ஒயர்லெஸ் தொலைத்த போலீசு... ஜோடிகள் மாடிக்கு போகும் ஆபீசு...!

Added : செப் 24, 2018
Advertisement
காலையில் சுட்டெரிக்கும் வெயில், இரவில் கடுங்குளிர் என, சட்டென்று மாறும் வானிலையால், காய்ச்சலில் அவதிப்பட்டு ஓய்வில் இருந்தாள் மித்ரா. அவளை பார்க்க சென்ற சித்ரா ''என்ன... மித்து. 103 டிகிரி காய்ச்சலாமா? பார்த்து எல்லா டெஸ்ட்டும் பண்ணிக்கலாம். எலிக்காய்ச்சல், சிக்-குன்-குனியா... காய்ச்சல் வருதாம்,'' என்றாள்.''ஏன்டியம்மா, சித்ரா.. இப்படி பயமுறுத்றே'' மித்ராவின் அம்மா
ஒயர்லெஸ் தொலைத்த போலீசு... ஜோடிகள் மாடிக்கு போகும் ஆபீசு...!

காலையில் சுட்டெரிக்கும் வெயில், இரவில் கடுங்குளிர் என, சட்டென்று மாறும் வானிலையால், காய்ச்சலில் அவதிப்பட்டு ஓய்வில் இருந்தாள் மித்ரா.

அவளை பார்க்க சென்ற சித்ரா ''என்ன... மித்து. 103 டிகிரி காய்ச்சலாமா? பார்த்து எல்லா டெஸ்ட்டும் பண்ணிக்கலாம். எலிக்காய்ச்சல், சிக்-குன்-குனியா... காய்ச்சல் வருதாம்,'' என்றாள்.''ஏன்டியம்மா, சித்ரா.. இப்படி பயமுறுத்றே'' மித்ராவின் அம்மா கேட்டதும், ''நோ... நோ.. இல்ல ஆன்ட்டி. இப்ப இருக்கற நிலைமையைத்தான் சொன்னேன்,'' என்றாள் சித்ரா. ''பரவாயில்லைமா... மித்துவோட நல்லதுக்குத்தானே சொல்கிறாய்,'' என்றவாறு, சமையலறை பக்கம் சென்றார்.''ஆமாங்க்கா... எலிக்காய்ச்சல் எங்கே வந்தது?''''அவிநாசிக்கு பக்கத்துல, தெக்கலுார், உப்பிலிபாளையம் கிராமங்களில், நாலு பேருக்கு வந்துடுச்சாம். தெரிஞ்ச உடனேயே, சுகாதாரத்துறையினர் ஓடோடி சென்று மொபைல் கேம்ப் போட்டு, எல்லோருக்கும் மருந்து மாத்திரை கொடுத்திருக்காங்க,''''அதாவது பரவாயில்லை. வேற நாலு பேருக்கு சிக்-குன்-குனியா காய்ச்சலும் வந்துடுச்சாம். என்ன பண்றதுன்னு தெரியாம, டாக்டர்கள் பரபரப்பா இருக்காங்களாம்,''''பரவாம இருந்தா சரிதாங்க்கா. சிவன்மலை ஆண்டவர் கூட இப்படி உத்தரவு போட்டிருக்க மாட்டாரு,'' என்றாள் மித்ரா.''என்னப்பா சொல்றே. ஆண்டவர் உத்தரவு பெட்டியில ஏதாச்சும் வச்சிருக்காங்களா?'' என்றாள் சித்ரா.''கோவில் விஷயம் எப்படி வெளியே போகுது. யாரும் பத்திரிகைகாரங்ககிட்ட பேசக்கூடாது'ன்னு, கோவில் அதிகாரி உத்தரவு போட்டிருக்காராம்''''வழக்கமா, என்ன பொருள் வைக்கறாங்கனு, பேர் எழுதிப்போடுவாங்க. இனி, அப்படி செய்யக்கூடாதுன்னு, கண்டிஷன் போட்டிருக்காராம்,'' என்றாள் மித்ரா. ''நல்லது நடந்தா, நாலு பேருக்கு தெரியட்டுமேன்னுதான் செய்தி போடுறாங்க. அது இவருக்கு பொறுக்க மாட்டாங்குதா?'' என்று கோபப்பட்டாள் சித்ரா.''ஏன்க்கா... கலெக்டர் ஆபீசில், 'லிப்ட்'டை பூட்டி வைக்கலாம்னு, முடிவாம். ஏன்... என்னாச்சு?'' ''ஆமான்டி... உண்மைதான். ஏழாவது மாடியில ஆபீசே இல்லை; இருந்தாலும், அந்த மாடிக்குத்தான், சிலர், ஜோடியா போறாங்களாம். அதுவும், லீவு நாளில் இப்படி ஜோரா, ஜோடிங்கா போறாங்களாம்,''''இப்படித்தான், விநாயகர் சதுர்த்தி அன்னைக்கு, ஒரு பெண், லிப்டில் போய் சிக்கிட்டாங்களாம். தகவல் தெரிஞ்சு, 'ஒன்ஹவர்' போராடி, அந்த பெண்ணை வெளியே கொண்டு வந்தாங்களாம். இதனால, லீவு நாட்களில், 'லிப்ட்'டை பூட்டி வைக்கலாமுன்னு, அதிகாரிகள் முடிவு செஞ்சிருக்காங்களாம்,'' நீண்ட விளக்கம் கொடுத்தாள் சித்ரா.மித்ராவின் அம்மா கொடுத்த, காபியை குடித்த சித்ரா, ''கேத்தம்பாளையம், குமாரசாமி நகரில், கஞ்சா விற்பனை செஞ்சவங்க வீட்டை, பொதுமக்களே சூறையாடி, வீட்டுக்கு 'சீல்' வச்சது தெரியுமா?'' என்றாள். 'ஆமாங்க்கா... கேள்விப்பட்டேன். கஞ்சா விற்பதை கண்டுக்காம இருக்க ரோந்து போலீசாருக்கு 'சிறப்பு கவனிப்பு' நடப்பதால் தான் இந்தளவு பிரச்னை பெரிதாகிடுச்சு. குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை போலீசாரை மாற்றினால், இதுபோல பல பிரச்னை குறையும். இல்லாட்டி, போலீஸ்காரங்க மாமூல் வாங்கிட்டு, 'மகாராஜா' போல வலம் வந்துட்டுத்தான் இருப்பாங்க,'' ''அந்த போலீஸ்காரர் இப்படின்னா, இன்னொருத்தர், லீவு நாள் கூட டியூட்டி பார்க்கறாரு?''''அது யாருக்கா.. அப்படி கடமை.. கண்ணியம்.. கட்டுப்பாடு... காக்கிற போலீஸ்காரர்?'' என்று சிரித்தாள் மித்ரா. ''நெருப்பெரிச்சலில் ஒரு ரகசிய இடத்தில் நடக்கும் சூதாட்ட கிளப்புக்கு சென்று, அங்கு பாதுகாப்பாக இருப்பது, அங்கு வருவோர் ஏதாவது தகராறு செய்தால், அவர்களை கவனிப்பது இவர் வேலையாம். ஸ்டேஷனில் லீவு எடுத்தால், கூட அங்கே தவறாமல் ஆஜராகி 'சின்ஸியரா' வேலை பார்க்றாராம்,'' என்றாள் சித்ரா. அப்போது, 'டிவி'யில், தி.மு.க., தலைவர் 'ஸ்டாலின்' பேட்டி ஒளிபரப்பானது. இருவரும், அதை பார்த்தவாறே காபி குடித்தனர். அந்த பேட்டி, முடிந்ததும், திருப்பூரில் கமல்ஹாசன் பங்கேற்ற கூட்டத்தின், 'கிளிப்' ஒளிப்பரப்பானது.அதைப்பார்த்த சித்ரா, ''கமலை, எப்படியாவது 'டீ' சங்கத்துக்கு கூட்டிட்டு போயிடணும்னு, அவரோட அபிமானிகள், நிர்வாகிகள் கிட்ட கேட்டிருக்காங்க. வரட்டும், ஆனால், அரசியல் பேசக்கூடாது,''''ஏன்னா... மத்திய அரசு நமக்கு பல சலுகைகள் செய்யுது. அதனால, எக்காரணத்தை கொண்டு யாரையும் தாக்கி பேசக்கூடாதுன்னு, கண்டிஷன் போட்டாங்களாம். அதை கமல்கிட்ட சொன்னதுக்கு, அவரும் ஓ.கே., சொல்லிட்டு, மேலோட்டமாக பேசிட்டே போய்ட்டாராம். அதுக்கப்புறம்தான், ஏற்பாடு செஞ்சவங்களும், 'டீ' நிர்வாகிகளும் 'ரிலாக்ஸ்' ஆனாங்களாம்,'' என்றாள்.''அட... பரவாயில்லையே,'' என்றாள் மித்ரா. அப்போது, 'டிவி'யில், 'சாமி 2' பட டிரெய்லர் வந்ததும், மித்ரா, ''விக்ரம் மாதிரியே, இங்கொரு இன்ஸ்பெக்டர், சீறுகிறாராம்,'' என்றாள்.''யாரு? எந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் மித்து?''''ஏற்கனவே, போன வாரம் நாம் பேசினோமே, அதே... 'முருகனின்' இன்னொரு பேர் கொண்ட இன்ஸ்., தான்,''''ஏன்? அப்படி, யார் மேல அவருக்கு கோபம்?''''அவரோட ஸ்டேஷனில் நடக்கற, கட்டப்பஞ்சாயத்து, மாமூல் விஷயங்களை, 'பிரஸ்காரங்க கிட்ட, யாரு போய் சொல்றாங்கன்னு தெரியல. அப்படி சொல்ற ஆள கண்டுபிடிச்சு, கையை, காலை ஒடைக்கணும்னு,' சினிமா வசனம் பேசுறாராம். நாம் இனி திருந்திக்கலாம் என யோசிக்காம, இப்படி 'டயலாக்' பேசினா, இன்னும் சிக்கல்தான் வருமுன்னு, அவருக்கு தெரியாதுங்களா?''''இந்த இன்ஸ்., இப்படின்னா... காளைக்கு பேர் போன ஊரில், லேடி இன்ஸ்பெக்டரின் 'வாக்கி டாக்கியை' காணோமாம்,''''இதென்னடி பெருங்கொண்ட கூத்தா இருக்குது?''''ஸ்டேஷனுக்கு வந்த யாரோ, துாக்கிட்டு போய்ட்டாங்களாம். இதை தெரிஞ்சுட்ட எஸ்.பி., வறுத்து எடுத்துட்டாராம். விஷயம் வெளியே வர்றதுக்குள்ள, கண்டுபிடிங்கன்னு உத்தரவு போட்டாராம். இன்னும் தேடிட்டுத்தான் இருக்காங்களாம்,'' என்றாள் மித்ரா.''அட... இங்க இப்படின்னா...! லிங்கேஸ்வரர் ஊரில் நடக்கும் பல விஷயங்கள், எஸ்.பி.,க்கு ரொம்ப 'லேட்டா'தான் தெரியுதாம்,''''ஏங்க்கா... அங்கே அப்படி என்ன நடந்தது?''''கருவலுாருக்கு பக்கத்தில, இரு தரப்பினரிடையே சண்டை வந்த விஷயத்தில், ஒரு தரப்புக்கு பின், ஒரு அமைப்பு இருந்திருக்கு. ஆனா, இதைப்பற்றி முழுசா கண்டுக்காம விட்டுட்டாங்க. அது பெரிசாயிடுச்சு. அதுக்கப்புறம் அமைதிப்பேச்சு... அப்படின்னு, ஏதோ சமாளிச்சுட்டாங்க,'' ''இதைக்கூட 'ஸ்மெல்' பண்ண முடியலைன்னா? அது என்ன தனிப்பிரிவு போலீஸ்?'' என்று மித்ரா சொன்னதும், அவள் அம்மா, ''என்னமோ, கருவலுாருன்னு பேசினீங்களே. சித்து... அடுத்த வாரம் அங்கிருக்கிற மாரியம்மன் கோவிலுக்கு போலாமா? நீ... வர்றியா?'' என்றார்.''ஓ... தாராளமா, வர்றேன் ஆன்ட்டி. மாரியம்மன் கோவில்ன்னு சொன்னதும், ஊராட்சியை கவனிச்சுக்கிற ஒருத்தர் காட்டில், 'பணமழை' கொட்டறது நினைவுக்கு வந்திடுச்சு மித்து''''புரியற மாதிரி சொல்லுங்க,''''அந்த சின்ன ஊரில், வாட்டர் கனெக்ஷனுக்கு பத்து, பில்டிங் அப்ரூவலுக்கு முப்பதாயிரம் என, 'கவனிச்சாதான்' வேலை நடக்குதாம். அங்க பொறுப்பிலுள்ள ஒருத்தரு, தன்னை 'பெரிய அதிகாரின்னு' நினைச்சுட்டு, 'சும்மா' வாங்கி தள்றாராம். வேலை நடந்தா போதும்னு, மக்களும் கொடுத்துட்டு, 'கப்சிப்'ன்னு போறாங்களாம்டி,''''மக்கள்... இப்படி இருந்தா... அதிகாரிங்க திருந்தவே மாட்டாங்க்கா,'' “அரசு பஸ் மாதிரியே, ரோந்து போலீசும் 'பாய்ன்ட் டூ பாய்ன்ட்' ஆரம்பிச்சிருக்காங்க தெரியுமா?'' என்றாள் சித்ரா. “இது எங்கக்கா.. ரொம்ப புதுசா இருக்கே''“ரோந்து ஜீப், டியூட்டி டைமுக்கு கிளம்பினதும், திருச்சி ரோட்டுல, காலேஜ் பக்கமா, 'ஜெய் ஸ்ரீராம்'னு மரத்தடியில போட்டுவாங்க. அங்க, சரக்கு விக்கறது தெரிஞ்சு, 'குடி' மகன்கள மடக்கி பிடிப்பாங்க. வசூலோட, சாப்பாட்டையும் அங்கயே முடுச்சுட்டு, குட்டி துாக்கத்தோட முதல் ஷிப்ட் முடிஞ்சிடும்,''“அப்புறம், கோழி பண்ணையூரில் இருக்கற, பழைய பைபாஸ் ரோட்டுல 'ஹாயா' ரெஸ்ட் எடுக்கறதுதான் வேலை. பிரச்னைய பார்க்காம, இப்படி துாங்கற போலீச வச்சுட்டு என்ன செய்றது? மொத்தத்துல, கவர்மென்ட் ஜீப் எடுத்துட்டு, பாய்ன்ட் டூ பாய்ன்ட் வேலை பார்க்கறதுதா ரோந்து போலீசோட வேலையா?'' என, விளக்கினாள் சித்ரா. அப்போது, மித்ராவின் அம்மா, ''சரி...சரி.. பேசினது போதும்.. சாப்பிட வாங்க,'' என்றதும், இருவரும் எழுந்தனர்.
''நெருப்பெரிச்சலில் ஒரு ரகசிய இடத்தில் நடக்கும் சூதாட்ட கிளப்புக்கு சென்று, அங்கு பாதுகாப்பாக இருப்பது, அங்கு வருவோர் ஏதாவது தகராறு செய்தால், அவர்களை கவனிப்பது இவர் வேலையாம். ஸ்டேஷனில் லீவு எடுத்தால், கூட அங்கே தவறாமல் ஆஜராகி 'சின்ஸியரா' வேலை பார்க்றாராம்,''

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X