புதிய மாற்றம் தான் ரயில்வேக்கு தேவை! | Dinamalar

புதிய மாற்றம் தான் ரயில்வேக்கு தேவை!

Added : செப் 11, 2018 | கருத்துகள் (1)

நாட்டின் மிகப்பெரிய பயணியர் போக்குவரத்தில், ரயில்வே மிக முக்கிய பங்காற்றுகிறது. அதன் வளர்ச்சி என்பது, அத்துறை ஈட்டுகிற லா பம் என்பதுடன், அதனால் மக்கள் பெரும் வசதிகளையும் சேரும். பொதுவாக, பயணியர் ரயில் போக்குவரத்து என்பது, மக்கள் நலம் சார்ந்த அணுகுமுறையாக அமையவே, அது மத்திய அரசின் கீழ் உள்ள ரயில்வே போர்டு மூலம் இயங்குகிறது. அரசின் கீழ் உள்ள இப்பெரிய துறை, சரக்கு கட்டண வருவாயில், எளிதாக லாபம் ஈட்டலாம் என்றாலும், அது, கடந்த பல ஆண்டுகளாக சிறுகச் சிறுக குறைந்தது. காரணம், தாமதமான, ஒழுங்கு முறையற்ற செயல்பாடு எனலாம். ரயில்வே என்றால், பயன்படுத்துவற்கு உள்ள பொதுமக்கள் சொத்து என்பதை மம்தா, லாலு போன்ற ரயில்வே அமைச்சர்கள் காட்டிய வழி உதவியது. முந்தைய ஜனதா ஆட்சியில், மதுதண்டவதே, இத்துறையை ஒழுங்குபடுத்த முயன்றார் என்பதை, மறுக்க முடியாது. இன்று, ராஜதானி போன்ற ரயில்களில், விமானக் கட்டணம் போல, டிமாண்டிற்கு ஏற்ப கட்டண உயர்வு, பயணியரை பாதிக்கிறது. ஆனால், 'பிளக்ஸி பேர்' திட்டத்தை மாற்ற, ரயில்வே துறை முன்வரவில்லை. இத்திட்டம் பலரும் பயணிக்கும், 'அந்த்யோதயா' போன்ற ரயில்களில் இல்லை. அதிக அளவு துாய்மைத் திட்டங்கள் போன்ற வசதிகளை, ரயில்வே அமல்படுத்தி வருகிறது. ஆனால், 'ஏசி' ரயில் பெட்டிகளில் உரிய வசதி இல்லாவிட்டாலும், கட்டணம் அதிகம் என்ற கருத்தை, ரயில்வே சீரமைக்க முன்வந்திருப்பது நல்லது.நம் பகுதியை கையாளும், தெற்கு ரயில்வே திட்டப்படி, ஆறு ஆண்டுகள் ஓடிய, 'ஏசி' பெட்டிகள் சீர்படுத்தப்படும். தெற்கு ரயில்வே கோட்டத்தின் கீழ் ஓடும் ரயில்களில், 1,000க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் உள்ளன. இதில், 400க்கும் மேற்பட்ட பெட்டிகள், 10 ஆண்டுகள் பழமையானவை.அதே போல, 'சேர்கார்' எனப்படும் சொகுசு இருக்கைகளில், துாங்கும் வசதிக்கு சாய்க்க உதவும், 'லீவர்'கள் செயல்படுவதில்லை. இக்குறைகளை முதலில் சீர் செய்ய, பெரம்பூரில் உள்ள ரயில் பெட்டி தயாரிப்பு மைய தொழிற்சாலை, தீவிரமாக செயல்படும் என, ரயில்வே போர்டு தெரிவித்திருக்கிறது. மேலும், வசதியான, பெட்டிகள் தயாரிக்கப்படுவது இங்கு தொடரும்.ரயில்வேத் துறையில், 1.74 லட்சம் பேருக்கு மேல் நிரந்தர பணியாளர்கள், இதைச் சார்ந்த பல்வேறு தொழில்களில், 60 லட்சம் பேர் கூட பணியாற்றலாம். ரயில்வேக்கு புதிதாக டிரைவர் உட்பட, பல பணிகளுக்கு ஆள் எடுக்க, இத்தடவை அமைச்சகம் வெளியிட்ட விளம்பரம், அமைச்சர் பியுஷ் கோயல் மேற்கொண்ட சீர்திருத்தங்களை வெளிப்படுத்துகிறது.தொழில் திறனறி அறிவு, முறையான, 'ஆன்லைன்' விண்ணப்ப தகவல்கள், எவ்வித சிபாரிசுக்கும் சிறிதும் வழியில்லா நடைமுறைகள் ஆகியவை, அதில் பிரதிபலிக்கின்றன. தவிரவும், இதுவரை யூனியன்கள், தங்கள் விருப்பப்படி இருந்த நிலை மாறி, யூனியன் பணிகள் வேறு, வேலை நேரத்தில் ஆற்றும் கடமை வேறு என்பது, படிப்படியாக அமலாகிறது. .கொங்கண் ரயில்வே கார்ப்பரேஷன், டில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் ஆகியவற்றில் உள்ள பணியாளர் தேர்வாகும் வழியில், தொழில் நுட்ப பணிகளுக்கு தகுந்தவர்கள் தேர்வை, நாட்டின் பல்வேறு டிவிஷன்களும் பின்பற்ற முடிவாகி இருக்கிறது. தலைமையகத்தின் அருகே உள்ள தொழில்நுட்ப தொழிலாளர்கள், அங்கிருந்து டிவிஷனில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு சென்று, தொழில்நுட்ப சிறப்பு பணிகளை செய்ய வேண்டிய கட்டாயம் வந்திருக்கிறது. ரயில் தண்டவாள சீரமைப்பு, குறிப்பாக, சிக்னல்கள் பழுது நீக்கம் ஆகியவை அடங்கும்.ரயில்வே செலவினம் மொத்தத்தில், 90 சதவீதம் வரை பணியாளர் மாதச் சம்பளம், பென்ஷன் ஆகியவற்றிற்கும் மற்றும் சில நலத்திட்டங்களுக்கும் செலவாகிறது. அப்படி இருக்கும் போது, ரயில்வே வளர்ச்சி என்பது, அபார சாத்தியமாகும்.இன்றைய நிலையில், புதிதாக ஒரு லட்சம் பேரை பணியில் அமர்த்தி, ரயில்வே தொழில்நுட்பத்தை, அடுத்த இரு ஆண்டுகளில் சிறப்பாக மாற்றாவிட்டால், இத்துறை நஷ்டத்தில் இயங்கும் அபாயத்திற்கு மாறி விடும் என்ற கருத்து உள்ளது. அடுத்த, 15 ஆண்டுகளுக்கு ரயில்வே துறை காணப்போகும், புத்தாக்க வழிகளுக்கு முன்னோடியாக நடத்தப்படும் இத்திட்டங்கள், ரயில்வே என்பதை வசதியான, அதே சமயம் லாபகரமான, சிறந்த போக்குவரத்து சாதனமாக மாற்ற வேண்டிய கட்டாயம் எழுந்திருக்கிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X