புதுடில்லி : ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்படுகிறதா என்பது குறித்து விசாரிக்க, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அமைத்துள்ள குழுவின் விசாரணைக்கு தடை கோரும் தமிழக அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தமிழகத்தின், துாத்துக்குடியில் அமைந்துள்ள, வேதாந்தா குழுமத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலை, சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துவதாக போராட்டங்கள் நடந்தன. இந்த ஆண்டு மே, 22ல் நடந்த போராட்டத்தின் போது, வன்முறை ஏற்பட்டதால், போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்; இதில், 13 பேர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு, தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, வேதாந்தா குழுமம், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள நிர்வாகப் பிரிவு அலுவலகங்களைப் பயன்படுத்த, தேசிய பசுமை தீர்ப்பாயம், ஆக., 9ல், அனுமதி அளித்தது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது' என, ஆக., 19ல், உத்தரவிட்டது.
மேலும், 'தமிழக அரசு எழுப்பியுள்ள பிரச்னைகள் ஏற்புடையதா என, அதன் தகுதியின் அடிப்படையில் விசாரிக்க வேண்டும்' என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையில், ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக, நேரில் ஆய்வு செய்ய, மூன்று பேர் அடங்கிய குழுவை அமைப்பதாக, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு, நீதிபதிகள், ஆர்.எப்.நரிமன், இந்து மல்ஹோத்ரா அடங்கிய, உச்ச நீதிமன்ற அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது; அப்போது, அமர்வு கூறியதாவது:
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில், தமிழக அரசு எழுப்பியுள்ள பிரச்னைகள் ஏற்புடையதா என, அதன் தகுதியின் அடிப்படையில் விசாரிக்க வேண்டும் என, தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளோம். ஆனால், தீர்ப்பாயம் வெளியிட்டுள்ள உத்தரவில் அது குறிப்பிடப்படவில்லை.
தற்போது, மூன்று பேர் குழு அமைக்கப்பட்டுள்ளதால், அந்தக் குழுவின் அறிக்கை தாக்கல் செய்த பின், தமிழக அரசு எழுப்பி உள்ள பிரச்னைகள் ஏற்புடையதா என, அதன் தகுதியின் அடிப்படையில், பசுமை தீர்ப்பாயம் முடிவு எடுக்க வேண்டும். நிபுணர் குழுவின் விசாரணைக்கு தடை விதிக்க முடியாது. இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (6)
Reply
Reply
Reply