மதுரை, ''மதுரை மாவட்டத்தில் வாழை, மரவள்ளி கிழங்கு பயிரிட்ட விவசாயிகள் பிரதமரின் பயிர்காப்பீடு திட்டத்தில் இழப்பீடு பெற அக்.,31 க்குள் பிரீமியம் செலுத்த வேண்டும்,'' என தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் பூபதி தெரிவித்தார்.அவர் கூறியதாவது:காரீப் பருவத்திற்கு வாழை பயிரிட்டுள்ள அலங்காநல்லுார், செல்லம்பட்டி, கொட்டாம்பட்டி, மதுரை மேற்கு, மேலுார், திருப்பரங்குன்றம், வாடிப்பட்டி ஒன்றிய விவசாயிகளும், மரவள்ளி கிழங்கு பயிரிட்டுள்ள வாடிப்பட்டி ஒன்றிய விவசாயிகளும் காப்பீடு செய்யலாம்.இப்பயிர்களுக்கு விதைப்பு முதல் அறுவடை வரையிலான காலத்தில் இழப்பு, இயற்கை இடர்பாடால் பாதிப்பு நிகழ்ந்தால் இழப்பீடு தொகை பெறலாம். பயிர் கடன் பெற்ற, பெறாத விவசாயிகள் அனைவரும் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி, தேசிய வங்கிகளில் காப்பீட்டிற்கான பிரீமியம் தொகையை அக்.,31க்குள் விவசாயிகள் செலுத்த வேண்டும். இத்திட்டத்தில் வாழைக்கு ஏக்கருக்கு 2,350 ரூபாய் பிரீமியம் செலுத்தினால் இழப்பீடு 54,650 ரூபாய் வரையும், மரவள்ளி கிழங்கிற்கு ஏக்கருக்கு 925 ரூபாய் பிரீமியம் செலுத்தினால் 18,500 ரூபாய் வரையும் இழப்பீடு கிடைக்கும்.மேலும் விபரங்களுக்கு அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனரை அணுகலாம் என்றார்.