கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஆர்டர்,முக்கிய வழக்கு,உச்ச நீதிமன்றம்,உயர் நீதிமன்றம், நெத்தியடி

தமிழகம் தொடர்பான முக்கிய வழக்குகளில், நேற்று உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் நெத்தியடி உத்தரவுகள் பிறப்பித்துள்ளன. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான புகார்களை விசாரிக்க, சென்னையில் நேற்று தனி நீதிமன்றம் திறக்கப்பட்டது. முதல் வழக்காக, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மீதான புகார், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அதேபோல, எதற்கெடுத்தாலும் விசாரணை கமிஷன் அமைக்கும் போக்கிற்கு, கடிவாளம் போடும் விதமாக, ஏற்கனவே அமைக்கப்பட்ட கமிஷன்களுக்கு, கால வரம்பு நிர்ணயிக்கும்படி, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம், அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கட்டாய, 'ஹெல்மெட்' சட்டத்தை, கண்டிப்பாக அமல்படுத்தவும், கட்டளை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில், வெளிநாட்டு இறக்குமதி மணலை, விலைக்கு வாங்கும் விவகாரத்தில், 'பணம் இல்லை' என, வாதிட்ட தமிழக அரசுக்கு, உச்ச நீதிமன்றம் கிடுக்கிப்பிடி போட்டுள்ளது.

எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை விசாரிக்க தனி கோர்ட்!


தமிழகத்தில், எம்.பி., -- எம்.எல்.ஏ.,க்கள் மீதான, குற்ற வழக்குகளை விசாரிக்கும், சிறப்பு நீதிமன்றம், சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நேற்று துவங்கப்பட்டது. இந்த நீதிமன்றத்தில் முதல் வழக்காக, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மீதான, அவதுாறு வழக்கு விசாரிக்கப் பட்டது. 'எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க, தனி நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும்' என, 2017 நவம்பரில், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், 'தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, டில்லி, தெலுங்கானா உட்பட, 11 மாநிலங்களில், 12 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும்' என, மத்திய அரசு அறிவித்திருந்தது.

இது தொடர்பான நினைவூட்டல் கடிதங்களும், தமிழக அரசுக்கு அனுப்பப் பட்டன. இதையடுத்து, தமிழகத்தில், சிறப்பு நீதிமன்றம் அமைப்பது தொடர்பாக, தமிழக அரசு, சமீபத்தில் ஆணை வெளியிட்டது. அதன்படி, சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின், முதல் தளத்தில், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும், சிறப்பு நீதிமன்றம் நேற்று துவங்கப்பட்டது.

அதை, உயர் நீதிமன்ற நீதிபதி, குலுவாடி ரமேஷ் திறந்து வைத்தார். சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக, சாந்தி நியமிக்கப்பட்டுள்ளார். இவர், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள, ஏழாவது கூடுதல் அமர்வு நீதிபதியாக இருந்தார். மேலும், நீதிமன்ற அலுவலர் உட்பட, எட்டு பேர், இங்கு பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.

ஸ்டாலின் வழக்கு


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து,

அவதுாறாக பேசியதாக, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மீது, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், அரசு வழக்கறிஞர் அவதுாறு வழக்குதொடர்ந்திருந்தார். நிலுவையில் இருந்த இந்த வழக்கு, சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப் பட்டது.நீதிமன்றம் துவங்கப்பட்ட முதல் நாளில், ஸ்டாலின் மீதான அவதுாறு வழக்கு, விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. பின், விசாரணை, 25ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

'ஹெல்மெட்' கட்டாய சட்டத்தை அமல்படுத்த கட்டளை!


'இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள், 'ஹெல்மெட்' அணியும்படி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை, கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.சென்னை, கொரட்டூரைச் சேர்ந்த, ராஜேந்திரன் தாக்கல் செய்த மனு:மோட்டார் வாகன சட்டத்தின்படி, கார்களில் செல்பவர்கள், 'சீட் பெல்ட்' அணிய வேண்டும். இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள், 'ஹெல்மெட்' கண்டிப்பாக அணிய வேண்டும். ஆனால், இந்த சட்ட விதி, முறையாக அமல்படுத்தப்படவில்லை. எனவே, விதிகளை கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த, அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை விசாரித்த, நீதிபதிகள் மணிகுமார், சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள், ஹெல்மெட் அணிய வேண்டும் என, ௨௦௦௭ பிப்ரவரியில் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்துவது தொடர்பாக, உதவி, ஐ.ஜி., அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அதில், கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என, பொது மக்களுக்கு தெரிவிப்பதற்கான, பத்திரிகை செய்திக்குறிப்பு மற்றும் பொது அறிவிப்பு தவிர, வேறு எதுவும் இல்லை.

அரசு பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த, அரசே தீவிரமாக இல்லை. வெறும் காகித அளவில் தான், உத்தரவு உள்ளது. டி.ஜி.பி., தாக்கல் செய்த மனுவும், தெளிவற்றதாக உள்ளது. 2007முதல்,2018 வரையிலான கால கட்டத்தில், விழிப்புணர்வு நிகழ்ச்சி குறித்து, எதுவும்குறிப்பிடப்படவில்லை.

உன்னதமான காரணங்களுக்காக, 2007ல், அரசு பிறப்பித்த உத்தரவு, ஆவண அளவில் உள்ளது

துரதிருஷ்டவசமானது. கண்டிப்பாக, ஹெல்மெட் அணிய வேண்டும் என சட்டம், விதிகள் இருப்பதை, பொது மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.எனவே, அரசு உத்தரவை கண்டிப்புடன் அமல்படுத்தவும், இந்த விஷயத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து, மனு தாக்கல் செய்யவும் உத்தரவிடப்படுகிறது. விசாரணை, அக்., 23க்கு தள்ளி வைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

விசாரணை கமிஷன்களுக்கு காலவரம்பு நிர்ணயிக்க உத்தரவு!


ஓய்வுபெற்ற நீதிபதிகள் நடத்தும் விசாரணை கமிஷன்களுக்கு, உரிய கால வரம்பை நிர்ணயிக்கும் படி, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. சென்னையில், புதிய தலைமை செயலக கட்டடம் கட்டியதில் நடந்ததாக கூறப்படும், முறைகேட்டை விசாரிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் விசாரணை கமிஷனை, தமிழக அரசு நியமித்தது. முன்னாள் முதல்வர் கருணாநிதி, முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் ஆஜராக, விசாரணை கமிஷன், 'சம்மன்' அனுப்பியது.

இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், கருணாநிதி உள்ளிட்டோர் மனுக்கள் தாக்கல் செய்தனர். இதையடுத்து, விசாரணைக்கு, 2015ல், இடைக்கால தடை விதிக்கப்பட்டது. பின், இந்த மனுவை, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் விசாரித்தார்.அரசு நியமித்த விசாரணை கமிஷன்களின் விபரங்கள், அவற்றுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விபரங்களையும் தாக்கல் செய்ய, நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி, அரசு தரப்பில், அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, நீதிபதி ரகுபதி கமிஷனை, 'சஸ்பெண்ட்' செய்து, அரசிடம் ஆவணங்களை ஒப்படைக்கும்படி, நீதிபதி உத்தரவிட்டார்.

இதர விசாரணை கமிஷன்கள் குறித்து, அரசு மறுஆய்வு செய்யவும் உத்தரவிட்டார்.'ஒன்று, கமிஷனை கலைக்க வேண்டும் அல்லது அறிக்கை அளிக்க, கால வரம்பு நிர்ணயிக்க வேண்டும்' என்றும் கூறியிருந்தார். இதையடுத்து, விசாரணை கமிஷனில் இருந்து, நீதிபதி ரகுபதி விலகினார்.

இந்நிலையில், இந்த வழக்கு, நீதிபதி, எஸ்.எம்.சுப்ரமணியம் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி ரகுபதி ராஜினாமா செய்து விட்டதால், வேறு நீதிபதியை நியமிக்க, அரசு

பரிசீலிக்கிறதா என, நீதிபதி கேள்வி எழுப்பினார். இதுகுறித்து, அரசு தரப்பின் கருத்தை கேட்பதாக, அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து, விசாரணையை, வரும், ௨௭ம் தேதிக்கு, நீதிபதி தள்ளிவைத்தார்.

இவ்வழக்கின் விசாரணையின் போது, கமிஷன்களுக்கு உரிய கால வரம்பை, அரசு நிர்ணயிக்கும்படியும், மேற்கொண்டு அவகாசம் அளிப்பதை தவிர்க்கும்படியும், நீதிபதி அறிவுறுத்தினார்.

வெளிநாட்டு மணல் வாங்கும் விவகாரத்தில் கிடுக்கி!


'பெட்ரோலுக்கு வரி வாங்கும் போது, மணல் இறக்குமதியாளருக்கு, 11.71 கோடி ரூபாய் கொடுக்க, பணம் இல்லை என, தமிழக அரசு கூறுவது, வேடிக்கையாக உள்ளது. சம்பந்தப்பட்ட மணல் இறக்குமதி நிறுவனத்துக்கு, ஒரு வாரத்துக்குள், இந்த தொகையை செலுத்த வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில், மணல் குவாரிகளுக்கு தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து, தமிழக அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இதற்கிடையில், ஒரு நிறுவனத்தால், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, துாத்துக்குடி துறைமுகத்தில் வைக்கப்பட்டிருந்த, 55 ஆயிரம் டன் மணலை வாங்குவதற்கு, தமிழக அரசு முன்வந்தது.

நீதிமன்றத்தின் உத்தரவின்படி, அந்த நிறுவனத்துடன் பேசுவதற்கு, ஒரு குழு அமைக்கப்பட்டது. அதன்படி, மணலுக்காக, அந்த நிறுவனத்துக்கு, 11.71 கோடி ரூபாய் தர, தமிழக அரசு சம்மதித்தது. இந்த தொகையை கொடுப்பதற்கு, எட்டு வாரம் அவகாசம் அளித்து, உச்ச நீதிமன்றம், ஜூலையில் உத்தரவு பிறப்பித்தது. பின், இதற்கான அவகாசம், ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டது.

இந்தக் காலக் கெடு நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இந்த வழக்கு, நீதிபதிகள், மதன் பி லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:ஒரு வாரத்துக்குள், 11.71 கோடி ரூபாயையும், மணல் இறக்குமதி செய்த நிறுவனத்துக்கு தர வேண்டும். அவ்வாறு தராவிட்டால், 18 சதவீத வட்டி வசூலிக்கப்படும். 'பணம் இல்லை' என, தமிழக அரசு கூறுவது, வேடிக்கையாக உள்ளது.

தமிழகத்தில், பெட்ரோலுக்கு வரி வசூலிக்கப்படுகிறது அல்லவா; எனவே, மாநில அரசிடம் பணம் இல்லை எனக் கூறுவதை ஏற்க முடியாது. ஒரு வாரத்துக்குள் பணத்தை செலுத்த வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
26-செப்-201810:34:44 IST Report Abuse

D.AmbujavalliHereafter only the opposition folks' cases will be filed in this court. Easy way to escape to Those who have met with I.t , c.b.i and e.d raids Sweet edu, kondaadu

Rate this:
தங்கை ராஜா - tcmtnland,இந்தியா
21-செப்-201817:18:00 IST Report Abuse

தங்கை ராஜாமுதல் வழக்கு குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இல்லையாம். குற்றம் சாட்டியவர்கள் மீதாம். எவ்வளவு வேண்டுமானாலும் கொள்ளையடிச்சுக்கோ. எவனாவது கம்ப்ளைன்ட் பண்ணான்னா நாங்க பாத்துக்கறோம். நல்ல பாலிசி.

Rate this:
kalyanasundaram - ottawa,கனடா
21-செப்-201815:53:17 IST Report Abuse

kalyanasundaramMOSTLY ALL CASES WILL BE CLOSED FOR WANT OF PROPER EVIDENCE. HENCE THERE MIGHT BE A POSSIBILITY, IF AT ALL THIS COURT EXISTS , FOR FUTURE GENERATION AFTER FEW CENTURIES , TO KNOW WHAT JUSTICE MEANS

Rate this:
மேலும் 19 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X