''நான் பிறந்து வளர்ந்தது சென்னைதான். எப்.எம்., ரேடியோவில் ஆர்.ஜெ.,வாகி ஐந்தரை ஆண்டுகளாகி விட்டது. நண்பர்கள் எடுத்த சில குறும்படங்களில் சும்மா ஜாலிக்காக நடித்தேன். அது 'வைரலாக' போச்சு. ரொம்ப சந்தோஷமாக இருந்தது'' என ரேடியோவில் பேசுகிற மாதிரி படபடவென பேசுகிறார் விஜய். ரேடியோ ஜாக்கி, குறும்பட நடிகர், பட்டிமன்ற பேச்சாளர், பாடலாசிரியர், பாடகர் என பன்முக திறமையாளராக மாறியிருக்கும் விஜய்யிடம், 'தினமலர் சண்டே ஸ்பெஷல் இன்டர்வியூ' என்றதும், 'இதற்குதானே காத்திருந்தேன்' என உற்சாகமாக பேச ஆரம்பித்தார்.
* ரேடியோ ஜாக்கியானது எப்படி?இன்ஜினியரிங் முடித்து, ஐ.டி., கம்பெனி ஒன்றில் வேலை செய்தேன். ஆனால் ஏனோ அந்த வேலை மனதுக்கு திருப்தி இல்லை. பிறகு ஆர்.ஜே.,வாக சேர்ந்தேன். பள்ளி, கல்லுாரிகளில் நான் ஒரு மேடைகூட ஏறினது இல்லை. நண்பர்களிடம் எப்படி பேசுவேனோ அதுபோல் எப்.எம்.,மில் பேசினேன். எல்லாருக்கும் பிடித்து விட்டது.
* பட்டிமன்ற பேச்சாளராகவும் ஆகிவிட்டீர்களே?'நடுவர் அவர்களே... நான் கூறவருவது என்னவென்றால்...' இந்த மேடை பேச்சு நமக்கு வராது. ஜாலியாக பேசுவேன். பட்டிமன்றத்தில் பேச வாய்ப்பு கிடைத்த போது. முதல்ல தயங்கினேன். பரவாயில்லை உங்க ஸ்டைல்ல பேசுங்க தம்பி என்றார்கள். அதுவும் நல்ல 'ரீச்' ஆச்சு. இப்போது 'டிரண்ட்' ஆகி வருகிறது.
* சாலமன் பாப்பையா பாராட்டினராமே?ஆமாம். பட்டிமன்றத்திற்கென ஒரு பாரம்பரியம் இருக்குனு எங்க தாத்தா சொல்வாரு. அப்படிப்பட்ட பட்டிமன்றத்தில் நான் பேசுவதை பார்த்து நடுவர் ராமச்சந்திரன் 'நீங்கள் எல்லாம் வந்தது மகிழ்ச்சி. உங்களை போன்றவர்களால் பட்டிமன்றம் தொடர்ந்து நடக்கும்' என்றார். பட்டிமன்ற பிதாமகன் சாலமன் பாப்பையா பட்டிமன்றத்திலும் வாய்ப்பு கிடைத்தது. 'ஐயா... எனக்கு பட்டிமன்ற ஸ்டைல் எல்லாம் வராதுங்கய்யா' என்றேன். 'ஐயா... நீ பேசுய்யா... நான் பார்த்துகிறேன்' என்றார். நான் பேசின பிறகு 'நல்லா இருக்குய்யா... நீ பேசின ஸ்டைலு. நல்லா பட படவென பேசுற. புல் ஸ்டாப், 'கமா'வெல்லாம் இல்லையேயா. ஓடுறீயே. அருமை' என்றார்.
* அடுத்து சினிமா என்ட்ரிதானே?சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதுவரை 40 பாடல்களை எழுதி உள்ளேன். ஆறு பாடல்கள் வரை சினிமாவில் பாடி இருக்கிறேன். சிம்பு இசையமைத்துள்ள 90 எம்.எல்., படத்திற்கு ஆறு பாடல்களை எழுதி உள்ளேன்.
* காதல்... கீதல்...யாராச்சும் சொல்ல மாட்டார்களா என காத்திருக்கிறேன். ஒருத்தர்கூட இதுவரை சொல்லலை, என ஆதங்கப்படுகிறார் விஜய்.
இவரை பாராட்ட colorkanavu@gmail.com