட்டாங்க ஜோடி... அரசாங்கத்துக்கு இழப்பு மாசம் ஒரு கோடி!

தோழி துங்கபத்ராவின் அன்பு அழைப்பை ஏற்று, 'மேற்கு தொடர்ச்சி மலை' படத்துக்கு வந்திருந்த சித்ராவும், மித்ராவும், சரவணம்பட்டியிலுள்ள 'ஷாப்பிங் மால்' உட்புறத்திலுள்ள வளாகத்தில், காத்துக் கொண்டிருந்தனர். வெளியே இவர்கள் தேடிக் கொண்டிருக்க, உள்ளேயிருந்து வந்தாள் பத்ரா.

''ஹாய் சித்து-மித்து...படம் போட ரொம்ப நேரம் இருக்கு; ஒரு 'ரவுண்ட்' அடிச்சிட்டு, 'காபி' சாப்பிட்டு வரலாமா?'' என்று கேட்க, இருவரும் சந்தோஷமாக தலையாட்டினர்.

''நமக்கு தண்ணி, காத்து எல்லாம் தர்ற மலையப் பத்தின படம்; கண்டிப்பா எல்லாரும் பார்க்கணும்!'' என்று சூழல் விஷயங்களைப் பேச ஆரம்பித்தாள் பத்ரா.

''கரெக்ட் பத்ரா...பக்கத்துல இருக்குற நீலகிரியில 'எலிபெண்ட் காரிடார்ஸ்'ல இருக்குற 'ரிசார்ட்ஸ்'களை எல்லாம் காலி பண்ணச் சொல்லி, சுப்ரீம் கோர்ட்டே உத்தரவு போட்ருக்கு; நம்ம ஊருல நடுக்காட்டுலயே ரிசார்ட்ஸ், காலேஜ், ஸ்கூலு, ஆசிரமம் எல்லாம் கட்டிருக்காங்க...இதையெல்லாம் எடுக்கச் சொல்லி, யாரும் கோர்ட்டுக்குப் போக மாட்டாங்களா?'' என்று ஆதங்கப்பட்டாள் மித்ரா.

''போனாலும் முடியாது...இப்பவே, காட்டுக்குப் பக்கத்துல இருக்குற கட்டடத்துக்கு நோட்டீஸ் கொடுத்தாலும், உடனே 'பெரிய்ய்ய்ய லெவல்'ல போய் முட்டுக்கட்டை போடுறாங்க; இல்லேன்னா, நோட்டீஸ் கொடுத்த ஆபீசரையே துாக்கி அடிக்கிறாங்க'' என்றாள் சித்ரா.

''ஆமா! இங்க எதுக்கு டிக்கெட் எடுத்த...டிக்கெட், 'ஸ்நாக்ஸ்' அயிட்டம் எல்லாமே 'பயங்கர காஸ்ட்லி'யா இருக்குமே!'' என்றாள் மித்ரா.

''ஒரே இடத்துல இத்தனை தியேட்டர்ன்னதும் பிரமிப்பா இருந்துச்சு; சும்மா பார்க்கலாமேன்னு எடுத்தேன்!'' என்றாள் பத்ரா.

''எனக்குத்தெரிய, இங்க அஞ்சு தியேட்டர் தான் வருதுன்னு சொன்னாங்க; இப்போ ஒன்பது தியேட்டரை திறந்திருக்காங்க; எப்பிடி லைசென்ஸ் கொடுத்தாங்கன்னு தெரியலை!'' என்றாள் சித்ரா.

''அக்கா...இதுக்கு 'லைசென்ஸ்' வாங்கிக் கொடுத்ததுல, பெரிய அளவுல ஒரு தொகை கை மாறிருக்காம்; எல்லாம் செஞ்சு கொடுத்தது, பெரிய ஆபீசரோட பிரியமான 'சன்' தானாம். அவரு தான் இப்போ, நம்ம மாவட்டத்துல 'ஹோர்டிங்ஸ்'க்கு அனுமதி கொடுக்குறது, தியேட்டர் லைசென்ஸ், லே-அவுட் அப்ரூவல் எல்லாத்தையும் 'டீல்' பண்றாராம்'' என்றாள் மித்ரா.

''நானும் கேள்விப்பட்டேன்...முன்னாடி இவரோட நெருக்கமா இருந்த எம்.எல்.ஏ., பையன், இப்போ வெளியில இருந்து ஆதரவு கொடுக்குறாராம்; ஒரு சேட்டு வீட்டுப் பையன் தான், இப்போ ரொம்ப நெருக்கமாம்;ரெண்டு பேரும் 'ஜீ'ன்னு போட்ட 'டிரிபிள் எஸ்' தாசில்தார் வண்டியில தான் சுத்துறாங்களாம்!'' என்றாள் சித்ரா.

''அந்த வண்டியில 'கேம்ப் ஆபீஸ்'ன்னு போட்ருக்கும்; நம்பர் கூட, 14ல முடியும்; கரெக்டா?'' என்றாள் மித்ரா.

''மெரட்டுறியே மித்து...இவுங்களுக்கு உள்ளே இருந்து வேலை பாத்துக் கொடுக்குறது யாரு தெரியுமா...எலக்ஷன் வேலை பார்க்க வந்து, அதைத் தவிர மத்த எல்லா வேலையும் பாக்குறாரே...அவர் தான். இப்பக்கூட, 11 தாசில்தார்களை மாத்துனதுல, 'செம்ம துட்டு' விளையாடியிருக்கு...'ரேட்'டுக்கு தகுந்தது மாதிரி, பசையுள்ள இடங்களுக்குப் போட்டுக் கொடுத்திருக்காங்க; நேர்மையான, சீனியர்கள் பல பேரை துாக்கி அடிச்சிட்டாங்க!'' என்றாள் சித்ரா.

''மூணு மாசத்துக்கு முன்னாடிதான், தாசில்தார்களை மாத்துனாங்க. அதுக்குள்ள மறுபடியுமா... அந்த பி.ஏ.,வைப் பத்தி, இன்னொரு 'கம்ப்ளைன்ட்'...துப்பாக்கி லைசென்ஸ்களைப் புதுப்பிக்க யாரு வந்தாலும், மணிக்கணக்குல காத்திருக்க வைக்கிறாராம்; போய்ட்டு, இன்னொரு நாள் வரச் சொல்றாராம்; தாறுமாறா கேள்வி கேக்குறாராம்; கொடுக்குறதைக் கொடுத்தாத்தான், 'சைன்' பண்றாராம்!'' என்றாள் மித்ரா.

''இதே 'போஸ்ட்டிங்'ல இருந்தப்போ நல்லா வேலை பாத்துட்டு, டாஸ்மாக் மாவட்ட ஆபீசராப் போனாரே...அவரோட பேர்லயும் இப்போ புகார்கள் குவியுது!'' என்றாள் சித்ரா.

''அப்பிடியா...அவர் தான் 'இல்லீகல் பார்'களை எல்லாம் 'சீல்' வச்சு, அதிரடி பண்ணுனாரே?'' என்று ஆச்சரியமாய்க் கேட்டாள் மித்ரா.

''எல்லாமே 'ஐ வாஷ்'ங்கிறாங்க...'நார்த்'ல இருக்குற 137 கடைகள்ல, 135 'பார்'களுக்கு, பிப்ரவரியில ஏலம் விட்டாங்க; எல்லாமே ஏலம் போயிருச்சு; ஆனா, 95 கடைகள்ல, காசே கட்டுறது இல்லியாம்; விசாரிச்சா, டாஸ்மாக் டிரான்ஸ்போர்ட் மேனேஜர் தலைமையில, ஆறு பேர் கொண்ட குழு, 'நீங்க டிடி கட்ட வேணாம்; 60 ஆயிரம் கொடுங்க; நாங்க டிஎம், எஸ்.ஆர்.எம்., டிசி எல்லாருக்கும் கொடுத்துர்றோம்'னு வசூல் தட்டி எடுக்குறாங்களாம்!'' என்றாள் சித்ரா.''என்னக்கா சொல்ற...

95 'பார்'கள்னா, மாசத்துக்கு கவர்மென்ட்டுக்கு ஒரு கோடி ரூபா வருமானம் போயிருமே?'' என்றாள் மித்ரா.

''ஆமா மித்து...மொத்த சேல்ஸ்ல மூணு 'பர்சன்டேஜ்' கட்டணும்; ஆனா, கட்டுறதே இல்லை; சிவானந்தா காலனியில 1531 நம்பர் கடையில, ஒரு நாளுக்கு 14 லட்ச ரூபாய் 'சேல்ஸ்' ஆகுமாம்; கணக்குப் பண்ணிப்பாரு...அதே மாதிரிதான், காந்திபுரத்துல 1620ங்குற கடையும்...அதை டெண்டர் எடுத்து, ஒரு மாசம் கூட 'டிடி' தரலையாம்'' என்றாள் சித்ரா.

''போன மாசம் 31ம் தேதி கூட, 18 'பார்'களுக்கு டெண்டர் விட்டாங்களே...அதுவும் டிராமா தானா?'' என்று கேட்டாள் மித்ரா.

''அப்பிடித்தான் தெரியுது...இந்த மேனேஜர் தலைமையில, டாஸ்மாக் ஆபீஸ்ல வேலை பாக்குற அஞ்சு சூபர்வைசர்கள் தான், ஆளுக்கு 12லயிருந்து 15 'பார்' வரைக்கும் வசூல் பண்றாங்களாம்; வசூல் பண்ற ஆளு, 'பார்'க்கு 10 ஆயிரம் எடுத்துட்டு, மத்ததை ஆபீசர்களுக்கு கொடுத்துர்றாங்களாம்; இவுங்களுக்கு, ஆபீஸ்ல இருக்குற ஓ.ஏ., லேடியும் கூட்டணியாம்!'' என்றாள் சித்ரா.அலைபேசியில் வந்த அழைப்பை எடுத்துப் பேசிய பத்ரா, 'சார்! அந்த 'சர்வே டீம்'ல ஷாஜி தலைமையில, அஞ்சு பேரையும் சேர்த்துக்கோங்க!'' என்றாள்.

''என்னக்கா...நம்ம ஊர்ல எங்க போனாலும் போதை மேட்டரா இருக்கு...செல்வபுரம் 'லிமிட்'ல பான்பராக் குடோன் எக்கச்சக்கமா உருவாயிருக்காம்; அங்க ஐ.எஸ்.,ல இருக்குற தங்கமான ராசா ஒருத்தர் தான், இதுக்கெல்லாம் 'காவலன்' மாதிரி இருக்காராம்; போன வாரம் கூட, புதுசா ஒரு குடோனைக் கண்டு பிடிச்சு, ஒன்றரை லட்ச ரூபா வாங்கிருக்காரு. 13 வருஷமா அங்க இருந்து அசையாம இருக்குறதால, அந்த ஸ்டேஷனுக்கே இவர் தான் ராசா மாதிரியாம்!'' என்றாள் மித்ரா.

''இதே மாதிரித்தான் காட்டூர்ல குழந்தை பேரைக் கொண்ட ஒரு எஸ்.ஐ., இருக்காரு...அந்த 'லிமிட்'ல 86 லாட்ஜ்கள் இருக்கு; பல லாட்ஜ்கள்ல 'இல்லீகல்' வேலை எல்லாமே நடக்குது; அத்தனைக்கும் பின்புலம் இவர் தானாம்; ஏன்னா, அந்த ஸ்டேஷன்ல இருக்குற லேடி எஸ்.ஐ.,யும், இன்ஸ்ம் கை நீட்டுறவுங்க இல்லியாம்!'' என்றாள் சித்ரா.

''அந்த எஸ்.ஐ., பத்தி இன்னொரு மேட்டரும் சொல்லுவாங்க...அந்த ஏரியாவுல நாகராஜ்ன்னு ஒருத்தன், 'அந்த' மாதிரி 'விசிடி' வித்தே கோடீஸ்வரன் ஆனவனாம்; அவனும் இவரு வளர்த்து விட்ட ஆளுதானாம்; பஸ் ஸ்டாண்ட் ஆக்கிரமிப்புக்கடைகள் வசூல் பண்றது எல்லாமே இந்த 'குழந்தை'தான்!'' என்றாள் மித்ரா.

''மித்து...சிட்டிக்குள்ள இந்த மாதிரி போதைன்னா, நரசிம்மநாயக்கன்பாளையம், கூடலுார் கவுண்டம்பாளையம், சூலுார்ன்னு ரூரல் ஏரியாவுல எல்லாம் கள்ளு விற்பனை கனஜோரா நடக்குது; போலீஸ்காரங்க சுத்தமா கண்டுக்கிறதே இல்லை; கள்ளு இறக்குற தோட்டமா பாத்து, போலீஸ்காரங்க மாமூல் வாங்கிக்கிறாங்களாம்!'' என்றாள் சித்ரா.

''அதுல இன்னொரு 'இன்ட்ரஸ்ட்டிங்'கான மேட்டர் தெரியுமா...டாஸ்மாக் சரக்கு அடிக்கிறவுங்க, லேசுல கள்ளு குடிக்க வர்றது இல்லியாம்; அதனால, 'மூணு லிட்டர் கள்ளு வாங்குனா ஒரு லிட்டர் இலவசம்; லிட்டர் நுாறு ரூபா தான்; உடம்புக்கும் நல்லது, விலையும் 'கம்'மி, வெல்கம், வெல்கம்!'னு 'மார்க்கெட்டிங்' நடக்குதாம்!'' என்று சிரித்தாள் மித்ரா.

''லோக்சபா எலக்ஷனுக்கு முன்னாலயே, கவர்மென்ட்டே கள்ளு விற்க, அனுமதி கொடுக்கப் போறதா ஒரு தகவல் ஓடிட்டு இருக்கு!'' என்றாள் சித்ரா.

''அக்கா! ஒரு வழியா 'ஸ்மார்ட் சிட்டி' வேலையை குளங்கள்ல ஆரம்பிச்சிட்டாங்க; ஆனா, இத்தனை கோடியை இங்க கொட்றாங்களேன்னு, ஊரே கொதிச்சிட்டு இருக்கு. அதனால, 'நீர்நிலை பரப்பை குறைக்கக்கூடாதுங்கிற ஐகோர்ட் உத்தரவை மீறுறாங்க'ன்னு கோர்ட்டுக்குப் போறதுக்கு, ஒரு குரூப் தயாராயிட்டு இருக்கு!'' என்றாள் மித்ரா.காபி கடைக்கு முன் வந்த மூவரும், பேச்சை நிறுத்தி விட்டு, உள்ளே நுழைந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X