சதுர்த்தி விழா; இன்று சிலைகள் பிரதிஷ்டை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சதுர்த்தி விழா; இன்று சிலைகள் பிரதிஷ்டை

Added : செப் 13, 2018

- நமது நிருபர் குழு -கோவை புறநகர் பகுதிகளில், விநாயகர் சதுர்த்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும் பகுதிகளில், 24 மணி நேரமும் ரோந்து செல்ல போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.விநாயகர் சதுர்த்தி விழா, நாடு முழுவதும் இன்று கோலாகமாக கொண்டாடப்படுகிறது. கோவை வடக்கு, பெரியநாயக்கன்பாளையம், துடியலுார், தடாகத்தில் முக்கிய சந்திப்புகள், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் விநாயகர் சிலைகள் இன்று பிரதிஷ்டை செய்யப்படுகின்றன.பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் எல்லைக்குள், 120, துடியலுாரில், 127, தடாகம் எல்லையில், 32, சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன. அனைத்து சிலைகளும் வரும், 15ம் தேதி மதியம், 1:00 மணிக்கு மேல் முக்கிய வீதிகள் வழியாக, ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, வெள்ளக்கிணர் பகுதியில், செயற்கையாக உருவாக்கப்பட்ட குளத்தில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.துடியலுார் பஸ் ஸ்டாண்டில் நடக்கும் பொதுக்கூட்டத்தில், தேசிய கயறு வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணன் பேசுகிறார். அதன்பின், விசர்ஜன ஊர்வலம் துவங்கும். சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்ட இடத்தில் இரவு முழுவதும் காவல் இருக்க, அந்தந்த அமைப்பை சேர்ந்த ஐந்து பேர் பணியில் ஈடுபடுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.பெரியநாயக்கன்பாளையம் சப்-டிவிஷனுக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை, பில்லுார், பெரியநாயக்கன்பாளையம், தடாகம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மொத்தம், 573 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன. போலீசார், 24 மணி நேரமும் ரோந்து செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளது.அன்னுார்: இந்து முன்னணி சார்பில், அன்னுார், வடக்கலுார், கரியாக்கவுண்டனுார், ஆம்போதி உட்பட, 45 இடங்களில் இன்று காலை, விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன. பின், கோ மாதா பூஜை, திருவிளக்கு பூஜை நடக்கிறது.வரும், 15ம் தேதி மதியம் 2:00 மணிக்கு விசர்ஜன பொதுகூட்டம் நடக்கிறது. சிரவை ஆதீனம் குமரகுருபர அடிகள், இந்து முன்னணி மாநில செயலாளர் அண்ணாதுரை, மாவட்ட செயலாளர் குட்டி உட்பட பலர் பேசுகின்றனர். அன்னுார், ஓதிமலை ரோட்டுக்கு சிலைகள் கொண்டு வரப்படும். மாலை, 4:00 மணிக்கு விசர்ஜன ஊர்வலம் துவங்குகிறது. அன்னுாரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று, சிறுமுகை அருகே இலகம்பாளையத்தில், பவானி ஆற்றில் கரைக்கப்படும்.விஸ்வ இந்து பரிசத் சார்பில், அன்னுார், காட்டம்பட்டி, கடத்துார் உட்பட, 25 இடங்களில் இன்று அதிகாலை, 5:00 மணிக்கு சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும். மாலை, 4:00 மணிக்கு அன்னுார் ஓதிமலை ரோட்டில், ஊர்வலம் துவங்கும். இரவு, சிறுமுகை அருகே, இலகம்பாளையத்தில், பவானி ஆற்றில் சிலைகள் கரைக்கப்படும்.எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்தில், இந்து முன்னணி சார்பில், 23 இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழா நடக்கிறது. இன்று காலை சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன. 15ம் தேதி சிலைகள் கோவில்பாளையம் கொண்டுவரப்பட்டு, வெள்ளக்கிணர் குளத்தில் கரைக்கப்படும். அன்னுார் மற்றும் கோவில்பாளையத்தில், உள்ளூர் போலீசாருடன், ஆயுதப்படை போலீசார், ஊர்க்காவல் படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.சூலுார்: கருமத்தம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில், இந்து முன்னணி மற்றும் பொதுமக்கள் சார்பில், 60 இடங்களில் விநாயகர் சிலைகள் இன்று பிரதிஷ்டை செய்யப்படுகின்றன. வரும், 15ம் தேதி மாலை, 4:00 மணிக்கு, சோமனுாரில் நடக்கும் விசர்ஜன விழா பொதுக்கூட்டத்தில் மாவட்ட தலைவர் சுப்ரமணியம் தலைமையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் சிவலிங்கேஸ்வர சுவாமி பேசுகிறார். கருமத்தம்பட்டி, சோமனுார், சாமளாபுரம் வழியாக ஊர்வலம் செல்கிறது. சாமளாபுரம் குளத்தில் சிலைகள் விசர்ஜனம் செய்யப்படுகின்றன.சூலுாரில், இ.மு., சார்பில், 41 இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன. மார்க்கெட் ரோடு, திருச்சி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் செல்லும் ஊர்வலம், நொய்யல் ஆற்றங்கரையில் நிறைவு பெறுகிறது. அங்கு சிலைகள் கரைக்கப்படுகின்றன.சுல்தான்பேட்டையில், 12 இடங்களில் இந்து முன்னணியினரும், மூன்று இடங்களில் பொது மக்களும் சிலைகள் பிரதிஷ்டை செய்கின்றனர். விஸ்வ இந்து பரிஷத் சார்பில், சூலுார் வட்டாரத்தில், 11 இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன. தமிழ்நாடு விஸ்வ இந்து பரிஷத் சார்பில், 19 இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன. இவை, நொய்யல் ஆற்றில் விஜர்சனம் செய்யப்படுகின்றன.மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் இந்து முன்னணி சார்பில், 73 இடங்களிலும், விஸ்வ இந்து பரிசத் சார்பில், நான்கு இடங்களிலும், பொதுமக்கள் சார்பில் ஆறு இடங்களிலும் இன்று விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன. வரும், 15ல் விசர்ஜன ஊர்வலம் நடக்கிறது; பவானி ஆற்றில் சிலைகள் கரைக்கப்படும். மேட்டுப்பாளையம், சத்தியமூர்த்தி நகர் பகுதியில், வீடுகளில் அரை அடி முதல் ஒரு அடி வரை உயரமுள்ள, 500 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன. வெள்ளியன்று, இவை கரைக்கப்படும்.சிறுமுகை இந்து முன்னணி சார்பில், 33 இடங்களிலும், பொதுமக்கள் சார்பில், 47 இடங்களிலும் சதுர்த்தி விழா நடக்கிறது. இந்து முன்னணியினர், 15ம் தேதியும், பொதுமக்கள், 14ம் தேதியும் சிலைகளை கரைக்கின்றனர்.காரமடையில், இந்து முன்னணி சார்பில், 100 இடங்களிலும், விஸ்வ இந்து பரிசத் சார்பில், 14 இடங்களிலும், இந்து மக்கள் கட்சி சார்பில், 11 இடங்களிலும், பொது மக்கள் சார்பில், 12 இடங்களிலும், விநாயகர் சதுர்த்தி விழா நடக்கிறது. இந்து மக்கள் கட்சியினரும், பொதுமக்களும், 14ல் சிலைகளை கரைக்கின்றனர். இந்து முன்னணியினரும், விஸ்வ இந்து பரிசத்தினரும், 15ல் சிலைகளை கரைக்கின்றனர்.We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X