ஓமலூர்: ''தி.மு.க., ஆட்சியில் நடந்த தவறுகள், இனி வெளியாகும்,'' என, முதல்வர் பழனிசாமி எச்சரித்துள்ளார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க, சென்னையிலிருந்து, சேலம் வந்த தமிழக முதல்வர் பழனிசாமி, விமான நிலையத்தில் அளித்த பேட்டி: மேகதாது அணை கட்டக்கூடாது என்பது, தமிழக அரசின் நிலைப்பாடு. கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டபோது, தண்ணீர் இருப்பு இருந்தும், கர்நாடகா வழங்கவில்லை. பாலாறு அணையில் தடுப்பணை குறித்து, சட்டரீதியாக சந்திப்போம். அமைச்சர்கள் மீது, புகார் எழுந்தவுடன், குற்றவாளியாக கருத முடியாது. மக்களிடையே, அ.தி.மு.க., செல்வாக்கு அதிகரிப்பதால், வேண்டுமென்றே திட்டமிட்டு, தடை செய்ய முயற்சிக்கின்றனர். அது முடியாததால், இப்படி குற்றச்சாட்டை எழுப்புகின்றனர். எந்த துறையிலும், தவறு நடந்துள்ளதாக புகார் வரவில்லை. ஜெயலலிதா ஆட்சியில், குற்றச்சாட்டு தெரிவித்ததும், நடவடிக்கை எடுக்கவில்லை என்பது எனக்கு தெரியும். அரசை பொறுத்தவரை, சிறப்பாக செயல்படுகிறது. கடந்த கால தி.மு.க., ஆட்சியில், பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. இனி, அவை வெளியே வரும். திருப்பரங்குன்றம் தேர்தலுக்கு, பணம் கொடுப்பதாக எழுந்த செய்தி தவறு. தேர்தலில், பணம் கொடுப்பது, வாங்குவது குற்றம். அப்படிப்பட்ட நிலையில், எங்கள் கட்சி இல்லை. பலம் பொருந்தியதாக உள்ளது. பார்லிமென்ட் தேர்தலில் வெற்றி பெறுவோம். எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா ஆகிய தலைவர்கள் கொண்டு வந்த திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படவுள்ளன. அதற்கு, மத்திய அரசு, நிதி வழங்க வேண்டும். யார் நிதி வழங்குகின்றனரோ, அவர்களோடு ஜெயலலிதா அரசு நிச்சயம் துணை நிற்கும். தேர்தலின்போது, கூட்டணி குறித்து அறிவிக்கப்படும். பெட்ரோல் விலையில், மதிப்பு கூட்டு வரியை, மத்திய அரசு குறைக்க வேண்டும். தமிழகத்தில், நிதி பற்றாக்குறையாக உள்ளது. ஒவ்வொரு துறையிலும், நிதி ஆதாரத்தை பெருக்க வேண்டிய சூழல் உள்ளது. சி.பி.ஐ., ரெய்டுக்கு, மத்திய அரசே காரணம் என கூறியது, தம்பிதுரை கருத்து. அரசின் கருத்து இல்லை. தமிழக அரசு, மத்திய அரசோடு இணக்கமான சூழலில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். எம்.பி., பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ.,க்கள், கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.