'இரு சக்கர வாகனங்களை ஓட்டுவோர் மட்டுமின்றி, பின் இருக்கையில் பயணிப்போரும், ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும்; அதை தமிழக அரசு முழு அளவில் உறுதி செய்ய வேண்டும்; தவறு இழைப்பவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அது போல, கார், வேன் போன்ற, நான்கு சக்கர வாகனங்களை இயக்குவோரும், 'சீட் பெல்ட்' அணிய வேண்டும் என்ற உத்தரவை, அனைவரும் பின்பற்றச் செய்ய வேண்டும்
எனவும், உயர் நீதிமன்றம் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது.இரு சக்கர வாகன ஓட்டி
கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்; கார்களை ஓட்டுபவர்கள், சீட் பெல்ட் அணிய வேண்டும் என்ற உத்தரவு, இப்போது தான் பிறப்பிக்கப்படுகிறது என்றில்லை... பல ஆண்டு
களுக்கு முன்பே, உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் தெளிவாக உத்தரவு பிறப்பித்துள்ளன.
வாகன விபத்துகளில் உயிர் பலி ஏற்படக் கூடாது; உடல் உறுப்புகள் செயல் இழக்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில், நீதிமன்றங்கள் பிறப்பித்த உத்தரவுகளை, பெரும்பாலான மக்கள்
பின்பற்றுவது இல்லை. அந்த சட்டத்தை அமல்படுத்தும் போலீசாரின் கெடுபிடிகளுக்கு பயந்து, அவ்வப்போது, ஹெல்மெட் போடுவது, சீட் பெல்ட் அணிவது என, சில நாட்கள் பின்பற்றுவோர், கெடுபிடி தளர்ந்ததும், பழைய மாதிரியே, வலம் வருகின்றனர்.
அரசுக்கு நீதிமன்றங்கள் எவ்வளவு கிடுக்கிப்பிடி உத்தரவு பிறப்பித்தாலும், அதை பின்பற்ற வேண்டியது மக்கள் தானே... விழிப்புணர்வு இல்லாதது, போதிய அறிவு இல்லாதது போன்ற காரணங்களால், நீதிமன்றங்களின் கெடுபிடி உத்தரவுகள், சில நாட்களில் செல்லாமல் போய் விடுகின்றன.தனி மனிதர் திருந்தினால், நாடே திருந்தும்... ஆனால், தனி மனிதர்கள் நம் நாட்டில் திருந்த வெகு காலம் பிடிக்கும்; ஏனெனில், அநேகம் பேர், சட்டத்தை மதிப்பதே இல்லை. எப்படி
எல்லாம் ஏமாற்றலாம் என யோசித்து, அதன் படி செயல்படாமல், சிக்கலில் மாட்டிக் கொள்கின்றனர்.
வாகனம் ஓட்டும் போது, மொபைல் போன் பேசினால் கவனம் சிதறும்; விபத்து ஏற்படும் என்பதால், அதைத் தடுக்க சட்டம் இயற்றி, காவல் துறை மூலம் அந்த உத்தரவை நீதிமன்றம் அமல்படுத்தியுள்ளது.ஆனால், பெரும்பாலான வாகன ஓட்டிகள், இதை கண்டு கொள்வதில்லை. ஒரு கையால் வண்டியை ஓட்டி, மறு கையால், மொபைல் போனை காதில் வைத்துக் பேசியபடியே செல்கின்றனர். இவ்வாறு போனால், கவனம் சிதறி, 'பிரேக்' போட வேண்டிய இடத்தில், வண்டி கட்டுப்பாட்டை இழந்து, விபத்து ஏற்பட நேரிடுகிறது.
இன்னும் சிலர், வண்டியின் பெட்ரோல் டேங்க் மீது, இரண்டு சின்னக் குழந்தைகளையும்,
பின் இருக்கையில், மனைவி, அதன் பின், மைத்துனியையும் வைத்து பயணிக்கின்றனர்.
இன்னும் பலர், விபரீதத்தை உணராமல், தலையை ஒரு பக்கமாகச் சாய்த்து, வண்டியை ஓட்டி, மொபைல் போனில் பேசிச் செல்கின்றனர்.
கட்டாயம் மொபைல் பேசித் தான் ஆக வேண்டுமென்றால், வண்டியை ஓரமாக நிறுத்தி, பேசிய பின், செல்லலாமே!ஆனால், அப்படி செய்வதில்லை. அபாயகரமாக வண்டி ஓட்டுபவர்களுக்கு அறிவுரை சொல்லலாம் என, யாராவது சொன்னால், காதில் வாங்கிக் கொள்வதில்லை. நம் நலனுக்குத் தானே சொல்கின்றனர்; அறிவுரையைக் கேட்போம் என்ற எண்ணம் கிடையாது.
அறிவுரை சொல்பவரை, எகத்தாளமாகப் பார்த்து விட்டு போகின்றனர்... 'உன் வேலையை பார்த்துட்டு போ...' என, சிலர் கோபிக்கின்றனர்.
முறையற்ற விதத்தில், இரு சக்கர வாகனங்களை ஓட்டுபவர்களை பிடித்து நிறுத்தும் போலீசார், மொபைல் போனையும், வண்டி சாவியையும் பறித்து வைத்துக் கொள்கின்றனர்.அப்போது, 'மருத்துவமனைக்கு அவசரமாக போகிறேன்... வேலைக்கு நேரமாச்சு சார்...' என, கெஞ்சிக் கூத்தாடி, சாவியை வாங்கிச் செல்பவர்கள், சில அடி துாரம் சென்றதும், வண்டி ஓட்டிய படியே, மீண்டும் மொபைல் போனை எடுத்து, 'மாப்ள... போலீஸ் பிடிச்சாட்டான்டா... அதனால தான் பேச முடியலை... சொல்லு...' என, பழைய படியே, கழுத்தை சாய்த்து, மொபைலில் பேச துவங்கி விடுகின்றனர்; சாலைகளில் வாகனங்களில் பயணிப்போரை, அபாயத்தில் சிக்க வைத்து விடுகின்றனர்.
இரு சக்கர வாகனங்கள் வாங்க தெரிந்தவர்களுக்கு, அதை பாதுகாப்பாக ஓட்ட தெரிவதில்லை. வாகனத்தின் திறன் என்ன... அதன் பாகங்கள் எவ்வளவு எடையை தாங்கும்... சக்கரத்தில் உள்ள காற்று, எவ்வளவு பளுவை பொறுக்கும் என்ற எண்ணம் எல்லாம் கிடையாது; மூவர், நால்வர் என, சகஜமாக பயணிக்கின்றனர்.இத்தகைய பயணம் மிகவும் ஆபத்தானது என தெரிந்தும், அவசரம், பணத்தை மிச்சப்படுத்துதல், போதிய அறிவின்மை, அசட்டு தைரியம் போன்ற பல காரணங்களால், அஜாக்கிரதையாக வாகனங்களில் சென்று, விபத்தில் சிக்கி, தானும் பாதித்து, பிறரையும் பாதிக்கச் செய்கின்றனர். நாம் நினைத்தால், இதை தடுக்க முடியும் அல்லவா?
வண்டி ஓட்டுவதற்கான உரிமம், 18 வயது நிறைந்தவர்களுக்குத் தான் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு வீட்டிலும், இரு சக்கர வாகனம் இருக்கிறது. 18 வயதுக்கு கீழான சிறார்கள், இரு சக்கர வாகனங்களை, போக்குவரத்து நிறைந்த தெருக்கள், சாலைகளில் ஓட்டிச் செல்கின்றனர்.
இதை, சில நேரங்களில் பெற்றோர் கண்டுகொள்வ தில்லை. எப்படியாவது, தங்கள் மகன் அல்லது மகள், வண்டி ஓட்ட பழகினால் நல்லது என்ற எண்ணமுள்ள பெற்றோரும் உள்ளனர்.
சில பெற்றோர், கண்டிக்கும் போது, அதை கேட்கும் நிலையில், சிறார்கள் இருப்பதில்லை.
இதனால், சிறு வயதிலேயே விபத்தில் சிக்கி, உயிரிழப்புகள் ஏற்படுவதை காண முடிகிறது.
இரு சக்கர வாகனத்தில் பயணிப்போர், 'ஹெல்மெட்' கட்டாயம் அணிய வேண்டும் என, சில ஆண்டுகளுக்கு முன், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மீறுபவர்களுக்கு அபராதம், சிறை தண்டனை என, பத்திரிகைகளில் செய்திவெளியாயின.
ஹெல்மெட் வாங்க அனைவரும், கடைகளில் குவிந்தனர். 500 ரூபாய்க்கு விற்ற ஹெல்மெட், 1,000 ரூபாயை தாண்டியது; பல நகரங்களில் ஹெல்மெட்டே கிடைக்கவில்லை. அந்த நேரத்தில்,
அட்டையில் ஹெல்மெட் போல செய்து, அதை தலையில் மாட்டிச் சென்று, போலீசில்
சிக்கியவர்களும் உண்டு.வாகனம் ஓட்டிச் செல்லும் போது விழுந்தால், தலையில் அடிபட்டால், மூளை கலங்கி, உயிரிழப்பு ஏற்படும் என்பதற்காகத் தான், ஹெல்மெட் அணிய உத்தரவிடப்பட்டுள்ளது.
நமக்கு விபத்து ஏற்படாது என்ற அசட்டுத் துணிச்சலில், பேப்பர், அட்டை, தகரம் போன்றவற்றில் ஹெல்மெட் தயாரித்து, அதை அணிந்து செல்பவர்களை பலரும் அறிவோம்.போக்குவரத்து நிறைந்த சாலைகளில், ஹெல்மெட் அணியாமல் பயணிப்போரை பிடிப்பதற்காக, போலீசார் ஆங்காங்கு நிற்பர். அதை துாரத்திலேயே பார்க்கும், தங்களை கில்லாடிகள் என நினைக்கும் சிலர், பெட்ரோல் டேங்க் மீது கவிழ்த்து வைத்திருக்கும் ஹெல்மெட்டை ஒரு கையால் எடுத்து, தலையில் கவிழ்த்து, போலீசை தாண்டியதும், மீண்டும் எடுத்து, பெட்ரோல் டேங்கின் மீது, வைத்து விடுவதை காண்கிறோம்.
ஹெல்மெட் போடாமல் போலீசில் சிக்கிக் கொண்டதும், 'வெயில் அதிகமாக இருக்குது சார்... தலை வலிக்குது; நீர் கோர்க்குது; காதில் அணிந்துள்ள தோடு மாட்டிக்கொள்ளுது; தலை முடி அலங்காரம் கலைகிறது' என, பல காரணங்களைச் சொல்லி, போலீசாரை சமாளிக்க முயற்சிக்கின்றனர்.போலீசாரிடம் ஏன் கெஞ்சிக் கூத்தாட வேண்டும்; ஹெல்மெட்டை அணிந்தால் என்ன என, தங்களுக்கு தாங்களே உணர மாட்டாதவர்களாக இருக்கின்றனர். குற்றம் சிறியதாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும், குற்றமே என்பதை பெரும்பாலானோர் உணர்வதில்லை.
அதனால் தான், நீதிமன்றங்கள் பல ஆண்டுகளாக கெடுபிடி உத்தரவுகளை பிறப்பித்தும், ஹெல்மெட், சீட் பெல்ட் அணிவது இன்னமும், 50 சதவீதம் கூட, வாகன ஓட்டிகளால் பின்பற்றப்படவில்லை. இதை அறியும் போது வேதனையாக உள்ளது.இதெல்லாம் தவறு, சட்ட விரோதம் என, அவர்கள் மனம் ஏற்க மறுக்கிறது. வாகன சோதனையின் போது, போலீசிடம் அபராதம் கட்டினாலும், மறுபடியும் அதே குற்றத்தை தொடர்ந்து செய்தபடியே உள்ளனர்.
சமூக அக்கறையுடன், 'தினமலர்' நாளிதழில், நீண்ட காலமாகவே, செய்திகள் முடியும் இடங்களில் வரும் வெற்றிடங்களில், 'இரு சக்கர வாகன ஓட்டிகள், கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்; போக்குவரத்து விதிகளை மதிக்க வேண்டும்; காரில் பயணிப்போர், சீட் பெல்ட் அணிய வேண்டும்' என, அறிவுரை வாசகங்கள் இடம்பெறுகின்றன.அதை படிப்பவர்கள், அநேகமாக செயல்படுத்துவதில்லை. எனினும், தொடர்ந்து விழிப்புணர்வு பிரசாரத்தில், 'தினமலர்' ஈடுபடவே செய்கிறது.
தனி மனிதர்கள் திருந்தாமல், எந்த சட்டமும் முழுமையடையாது. 'ஹெல்மெட் அணியாமல், அடுத்த தெருவுக்கு கூட போக மாட்டேன்' என்ற உறுதியை, இரு சக்கர வாகனங்கள் வைத்திருக்கும் அனைவரும் ஏற்க வேண்டும்.பிரபலமான நிறுவனங்களின் சொகுசு கார்களில், சீட் பெல்ட்டை ஓட்டுனர் அணியாவிட்டால், வாகனம், 'ஸ்டார்ட்' ஆகாது. அது போல, அனைத்து ரக கார்களிலும் தொழில்நுட்பம் வர வேண்டும். கார்களை ஓட்டுபவர்களும், சீட் பெல்ட் அணியாமல் இயக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.
அரசு, நீதிமன்றங்கள், போலீசார், போக்குவரத்து அதிகாரிகள் போன்றோருக்கு பயந்து, சாலை விதிகளை பின்பற்றுவதை விடுத்து, சுய நன்மை, பாதுகாப்பு, சாலை ஒழுக்கம் போன்றவற்றை கருதி, தனி நபர்கள் தங்களைத் தாங்களே திருத்திக் கொண்டால் மட்டுமே, வளர்ந்த சமுதாயமாக மாற முடியும்.இல்லையேல், எத்தனை ஆயிரம், எத்தனை லட்ச ரூபாய்க்கு வாகனங்களை வாங்கி இயக்கினாலும், அவை மரண துாதனாகத் தான் இருக்குமே தவிர, போக்குவரத்துக்கான
ஊடகமாக இருக்காது என்ற உண்மையை, அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
நாகரிகமாக இல்லாமல், காட்டுமிராண்டி கூட்டங்களாக வாழ்ந்த பல ஆப்ரிக்க நாடுகள் மற்றும்
கண்மூடித்தனமான குற்றங்கள் நிகழும் சில ஆசிய, ஐரோப்பிய நாடுகளிலும் கூட, போக்குவரத்து விதிகள், பொதுமக்களால் முழு மனதுடன் பின்பற்றப்படுகின்றன.பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, நாகரிகத்தையும், பண்பாட்டையும், கலாசாரத்தையும் உலகுக்கு கற்றுக் கொடுத்த நாம், அற்ப காரணங்களுக்காக, அற்புதமான உயிரை, ஹெல்மெட் அணியாமலும், சீட் பெல்ட் போடாமலும் பறி கொடுக்கிறோமே... இது சரியா... யோசியுங்கள்; பின்பற்றுங்கள்!
இ - மெயில் ranimaran1955@gmail.com
சி.சுகுமாறன்,சமூக ஆர்வலர்