77 புரபசர்களோட பரிட்சை பேப்பரு... என்கொயரியில கேள்விக்கு பதிலு சூப்பரு!| Dinamalar

77 புரபசர்களோட பரிட்சை பேப்பரு... 'என்கொயரி'யில கேள்விக்கு பதிலு சூப்பரு!

Added : செப் 11, 2018
Share
அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று, இரண்டு நாட்களாக மித்ரா எங்கேயும் போகாமல், வீட்டு வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்; வேலைக்கிடையில், 'டிவி'யைப் போட்டு உட்கார, 'ஹாய் மித்து...அம்மா எப்பிடி இருக்காங்க?' என்று விசாரித்தபடியே உள்ளே நுழைந்தாள் சித்ரா.''பரவாயில்லைக்கா...கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கச் சொல்லிருக்காங்க; அதனால தான் நான் வெளியவே வர முடியலை; வேலைய
77 புரபசர்களோட பரிட்சை பேப்பரு... 'என்கொயரி'யில கேள்விக்கு பதிலு சூப்பரு!

அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று, இரண்டு நாட்களாக மித்ரா எங்கேயும் போகாமல், வீட்டு வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்; வேலைக்கிடையில், 'டிவி'யைப் போட்டு உட்கார, 'ஹாய் மித்து...அம்மா எப்பிடி இருக்காங்க?' என்று விசாரித்தபடியே உள்ளே நுழைந்தாள் சித்ரா.''பரவாயில்லைக்கா...கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கச் சொல்லிருக்காங்க; அதனால தான் நான் வெளியவே வர முடியலை; வேலைய முடிச்சாலும் எங்கேயும் நகராம, 'டிவி' பாத்துட்டே இருக்கேன்!'' என்றாள் மித்ரா.''நீ எதைப் பார்ப்பேன்னு தெரியும்...பல சேனல்கள்ல வர்றதெல்லாம் சரியோ தப்போ தெரியலை; ஆனா, அதிகாரத்துல இருக்குற பல பேருக்கு 'நேரம் இப்போ' சரியில்லைங்கிறது மட்டும் தெளிவாத் தெரியுது; எந்த நேரத்துலயும் எதுவும் நடக்கும்னு ஊருக்குள்ள ஒரே பரபரப்பா இருக்கு!'' என்றாள் சித்ரா.''இதெல்லாம் 'முன்னை இட்ட தீ'ன்னு தான் சொல்லணும்; நல்ல பொறுப்புகள்ல, நல்ல ஆபீசர்களை வைக்கலை; சுத்தியும் நல்ல ஆலோசகர்களையும் வைக்கலைன்னா இப்பிடித்தான் பிரச்னை வெடிக்கும்!'' என்றாள் மித்ரா.''இந்த களேபரத்துல, உடன் பிறப்புகளுக்கு ஒரு கிளுகிளுப்பு...இப்போ அதிகமான 'டெண்டர்' எடுதது இருக்குறதா சொல்லப்படுற கான்ட்ராக்ட் கம்பெனிக்காரங்க, 'நாங்க செம்மொழி மாநாட்டுலயே அதிகமான வேலைகளை எடுத்துச் செஞ்சிருக்கோம்'னு சொல்லிருக்காங்களே. அதை வச்சு, 'அப்போ பவர்ல இருந்த பொங்கலுார்க்காரருக்கும், இவுங்களுக்கும் இருந்த தொடர்பைப் பார்த்தீங்களா'ன்னு தலைமைக்கு பெட்டிஷன் தட்டி விட்ருக்காங்க'' என்றாள் சித்ரா.''எப்பவுமே...அரசியல், கட்சி எல்லாத்தையும் தாண்டி, இவுங்களை இணைக்கிற ஒரு விஷயம் இருக்கு...அது என்னன்னு ஊருக்கே தெரியும்!'' என்றாள் மித்ரா.''மித்து...தளபதியா இருந்தவரு, தலைவரா ஆனது மாதிரி, அப்பாவோட பதவியை வச்சு, மாவட்ட ஆபீசர்களை எல்லாம் ஆதிக்கம் பண்றாராம் ஒரு வாரிசு...கட்டட அனுமதி, லே-அவுட் சம்மந்தமான கூட்டங்களை நடத்துறப்போ, அந்த பையனே அப்பா 'சீட்'டுல உட்கார்ந்து, எல்லா 'பைல்'களையும் 'டீல்' பண்றாராம். அப்புறமா, அவர் பென்சில்ல எழுதி வைக்கிற குறிப்புகளைப் பாத்து, தப்பாம கையெழுத்துப் போடுறாராம் ஆபீசர் அப்பா'' என்றாள் சித்ரா.''அக்கா...நீ சொல்ற அந்த வாரிசைப் பத்தி, நிறைய விஷயங்கள் கேள்விப்பட்டேன்; அவரு, விருதுநகர்ல மணல் பிஸினஸ் பண்றாராமே!'' என்றாள் மித்ரா.''மணலைப் பத்திப் பேசவும், நம்ம நரசிபுரம் பக்கத்துல, நொய்யல்ல நடக்குற மணல் திருட்டு ஞாபகத்துக்கு வந்துச்சு. அங்க 'தங்கமான' பேரைக் கொண்ட ஆளுங்கட்சி ஆளு ஒருத்தரு தான், ராவோட ராவா, 'பொக்லைன்' வச்சு, மணலைக் குவிச்சு வச்சு, காலங்காத்தால லாரிகள்ல அள்ளிட்டுப் போறாராம்!'' என்றாள் சித்ரா.''நொய்யல்ல மணல் திருடுனா, குண்டர் சட்டம் பாயும்னு, கலெக்டர் சார்புல பெருசா அறிக்கையெல்லாம் விட்டாங்களே; அதெல்லாம் சும்மாச்சுக்குமா?'' என்று கேட்டாள் மித்ரா.''ஆர்.டி.ஓ.,மதுராந்தகி இருந்தப்போ, ஆறு லாரி, 36 யூனிட் மணல் பிடிச்சாங்க; ரெண்டு பேரை 'குண்டாஸ்'ல போட்டாங்க; ஏகப்பட்ட 'பைன்' வசூல் பண்ணுனாங்க. இப்போ இருக்குற ஆர்.டி.ஓ., எதுவுமே செய்யுற மாதிரித் தெரியலையே!'' என்றாள் சித்ரா.''கேட்டா, கிராம கண்காணிப்புக் குழு போட்ருக்கிறதா 'மீடியா'வுக்கு சொல்றாரு; ஆனா, நெருக்கமா இருக்கிறவுங்கள்ட்ட, 'அங்க போனா நம்ம உசுருக்கே உத்தரவாதமில்லை'ங்கிறாராம். இப்போ, பேரூர் தாசில்தாரா வந்திருக்கிறவரு, ஆலாந்துறை வி.ஏ.ஓ.,வா ரொம்ப வருஷம் இருந்தவராம்; இந்த கடத்தல் ரூட்டு, கடத்துற நேரம், செய்யுற ஆளுங்க எல்லாமே அவருக்குத் தெரியுமாம்; ஆனா, எதையுமே கண்டுக்கிறதில்லை; ஆளுங்கட்சி ஆளுன்னு பயப்படுறாரோ என்னவோ?'' என்றாள் மித்ரா.''ஆளுங்கட்சி ஆளுன்னதும் எனக்கு நம்ம கார்ப்பரேஷன் குப்பை இன்ஜினியர் தான் ஞாபகத்துக்கு வந்தாரு; அவரை மாதிரி, உலகத்துலயே பிஸியான ஆபீசரை யாரும் பார்க்க முடியாதுங்கிறாங்க. யாரு கூப்பிட்டாலும் போனை எடுக்குறதே இல்லை; எடுத்தாலும், 'சார் கூட இருக்கேன்; சாரோட வேலையா, டில்லி போயிட்டு இருக்கேன்'கிறாராம்; அந்த சார் தான் யாருன்னு தெரியலை'' என்றாள் சித்ரா.இதைக் கவனிக்காதது போல நடித்த மித்ரா, 'சரவண பொய்கையில் நீராடி' என்று பாட்டுப் பாடினாள்.''ஓ...பாட்டாவே படிச்சிட்டியா...அவரு மட்டுமில்லை; ஞானமுள்ள இன்ஜினியரும் ஆபீசுக்கு எட்டியே பாக்கிறதில்லையாம்; ரெண்டு வருஷத்துல, இவுங்க ரெண்டு பேரோட சம்பாத்தியம் உச்சத்தைத் தொட்டுருச்சுன்னு சொல்றாங்க'' என்றாள் சித்ரா.''அதை விடுக்கா...நம்மூரு யுனிவர்சிட்டியில, வி.சி., இல்லைங்கிறதால, 'கன்வீனர் கமிட்டி' நியமிச்சாங்களே...அதுல இருந்த 'செகரட்டரி'யை மாத்திட்டாங்களே; புதுசா யாரைப்போட்ருக்காங்க?'' என்று கேட்டாள் மித்ரா.''பல்கலை விதிப்படி, 'கன்வீனர் கமிட்டி'யில், யுனிவர்சிட்டியில் இருக்குற சீனியர் புரபசர் தான், குழுவுக்கு தலைவரா இருக்கணும்; கவர்னர் நாமினி, சீனியர் பிரின்ஸிபால் இருக்கணும். இவுங்க யாருமே இல்லை. அதேமாதிரி...ஹையர் எஜூகேஷன் செகரட்டரி இருக்கலாம்; ஆனா, அப்பிடிச் செய்யாம, அவரோட பேரையே போட்டுக்கிட்டாராம் சுனில். அவரை இப்போ மாத்திட்டதால, 'கமிட்டி'யில இருந்து, துாக்கணும்னு பல பேரு கொடி துாக்குறாங்க'' என்றாள் சித்ரா.''அக்கா...அதை விட முக்கியமான விஷயம்...ரெண்டு மூணு வாரமா, தினமும் விஜிலென்ஸ் விசாரணை தீயாப் போயிட்டு இருக்காம். டி.எஸ்.பி., தலைமையில மூணு பேரு, பணியாளர் நலத்துறையில் உட்கார்ந்துட்டு, போஸ்ட்டிங் வாங்குன 77 பேரையும் தனித்தனியா உக்கார வச்சு...பேசி, ரிக்கார்டு பண்ணி, சுடச்சுட 'டைப்' பண்றாங்களாம்; கையோட 'ஸ்டேட்மென்ட்'ல கையெழுத்தும் வாங்கிர்றாங்களாம்!'' என்றாள் மித்ரா.''இன்னொரு விஷயம் கேள்விப்பட்டேன்; இவுங்க எக்ஸாம் எழுதுன பேப்பரை எல்லாம் எடுத்துட்டாங்க; அதுல சொருகுன பேப்பர்கள்ல 'இங்க' கொஞ்சம் 'டிபரன்டா' இருக்குறதைக் கண்டு பிடிச்சிட்டாங்க...அதுல இருக்குற கேள்விக்கு, இவுங்க கிட்ட பதில் கேட்டா, தப்பா சொல்றாங்களாம்; பேப்பர்ல கரெக்டா இருக்காமே!'' என்று கேட்டாள் சித்ரா.''என்னக்கா...என்னைய விட, 'அப்டேட்'டா இருக்குற...மொத்தத்துல பாத்தா, 77 பேரு வேலையும் காலியாயிரும் போலிருக்கு; ஆனா, அவர் நியமிச்ச ரிஜிஸ்ட்ராரை மட்டும் மாத்த மாட்டாங்க போலிருக்கு...'இன்சார்ஜ்'ன்னா ஆறு மாசம் தான் இருக்கணும்; இவுங்க ரெண்டு வருஷமா இருக்காங்க; ஏற்கனவே, சீனியாரிட்டியில் பத்தாவது ஆளு இவுங்க. அது மட்டுமில்லாம, வயசும் 58 ஆயிருச்சாம்; ஆனா, ஏன் மாத்த மாட்டேங்கிறாங்கன்னு தெரியலை!'' என்றாள் மித்ரா.''அவுங்களை மட்டுமா...டீச்சர்கள்ட்ட தப்பா நடந்துக்கிறார்னு பல முறை 'கம்ப்ளைன்ட்' போயும், எஸ்.எஸ்.குளத்துல பள்ளிக் கல்வித்துறையில இருக்குற முக்கியமான ஆபீசரை மாத்தவே மாட்டேங்கிறாங்களே!'' என்றாள் சித்ரா.''ஓ... அவரா, அவர பத்தி சி.இ.ஓ.,கிட்ட பல முறை புகார் போயிருக்கே!'' என்றாள் மித்ரா.''ஆமா மித்து...முன்னாடியாவது, 'எலிமெண்டரி ஸ்கூல்' மட்டும் தான் அவர் போக முடியும்; இப்போ, எல்லா ஸ்கூலுக்கும் போற அளவுக்கு 'ப்ரமோஷன்' கொடுத்துட்டாங்க...அதனால, அவரு போற ஸ்கூல்ல எல்லாம் லேடி டீச்சர்களை உரசுறது, தொடையில தட்டுறதுன்னு ரொம்ப மோசமா நடந்துக்கிறாராம்!'' என்றாள் சித்ரா.''எதுக்கெடுத்தாலும் கட்சிக்காரன், சாதிக்காரன்னு 'ரெகமண்டேஷன்' பிடிச்சிட்டு வந்தா...என்னதான் செய்யுறது?'' என்றாள் மித்ரா.''உண்மை தான் மித்து...வ.உ.சி.,கிரவுண்ட்ல மறுபடியும் பொருட்காட்சி நடத்த, ஆளுங்கட்சிக்காரங்க வேலைய ஆரம்பிச்சிட்டாங்க. கொடுமை என்னன்னா, அதுக்கு இன்னும் கார்ப்பரேஷன் பர்மிஷனே தரலையாம்!'' என்றாள் சித்ரா.''ஆளுங்கட்சி 'சப்போர்ட்' இருந்தா எதுக்கு பர்மிஷன் வாங்கணும்...இப்பிடித்தான், மருதமலையில தேங்காய், பழம் விக்கிறதுக்கு கான்ட்ராக்ட் எடுத்த 'ர'கசிய 'வி'யாபாரி, எந்த பர்மிஷனும் இல்லாம, 'டெண்டர்' எடுக்காமலே, பஞ்சாமிர்தம் விக்கிறாராம்; இஷ்டத்துக்கு மேல ஒண்ணு, கீழ ஒண்ணு, பழைய படிக்கட்டுல ஒண்ணுன்னு ஏகப்பட்ட கடைகளைப் போட்ருக்காராம்!'' என்றாள் மித்ரா.அடுத்த மேட்டரை ஆரம்பிப்பதற்குள், மாடியிலிருந்து அம்மாவின் அழைப்பு வரவே, வேகமாக ஓடினாள் மித்ரா; தொலைக்காட்சியின் ஒலியை கூட்டினாள் சித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X