முதலில் புகார் பிறகு நழுவல் | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதலில் புகார் பிறகு நழுவல்

Added : மார் 23, 2011
Share
ராஜாஜி அமைச்சரவையில், 1954ல் இடம் பெற்றிருந்த சி.சுப்பிரமணியம், காங்கிரஸ் கட்சியின் பார்லிமென்டரி கூட்டத்தில், காமராஜருக்கு எதிரணியில் நின்றவர். காமராஜர் ஜெயித்தார். காமராஜரின் ஆதரவாளர்கள் பலர், அவர் தலைமையில் அமையப் போகிற அமைச்சரவையில் நமக்கு இடம் கிடைக்குமென்று நியாயமாகவே எதிர்பார்த்தனர். ஆனால், தன்னை எதிர்த்து நின்ற சி.சுப்பிரமணியத்தைக் கூட அமைச்சரவையில்
முதலில் புகார் பிறகு நழுவல்

ராஜாஜி அமைச்சரவையில், 1954ல் இடம் பெற்றிருந்த சி.சுப்பிரமணியம், காங்கிரஸ் கட்சியின் பார்லிமென்டரி கூட்டத்தில், காமராஜருக்கு எதிரணியில் நின்றவர். காமராஜர் ஜெயித்தார். காமராஜரின் ஆதரவாளர்கள் பலர், அவர் தலைமையில் அமையப் போகிற அமைச்சரவையில் நமக்கு இடம் கிடைக்குமென்று நியாயமாகவே எதிர்பார்த்தனர். ஆனால், தன்னை எதிர்த்து நின்ற சி.சுப்பிரமணியத்தைக் கூட அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டார் காமராஜர்.அது மட்டுமல்ல; ராஜாஜி ஒருவரைத் தவிர்த்து, அந்த அமைச்சரவையை அப்படியே அங்கீகரித்தார். அதன் காரணமாக, காமராஜரின் சில நெருங்கிய ஆதரவாளர்கள், கொஞ்சம் கொஞ்சமாக அவரை விட்டு விலகினர்; அவர்களில் சிலர், அவரைக் கடுமையாக விமர்சித்தனர்; அரசியல் எதிரிகளே ஆயினர். அது குறித்து அவர் கவலைப்படவில்லை.
ஆனால், ஒரு கட்சியின் தலைவருக்குரிய நிதானத்தை சி.சுப்ரமணியம் பல சமயங்களில் இழந்திருக்கிறார். உதாரணம்: உலகத் தமிழ் மாநாடு நடந்த பொழுது வெளியிடப்பட்ட ஒரு தபால் தலையில், இந்தி எழுத்துக்கள் இருப்பதாக, அண்ணாதுரை மத்திய அரசை குற்றம்சாட்டிய போது, தமிழக காங்கிரஸ் தலைவரான சி.எஸ்., முதல்வர் அண்ணாதுரையோடு சேர்ந்து கொண்டார்."உலகத் தமிழர் மாநாட்டை முன்னிட்டு வெளியிடுகிற தபால் தலையிலும் இந்தி மொழிக்கு இடமா?' என அண்ணாதுரை கேட்டார்.அண்ணாதுரை பர்சனாலிட்டியில் மயங்கியிருந்த சி.எஸ்., தன்னையறியாமல், "அது தவறு தான்!' என்று முதலில் தலையாட்டிவிட்டார்.
பின், தபால் தந்தி இலாகாவின் அமைச்சராக இருந்த ராம்சுபாக் சிங், அண்ணாதுரையின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்குச் சரியான ஆப்பு அறைவது போல, அந்தத் தபால் முத்திரை அச்சடிப்பதற்கு முன், அதன் ஒரிஜினலை, அண்ணாதுரைக்கு அனுப்பி, அவர் அங்கீகரித்ததையும் ஆதாரத்தோடு வெளியிட்டார். அண்ணாதுரை மன்னிப்பு ஏதும் கேட்கவில்லை.ஆர்ப்பாட்டமாகப் பேசிவிட்டு, ஆதாரங்கள் எதிர்ப்படும் போது அவற்றைச் சகிக்க முடியாமல் நழுவுவது தி.மு.க.,வின் போர்த் தந்திரம். ஆனால், பாவம் சி.எஸ்., அதற்காகப் பின்னால் வருந்த நேர்ந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X