ஆர்.டி.ஓ., ஆபிசில் லஞ்சம்... யார்தான் பிரேக் போடுவது!| Dinamalar

ஆர்.டி.ஓ., ஆபிசில் லஞ்சம்... யார்தான் 'பிரேக்' போடுவது!

Added : செப் 25, 2018
Share
வெளியே திடீர் மழை. ஷாப்பிங் செல்ல கிளம்பிய சித்ராவும், மித்ராவும் வீட்டில் முடங்கினர். ஜன்னல் அருகே சேரை இழுத்துப்போட்டனர். அம்மா கொண்டு வந்த சூடான சுக்கு காபியை உறிஞ்சிய சித்ரா,''பழி ஒரு பக்கம், பாவம் ஒரு பக்கம்'' என சஸ்பென்ஸ் வைத்தாள்.''விரிவா சொல்லு'' என்றாள் மித்ரா.''ஏரியா வி.ஐ.பி.,பிள்ளையார்புரம் ரோட்டுல போய்க்கிட்டிருந்தாராம். அப்ப வழியில ஒரு கோஷ்டி,
ஆர்.டி.ஓ., ஆபிசில் லஞ்சம்... யார்தான் 'பிரேக்' போடுவது!

வெளியே திடீர் மழை. ஷாப்பிங் செல்ல கிளம்பிய சித்ராவும், மித்ராவும் வீட்டில் முடங்கினர். ஜன்னல் அருகே சேரை இழுத்துப்போட்டனர். அம்மா கொண்டு வந்த சூடான சுக்கு காபியை உறிஞ்சிய சித்ரா,''பழி ஒரு பக்கம், பாவம் ஒரு பக்கம்'' என சஸ்பென்ஸ் வைத்தாள்.''விரிவா சொல்லு'' என்றாள் மித்ரா.''ஏரியா வி.ஐ.பி.,பிள்ளையார்புரம் ரோட்டுல போய்க்கிட்டிருந்தாராம். அப்ப வழியில ஒரு கோஷ்டி, போதையில அவங்களுக்குள்ளே சத்தம் போட்டுக்கு இருந்திருக்காங்க. இதைப்பார்த்த வி.ஐ.பி., தன்னைத்தான் வசைபாடுறாங்கன்னு, போலீசுக்கு தகவல் சொன்னாராம்,''''போலீஸ்காரங்க நடுங்கியிருப்பாங்களே''''கரெக்ட். போலீஸ்காரங்க விசாரிச்சதுல, அவங்க மேல தப்பு இல்லைன்னு தெரிஞ்சுருக்கு. இருந்தாலும் வி.ஐ.பி., சொன்னதால வேற வழியில்லாம, அவங்க மேல கஞ்சா கேஸ் போட்டு உள்ள தள்ளிட்டாங்களாம். மாஜிஸ்திரேட் முன்னால ஆஜர்படுத்தும் போது, கும்பல்ல ஒருத்தர் சொல்லிட்டாராம். உடனே மாஜிஸ்திரேட், 'உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையானு' திட்டிருக்காரு. போலீஸ்காரங்க குனிஞ்ச தலை நிமிரலையாம்,'' என்றாள் மித்ரா.''லஞ்சம் தவிர்; நெஞ்சம் நிமிர்'னு எத்தனை தடவை சொன்னாலும், ஆர்.டி.ஓ., ஆபிஸ்காரங்க மட்டும் திருந்தவே மாட்டாங்க,'' என்று அடுத்த மேட்டருக்கு தாவினாள் சித்ரா.''ஏன்...என்ன ஆச்சு''''நம்ம ஆர்.டி.ஓ., ஆபீஸ்கள்ல, புதுசா மென்பொருள் அறிமுகம் செய்றதால, கொஞ்சம் லேட் ஆகுது. இதைக்காரணம் காட்டி, அங்க வர்ற பொதுமக்கள், புரோக்கர்கள்கிட்ட, 'கறந்து' தள்ளுறாங்களாம்,''''அநியாயமே இருக்கே...கேட்க வேண்டியதுதானே,'' கொதித்தாள் மித்ரா.''கேட்ருக்காங்க. அதுக்கு அவங்க, 'நாங்க ஏகப்பட்ட தொகையை கப்பம் கட்டிட்டுதான் இங்க வந்திருக்கோம். அதை கவர்மென்ட் முடியறதுக்குள்ளே வசூலிச்சாகணும்' ங்கறாங்களாம்,'' என்றாள் சித்ரா.''அநியாயம்...யாருதான் இவங்கள அடக்குறது''அதற்கு சித்ரா, ''மாவட்ட நிர்வாகம், போக்குவரத்து இணை கமிஷனர்னு யார் இருந்தும் பிரயோஜனம் இல்லை. ஜனங்ககிட்ட பணத்தை பிடுங்கறவங்க, தொடர்ந்து பிடுங்கிக்கிட்டுதான் இருக்காங்க. இனி, இந்தியன் தாத்தா தான் வரணும்,'' என்று கூறி நமுட்டு சிரிப்பு சிரித்தாள்.''நானும் ஒரு ஆர்.டி.ஓ., மேட்டர் சொல்றேன். கேளுக்கா,'' என்று துவங்கினாள் மித்ரா.''இன்னிக்கு ஷாப்பிங் போன மாதிரிதான் ...சொல்லு,'' என்றாள்.''தி.மு.க.,வுக்கு எதிரா, ஆர்ப்பாட்டம் நடத்த, ஆளுங்கட்சிக்காரங்க நாலு ஆர்.டி.ஓ., ஆபிஸ்லயிருந்தும், தலா, 250 வாகனங்கள் வீதம் அனுப்பி வைக்கணும்னு, ஆர்.டி.ஓ.,க்களுக்கு ஆர்டர் போட்டுருக்காங்க,''''இப்படி அராஜகம் பண்ணுனால்தான் அது ஆளுங்கட்சி...மேல சொல்லு,'' என்று சிரித்தாள் சித்ரா.''இது மாதிரிதான், போன வருஷம் இவங்க போட்ட உத்தரவை மதிக்காத ஆர்.டி.ஓ., பாஸ்கரன், மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் ரெண்டு பேரையும், சஸ்பெண்ட் பண்ணுனாங்க. வேற ஊருக்கு மாத்துனாங்க. அதனால, இப்ப இருக்கற அதிகாரிங்க, கால்ல பம்பரத்தை கட்டிக்கிட்டு வண்டி பிடிக்கற வேலையில இறங்கியிருக்காங்க,'' என்று முடித்தாள்.''மழை விட்டபாடில்லை...சூடா ஏதாவது அரசியல் மேட்டர் சொல்லேன்...,'' என்றாள் சித்ரா.''பழைய மேயர் செ.ம.வேலுசாமிய ஞாபகமிருக்கா,?'' என்று கேட்டாள் மித்ரா.''எப்படி மறக்க முடியும்...பல்லடம் ஆக்சிடென்ட் விவகாரத்துல பதவி இழந்தாரே,''''அவரேதான். விட்ட இடத்தை பிடிக்கணும்னு, இப்ப கோதாவுல இறங்கிட்டாராம். சூலுார் பாப்பம்பட்டி பிரிவில ஒரு திருமண மண்டபத்துல போன ஞாயித்துக்கிழமை, எம்.ஜி.ஆர். நுாற்றாண்டு விழா பொதுக்கூட்டம்னு ஒரு கூட்டத்தை நடத்தி, மட்டன் பிரியானி, சிக்கன்ப்ரை, சரக்குன்னு தொண்டர்களை குளிப்பாட்டி எடுத்துட்டாராம்,'' என்றாள் மித்ரா.''சரக்குன்னதும்தான் ஞாபகம் வருது...நஞ்சுண்டாபுரம் ரோடு எஸ்.என்.வி., கார்டன்ல இருந்து கதிரவன் கார்டன் போற ரோட்டுல தினமும் சாயங்காலமானா, பசங்க சரக்கு அடிச்சுட்டு அலம்பு பண்றாங்களாம். ரோட்டுல போற பொண்ணுங்கள, வழிமறிக்கறாங்களாம். இந்த ஏரியால ஓரமா நிற்குற வண்டிகள்ல, பலான சமாசாரம்லாம் நடக்குதாம்,'' என்றாள் சித்ரா''நம்ம போலீஸ்காரங்க என்னதான் செய்றாங்களாம்,'' என்று உஷ்ணமானாள் மித்ரா.''அதை விடு. சரவணம்பட்டி காலேஜ் நிர்வாகி, இளம் பொண்ணோட நெருக்கமா இருந்த வீடியோ மேட்டரோட பின்னணி வெளியே வந்திருக்கு,'' என்றாள் சித்ரா.''ஆமா...ஆக்ச்சுவலி என்னதான் நடந்தது''''அந்த மேட்டருக்கு பின்னால, 'மீடியா'ங்கற பேருல, சுத்திக்கிட்டிருக்கற சிலபேருங்களோட பேரு அடிபடுது. பணம் பறிக்கற நோக்கத்தோட, இவங்கதான் ரகசியமா வீடியோ செட் பண்ணி பதிவு செஞ்சிருக்காங்க. பல லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியிருக்காங்க...,''''ஓகோ''''காலேஜ் தரப்புல இருந்து கண்டுக்காததால, போலீஸ் ஸ்டேஷனுக்கு போயிருக்காங்க அந்த 'மீடியா' குரூப்...கடைசில பல லட்சம் ரூபாய் பேரம் படிஞ்சு, புகாரை திருப்பி வாங்கிட்டு வந்துட்டாங்களாம்...''''நானும் அரசல் புரசலா கேள்விப்பட்டேன். இந்த கும்பல் பற்றி, போலீஸ் ரகசிய தகவல் திரட்டிட்டு இருக்கு...இவங்க இதேபோல இதுக்கு முன்னாடியும் பணம் பறிச்சிருக்காங்களாம்'' என்று கொந்தளித்தாள் மித்ரா.இதற்குள் மழை நின்று விட, இருவரும் ஷாப்பிங் கிளம்ப தயாரானார்கள்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X