ஆர்.எஸ்.எஸ்., கொள்கைகளில் மாற்றமா: டில்லி மாநாடு சொல்வது என்ன?| Dinamalar

ஆர்.எஸ்.எஸ்., கொள்கைகளில் மாற்றமா: டில்லி மாநாடு சொல்வது என்ன?

Updated : செப் 21, 2018 | Added : செப் 20, 2018 | கருத்துகள் (29)
ஆர்.எஸ்.எஸ்., மோகன் பகவத்,கொள்கை, கோல்வால்கர்

புதுடில்லி: டில்லியில் மூன்று நாட்கள் நடந்த ஆர்.எஸ்.எஸ்., மாநாட்டில், அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் அரசியல் சட்டம், இந்துத்வா, சுதந்திர போராட்டத்தில் காங்கிரசின் பங்கு, ராமர் கோவில், பொது சிவில் சட்டம் உள்ளிட்ட பல விஷயங்களை கையில் எடுத்து பேசினார். அவரது பேச்சை அலசுபவர்கள், ஆர்.எஸ்.எஸ்., கொள்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என அரசியல் நிபுணர்கள் வியப்பு தெரிவித்துள்ளனர்.


காங்.,கிற்கு பாராட்டு:

'எதிர்கால இந்தியா - ஆர்.எஸ். எஸ்., பார்வையில்' என்ற தலைப்பில், டில்லியில் ஆர்.எஸ்.எஸ்., மாநாடு நடந்தது. இதில் பங்கேற்க வரும்படி 60 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. மாநாட்டில் மோகன் பகவத் பல்வேறு விஷயங்களை பேசினார். 'சுதந்திர போராட்டத்தின் போது காங்கிரஸ் வடிவில், எழுச்சி உருவானது. பலர் தியாகங்கள் செய்தனர். அவை இன்றும் நம்மை ஊக்குவிக்கின்றன. அந்த சித்தாந்தம் நாட்டை சுதந்திரத்திற்கான பாதையில் செல்ல வைத்தது' எனக்கூறி காங்கிரசுக்கு பாராட்டு தெரிவித்தார்.


மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜ.,வின் முக்கிய தலைவர்கள், 'காங்கிரஸ் இல்லாத இந்தியா' என்று முழக்கமிட்டு வரும் நேரத்தில், மோகன் பகவத் இப்படி பேசியது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதுபோல், முஸ்லிம்கள் இல்லாமல் இந்து நாடு கிடையாது என்றும் குறிப்பிட்டார். அரசியல் சட்டத்தை மாற்ற ஆர்.எஸ்.எஸ்., முயற்சிக்கிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் சூழ்நிலையில், 'சுதந்திரத்திற்கான அனைத்து அடையாளங்களையும் நாங்கள் மதிக்கிறோம். அந்த வகையில் அரசியல் சட்டமும் ஒரு அடையாளம் தான்' என்று குறிப்பிட்டுள்ளார்.


தேசியகொடி விவகாரம்:

அடுத்ததாக, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் தேசிய கொடிக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்ற புகார் உள்ளது. அதற்கு பதில் அளிக்கும் வகையில், 'ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள், தேசிய கொடி உதயமான நாள் முதல் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில் தங்களை இணைத்துள்ளனர்' என்று தெரிவித்தார்.
பொது சிவில் சட்டம்:

பொது சிவில் சட்டம் குறித்து பேசும் போது, 'பொது சிவில் சட்ட விஷயத்தை ஒரு இந்து - முஸ்லிம் பிரச்னையாக சித்தரித்து விட்டனர். ஆனால், பொது சிவில் சட்டத்தை அந்த அளவில் சுருக்கி விட கூடாது. நாட்டில் பழங்குடியினர் உட்பட பலரும் தங்களுக்கான தனி சட்டத்தை பின்பற்றி வருகின்றனர். பன்முகத்தன்மையை கருத்தில் கொண்டு அரசியல் சட்டம் இதை அனுமதிக்கிறது.

நாடு முழுவதும் ஒரே சட்டத்தை பின்பற்ற, ஒருமித்த கருத்தை ஏற்படுத்த வேண்டும். ஒரு சமூகத்தில் பல்வேறு குழுக்கள் இருக்கக் கூடாது' என, விளக்கம் அளித்தார்.


இட ஒதுக்கீடு பிரச்னை:

பீஹார் தேர்தலின் போது மோகன் பகவத், இட ஒதுக்கீடு குறித்து சர்ச்சை கருத்தை வெளியிட்டார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. டில்லி மாநாட்டில் அவர் பேசும் போது, ' இட ஒதுக்கீடு பிரச்னை இல்லை. அதை ஒட்டி நடக்கும் அரசியல் தான் பிரச்னை. பயனாளிகள் விரும்பும் வரை இட ஒதுக்கீடு தொடர வேண்டும். அரசியல் சட்டத்தில் கூறப்பட்ட அனைத்து இட ஒதுக்கீடுகளையும், ஆர்.எஸ்.எஸ்., ஆதரிக்கிறது' என்று கூறி பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
அயோத்தி விவகாரம்:

அவர் மேலும், 'அயோத்தியில் ராமர் கோவில் விரைவில் கட்டப்பட வேண்டும். அப்படி செய்தால், இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களிடையே உள்ள பதட்டம் தீரும்' என்றும் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் சாதி மறுப்பு திருமணம் மற்றும் ஓரினச்சேர்க்கையை ஆர்.எஸ்.எஸ்., எதிர்த்து வந்தது. தற்போது அதில் மாற்றம் வந்துள்ளது. அது குறித்து மோகன் பகவத் கூறுகையில், 'ஓரினச்சேர்க்கையாளர்களை தனிமைப்படுத்தி விடக் கூடாது. அவர்களும் சமூகத்தின் ஒரு அங்கம். காலம் மாறி விட்டது. அது போன்ற விஷயங்களை சமூகம் எதிர் கொள்ள தான் வேண்டும். சாதி மறுப்பு திருமணத்திற்கு ஆர்.எஸ்.எஸ்., எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இந்துத்வாவின் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தொண்டர்களிடம் அது பரவலாக காணப்படுகிறது.

சாதி மறுப்பு திருமணம் நடத்தியவர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தினால், அதில் சங்பரிவார் அமைப்பை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை தான் அதிகமாக இருக்கும்' என்றார்.

அவர் மேலும், 'காஷ்மீருக்கு தனி அந்தஸ்து தரும் அரசியல் சட்டத்தின் 370வது பிரிவு மற்றும் 35ஏ பிரிவை ஆர்.எஸ்.எஸ்., ஒருபோதும் ஏற்காது. பசுக்களை பாதுகாக்க வேண்டும் என்பதில் மாற்றம் இல்லை. ஆனால், பசு பாதுகாவலர்கள் என்ற போர்வையில் சட்டத்தை கையில் எடுப்பது குற்றம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிட்டார்.

ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் இரண்டாவது தலைவர் கோல்வால்கர் முஸ்லிம்களுக்கு எதிராக கடுமையாக பேசியவர். அது குறித்து மோகன் பகவத்திடம் கேட்ட போது, கோல்வால்கர் பேசியது, நாட்டின் பிரிவினை மற்றும் இந்து - முஸ்லிம் மோதல் நடந்த கால கட்டத்தை சேர்ந்தது. தற்போது அந்த பேச்சுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை என்று குறிப்பிட்டார்.


கொள்கையில் மென்மையா:

இந்த பேச்சைக் கேட்ட அரசியல் வல்லுனர்கள், பல கொள்கைகளில் தற்போது ஆர்.எஸ்.எஸ்.,ஸூக்கு மென்மைத் தன்மை ஏற்பட்டுள்ளதாகவும், காலத்திற்கேற்ப மாற நினைப்பதாகவும் கருதுகின்றனர்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X