தாம்பரத்தை புதிய மாவட்டமாக அறிவியுங்கள்கோரிக்கை!*வளர்ச்சி பணியில் சுணக்கம் இருப்பதாக புகார்*புறநகர் சங்கங்கள் அரசுக்கு வேண்டுகோள்| Dinamalar

தமிழ்நாடு

தாம்பரத்தை புதிய மாவட்டமாக அறிவியுங்கள்கோரிக்கை!*வளர்ச்சி பணியில் சுணக்கம் இருப்பதாக புகார்*புறநகர் சங்கங்கள் அரசுக்கு வேண்டுகோள்

Added : செப் 10, 2018
Advertisement
தாம்பரத்தை புதிய மாவட்டமாக அறிவியுங்கள்கோரிக்கை!*வளர்ச்சி பணியில் சுணக்கம் இருப்பதாக புகார்*புறநகர் சங்கங்கள் அரசுக்கு வேண்டுகோள்

சென்னை புறநகர் பகுதியாக இருக்கும், தாம்பரத்தை தலைமையிடமாக கொண்டு, புதிய மாவட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என, அங்குள்ள பல்வேறு குடியிருப்போர் நலச்சங்கங்கள், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.
சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., எல்லைக்குள் இருந்தாலும், சென்னை மாநகராட்சி பகுதிகளுக்கு கிடைக்கும் முக்கியத்துவம், புறநகர் பகுதிகளுக்கு கிடைப்பதில்லை என்ற புகார் நிலவுகிறது.இதனால், வளர்ச்சி பணிகள், ஆமை வேகத்திலேயே நடப்பதாக,
பல்வேறு அமைப்புகளும் கருதுகின்றன.இந்நிலையில், தாம்பரம், ஆவடி ஆகிய பகுதிகளை தலைமையிடமாக வைத்து, புதிய மாநகராட்சிகளை ஏற்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.
இதற்காக, சி.எம்.டி.ஏ., நிர்வாகம், அரசுக்கு அளித்த பரிந்துரை அடிப்படையில், முதலில் சென்னை மாநகராட்சியின் எல்லை பரப்பு, 176 சதுர கி.மீ.,யில் இருந்து, 426 சதுர கி.மீ.,யாக விரிவாக்கம் செய்யப்பட்டது.விரிவாக்கத்தில், மாநகராட்சியுடன் சேர்க்கப்பட்ட பகுதிகள், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தில் இருப்பதால், நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டன.
இதையடுத்து, விரிவாக்க பகுதிகளை, அந்தந்த மாவட்டங்களில் இருந்து விடுவித்து, சென்னையுடன் சேர்க்க, அரசு உத்தரவிட்டது.
இதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து சோழிங்கநல்லுார், ஆலந்துார் வட்டங்களும்; திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து, மதுரவாயல், அம்பத்துார், மாதவரம், திருவொற்றியூர் வட்டங்களும், சென்னை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டன.இதில், சி.எம்.டி.ஏ., பரிந்துரையில் குறிப்பிட்டபடி, தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளை ஏற்படுத்த, நிர்வாக ரீதியாக சில நடவடிக்கைகள் துவங்கப்பட்டன.
இருப்பினும், இந்நடவடிக்கைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதனால், புதிய மாநக ராட்சி வரும் என எதிர்பார்த்த, புறநகர் பகுதி மக்கள், ஏமாற்றம்அடைந்துள்ளனர்.புதிய மாநகராட்சி வராத நிலையில், இப்பகுதிகளை ஒருங்கிணைத்து புதிய மாவட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.
இது குறித்து, புறநகர் பகுதி குடியிருப்போர் சங்கங்களின் நிர்வாகிகள் கூறியதாவது:பல்லாவரம் முதல் செங்கல்பட்டு வரையிலான பகுதிகளில், மக்கள் தொகை பெருக்கம் காரணமாக, நகர்ப்புற வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. இப்பகுதி, பல்வேறு நிலை உள்ளாட்சிகளாக உள்ளதால், ஒருங்கிணைந்த முறையில் வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதற்காகவே, புதிய மாநகராட்சி வேண்டும் என, கோரினோம். ஆனால், அந்த கோரிக்கை, அதிகாரிகளால் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதனால், இப்பகுதிகளை ஒருங்கிணைத்து, தாம்பரத்தை தலைமையிடமாக வைத்து, புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும்.காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தில் உள்ள ஒன்பது நகராட்சிகளில், ஏழு நகராட்சிகள், பல்லாவரம் - செங்கல்பட்டு இடையில் தான் வருகின்றன. தனி மாவட்டம் வந்தால், வளரும் பகுதிகளுக்கு, அதிகாரிகளால் கூடுதல் கவனம் செலுத்த முடியும். வளர்ச்சி திட்டங்களையும், விரைந்து மேற்கொள்ள முடியும்.இந்த கோரிக்கையின் அவசியத்தை, அரசுக்கு தெரிவிக்க, பல்வேறு நடவடிக்கை எடுத்துவருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஏற்கனவே, செங்கல்பட்டு தாலுகாவை தலைமையகமாக வைத்து, புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதற்கு அரசின் ஆதரவு கிடைக்காத நிலையில், தற்போது புதிய கோரிக்கை எழுந்துள்ளது.புதிய மாவட்ட கோரிக்கை குறித்து முதல்வர், வருவாய் துறை அமைச்சர் ஆகியோரிடம் மனுக்கள் அளிக்க, புறநகர் பகுதியை சேர்ந்த பல்வேறு நல சங்கங்கள் திட்டமிட்டுள்ளன.
சேர்க்க வேண்டிய பகுதிகள்
தாம்பரத்தை தலைமையகமாக வைத்து, தனி மாவட்டம் உருவாக்க வேண்டும். அதில், தற்போது, தாம்பரம் வருவாய்க் கோட்டத்தில் உள்ள, தாம்பரம், பல்லாவரம் தாலுகாக்கள். செங்கல்பட்டு வருவாய் கோட்டத்தில் வரும், செங்கல்பட்டு, திருப்போரூர், திருக்கழுக்குன்றம் தாலுகாக் களை இணைக்க வேண்டும் என, நலசங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

- நமது நிருபர் --

வண்டலுார் பூங்காவிற்கு
புதிய யானை வருகை
வண்டலுார், செப். 10-
வண்டலுார் பூங்காவிற்கு, ஆனைமலை புலிகள் காப்பக முகாமில் இருந்து, புதிதாக யானை கொண்டு வரப்பட்டு உள்ளது.
சென்னை, வண்டலுார் உயிரியல் பூங்கா, 1,265 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில், 2,379 விலங்குகள் மற்றும்
பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இதில், 'பிர்க்குர்தி' என்ற பெண் யானையும், 'அசோக்' என்ற ஆண் யானையும் இருந்தன.
வனவிலங்கு மருத்துவர்களின் ஆலோசனையின்படி, ஆண் யானை அசோக், ஆனைமனை புலிகள் காப்பகத்தில் உள்ள, முகாமிற்கு அனுப்பட்டது.
இதற்கு பதில், புலிகள் காப்பக முகாமிலிருந்து, 'ரோகிணி' என்ற பெண் யானை கொண்டுவரப்பட்டு உள்ளது.
இது குறித்து, பூங்கா உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
புதிதாக வந்துள்ள பெண் யானை, இரண்டு ஆண்டுகளுக்கு முன், சத்திய
மங்கலம் காட்டில், தன் தாயால் கைவிடப்பட்டது.
காட்டில் உணவின்றி, நோய்வாய்ப்பட்டு சுற்றித் திரிந்த யானையை, வனத்துறையினர் மீட்டு, புலிகள் காப்பக முகாமில் வைத்து பராமரித்து வந்தனர்.
இந்த யானை, வண்டலுார் பூங்காவில், நேற்று முதல், பார்வையாளர்கள் பகுதியில் விடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

குடிநீர் வரி செலுத்தாத வீடுகள், 'ஜப்தி'

வாரிய அதிகாரிகள் திட்டம்

சென்னை, செப். 10-
குடிநீர் வரி செலுத்தாதோர் குறித்து, தயாரிக்கப்பட்ட பட்டியலில், வணிக நிறுவனங்களைக் காட்டி லும், குடியிருப்புவாசிகளே அதிகமாக உள்ளனர் என்பது, தெரிய வந்து உள்ளது.
இதையடுத்து, வரி செலுத்தாமல், 'டிமிக்கி' கொடுத்து வருவோரின் வீடுகளை, 'ஜப்தி' செய்ய, வாரிய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
குடிநீர் வரி வசூலிப்பதில், வாரிய அதிகாரிகள் தீவிரமாக களம் இறங்கி உள்ளனர். முன்னதாக, மண்டல வாரியாக, குடிநீர் வரி செலுத்தாதோர் பட்டியல் தயாரிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, வரி செலுத்தாதவர்களுக்கு, குடிநீர் வாரியம் சார்பில், 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது.
கொடுக்கப்பட்ட கால அவகாசத்திற்கு பின்னரும், பலர், குடிநீர் வரி செலுத்தாமல் உள்ளனர்.
குறிப்பாக, வரி செலுத்தாமல் அலைக்கழிப்பதில், வணிக நிறுவன உரிமையாளர்களை விட, குடியிருப்புவாசிகளே அதிகம் என்பது, ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து, குடிநீர் வாரிய அதிகாரி கூறியதாவது:
சென்னை மாநகராட்சி சொத்து வரி, மின் கட்டணம் ஆகிய இரண்டையும், குடியிருப்பு வாசிகள் மற்றும் வணிக நிறுவன உரிமையாளர்கள் தவறாமல் செலுத்தி விடுகின்றனர். ஆனால், குடிநீர் மற்றும் கழிவுநீர் வரியை தான், செலுத்த யாரும் முன் வருவதில்லை.
இதனால் நாங்கள், ஆண்டுதோறும் சிறப்பு முகாம்கள் அமைத்து, வரி வசூல் செய்து வருகிறோம்.
அப்படி செய்தும், எங்களுக்கு கொடுக்கப்பட்ட இலக்கை எட்ட முடியாத சூழ்நிலை உள்ளது.
இதனால், நீண்ட ஆண்டுகளாக குடிநீர் வரி செலுத்தாமல் உள்ள வீடுகளை, ஜப்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. வணிக நிறுவனங்களுக்கும், இது பொருந்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.

ரூ.12.90 கோடி தான் வசூல்
அண்ணாநகர் மண்டலத்தில், 28 கோடி ரூபாய் வரி வசூல் செய்ய வேண்டிய இடத்தில், தற்போது வரை, 12.90 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளனர். வரி செலுத்தாதோரில், பெரும்பாலானோர், குடியிருப்புவாசிகள் என்பதால், ஜப்தி நடவடிக்கையை எடுக்க, அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

சுகாதாரமற்ற
உணவுகள்
பறிமுதல்

சென்னை, செப். 10-
மெரினா கடற்கரையில் உள்ள உணவுக் கடைகளில் ஆய்வு செய்த சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார
மற்ற உணவுப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
சுற்றுலா தலமான மெரினா கடற்கரையில், ஏராளமான சிற்றுண்டி மற்றும், 'பாஸ்ட் புட்' கடைகள் செயல்பட்டு வருகின்றன.
இங்கு விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்கள், சுகாதாரமற்ற எண்ணெய் பயன்படுத்தி, தயார் செய்யப்படுவதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, சுகாதாரத்துறை அதிகாரிகள், மெரினாவில் உள்ள, 306 கடைகளில், நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர்.
இதில், சுகாதாரமில்லாத, 12 கிலோ எண்ணெய், காலாவதி
யான, 24 குடிநீர் பாட்டில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

700 கிலோ
பிளாஸ்டிக்
பறிமுதல்

தாம்பரம், செப். 10--
தடை செய்யப்பட்ட, 700 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை, தாம்பரம் நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தாம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதி களில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்கப்படுவதாக, நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கிழக்கு மற்றும் மேற்கு தாம்பரம் பகுதிகளில், நேற்று முன்தினம் மாலை, நகராட்சி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, தடை செய்யப்பட்ட, 700 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், அவற்றை விற்பனை செய்தவர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

ஜி.எஸ்.டி., பயிற்சி வகுப்பு

சென்னை, செப். 10-
சென்னையில், 'ஜி.எஸ்.டி., மற்றும் மின் வழிச்சீட்டு' குறித்த ஒரு நாள் பயிற்சி வகுப்பு, நாளை நடக்க உள்ளது.
சென்னை, கிண்டி சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள, தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் உள்ளது.
அங்கு, ஜி.எஸ்.டி., மற்றும் மின் வழிச்சீட்டு குறித்த ஒருநாள் பயிற்சி வகுப்பு, நாளை காலை, 10:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை நடக்க உள்ளது.
இந்த பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர், முன்பதிவு செய்ய வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு, 044 - 2225 2081, 2225 2082 தொலைபேசி எண்களையும், 88254 16460, 86681 02600 ஆகிய மொபைல் போன் எண்களையும் தொடர்பு கொள்ளலாம்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X