சிறப்பு பகுதிகள்

சத்குருவின் ஆனந்த அலை

ஞானோதயம் என்பது என்ன மாதிரியான உணர்வு நிலை?

Added : செப் 27, 2018
Advertisement
ஞானோதயம் என்பது என்ன மாதிரியான உணர்வு நிலை?

செப்டம்பர் 23ம் தேதி சத்குருவின் ஞானோதய தினத்தை முன்னிட்டு சத்குருவின் பார்வையில் ஞானோதயம் எதனுடனும் அடையாளம் கொள்ளாமல், புத்திசாலித்தனம் செயல்படும்போது, உள்நிலைப் பரிமாணத்தினை அறிந்துகொள்வதென்பது இயல்பாக நடந்துவிடுகிறது.

சத்குரு:
எப்படிப்பட்ட உணர்வு அது? (அருகிலிருந்த நீர் நிரம்பிய தம்ளரைக் காட்டி) இதில் தண்ணீர்தான் இருக்கிறது, வேறு மாயத் திரவமில்லை. இந்தத் தண்ணீரை அருந்திய அனுபவம் உங்களுக்கு இதற்கு முன்னர் ஏற்பட்டதேயில்லை, ஆனால் நான் அருந்தியுள்ளேன் என்பதாக வைத்துக்கொள்வோம். தண்ணீரை அருந்தினால் எப்படியிருக்கும் என்பதை உங்களுக்கு நான் எவ்வளவுதான் தெளிவாகக் கூறினாலும், உங்களுக்குப் புரிய வைக்க முடியுமா?
நீர் அருந்திய அனுபவமே இல்லாத ஒருவருக்கு, அதை அருந்தினால் எப்படி இருக்கும் என்பதை உண்மையில் புரியவைக்க முடியாது, இல்லையா? அதுபோலத்தான் இதுவும். உங்கள் அனுபவத்தில் இல்லாத எது ஒன்றைப் பற்றி எவ்வளவுதான் தெளிவாக, வெளிப்படையாகப் பேசினாலும், அதைத் தவறாகத்தான் புரிந்துகொள்வீர்கள். எனவே ஞானோதயம் எந்தவிதமான உணர்வு நிலை என்பது பற்றி நாம் பேசவேண்டாம். ஞானோதயம் என்றால் என்ன என்பது பற்றி வேண்டுமானால் பேசலாம்.

நான் எதைப் பற்றிப் பேசுவதாக இருந்தாலும் காரணரீதியாக உங்களிடம் பேச வேண்டியுள்ளது. நீங்கள் ஞானோதயம் என்று எதைக் குறிப்பிடுகிறீர்களோ, அது காரணரீதியானதல்ல, அதையும் கடந்தது. இங்கே நான் காரணரீதிக்கு அப்பாற்பட்டவற்றைப் பற்றிப் பேசினால் என்னோடு அமர்ந்திருக்கமாட்டீர்கள், இல்லையா? அடுத்த ஐந்து நிமிடங்களுக்குள் எழுந்துபோகவே விரும்புவீர்கள். நான் காரணரீதியாகப் பேசினால்தான் இங்கே அமர்ந்திருப்பீர்கள்.
ஞானோதயம் என்று எதைக் குறிப்பிடுகிறோம்? ஒவ்வொரு மனிதருக்கும் அனுபவம் என்பது பல நிலைகளில் இருக்கிறது. சில மனிதர்கள் உணவையும், தூக்கத்தையும் மட்டுமே அறிந்திருக்கிறார்கள். சிலர் உருவாக்கவும், சிலர் செயல்புரியவும், சிலர் கலைநுணுக்கங்களையும், சிலர் இசைப்பதையும் அறிந்திருக்கின்றனர். சிலர் போதைப் பொருள், பாலுணர்வு போன்ற விஷயங்களை அறிந்திருக்கின்றனர். ஆனால் நீங்கள் கவனித்துப் பார்த்தால், எப்போதுமே ஒரு மனிதர், தற்போது வாழ்க்கையை உணர்ந்திருப்பதைக் காட்டிலும் மேலும் கூடுதலாகத்தான் தேடிக் கொண்டிருக்கிறார். அவர் பணம் சேர்ப்பதில் விருப்பமுள்ளவரோ அல்லது உல்லாசமாக இருப்பதில் விருப்பமுள்ளவரோ அல்லது அவர் சொர்க்கத்திற்குச் செல்ல விரும்புபவரோ, அது முக்கியமல்ல. அவர் கோவிலுக்குச் செல்ல விரும்பினாலோ அல்லது மதுபானக் கடைக்குச் சென்றாலோ, எதுவாயிருப்பினும், தற்போது இருப்பதைக்காட்டிலும் சற்று அதிகமான வாழ்க்கை அனுபவத்தைப் பெறுவதற்கே முயற்சி செய்கிறார். அதுதான் ஒரே நோக்கமாக உள்ளது.

நீங்கள் வாழ்வின் அனுபவங்களை பகுதிகளாக மட்டுமே பெற்றிருக்கிறீர்கள். சில அனுபவங்கள் நன்றாக இருந்திருக்கும். சில அனுபவங்கள் கசப்பாக இருந்திருக்கும். ஆனால் ஒரு அளவிற்கு மட்டுமே அனுபவங்களைப் பெற்றிருக்கிறீர்கள். ஒருவேளை ஒட்டுமொத்த அனுபவங்களையும் அடைந்திருந்தால், அப்போது அந்த நிலையை ஞானோதயம் என்று நான் கூறுவேன். அனுபவத்தைப் பகுதியாகத் தேடாமல், பேராசைக்காரராகி ஒட்டுமொத்த அனுபவத்தையும் விரும்புகிறீர்கள். அறியக்கூடிய அனைத்தையும் இந்தக் கணத்திலேயே அனுபவங்களாக அடைய விரும்புகிறீர்கள். அப்படிப் பெறுவதில் நீங்கள் வெற்றி பெற்றுவிட்டால், அதுவே ஞானமடைதல் ஆகும்.

இந்த ஷணத்தில் இந்த ஐம்புலன்களின் வாயில்களையும் நீங்கள் அடைத்துவிட்டால், உங்களுக்கு வாழ்க்கை அனுபவங்களோ அல்லது உங்களைப் பற்றிய உணர்வோ இருக்காது. நீங்கள் உறக்கத்தில் இருக்கும்போது இதுதான் நடக்கிறது. நீங்கள் உறக்கத்தில் ஆழ்ந்தும்கூட, இந்த உடல் உயிர்ப்புடன் இருக்கிறது. மனம் தன் வேலையைச் செய்கிறது. உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆயினும் ஐம்புலன்களும் அடைபட்டுவிட்டதால் உங்களுடைய அனுபவத்திலிருந்து மற்ற எல்லாமே விடுபட்டுள்ளன, அவ்வளவுதான். எனவே, இப்போதைக்கு இந்த ஐம்புலன்கள் மட்டும்தான் உங்களுடைய உணர்தலுக்கான வழிகளாக உள்ளன. மேலும், இயல்பாகவே ஐம்புலன்களும் வெளிப்புற விஷயங்கள் சம்பந்தப்பட்டவைதான்.

இந்த மின்விசிறியின் ஓசையை உங்களால் கேட்கமுடியும், சிறிய குண்டூசி விழும் ஓசையைக்கூட உங்களால் கேட்கமுடியும். ஒரு எறும்பு உங்கள்மீது ஊர்ந்தாலோ, இந்த மின்விசிறியிலிருந்து எழும் காற்றையோ உங்களால் உணரமுடியும். ஆனால், இந்த உடம்பினுள்ளே எவ்வளவோ செயல்பாடுகள் நடக்கிறதே, அவற்றை உணரமுடிகிறதா? இல்லை. உள்ளே எவ்வளவு இரத்தம் பாய்ந்து கொண்டிருக்கிறது, அதை உங்களால் உணரமுடிகிறதா? இல்லை. எனவே, புலன் உறுப்புகள் வெளிப்புற விஷயங்கள் சம்பந்தப்பட்டவைதான்.

நீங்கள் புரிந்துகொள்வது புலன்களைச் சார்ந்ததாக இருக்கிறது. எனவே உள்முகமாகத் திரும்புதலும், உள்நிலைப் பரிமாணங்களை அறிந்துகொள்வதும் அடையமுடியாதது போல் தெரிகிறது. உள்முகமாகத் திரும்புவதற்குச் சரியான கருவியோ, வாகனமோ, உங்களிடம் இல்லை. இது எப்படியென்றால், உங்களுக்கு ஒரு லட்டு சாப்பிடவேண்டுமென்று ஆசை. ஆனால் அதை உங்கள் காதுகளின் மூலம் சாப்பிட ஆசை. அதற்கு சாத்தியமே இல்லை, இல்லையா? வாயின் மூலமாகத்தான் சாப்பிடமுடியும், காதுகளின் வழியே சாப்பிட முடியாது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, ஞானமடைதல் என்பது அந்த விதத்தில் கடினமானதுதான்.

நீங்கள் இரண்டு காதுகளையும் உபயோகித்தாலும் லட்டு உள்ளே போகாது. சிறிதளவு கூடப் போகாது. அந்த வகையில் அது கடினமானது என்றுதான் கூறுகிறேன். ஆனால், நீங்கள் சரியான வழியை உபயோகித்துவிட்டால் அது உள்ளே போய்விடுகிறது. மனிதர்கள், எது சரியான வழி என்று கண்டுபிடிக்கத் தேவையான முயற்சியை மேற்கொள்ளவில்லை. அவர்களுக்குத் தெரிந்த வழியில் போய்விட விரும்புகின்றனர். அது நடப்பதற்குச் சாத்தியமேயில்லை. மாட்டுவண்டியை வைத்துக்கொண்டு நிலவுக்குச் செல்ல விரும்புவதுபோல இது உள்ளது. யாராவது ஒரு சாட்டையைக் கொடுத்து, எருதுகளுக்குச் சாட்டையடி கொடுங்கள், நீங்கள் அங்கே சென்றடைந்துவிடுவீர்கள் என்றாலும், உங்களால் அடையமுடியாது. எருதுகள் வேண்டுமானால் அடிவாங்கி இறந்துபோகக்கூடும்.

'ஞானமடைதல்' இவ்வளவு கடினமாகிவிட்டதன் காரணம், அளவுக்கதிகமாய் அர்த்தமற்ற பிதற்றல்கள் இது பற்றிக் கூறப்பட்டுவிட்டன. அது குறித்து யாரும், எதுவும் கூறாமலிருந்திருந்தால், பல மனிதர்கள் அதற்கான வழியைக் கண்டுபிடித்திருப்பார்கள். அது பற்றி அர்த்தமற்றவை ஏராளமாகக் கூறப்பட்டுள்ளதால் குழப்பம் உருவாகிவிட்டது. அதை என்னவென்று அறியாமலேயே மக்கள் அதுகுறித்து நிறைய விஷயங்களைப் படித்துவிட்டனர், எழுதிவிட்டனர். தாங்கள் எதைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் அது குறித்து மிக அதிகமாய் பேசிவிட்டதால், மக்களை அது ஒரு முழுமையான குழப்பத்திற்கு உள்ளாக்கியுள்ளது. உணராத மக்கள் குறைந்தபட்சம் தங்கள் வாயை மூடிக்கொண்டால், மனிதனுக்கே உரிய புத்திசாலித்தனம் அதனை அறிந்துகொள்ளும். எதனுடனும் அடையாளம் கொள்ளாமல், புத்திசாலித்தனம் செயல்படும்போது, உள்நிலைப் பரிமாணத்தினை அறிந்துகொள்வதென்பது இயல்பாக நடந்துவிடுகிறது. ஆனால் இப்போது அதற்கான சாத்தியம் இல்லாமலே போய்விட்டது. ஏனென்றால் ஒரு குழந்தை பிறந்த முதல் நாளிலிருந்து பெற்றவர்கள், அந்தக் குழந்தையை அவர்களுடைய குடும்பத்தோடும், அவர்களின் மூடத்தனமான மதிப்பீடுகளோடும், இன்னும் பிறவற்றோடும் அடையாளப்படுத்திவிட கடுமையாக முயற்சிக்கின்றனர். ஆசிரியர்களோ இன்னும் பிரமாதமாக முயற்சி செய்கின்றனர்.
ஒரு நாள் ஒரு எருது, உணவு தேடி காட்டுக்குள்ளேயே சென்றுவிட்டது. பசுமையான, செழித்து வளர்ந்திருந்த புல்வெளியை கண்டு, அதை மேய்ந்தவாறு சில வாரங்கள் அங்கேயே தங்கிவிட்டது. ஒரு வேலையுமில்லாத எருது, தின்று, தின்று பெருத்துக் கொழுத்துப் போனது. காட்டு விலங்குகளை வேட்டையாட சிரமப்பட்ட ஒரு வயது முதிர்ந்த சிங்கம், இந்தக் கொழுத்த எருதினைக் கண்டது. ஒரு மானைக் கொல்வதைக் காட்டிலும் ஒரு எருதைக் கொன்றுவிடுவது எளிதானது என்பதை நீங்களே அறிவீர்கள். ஆகவே, சிங்கம் அதற்குரிய தருணம் பார்த்து, அந்த எருதின்மீது பாய்ந்து, கொன்று சாப்பிட்டுவிட்டது. வயிறு நிறைந்துவிட்ட திருப்தியில் அது கர்ஜனை செய்தது. அந்த வழியாகச் சென்று கொண்டிருந்த சில வேடர்கள், அந்த கர்ஜனையைக் கேட்டு, அதன் அடிச்சுவடுகளைக் கண்டுபிடித்து சிங்கத்தைச் சுட்டுவீழ்த்தினர். இந்தக் கதையின் பாடம் என்னவென்றால், நீங்களே தெளிவில்லாமல் இருக்கும்போது வாயைத் திறக்காமல் இருப்பதே நல்லது. ஆனால் எல்லா நேரங்களிலும், இந்த மக்கள் தங்கள் வாயைத் திறந்துகொண்டே இருக்கிறார்கள்.

தற்போது, அவர்கள் எதற்குமே உடனடித் தீர்வுகளை கூறி ஞானமடைவதின் சாத்தியத்தையே அழித்துவருகின்றனர். ஒவ்வொன்றையும் ஆராய்ந்து பார்ப்பதுதான் உங்கள் இயல்பு, இல்லையா? பிறகு ஏன் உங்களையே நீங்கள் ஆராயாமல் இருக்கிறீர்கள்? ஏன் என்றால், தங்களுக்குள் கடவுளைப் பார்க்காதவர்கள், உங்களையும் கடவுளை மேல்நோக்கிப் பார்க்கச் சொல்லிவிட்டார்கள். இந்தக் காரணத்தால்தான், ஞானோதயம் என்ற நிலை சொர்க்கத்திற்கு ஏற்றுமதியாகிவிட்டது அல்லது கடத்தப்பட்டுவிட்டது. மற்றபடி அது எளிமையானது, மிகவும் தெளிவானது.

நீங்கள் அர்ஜுனனைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். கிருஷ்ணன், எப்போதும் உண்மை, உண்மை என்றே கூறிக்கொண்டிருந்தபோது, அர்ஜுனன், நீ கூறிக்கொண்டே இருக்கும் இந்த உண்மை எங்கேதான் உள்ளது? ஒருமுறை இங்கேயும் இல்லை, அங்கேயும் இல்லை என்கிறாய், இன்னொருமுறை இங்கேயும் இருக்கிறது, அங்கேயும் இருக்கிறது என்கிறாய், இது என்ன பிதற்றல்? அது எங்கே இருக்கிறது? எங்கே என்று கூறினால் நான் போய்க் கொண்டுவருகிறேன் என்றானாம். அவன் ஒரு க்ஷத்திரிய வீரன் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆகவே, கிருஷ்ணர் சிரித்துவிட்டுக் கூறினார், “அது உன் மூக்கின் நுனியில் இருக்கிறது”. இதனால் தற்போது மூக்கின் நுனியில் தங்கள் கவனத்தை தீவிரப்படுத்தக் கற்றுக்கொடுக்கும் நிறைய யோகப் பயிற்சிப் பள்ளிகள் இருக்கின்றன. (சிரிக்கிறார்)

உங்கள் மூக்கு நுனியில் கவனத்தைக் குவிக்க நீங்கள் முயற்சி செய்து பாருங்களேன். இரண்டு நிமிடங்களுக்குள், உங்களுக்குத் தலைவலி வேண்டுமானால் வரும், ஞானோதயம் வராது. எனவே, கிருஷ்ணர் கூறுவதெல்லாம், அது மிகவும் தெளிவாக உள்ளது என்பதைத்தான். பிரச்சனை என்னவென்றால், அது இங்கே இருக்கிறது (உள்ளே என்று சுட்டிக்காட்டி) ஆனால் உங்களுடைய புலன்கள் அங்கே உள்ளன (வெளியே சுட்டிக்காட்டி). அதனால் சிறிதளவு உள்முகமாகத் திரும்ப வேண்டியதுதான் உங்களுக்குத் தேவை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X