ஆரோக்கியமான குழந்தைகள்... ஆரோக்கியமான தேசம்| Dinamalar

ஆரோக்கியமான குழந்தைகள்... ஆரோக்கியமான தேசம்

Added : செப் 13, 2018
Advertisement

ட்டச்சத்து என்ற வார்த்தை நமக்கு புதிதல்ல. ஆனால், அந்த ஊட்டச்சத்தின் அவசியத்தையும் அதன் ஆழமான அர்த்தத்தையும் நாம் உணர்ந்திருக்கவில்லை. வளர்ச்சி, உற்பத்தி, பொருளாதார முன்னேற்றம் உள்ளிட்ட ஒட்டுமொத்தமாக தேசிய மேம்பாட்டுக்கு வழிவகுப்பது ஆரோக்கியம். இந்த ஆரோக்கியத்துக்கு இன்றியமையாதது ஊட்டச்சத்து. இந்தியாவில் 50 சதவிகித குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடுகளுடனும் உள்ளனர் என்கிறது ஓர் ஆய்வறிக்கை. உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற தேசத்திலா இந்த நிலை என அதிர்ச்சியாக இருக்கிறது.“இந்தியாவில் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் மூன்றில் இரண்டு குழந்தைகள் ஊட்டச் சத்தற்ற குழந்தைகளாக உள்ளனர் என்பதை கேட்கும் போது அவமானமாக உள்ளது” எனச் சொன்னவர் மன்மோகன் சிங். அப்போது அவர் பிரதமராக இருந்தார். அதற்குப் பின்னரும் இரண்டாண்டுகள் பிரதமராக இருந்தார். இன்றுவரை அந்த நிலை மாறவில்லை.ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் முதல் வாரம் நாடு முழுவதும் ஊட்டச்சத்து வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏதாவதொரு மையக்கருத்தினை அடிப்படையாகக் கொண்டு இந்த வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான மையக்கருத்து 'உணவால் இன்னும் மேம்படுவோம்' என்பதாகும்.சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் கடந்தாண்டு வெளியிட்ட, உலகளாவிய பட்டினி அட்டவணையில் 119 நாடுகளில் இந்தியா 100 வது இடத்தில் இருந்தது. உணவு உற்பத்தியில் உலக அளவில் இரண்டாவது இடத்தில் இருக்கிறோம். ஆனால், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில், ஐந்து குழந்தைகளுக்கு, ஒரு குழந்தை, உயரத்திற்கு குறைவான எடையில் இருக்கிறது. இதன் காரணமாக இந்தியா ஒரு “அபாயமான கட்டத்தில்” உள்ளது என அந்த அறிக்கை கூறியது.ஊட்டச்சத்து குறைபாடுஉலக சுகாதார நிறுவனத்தின் அளவுகோலின்படி, ஒரு குழந்தை அதன் உயரத்துக்கு ஏற்ற உடல் எடை இல்லாமல் இருந்தாலோ, அல்லது மிகவும் மெலிந்து காணப்பட்டாலோ, உள்ளங்கால்கள் வீக்கம் கண்டிருந்தாலோ அக்குழந்தை ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.''ஊட்டச்சத்து குறைபாடுக்கு வறுமையும், உணவு பாதுகாப்பின்மையும் முக்கிய காரணிகள் அல்ல'' என்று ஆய்வுகள் சொல்கின்றன. ''பஞ்சம் அல்லது போர் அல்லது பொருளாதார நெருக்கடி சூழல் போன்றவை ஊட்டச்சத்து குறைபாடுக்கு காரணமாக இருக்கலாம்'' என்கிறது உலக வங்கி அறிக்கை. தாரளமாக உணவுகிடைக்கும் வீடுகளில் உள்ள குழந்தைகளுக்கும்கூட ஊட்டச்சத்து குறைபாடு இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் பால்வாடி பள்ளிகளுக்குச் செல்லும் குழந்தைகளில் 26 சதவிகிதம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளது. 64 சதவிகிதம் குழந்தைகளுக்கு ரத்தசோகை உள்ளது.குழந்தையின் ஊட்டச்சத்து குறைபாடானது, தாயின் வயிற்றில் இருக்கும்போதே தொடங்கிவிடுகிறது. காரணம், குழந்தை பெற்றுக்கொள்ளும் வயதில் இருக்கும் பெரும்பாலான பெண்கள் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைக்குத் தேவையான அளவு தாய்ப்பால் கொடுக்காதது, குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவினைத் தரத் தவறியது, குழந்தையை சரியாக பராமரிக்காதது, கருவுற்றபோது தாய் ஊட்டச் சத்தான உணவை உண்ணாமல் இருந்தது போன்றவை ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு முக்கிய காரணங்கள்.பொது இடத்தில் மலம் கழிப்பது, சுகாதாரமற்ற தண்ணீரைப் பருகு தல், சுகாதாரமற்ற சுற்றுச்சூழல், கைகளை நன்றாக கழுவாமல் இருத்தல் போன்றவையும் ஊட்டச்சத்து குறைவுக்குக் காரணமாகிறது.50 சதவீதம் இந்தியாவில்இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பான, 'அசோசெம்' மற்றும் லண்டனைச் சேர்ந்த தனியார் அமைப்பு ஒன்றும் இணைந்து உலகம் முழுவதும், 'ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள்' குறித்து ஆய்வு நடத்தி, அறிக்கை வெளியிட்டது. அதில், '2005--15 வரை, பச்சிளம் குழந்தைகள் மற்றும், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின், இறப்பு எண்ணிக்கை குறைந்திருந்தாலும், ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து இருந்தது. உலகளவில், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் எண்ணிக்கையில், 50 சதவிகித குழந்தைகள் இந்தியாவில் உள்ளன. 2015ல் இந்த எண்ணிக்கை 40 சதவிகிதமாக இருந்தது. நகரங்களில் வசிக்கும் குழந்தைகளை விட, கிராமங்களில் வசிக்கும் குழந்தைகள் தான், ஊட்டச்சத்து விஷயத்தில் பின்தங்கி உள்ளனர்' என்கிறது.இந்தியாவில் ஆண்டு தோறும் 6 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக மரணமடைவதாகவும் அதில் பெண்குழந்தைகள் தான் அதிகம் என்றும் யுனிசெப் நிறுவன ஆய்வு சொல்கிறது. அதற்குக் காரணம் பெண் குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கும், சிகிச்சைக்கும் பெற்றோர் முக்கியத்துவம் அளிப்பதில்லை என்கிறது அந்த ஆய்வு.தமிழகம்தேசிய குடும்பநலக் கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 8 சதவிகிதம் பேர் தீவிர ஊ ட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தேசிய சராசரியைவிட அதிகமாகும். இந்தப் புள்ளி விவரத்தை வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், அமெரிக்காவில் 1 சதவிகிதம் குழந்தைகளுக்கும், துருக்கியில் 2 சதவிகிதம் குழந்தைகளுக்கும், சீனா, பெரு, ரோமேனியாவில் 4 சதவிகிதம் குழந்தைகளுக்கும் மட்டுமே ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படுகிறது.Sample Registraion system statisticalன் 2015 அறிக்கையின்படி, தமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட 1000 குழந்தைகளில் 19 குழந்தைகள் தீவிர ஊட்டச்சத்து குறைப்பாட்டால் இறக்கின்றனர்.குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பாலுாட்டத் தொடங்குதல், ஆறு மாத காலத்துக்கு தாய்ப்பால் மட்டுமே ஊட்டுதல், உடல்நலம் இல்லாத போதும் தாய்ப் பாலுாட்டலைத் தொடர்தல் என்பது ஊட்டச்சத்து வழங்குதலின் அடிப்படை. இதில்கூட நாம் தோற்றுப்போயிருக்கிறோம். நம் நாட்டில் குழந்தை பிறந்தவுடன் மஞ்சள்நிற சீம்பாலின் மகிமை தெரியாமல் 43 சதவிகித தாய்மார்கள் அதை வீணடிப்பதாக புள்ளிவிபரம் சொல்கிறது.குழந்தையின் பார்த்தல், நுகர்தல், கேட்டல், சுவைத்தல், தொடுதல் என உணர்வுகளைத் தாய்ப்பால் துாண்டுகிறது. அது மூளை வளர்ச்சியை மேம்படுத்துகிறது. கற்கும் ஆற்றலை அதிகரிக்கிறது. குழந்தைக்கு சீழ்த்தொற்று, வயிற்றுப்போக்கு, நிமோனியா போன்றவை தாக்காது காக்கிறது. தாய்ப்பாலானது 5 வயதுக்குட்ட குழந்தைகள் இறக்கும் எண்ணிக்கையை 13 சதவிகிதம் வரைக் குறைக்கிறது.நல்ல ஊட்டச்சத்தை ஒருவர் பெறுவதற்கு உணவு இருப்பு, உணவை வாங்கும் திறன், உணவை உட்கிரகிக்கும் திறன் ஆகிய காரணிகள் முக்கியமாகத் தேவைப்படுகின்றன. எனவே, அந்தந்தப் பருவங்களில், நம் சுற்றுப்புறத்திலேயே எளிதாகக் கிடைக்கும் உணவு தானியங்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரைகளிலிருந்து எளிதாக ஊட்டச்சத்தைப் பெற்றுக் கொள்ளலாம். நம் மரபு சார்ந்த உணவானது ஊட்டச்சத்தின் உச்சம் என்பதனை மறந்துவிடவேண்டாம்.என்ன செய்யலாம்''ஒரு குழந்தையின் ஊட்டச்சத்தை உறுதி செய்ய முதல் 1000 நாட்கள் மிகவும் அவசியமான காலக்கட்டமாகும்'' என்கிறார் டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன். மேலும் அவர் ''சுகாதாரத் துறை முதல் சத்துணவு துறை வரை எல்லா துறைகளும் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே தமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடம் நிலவும் ஊட்டச்சத்துக் குறைப்பாட்டைக் களைய முடியும். உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி ஒரு மனிதர் ஒரு மாதத்துக்கு 5 கிலோ உணவு எடுத்துக்கொள்ள வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால், அது மட்டுமே ஆரோக்கியத்துக்கு போதுமானது அல்ல. தேசம் உணவுப் பாதுகாப்பில் இருந்து, ஊட்டச்சத்து பாதுகாப்பை நோக்கி நகர வேண்டும்'' என்கிறார்.புரதம், வைட்டமின்கள், தாது உப்புகள் போன்ற ஊட்டச்சத்து குறைபாடு என்பது ஒரு வகையான 'மறைமுகப் பசி' ஆகும். அரிசி, கோதுமைக்குப் பதிலாக அதிக ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கிய சிறுதானியங்கள், பயறு வகைகளை பயிரிட விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும். ஆரோக்கியமான குழந்தைகள் மூலமே வலிமையான தேசம் உருவாகமுடியும்.-ப. திருமலைபத்திரிகையாளர், மதுரை84281 15522

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X