புதுடில்லி, மாட்டிறைச்சிக்காக, பசுக்கள் கடத்தப்படுவதாகவும், குழந்தை கடத்தல் கும்பல் சுற்றித் திரிவதாகவும், தகவல் பரிமாற்ற செயலி, 'வாட்ஸ் ஆப்' மற்றும், 'பேஸ்புக்' சமூக வலைதளங்களில், சிலர் வதந்தி பரப்புகின்றனர். இதனால், மக்கள் மத்தியில், தேவையற்ற பீதி ஏற்படுவதோடு, வீண் சந்தேகத்தால், அப்பாவிகள் சிலர் அடித்துக் கொல்லப்படுகின்றனர்.
'நாட்டின் பல பகுதிகளில் நடக்கும், கும்பல் தாக்குதல் சம்பவங்களுக்கு முடிவு கட்ட, மத்திய - மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. சட்டத்தை தங்கள் கையில் எடுத்து, கும்பல் தாக்குதலில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை கிடைக்கும் என்பது குறித்து, விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கவும், நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளுக்கும், மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் அனுப்பப்பட்டுள்ள உத்தரவு விபரம்:
நாட்டின் பல்வேறு பகுதிகளில், விஷமிகள் பரப்பும் வதந்திகளால், கும்பல் தாக்குதல் சம்பவங்கள் நடக்கின்றன. இது போன்ற சம்பவங்களில், சிலர் பலியாகியுள்ளனர். எந்த சூழ்நிலையிலும் மக்கள், சட்டத்தை தங்கள் கையில் எடுக்கக் கூடாது.
இது போன்ற சம்பவங்களை தடுக்க, அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீஸ் அதிகாரிகள், சிறப்பு குழுக்கள் அமைத்து, கும்பல் தாக்குதல் சம்பவங்கள் நடக்காமல் தடுக்க வேண்டும். செய்தித்தாள், ரேடியோ, 'டிவி' உள்ளிட்ட ஊடகங்கள் மூலம், கும்பல் தாக்குதல் பற்றியும், அதில் ஈடுபடுவோருக்கு விதிக்கப்படும் தண்டனை பற்றியும், மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அனைத்து மாநில தலைமை செயலர்கள், டி.ஜி.பி.,க்கள், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE