வரும் தலைமுறையை உருவாக்கும் சிற்பிகள்| Dinamalar

வரும் தலைமுறையை உருவாக்கும் சிற்பிகள்

Added : செப் 12, 2018

சமூகத்தின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும் மூத்த குடிமக்கள் செய்த பணிகளும், பங்களிப்பும் முக்கியமானவை. ஆனால் சமீபகாலமாக முதியோர்கள் சந்திக்கும் மன ரீதியிலான சங்கடங்களை சரிசெய்யவும், தவிர்க்கவும் நாம் தவறுகிறோமோ என்ற ஐயம் எழுந்துள்ளது. அந்தளவுக்கு முதியோர்கள் இன்னல்களுக்கு ஆளாவது அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கிறது. பெற்ற குழந்தைகளே பாராட்டி, சீராட்டி வளர்த்த பெற்றோர்களை கைவிடுவது நவீன இந்த உலகில் அரங்கேறி வருகிறது. இதனால் எல்லா நகரங்களிலும் முதியோர் இல்லங்கள் உருவாகி வருகின்றன. நாளைக்கு அவர்களுக்கும் (இன்றைய இளைய தலைமுறையினர்) இதே கதி தான் என்பதை சற்று எண்ணி பார்த்தால் இத்தகைய தவறுகள் நடக்காது. சமூகத்திற்கு முதியோர்கள் செய்த அளப்பரிய பங்களிப்பை, தியாகங்களை நினைவுகூர்ந்து அவர்களை முறையாக பராமரிக்க நாம் முன் வரவேண்டும். வயதான காலத்தில் முதியோர்கள் சந்திக்கும் பிரச்னைகளை தவிர்க்க பொது மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.முதியோர்கள் எண்ணிக்கைமத்திய புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி நாட்டில் 121 கோடி மக்கள்தொகையில் 10.39 சதவீதம் பேர் மூத்த குடிமக்கள். 2050ல் 30 கோடி முதியோர்களை கொண்ட நாடாக இந்தியா உருவாகும். உலகில் 16 கோடி முதியோர்களை கொண்ட நாடாக சீனா முதலிடத்தில் தற்போது உள்ளது. இதில் சீனாவை முந்த இந்தியா தயாராகி வருகிறது. உலக முதியவர்களில் 50 சதவீதம் அதிகமானோர் சீனா, இந்தியா, ஜப்பான், அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். முதியோர்களில் 60 சதவீதம் பேர் உணவு, உடை, உறைவிடம் இன்றி தவிப்பதாக புள்ளி விவரம் ஒன்று தெரிவிக்கிறது. முதியோர்கள் வீட்டை விட்டு வெளியேற்றப் படுவதும், வயதான காலத்தில் உரிய மருத்துவ சிகிச்சை இன்றி துன்பப்படுவதும் அதிகரித்து வருகிறது. தற்போது முதியோர் இல்லங்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருவது கவலைக்குரியதாகும். வீட்டின் பெயரோ அன்னை இல்லம்;அன்னை இருப்பதோ முதியோர் இல்லம் என்ற புதுக்கவிதை இருட்டிலுள்ள முதியோர்களின் அவல நிலையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
பெண் முதியோர்கள் : ெஹல்ப் ஏஜ் இந்தியா என்ற தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வில் முதியோர்களை 39 சதவீதம் மருமகள்களும், 38 சதவீதம் மகன்களும் துன்புறுத்துவதாக கண்டறிந்துள்ளது. தந்தை, சகோதரர், கணவர், மகன் என வாழ்நாள் முழுவதும் ஆண்களை சார்ந்து வாழும் நிலையில் உள்ள பெண் முதியோர்களின் நிலை ஆண் முதியோர்களை விட மோசமாக இருக்கிறது. சமூக பாதுகாப்புக்கும், மருத்துவ தேவைகளுக்கும் பிறரை சார்ந்து இருக்கும் நிலையே முதியோர்களின் முக்கிய பிரச்னை. வயதான பெற்றோர்களை பராமரிப்பது ஒருவரின் சமூக கடமை மட்டுமின்றி அது ஒரு சட்டப்படியான கடமையாகும்.முதியோர் உதவி தொகை முதியோர்களை காக்க அரசு சமூக நலத்திட்டங்களை வகுத்துள்ளது. மாதந்தோறும் முதியோர்களுக்கு 1000 ரூபாய் வரை தமிழக அரசு வழங்குகிறது. அதுமட்டுமே அவர்களின் வாழ்வாதாரமாகவும் உள்ளது. குழந்தைகளும், உறவினர்களும் வயதான காலத்தில் முதியோர்களை கவனித்து கொள்வது பல்வேறு சட்டங்கள் மூலம் கடமையாக்கப்பட்டுள்ளது. இந்து தத்தெடுத்தல் மற்றும் பராமரிப்பு சட்டம் பிரிவு 20ன் கீழ் வயதான மற்றும் உடல் நலிவுற்ற பெற்றோர்களை பராமரிப்பது மகன் மற்றும் மகளுடைய கடமையாகும். பராமரிக்க தவறினால் நீதிமன்றம் மூலம் பெற்றோர்கள் மாதம் தோறும் பராமரிப்பு தொகை பெற இயலும்.தங்களை பராமரித்து கொள்ள இயலாத நிலையிலுள்ள பெற்றோர்கள் குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 125ன் கீழ் பராமரிக்க தவறிய மகன் அல்லது மகளிடமிருந்து குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வதன் மூலம் ஜீவனாம்சம் பெற முடியும். இச்சட்டப்பிரிவு அனைத்து மதத்தினருக்கும் பொதுவானதாகும். ஆனால் பெரும்பாலான முதியோர்கள் பெற்ற குழந்தைகளின் நலன் கருதி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய முன்வருவதில்லை.நலன் காக்கும் சட்டம்சர்வதேச சமூகத்தின் கோரிக்கை, உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தல்கள் மற்றும் சட்ட கமிஷனின் பரிந்துரைகளை ஏற்று மூத்த குடிமக்களின் நலன் காக்கும் விதமாக 2007 ஆண்டு 'பெற்றோர் மற்றும் மூத்த குடிக்கள் நலன் காக்கும் சட்டம்' என்ற விரிவான சட்டம் நாடு முழுவதும் கொண்டு வரப்பட்டது.இந்த சட்டத்தின் மூலம் பராமரிப்பின்றி கைவிடப்பட்ட மூத்த குடிமக்கள் பல்வேறு வகையான சட்டப்படியான பாதுகாப்பும்,பராமரிப்பு தொகையும் பெற முடியும். கஷ்டப்பட்டு சேர்த்த சொத்துக்களை பிள்ளைகளுக்கு மாற்றிய பிறகு வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட பெற்றோர்களின் சொத்துக்களை மீட்டு பெற்றோர்களிடமே மீண்டும் ஒப்படைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மாவட்டங்கள் தோறும் அரசு சார்பில் மூத்த குடிமக்கள் பராமரிப்பு இல்லங்களை நிறுவ இச்சட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளது.அன்பும், அரவணைப்பும்சட்டங்கள் பல இருந்தாலும் சமூக விழிப்புணர்வும், அன்பும் அரவணைப்புமே பிரச்னைக்கு முக்கிய தீர்வாக அமையும். மேற்கத்திய நாடுகளில் இந்நாளில் நமக்காக ஓடாய் உழைத்தவர்களுக்கு நன்றி கூறும் விதமாக ஒட்டு மொத்த குடும்பமும், இணைந்து முதியோர்களுக்கு பிடித்த உணவுகளை சமைத்து உண்ணுதல், பிடித்த இடத்திற்கு அழைத்து செல்லுதல்,பிடித்த பழைய நண்பர்களை சந்திக்க ஏற்பாடு செய்தல், அலைபேசி மற்றும் இணையங்களை முடக்கி விட்டு நாள் முழுவதும் முதியோர்களுடன் செலவிடல், பிடித்த கோயில்களுக்கு அழைத்து செல்லல், முதியோர்கள் பழைய நினைவுகளை அசைபோடும் விதமாக சிறிய பரிசு பொருட்களை கொடுத்தல் என்று முதியோரை மகிழச் செய்து கவுரவிக்கின்றனர்.நம்மை கண்ணின் இமைபோல் காத்த மூத்த குடிமக்கள் ஒவ்வொரு நாளும் அங்கீகரிக்கப்பட வேண்டியவர்கள். எதிர்கால தலைமுறையை சீரோடும், சிறப்போடும் உருவாக்கும் சிற்பிகள் முதியோர்கள். அவர்களை பேணி காப்பது நம் கடமையாகும். இதை பிஞ்சு குழந்தைகளின் மனங்களில் வளரச் செய்ய வேண்டும். கண்ணியமாகவும்,கவுரவமாகவும் மதிக்கப்பட வேண்டிய மனிதர்கள் முதியோர்கள். நம்மை போன்ற விழுதுகளை இந்த மண்ணிற்கு தந்திட்ட ஆலமரங்களை இளைய தலைமுறைகள் மதித்து அரவணைத்து வணங்க வேண்டும். அந்த எண்ணம் ஏற்பட்டால் நாட்டில் முதியோர் இல்லங்களே இருக்காது. அந்நிலையை எட்ட அனைவரும் முன்வர வேண்டும்.-ஆர்.காந்திஉயர்நீதிமன்ற வழக்கறிஞர்மதுரை. 98421 55509

-------------We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X