இரவு 10 மணி வரை மீட்டிங் நடத்தும் ஆபீசர்... இரக்கமே இல்லாமல் பண்றாரு டார்ச்சர்| Dinamalar

இரவு 10 மணி வரை மீட்டிங் நடத்தும் ஆபீசர்... இரக்கமே இல்லாமல் பண்றாரு 'டார்ச்சர்'

Added : செப் 18, 2018
Share
ஈச்சனாரி விநாயகர் கோவிலுக்குப் போவதற்காக சித்ராவை அழைத்துச் செல்ல மித்ரா வந்திருந்தாள்; தோழி ஒருத்தி, காரில் வருவதாகச் சொல்ல, இருவரும் காத்திருந்தனர்.''ஒரு வழியா, எந்தப் பிரச்னையும் இல்லாம விநாயகர் ஊர்வலங்களை நடத்தி முடிச்சிட்டாங்க; கொஞ்சம் 'டிராபிக் ஜாம்' ஆச்சே தவிர, மணிக்கணக்கா மக்களை காத்திருக்க வைக்கலை. உண்மையிலேயே, சிட்டி போலீஸ் பரவாயில்லை!'' என்றாள்
இரவு 10 மணி வரை மீட்டிங் நடத்தும் ஆபீசர்... இரக்கமே இல்லாமல் பண்றாரு 'டார்ச்சர்'

ஈச்சனாரி விநாயகர் கோவிலுக்குப் போவதற்காக சித்ராவை அழைத்துச் செல்ல மித்ரா வந்திருந்தாள்; தோழி ஒருத்தி, காரில் வருவதாகச் சொல்ல, இருவரும் காத்திருந்தனர்.''ஒரு வழியா, எந்தப் பிரச்னையும் இல்லாம விநாயகர் ஊர்வலங்களை நடத்தி முடிச்சிட்டாங்க; கொஞ்சம் 'டிராபிக் ஜாம்' ஆச்சே தவிர, மணிக்கணக்கா மக்களை காத்திருக்க வைக்கலை. உண்மையிலேயே, சிட்டி போலீஸ் பரவாயில்லை!'' என்றாள் சித்ரா.''ஆனா, ரூரல் ஏரியாவுல, பயங்கர சொதப்பல். எல்லாப் பகுதிகள்லயும், ஊர்வலம் போறப்போ, 'டிராபிக்'கை நிறுத்தி, மக்களை பாடுபடுத்திட்டாங்க; அதுலயும், மேட்டுப்பாளையத்துல சனிக்கிழமை சாயங்காலம் நடந்த ஊர்வலத்துக்காக, மொத்த ரோடுகளையும் 'குளோஸ்' பண்ணிட்டாங்க; அதனால, ஊட்டிக்குப் போன டூரிஸ்ட், மக்கள் எல்லாரும் ரெண்டு, மூணு மணி நேரம் மாட்டிக்கிட்டு, நடுராத்திரியில தான் போய்ச் சேர்ந்திருக்காங்க!'' என்றாள் மித்ரா.''இதுக்கு தான், மேட்டுப்பாளையத்துக்கு 'பை-பாஸ்' வேணும்னு நீண்ட நாளா, மக்கள் கேட்டுட்டு இருக்காங்க'' என்றாள் சித்ரா.''இவ்ளோ பெரிய சிட்டிக்கே, பை-பாஸ் போடுறோம்னு பத்து வருஷமா இழுத்துட்டு இருக்காங்க; எப்பக் கேட்டாலும், 'எல்.ஏ.பண்றோம்'னு சொல்றாங்களே தவிர, எந்த வேலையும் நடக்குற மாதிரியே தெரியலையே!'' என்றாள் மித்ரா.''ஆமா...உள்ளாட்சித் தேர்தல் வருதுன்னு, போன வருஷம், அவசர அவசரமா, பல வேலைகளை 'டெண்டர்' விடாமலே கார்ப்பரேஷன்ல செஞ்சிருக்காங்க; அந்த வேலைகளுக்கெல்லாம், இன்னமும் 'டெண்டர்' விடவும் இல்லியாம்; வேலை செஞ்சவுங்களுக்கு காசும் 'செட்டில்' பண்ணவும் இல்லியாம்!'' என்றாள் சித்ரா.''இந்த 'டெண்டர்' விவகாரங்கள் தான், இப்போ அரசியல் களத்துல பரபரப்பா ஓடிட்டு இருக்கு; ஊழல் அமைச்சர்களை பதவி விலகச் சொல்லி, தி.மு.க., சார்புல, நம்ம ஊர்ல இன்னிக்கு ஆர்ப்பாட்டம் நடத்துறாங்க; அடுத்த வாரம், ஆர்.எஸ்.பாரதியைக் கூப்பிட்டு வந்து, தொண்டாமுத்துார்ல ஒரு மீட்டிங் நடத்தப் போறாங்களாம்; அநேகமா அதுல ஸ்டாலினும் கலந்துக்குவார்னு உடன் பிறப்புக பேசிக்கிறாங்க!'' என்றாள் மித்ரா.''அரசியலை விடுக்கா...'அபிஷியல் மேட்டர்' சொல்றேன்...தாசில்தார்கள் டிரான்ஸ்பர்ல துட்டு வாங்கி விளையாடுன அந்த 'இன்சார்ஜ்' ராஜகுமாரனை, முக்கியமான போஸ்ட்டிங்ல இருந்து கலெக்டர் துாக்கிட்டு, பழைய ஆளையே போட்டுட்டாரு. ஆனா, அந்த 'சீட்'டுக்கு பர்மனென்டா எப்போ ஒருத்தரைப் போடுவாங்கன்னு தெரியலை!'' என்றாள் மித்ரா.''யார் யாரையோ மாத்துற பெரிய ஆபீசர், தன்னோட பேரைப் பயன்படுத்தி, வலுவா சம்பாதிச்சிட்டு இருக்குற 'பவர்' பாண்டியை ஏன் மாத்த மாட்டேங்கிறார்னு பல பேரு கேக்குறாங்க. தப்பு செய்யுற 'பவர்' பாண்டியை நம்புற ஆபீசர், பங்களாவுல இருக்குறவுங்க பேச்சைக் கேட்டு, ஒரு அப்பாவி 'பி.சி.'யை மாத்த ஏற்பாடு பண்ணிருக்கிறாராம்'' என்றாள் சித்ரா.''அந்த 'பவர்' பாண்டிக்கு, 'ஓன் போர்டு', 'டி போர்டு'ன்னு நாலு, அஞ்சு வண்டிங்க ஓடுதாமே...பெரிய ஆபீசர்கள் யாராவது வந்தா, 'ஓன் போர்டு' வண்டியை அனுப்பி வச்சு, 'பில்' போட்டுக்கிறாராம்; டிராவல்ஸ் வண்டிகள்லயும், செம வருமானம் வருதாம். பெரிய ஆபீசர் ஒரு வேலை சொன்னா, அதைப் பயன்படுத்தி, இவரு ரெண்டு மூணு வேலை செஞ்சுக்குவாராம்'' என்றாள் மித்ரா.சுடச்சுட சுண்டலும், கருப்பட்டி காபியும் வைத்து விட்டுப் போனாள் சித்ராவின் அம்மா. சுண்டலை சுவைத்துக் கொண்டே கேட்டாள் சித்ரா...''மித்து...இப்போ கவர்மென்ட் கஜானா காலிங்கிறதால, 'டெண்டர்' முறைகேடை விட, விளம்பர வியாபாரம் தான் கனஜோரா நடக்குது; நம்ம சிட்டிக்குள்ள முக்கியமான ரோடுகள்ல இருக்குற 1,600 டிரான்ஸ்பார்மர், ஜங்ஷன் பாக்ஸ்கள்ல கம்பி வலை போட்டு, விளம்பரம் வைக்க முயற்சி நடக்குதாம். அதுக்கு, ஹைவேஸ், கார்ப்பரேஷனுக்கு எல்லாம் என்.ஓ.சி., கேட்டு, மாவட்ட நிர்வாகத்துல இருந்தே, கடிதம் அனுப்பிருக்காங்களாம்!''''மாவட்ட நிர்வாகத்துக்கு வேற வேலையே இல்லியா?''''அதான் தெரியலை...புதுசா ஒரு விளம்பரக் கம்பெனி பேருல, இந்த வேலையைக் கொடுக்குறதுக்கு, மாவட்ட நிர்வாகமே ரொம்பவே மெனக்கெடுறதைப் பார்த்தா, அது, ஆளுங்கட்சிக்காரங்களோட பினாமி கம்பெனியா இருக்குமோன்னு சந்தேகமா இருக்கு!''''ஆனா, கொடுத்தா கோர்ட்டுக்குப் போறதுக்கு, பல பேரு தயாரா இருக்காங்க!'' என்றாள் மித்ரா.''கோர்ட்ன்னதும் ஞாபகம் வந்துச்சு...ஒரு 'அக்யூஸ்ட்'டுக்கு, போலி மெடிக்கல் சர்ட்டிபிகேட் கொடுத்த விவகாரத்துல டாக்டர்கள், வக்கீல் எல்லார் மேலயும் எப்.ஐ.ஆர்., போடச் சொல்லி, கோர்ட் உத்தரவு போட்ருச்சு; ஆனா, ஆர்டர் வரலைன்னு இன்னமும் யார் மேலயும் எப்.ஐ.ஆர்., போடலை; அதுக்குள்ள அந்த டாக்டர்கள், மெடிக்கல் அசிஸ்டெண்ட் எல்லாருமே 'எஸ்கேப்' ஆயிட்டாங்களாம்!'' என்றாள் சித்ரா.''இந்த மேட்டருக்கு அப்புறம், எல்லா கோர்ட்லயுமே, மெடிக்கல் சர்ட்டிபிகேட்களை ரொம்பவே 'செக்' பண்றாங்களாம்; இனிமே டாக்டர்கள், யாருக்கு சர்ட்டிபிகேட் கொடுத்தாலும், அது சம்மந்தமான டாக்குமென்ட்ஸ், சர்ட்டிபிகேட் ஜெராக்ஸ் வச்சுக்கணும்னு ஜி.எச்.,லயும் உத்தரவு போட்டுட்டாங்களாம். இதை பல டாக்டர்கள் 'வெல்கம்' பண்ணிருக்காங்க; துட்டுக்காக மட்டுமே, சர்ட்டிபிகேட் தர்ற டாக்டர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கிறாங்களாம்'' என்றாள் மித்ரா.''நம்ம ஊர்ல கைதிகளுக்கு, சர்ட்டிபிகேட் மட்டுமா போலியா கிடைக்குது...காசு கொடுத்தா, போலியா ஜெயிலே கிடைக்குதே. புழல்ல அந்த ஆட்டம் போட்ருக்காங்கன்னு வெளிய தகவல் வந்திருச்சு; அதுக்கு அடுத்த பெரிய ஜெயிலா இருக்குற கோவை ஜெயில்ல, இந்த விஷயங்கள் எல்லாமே நடக்குதுன்னு பல வருஷமா சொல்லிட்டு இருக்கோம்; ஒரு அதிரடி சோதனை நடத்துனா கண்டிப்பா கண்டு பிடிக்கலாம்'' என்றாள் சித்ரா.கருப்பட்டி காபியை 'உச்'கொட்டி குடித்துக்கொண்டே மித்ரா தொடர்ந்தாள்...''அக்கா...கார்ப்பரேஷன் 'ஈஸ்ட் ஜோன்' ஆபீஸ், ராத்திரி ஏழரை மணிக்கு மேல தான், பயங்கர பிஸியா இயங்குதாம்!''''நிஜமாவே, வேலை தான் பாக்குறாங்களா?''''அங்க, 'ரெவின்யூ' விஷயங்களைக் கவனிக்கிற ஆபீசர் ஒருத்தர், 'ரிவியூ மீட்டிங்'குங்கிற பேருல, இரக்கமே இல்லாம, லேடீஸ்களையும் உட்கார வச்சு, 'நைட்' 10:00 மணி வரைக்கும் பேசுறாராம்; ஆனா, பேசுற விஷயம் எல்லாமே 'கமிஷன்' மேட்டர் தானாம்; பில் கலெக்டர்களை 'டார்ச்சர்' பண்றாராம்; காசு வந்திருச்சுன்னு தெரிஞ்சா மட்டும் தான், எம்.ஐ.,புத்தகத்துல 'சைன்' போட்டு, 'பைல்' அப்ரூவல் பண்றாராம்; மத்ததை பாக்குறதே இல்லியாம்''''இதெல்லாம் பெரிய ஆபீசர்களுக்குத் தெரியாதா?''''பில் கலெக்டர்கள் சில பேரு, பெட்டிஷனே கொடுத்திருக்காங்க...ஆனா, 'நான் 'டெபுடி'யோட ஆளு...என்னை எவனும் அசைக்க முடியாது'ன்னு மிதப்பா பேசுறாராம்...20 வார்டுகள்லயும், 'பினாமி' ஆட்களை வச்சு, வசூல் தட்டிக் கிளப்புறாராம்!''''அங்க மட்டுமா...நம்ம 'டிஸ்ட்ரிக் டிரஸ்ஸரி'யில இருக்குற ஏ.டி.ஓ., ஒருத்தரு, ஏழாவது சம்பள கமிஷன் 'பில்'களை 'பாஸ்' பண்றதுக்கு ஏகப்பட்ட கமிஷன் கேக்குறாராம்; கவர்மென்ட் ஸ்டாப்'க எல்லாரும் புலம்பித் தள்ளுறாங்க'' என்றாள் சித்ரா.அலைபேசியில் வந்த அழைப்பை எடுத்துப் பேசிய மித்ரா, 'கார்த்திகேயன் சார்! நீங்களும், ராமனும் நாளைக்கு 10:00 மணிக்கு, யுனிவர்சிட்டிக்கு வந்துடுங்க' என்றாள். அவளே தொடர்ந்தாள்...''அக்கா...பீளமேடு ஸ்டேஷன் எஸ்.ஐ.,ஒருத்தரு, ஒரு வீட்டுல ஒரு பொண்ணோட இருந்தப்போ...பொண்டாட்டி கிட்ட மாட்டி, ஏரியாவே களேபரம் ஆச்சே...ஞாபகமிருக்கா?''''ஓ...ஜீவனுள்ள சப்-இன்ஸ்பெக்டரா?''''அவரே தான்...போன வாரம், இன்னொரு பொண்ணை ஸ்விப்ட் கார்ல கூட்டிட்டுப் போறப்போ, அந்த எஸ்.ஐ.,யோட பொண்ணு 'ஸ்கூட்டி'யில துரத்திட்டுப் போய், கொடிசியா ரோட்டுல வழி மறிச்சு நிறுத்திருக்கா; கூட இருந்த பொண்ணை இந்த பொண்ணு அடிக்கப் போக, மகளையே அந்த எஸ்.ஐ., நடுரோட்டுல வச்சு அடிச்சிருக்காரு; சுத்தி இருந்த மக்களெல்லாம் கொதிச்சு அவரை அடிக்கப்போக, ஏக ரகளையாயிருச்சு; இப்போ அவரை சரவணம்பட்டி கிரைம்க்கு மாத்திட்டாங்க''''மித்து...நேத்து ஆவின் பூத்கள்ல ரெய்டு பண்ணி, கலப்பட டீத்துாள், கலர் அயிட்டங்களெல்லாம் பறிமுதல் பண்ணிருக்காங்க; இனியாவது அந்த கடைகளை காலி பண்ணுவாங்களா?'' என்று சித்ரா கேட்கும்போதே, தோழி உள்ளே நுழைந்தாள்; மூவரும், காரில் கிளம்பினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X