'இந்தியா ஜனநாயக நாடு; இங்கே எல்லாரும் சமம்' என்கிறது, நம் அரசியல் சட்டம். 'அப்படி
எல்லாம் இல்லவே இல்லை' என, அடித்துச் சொல்கிறது, யதார்த்தம். சென்னை உயர்நீதிமன்றம், சமீபத்தில் பிறப்பித்த உத்தரவு, அதற்கு உதாரணம்.'நீதிபதிகள் உள்ளிட்ட, வி.ஐ.பி.,க்கள் எனப்படும், மிக முக்கியமான பிரமுகர்களுக்கு, சுங்கச்சாவடிகளில் தனிப்பாதை வேண்டும்; அதில் வேறு யாரும் செல்ல அனுமதிக்கக்கூடாது; அவர்களிடம் கட்டணமும் வசூலிக்கக்கூடாது' என, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட்டுஉள்ளனர்.
நீதிபதிகளுக்கு உரிய மரியாதை கொடுப்பது அவசியம் தான். ஆனால், 'சுங்கச்சாவடிக்கு கட்டணம் செலுத்தும் மக்கள் காத்து கிடந்தால் பரவாயில்லை; கட்டணமின்றி பயணிப்பவர்கள், காத்திருக்கக்கூடாது' என, நினைப்பது எப்படி சரியாக இருக்கும்? ஆங்கிலேயர் ஆட்சி காலத்து விதிமுறைகளின் கீழ், வாழ்ந்து கொண்டு இருப்பவர்களின் மனோ நிலை இன்னும் மாறாமல் இருப்பதன் அடையாளமா இது... மன்னராட்சி காலத்திய ராஜபாட்டைகளை மீண்டும் உருவாக்க நினைக்கின்றனரா? இந்த உத்தரவு என்றில்லை... ஒவ்வோர் இடத்திலும், செயலிலும் தனக்கென்று ஏற்படுத்திக்கொண்ட தனி உயரத்தில் நிற்கிறது, அதிகார வர்க்கம். நீதிபதிகள் மட்டுமின்றி அரசியல் பிரமுகர்கள், உயரதிகாரிகள், செல்வந்தர்கள் என, இந்த பட்டியல் நீள்கிறது.
அடித்தட்டு மக்களுக்கும், இவர்களுக்குமான இடைவெளியைத் திட்டமிட்டே பெரிதாக உருவாக்கி வைத்திருக்கின்றனர்.
போக்குவரத்து, 'சிக்னல்' களுக்கு காத்திருக்க மறுப்பதில் தொடங்கி, கோவில்களில் சாமி கும்பிடுவது வரை, எல்லாவற்றிலும், வெகுஜனத்தோடு சேர்வதற்கு, இந்த பிரபலங்கள்
விரும்புவதில்லை.அவர்களுக்கென ஒரு வரிசை; தனியாக ஒரு வழி; தனித்துவமான கவனிப்பு வேண்டும். இவை, எழுதப்படாத சட்டம்.'மக்களோடு மக்களாக இருந்து பணி செய்தால்
தான் அவர்களின் அன்பைப் பெற முடியும்' என்பது மாறி, 'மக்கள் வியந்து பார்க்கும் இடத்தில் இருந்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும்' என்ற நிலை, இவர்களிடம் ஏற்பட்டிருக்கிறது.
அதிகாரிகளோ இன்னும் ஒரு படி மேலே... மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் வாங்கி தான் வேலை பார்க்கிறோம் என்பதையே மறந்து, உச்சாணிக் கொம்பில் நின்றே பிரச்னைகளை அணுகுகின்றனர். இத்தகைய அரசியல், அதிகார வர்க்கத்தின் தலையில் கொம்பு முளைத்து இருக்கிறது என்பதைக் காட்டுவதன், மிகப் பெரிய அடையாளம் தான் அவர்களது வாகனங்களின் தலையில் சுழலும், 'சைரன்' விளக்குகள்.'சாதாரண மக்களிடம் இருந்து நாங்கள் உயர்வான, வி.ஐ.பி.,க்கள்' என்பதை அழுத்தமாக சொன்ன படி, சிவப்பிலும், நீலத்திலும் சுற்றி வந்த விளக்குகள் ஓராண்டுக்கு முன் அகற்றப்பட்டன. ஜனாதிபதி, பிரதமர், முதல்வர், அமைச்சர், அதிகாரிகள் என, யாருடைய வாகனமும் தனித்து தெரியக்கூடாது என்பதற்காக எடுக்கப்பட்ட முடிவு அது.
அரசியலில் கொடி கட்டி பறக்கும், வி.ஐ.பி., கலாசாரத்தை ஒழிப்பதற்கான முதல் படி. ஆனால், சுழல் விளக்குகளை வாகனங்களில் இருந்து கழற்றி விட்டனரே தவிர, மனதளவில் அவர்களால் மாற முடியவில்லை. காவல் துறை வாகனங்கள் பல இன்னமும், ஒலி எழுப்பிய படியும், நீல நிற சுழலும் ஒளியை சிதற விட்ட படியும் தான் இயங்குகின்றன.அந்தச் சட்டம், நடைமுறைக்கு வந்தவுடன், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், 'இனி எந்த, வி.ஐ.பி., வாகனத்திற்காகவும் போக்குவரத்து நிறுத்தப்படாது' என, அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்படுகிறது. இதை, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களிலும் அமல்படுத்த வேண்டும்.சாமானியர்கள் அனுபவிக்கும் போக்குவரத்து நெரிசல்களை, அதிகாரத்தைக் கையில் வைத்திருப்பவர்களும் உணர்ந்தால் தானே, அதற்கு தீர்வு காண வேண்டும் என, முயற்சிப்பர்... குறைந்தபட்சம் அதைப்பற்றி சிந்திக்கவாவது செய்வர்...மக்களாட்சி தத்துவத்தையே மிரட்டும் அளவுக்கு, தனி சமூகமாகி நிற்கும் அதிகார வர்க்கத்தினரைப் பொதுத்தளத்திற்கு இழுத்து வருவதற்கு இத்தகைய முன்னெடுப்புகள் தேவைப்படுகின்றன. ஏனெனில், அடையாளங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் நாம். அதை அடித்து, உடைத்து விட்டால் காலப்போக்கில் மாற்றங்கள் சாத்தியமாகும்.அரசு அதிகாரத்தின்
சக்கரங்கள் எளியோருக்காகவும் சுற்ற வேண்டும்; சாதாரண மக்களைப் பற்றியும் சிந்திக்க
வேண்டும். அதற்கு செய்ய வேண்டியவை நிறைய இருக்கின்றன...வெள்ளை ஏகாதிபத்தியம் ஏற்படுத்திய அதிகார தோரணையின் எச்சங்கள், இன்னும் நம் அரசியல் அமைப்பின், பல இடங்களில் தொக்கி நிற்கின்றன. ஆங்கிலேயர் ஆட்சியில், உயர் பதவிகளில் எல்லாம்,
வெள்ளையர்களே இருந்தனர். அதனால், அடிமை தேசமாக இருந்த நம் நாட்டை சேர்ந்தவர்கள், அவர்களுக்கு தனி மரியாதை கொடுக்க வேண்டும் என, எதிர்பார்த்தனர்; அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வைத்தனர். அன்று, கலெக்டர் துரைகளும், தாசில்தார் துரைகளும், ஆங்காங்கே குட்டி ராஜாக்களாக இருந்தனர். அவர்களுக்காகவே, மன்னர்களுக்கான மெய்காவலர்கள் போல, 'டவாலி'களை உருவாக்கினர். வெள்ளை உடை, தலைப்பாகை, சட்டைக்கு குறுக்காக சிவப்புப்பட்டை என, அவர்கள் கம்பீரமாக திகழ்வர்; பொது ஜனத்திலிருந்து மாறுபட்டு காணப்படுவர்.
இப்போதும் அவர்கள், ஆட்சியர் அலுவலகம் துவங்கி, பல அரசு அலுவலகங்களிலும் வலம் வரத் தான் செய்கின்றனர்; இது தேவையா?நீதிமன்றங்களில் இந்த நடைமுறை கெடுபிடிகள்
இன்னும் அதிகம். ஏழைக்கும் சமநீதி கிடைக்க, நீதி பரிபாலனம் செய்ய வேண்டிய நீதிபதிகளை, வணங்கி நிற்க, தனி நடைமுறை, செயல்பாடுகள், வார்த்தை பிரயோகங்கள் உள்ளன.
நடப்பு, 21ம் நுாற்றாண்டிலும் இது எப்படி சரியாக இருக்க முடியும்?நீதிபதிகள் பதவிக்கான மரியாதை என்பது வேறு... அதற்காக, ெவள்ளையர்களை மிஞ்சும் வகையில், இப்போதும் அந்த
நடைமுறைகள் தேவை தானா?நீதிமன்றத்திற்குள், நீதிபதி வருவதைப் பார்க்கும் போது, பழங்காலத்து ராஜாவை நினைவுபடுத்துகின்றனர்.இது போன்ற, ஜனநாயகத்தைக் கேள்வி கேட்கும் கூத்துகளுக்குப் பஞ்சமில்லாத நடைமுறைகள் கொண்டது, மாநகரங்களின், மேயர் பதவி... அந்த பதவிக்கு வருபவர்களுக்கு வித்தியாசமான அங்கி, 100 சவரனுக்கு குறையாத தங்க சங்கிலி, அலங்காரம், 'வணக்கத்திற்குரிய மேயர்' என்று அழைத்தே தீர வேண்டிய கட்டாயம்-.
இவை எல்லாமும், அடிமை கால சின்னங்கள் அன்றி வேறு என்ன?அரசையும், அதிகார வர்க்கத்தையும் மக்களுக்கு நெருக்கமானதாக மாற்ற, இவற்றை களைய வேண்டியது, அவசியத்திலும் அவசியம். எல்லாவற்றிலும் முக்கியமாக, 'வி.ஐ.பி., பாதுகாப்பு' என்ற பெயரில் அடிக்கப்படும் கூத்துகள் மீது கண்டிப்பாக கை வைக்க வேண்டும். இதற்காக செலவிடப்படும் தொகை ஒவ்வொரு மாநிலத்திலும் பெரிதாக இருக்கிறது.தலைவர்கள் தேசத்தின் சொத்து. அவர்களைப் பாதுகாப்பது கடமை. அதற்காக தலைவர்கள் வருகையின் போது, கொளுத்தும் வெயிலிலும், கொட்டும் மழையிலும், 10 அடிக்கு ஒரு போலீசை நிறுத்தி, பரபரப்பைக் கூட்டுவது,
எந்த வகையில் நியாயம்?மக்களின் பாதுகாப்புக்கு, அவர்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு, காவல் துறையில் போதுமான பலம் இல்லாத நிலையில், எதற்காக இந்த அக்கப்போர்? வி.ஐ.பி., பாதுகாப்பைக் காரணம் காட்டி, நிறைய நாட்களில், காவல் நிலையங்கள் காற்று வாங்குகின்றன என்பதை நெஞ்சில் நிறுத்தி, இதிலும் ஒரு முடிவெடுப்பது காலத்தின் தேவை.
ெவள்ளைக்காரர்கள் காலத்தில் பின்பற்றப்பட்ட மரியாதை வழிமுறைகள், பணிகளில் இருக்கும், உயர்வு - தாழ்வு, உயர் பதவியிலிருக்கும் நபர்கள் அனுபவிக்கும் சலுகைகள் போன்றவற்றை, வெகு ஜனங்களுடன் இணைக்க வேண்டும்.அதிகாரம் மிக்க, வருவாய் துறை, காவல் துறை, நீதித்துறையில் இன்னமும், ெவள்ளைக்காரத்தனம் அதிகமாகவே இருக்கிறது என்பதை, அந்த துறையினரே உணரத் துவங்கியுள்ளனர். பலர் தங்களுக்கு, அந்த உயர்வான அழைப்புகள், ஆரவாரங்கள் தேவையில்லை என, அறிவிக்க முன்வந்துள்ளனர்.
அரசியலோடும், அதிகாரத்தோடும் நெருங்கிய தொடர்புடைய காவல் துறையில், இப்போதும் வெட்ட வெளிச்சமாக இருக்கும், ஆண்டான் -- அடிமை முறையை, தயவு, தாட்சண்யம் பார்க்காமல் ஒழிக்க வேண்டும். இன்னமும், 'வெள்ளைக்கார துரை' நினைப்பில், உயர் அதிகாரிகள் பலர், 'அய்யா' என்றே, அழைக்கப்படுகின்றனர்.போலீஸ் துரைகளின் வீடுகளில், அவர்களின் மனைவிமார்களுக்குப் புடவை துவைப்பதில் இருந்து, செல்ல நாய்களின் கழிவுகளை அள்ளு வது வரையிலான வேலைகளை, 'ஆர்டர்லி' எனப்படும், போலீஸ்காரர்களே செய்து வந்த முறை ஒழிக்கப்படுவதாக, சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. ஆனால், அது இன்னமும் முழுமையாக செயல்பாட்டுக்கு வரவில்லை.இதையெல்லாம் தாண்டி, பெருமளவு மரியாதை குலைந்திருக்கும், காவல் துறையின் பெருமையை, துாக்கி நிறுத்தும் வேலையை, அந்த காக்கிச் சீருடையை, வேறு நிறத்திற்கு மாற்றுவதில் இருந்து தொடங்கலாம். ஏனெனில், மொத்தமாக அழுக்கேறி கிடக்கும் அந்த வண்ணத்தை, அப்படியே வைத்த படி, மக்களின் எண்ணத்தை மாற்ற முடியாது.இவை போல, செய்ய வேண்டியவை நிறைய இருக்கின்றன. ஒட்டுமொத்தமாக அரசியலையும், அரசாங்கத்தையும், மக்கள் மயப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை, ஊக்குவிப்பதற்கான இடமாக, நீதிமன்றங்கள் திகழ வேண்டுமே தவிர, மக்களாட்சியை, பழைய படி, மன்னராட்சி ஆக்குவதற்கான உத்தரவுகளைப் போடுவதற்கு அல்ல!
கோமல் அன்பரசன்
ஊடகவியலாளர்
இ - மெயில் : komalrk anbarasan@gmail.com