ஈரோடு: ஈரோட்டில், பலத்த பாதுகாப்புடன், விநாயகர் சிலை ஊர்வலம் நேற்று நடந்தது.
சதுர்த்தி விழாவை முன்னிட்டு, 13, 14 தேதியில், ஈரோடு மாநகராட்சி பகுதிகளில், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. தினமும் காலை, மாலைகளில் பூஜை, ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. மாவட்டத்தில் இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில், 1,393 விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டன. மாநகரில், 212 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இவை அனைத்தும், ஈரோடு, சம்பத் நகருக்கு நேற்று மாலை கொண்டு வரப்பட்டன. அங்கு ஊர்வலம் துவங்கியது. பெரியவலசு நால்ரோடு, மேட்டூர் ரோடு சந்திப்பு, பிரப் ரோடு, காமராஜர் வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, மணிகூண்டு சந்திப்பு, காவிரி ரோடு வழியே கருங்கல்பாளையம் காவிரி கரைக்கு கொண்டு செல்லப்பட்டது. பெரிய சிலைகள் கிரேன் மூலம் காவிரி ஆற்றில் விடப்பட்டன. சிறிய சிலைகள் படகு மூலம், காவிரி ஆற்றின் நடுவே எடுத்து செல்லப்பட்டு விடப்பட்டன. ஊர்வலத்துக்கு, இந்து முன்னணி மாநில துணை தலைவர் பூசப்பன் தலைமை வகித்தார். கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் காசியண்ணன் துவக்கி வைத்தார். மாநில செயலாளர் கி?ஷார் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். ஊர்வலத்தை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. வழி நெடுகிலும் நின்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள், ஊர்வலத்தை பார்த்து ரசித்தனர்.
* கொடுமுடி பகுதிகளில், 54 இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள், நேற்று மாலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன.
* சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், பிரதிஷ்டை செய்யப்பட்ட, 70 சிலைகள் நேற்று கரைக்கப்பட்டன. அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் ஏற்றப்பட்ட சிலைகள், எஸ்.ஆர்.டி., கார்னருக்கு கொண்டு வரப்பட்டன. ஊர்வலத்துக்கு, இந்து முன்னனி நிர்வாக குழு உறுப்பினர் குணா தலைமை வகித்தார். சத்தியமங்கலம் சித்தி விநாயகர் கோவில் அருகே, பவானி ஆற்றில் சிலைகள் கரைக்கப்பட்டன. இதையொட்டி, 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.