அடுத்தாண்டு நடக்கஉள்ள லோக்சபா தேர்தலுக்காக, 'யாராலும் வெல்ல முடியாத இந்தியா - உறுதியான பா.ஜ.,' என்ற புதிய கோஷத்தை, பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ளார். மத்தியில் ஆளும், பா.ஜ.,வின் தேசிய செயற்குழு கூட்டம், டில்லியில் நடந்தது. இரண்டாவது நாளான நேற்று, பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
கூட்டத்தில், பிரதமர் மோடி பேசியதாவது: வரும் லோக்சபா தேர்தலை, யாராலும் வெல்ல முடியாத இந்தியா -- உறுதியான பா.ஜ., என்ற கோஷத்துடன் எதிர்கொள்வோம். யாராலும் வெல்ல முடியாத இந்தியாவை, மிகவும் உறுதியான கொள்கையுடைய, பா.ஜ.,வின் மூலம் உருவாக்குவோம்.
நாடு நன்கறியும் :
கடந்த, 31 ஆண்டுகளில், நாம் பதவிக்காக அலையவில்லை. மக்களுக்கு சேவை செய்யவே, ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி வந்துள்ளோம்; இதை, இந்த நாடு
நன்கறியும்.அடுத்த, நான்கு ஆண்டுகளில், புதிய இந்தியாவை உருவாக்குவதில் உறுதியுடன் உள்ளோம். வறுமையில்லாத, பயங்கரவாதம் இல்லாத, ஊழல் இல்லாத, மதவாதம் இல்லாத இந்தியாவை, 2022க்குள் உருவாக்குவோம்.ஆட்சியில் இருந்தபோது தோல்வியடைந்த கட்சி, தற்போது எதிர்க்கட்சியாகவும் தோல்விஅடைந்துள்ளது. நம் அரசின் பணிகள், சாதனைகள் குறித்து பேச முடியாது என்பதால், பொய்யான தகவல்களை முன்வைத்து, எதிர்க்கட்சிகள் போராட்டங்களை நடத்துகின்றன. நாட்டில், 48 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது, அவர்கள் செய்த பணிகளை, 48 மாதங்களில் நாம் செய்த பணிகளுடன் ஒப்பிட்டு பார்த்தால், யார் உண்மையில் மக்களுக்காக உழைத்துள்ளனர் என்பது தெரியவரும். சரியான, நிலையான தலைமை இல்லாத, எந்த ஒரு கொள்கையும் இல்லாத, தவறான நோக்கத்துடன் கூடியதாக எதிர்க்கட்சிகளின் கூட்டணி உள்ளது. நம் வளர்ச்சியை தாங்க முடியாமல், நம்மை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன், அவர்கள் தற்போதைக்கு இணைந்துள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.
பா.ஜ., ஆட்சி தான் :
பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா பேசியதாவது:பா.ஜ., அரசின் செயல்பாடுகளால், பல கோடி பேர் பயனடைந்துள்ளனர். அதை மக்களிடம் தெரிவிக்க வேண்டும்
. அடுத்த லோக்சபா தேர்தலிலும், பா.ஜ., தான் ஆட்சி அமைக்கும். அதன்பின், 50 ஆண்டுகளுக்கு நம் ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது.இவ்வாறு அவர் பேசினார்.
தமிழகத்தை பின்பற்றுங்கள் :
பா.ஜ., தேசிய செயற்குழு கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பா.ஜ., தலைவர் அமித் ஷா பேசியது குறித்து, தமிழக, பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது: சமீபத்தில், அமித் ஷா தமிழகத்துக்கு வந்தார். அப்போது, கட்சியில் அமைக்கப்பட்டுள்ள, 1.5 லட்சம் பூத் கமிட்டி நிர்வாகிகளை சந்தித்து பேசினார். மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து, மக்களிடையே செய்யப்படும் பிரசாரம் குறித்து, அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். தமிழகத்தைப் போலவே, அனைத்து மாநிலங்களும் செயல்பட வேண்டும் என, மோடியும், அமித் ஷாவும் செயற்குழுவில் கூறினர். இவ்வாறு அவர் கூறினார்.- நமது சிறப்பு நிருபர் -
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (78)
Reply
Reply
Reply