வெறுப்பு அரசியலை வளர்க்காதீர்

Added : செப் 29, 2018 | கருத்துகள் (2) | |
Advertisement
ஞா.மாணிக்கவாசகன்சமூக ஆர்வலர்'கள்வர்களின் குகை' என்றும், 'அயோக்கியர்களின் கடைசி புகலிடம்' என்றும் அரசியலை பலரும் விமர்சித்த நாட்களில், அரசியல், கற்றவர்கள் அமரும் மன்றம் என்பதை, உலகறியச் செய்த பெருமைக்கு உரியவர், மஹாத்மா காந்தி.லட்சியம் உயர்ந்ததாக இருந்தால் மட்டும் போதாது; அதை அடையும் வழிகளும் உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக நின்று, வாழ்ந்து
 வெறுப்பு அரசியலை வளர்க்காதீர்

ஞா.மாணிக்கவாசகன்சமூக ஆர்வலர்'கள்வர்களின் குகை' என்றும், 'அயோக்கியர்களின் கடைசி புகலிடம்' என்றும் அரசியலை பலரும் விமர்சித்த நாட்களில், அரசியல், கற்றவர்கள் அமரும் மன்றம் என்பதை, உலகறியச் செய்த பெருமைக்கு உரியவர், மஹாத்மா காந்தி.லட்சியம் உயர்ந்ததாக இருந்தால் மட்டும் போதாது; அதை அடையும் வழிகளும் உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக நின்று, வாழ்ந்து வழிகாட்டிய அவர், 'வன்முறைகளால் தான், என் நாடு சுதந்திரம் பெற இயலும் என்றால், அப்படிப்பட்ட சுதந்திரம் தேவையில்லை' என்று அறிவித்தவர்.'சூரியனே அஸ்தமிக்காத நாடு' என புகழப்பட்ட, பிரிட்டிஷ் சாம்ராஜ்ய சர்வாதிகாரத்தை எதிர்த்து, அற வழியில் போராடி, சுதந்திரம் பெற்றுத் தந்த காந்தி உருவாக்கிய, இந்நாட்டில், இன்று நடப்பது என்ன...ஆட்சி, அதிகாரத்தில் இருப்பவர்கள், எதிரணியினர் மீது வெறுப்பை உமிழும் வார்த்தைகளை பயன்படுத்துகின்றனர். பிடிக்காத தலைவர்களில் சிலைகளுக்கு செருப்பு மாலை அணிவித்து, எதிர் தரப்பினரை அவமரியாதை செய்கின்றனர். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், அரசியல் காரணங்களுக்காக, எதிரணி யினரை தரக்குறைவாக விமர்சிக்கின்றனர்.இது போன்ற வெறுப்பு அரசியல் செயல்கள், எவ்வளவு பெரிய தேசிய அவமானம் என்பதை, எண்ணிப் பார்க்கும் நடுநிலையாளர் மனம், நடுங்கவே செய்கிறது.அரசியல் நாகரிகத்திற்கு பெயர் பெற்ற தமிழகத்தில், 'அரசியல் தலைவர்கள்' - 'தமிழர்கள்' என்ற பெயரில் வலம் வரும் சிலரால், தரம் தாழ்ந்து போய் விட்டது, அரசியல். ஜாதியையும், மதத்தையும் முன்னிறுத்தி, வீராவேசமாக பேசுவோர் அதிகரித்து விட்டனர். இதனால், மாநிலத்தின் நலன், தேசத்தின் நலன் பின்னுக்கு தள்ளப்பட்டு உள்ளது. அமைதியின்மையும், பதற்றமும் அதிகரித்துஉள்ளது.ஊர்வலம் செல்ல அனுமதிக்கவில்லை என்பதற்காக, தேசிய கட்சி ஒன்றின் தமிழக நிர்வாகி, கோர்ட்டையும், போலீசையும், நா கூசும் வார்த்தைகளால் அர்ச்சிக்கிறார்... பெயரே தெரியாத, ஒரு ஜாதி அமைப்பின், எம்.எல்.ஏ., ஒருவர், தன் அமைப்பினரை, 'வெட்டிட்டு வா... குத்திட்டு வா...' என்கிறார்.ஜெயலலிதா உயிருடன் இருந்தது வரை, அமைதி சொரூபங்களாக இருந்த அமைச்சர்களில் சிலர், இப்போது, 'குரல்' கொடுக்க துவங்கியுள்ளனர். 'எதிராளியின் நாக்கை அறுத்து விடுவேன்' என்கிறார், ஒரு மந்திரி.ஆளும் தரப்பினர் தான் என்றில்லை... முக்கிய அரசியல் கட்சியான, தி.மு.க.,வின் புதிய தலைவர், ஸ்டாலின், தான் பங்கேற்கும் கூட்டங்களில் எல்லாம், தமிழக முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்களை, ஊழல் பேர்வழிகள் என, வித விதமான பெயர்களில் விளித்து சாடுகிறார்.கம்யூனிஸ்ட் கட்சிகளோ, கண்ணை மூடி, பா.ஜ., என்ன செய்தாலும், அதை எதிர்க்கின்றன. பா.ஜ., தலைவர்கள் தொடர்பான விவகாரங்களில், அதிக அக்கறை எடுத்து, வாய்க்கு வந்தபடி வசைபாடுகின்றன. இது போன்ற வெறுப்பு அரசியலை, இந்த கட்சிகளும், இவர்களின் தலைவர்களும், எத்தனை காலம் தான் பின்பற்றுவர்...வன்முறை சம்பவங்கள், வெறுப்பை உமிழும் அமில வார்த்தைகளால், உடலும், மனமும் மட்டும் காயப்படுவதில்லை. பொது அமைதியும், ஆபத்துக்கு உள்ளாகிறது. உடல் காயம் கூட ஆறி விடும். ஆனால், மனதில் பட்ட காயம் எளிதில் மாறாது. 'பழி தீர்க்க வேண்டும்' என்ற பகை உணர்வை, உள்ளுக்குள் வளர்த்த படியே இருக்கும்.நம் நாட்டு அரசியலில், பகை நெருப்பு பற்றி எரிந்த படியே இருக்கிறது. ஜனநாயகத்தின் அங்கமான அரசியல் கட்சிகள், நாட்டின் நலன், முன்னேற்றம் என்பனவற்றை அறவே மறந்து, தனி மனித துதி பாடல்கள், துவேஷங்களில் ஈடுபடுவது நாட்டுக்கு நல்லதல்ல.அத்தகையோர் தங்களை திருத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக, ஒரு சில உதாரணங்களை குறிப்பிடுகிறேன்...நிற வெறியை எதிர்த்து போராடியதற்காக, தென்னாப்பிரிக்காவில் சிறைபட்டார், காந்தியடிகள். ஜெனரல் ஸ்மட்ஸ் என்ற வெள்ளைக்கார அதிகாரி, அவரை எட்டி உதைத்து, சிறைக்குள் தள்ளினான்; கடுமையான வேலைகளை செய்யப் பணித்தான். காந்தியை கேவலப்படுத்த வேண்டும் என்பதற்காகவே, சிறையில் அவருக்கு, செருப்பு தைக்கும் வேலை கொடுத்தான்.தண்டனை காலம் முடிந்து, வெளியே வரும் போது, அவரை உதைத்த ஸ்மட்சிடம் ஒரு பொட்டலத்தை நீட்டினார், காந்தி. அதை பிரித்து பார்த்தான், ஸ்மட்ஸ். உள்ளே ஒரு ஜோடி செருப்புகள் இருந்தன. 'உங்களுக்கு என் அன்பளிப்பு; போட்டுக் கொள்ளுங்கள்' என்றார், காந்தி. ஸ்மட்ஸ் போட்டுப் பார்த்தான். காலுக்கு அவை, கன கச்சிதமாக பொருந்தி இருந்தன.ஆச்சரியம் தாங்காமல், காந்தியைப் பார்த்து, 'இவ்வளவு கச்சிதமாகச் செய்ய, என் கால் அளவை, எப்போது எடுத்தாய்?' என்றான், ஸ்மட்ஸ். காந்தி சொன்னார்... 'நீங்கள் என்னை சிறைக்குள்ளே தள்ளிய போது, எட்டி உதைத்தீர்களே... அப்போது, என் மேல் சட்டையின் முதுகில் பதிந்திருந்த, உங்கள் காலணியின் அளவை எடுத்து, இதைச் செய்தேன்' என்று!பணியில் இருந்து, ஸ்மட்ஸ் ஓய்வு பெற்ற பின், காந்திக்கு எழுதிய கடிதத்தில், 'உங்கள் மேன்மை தெரியாமல், அன்று நான் நடந்து கொண்டதன் குற்ற உணர்வு, என்னை வருத்திக் கொண்டே இருக்கிறது. நீங்கள் கை நோகச் செய்து தந்த காலணிக்குள், கால்களை நுழைக்க, என் மனம் கூசுகிறது; உங்கள் நினைவாக அதைப் பாதுகாத்து வருகிறேன்' என்று எழுதினான்.இப்படி, பகைவனுக்கும் அருளும் பரம கருணையும், குற்றம் செய்து விட்டோமே என, குமைந்து வருந்தும், ஈர மனமும், இன்றைய பொது வாழ்க்கையிலும், அரசியலிலும் இல்லாமல் போனது ஏன்?'காங்கிரஸ்' அமைப்பை உருவாக்கியது, ஆலன் ஆக்டேவியன் ஹுயூம் என்ற வெள்ளைக்காரர். பிரிட்டிஷ் அரசிடம் இருந்து சில சலுகைகளை இந்தியர்களுக்குப் பெற்றுத் தர, இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. பின், அதன் தலைமைகள் மாறி, விடுதலை போராட்ட இயக்கமானது.கட்சியை வளர்க்க, கொள்கைகளை பரப்ப, போராடிய இந்த இயக்கத்தின் இந்திய தலைவர்கள் யாரும், வெறுப்பு வார்த்தைகள் எனும் நெருப்பை, எந்த சூழ்நிலையிலும் உமிழ்ந்ததில்லை.காங்கிரசை எதிர்த்து, தீவிரமாகப் போராடிய, ஈ.வெ.ரா., காந்தியடிகள் மறைந்த போது, விடுத்த இரங்கல் செய்தியில், 'இந்தியா என்பது, வெள்ளைக்காரன் இந்த நாட்டுக்கு வைத்த பெயர்; அதை மாற்றி, 'காந்தி தேசம்' என, இனி அழைக்க வேண்டும். ஞாயிறு விடுமுறைக்குப் பதிலாக, காந்தி இறந்த வெள்ளிக் கிழமையை, அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும்' என்றார்.எல்லா அரசியல் கட்சிகளின் தலைவர்களும், நாட்டு முன்னேற்றம், மக்கள் நலன், சமுதாய வளர்ச்சிக்காக உழைக்கவே, பூமியில் பிறந்திருப்பதாகத் சொல்லிக் கொள்கின்றனர். இவர்களின் நோக்கம் உண்மை எனில், ஒருவர் மேல் மற்றொருவர், ஏன் புழுதி வாரித் துாற்ற வேண்டும்?தி.மு.க.,வை துவக்கிய அண்ணாதுரை குறித்து, காங்கிரஸ் தலைவர், காமராஜர், ஏதோ ஒரு கடுமையான சொல் கூறி விட்டார் என்பதற்காக, சென்னை, மெரினா கடற்கரையில் நடந்த, தி.மு.க., பொதுக் கூட்டத்தில், அக்கட்சியின் மூத்த தலைவர், மறைந்த, என்.வி.நடராஜன், காமராஜருக்கு எதிராக வசைமொழி கூறினார்.அதை கேட்ட அண்ணாதுரை பதறிப் போய், என்.வி.நடராஜனின் சட்டையைப் பிடித்து இழுத்து, 'இப்படி நீ பேசுவது சரியல்ல; மன்னிப்புக் கேள்' என, கண்டித்தார்.அந்த அரசியல் நாகரிகம், இன்று பல கட்சிகளிடமும், தலைவர்களிடமும், பட்டுப் போய் விட்டது.தவறு செய்யும் தொண்டர்களை தட்டிக் கேட்கத் தயங்கும் தலைமை; தரம் தாழ்ந்து, எதிர்க்கட்சிகளை, 'போட்டுத் தாக்கினால்' தலைமையின் தயவும், பரிவும், தங்களுக்கு தாராளமாகக் கிடைக்கும் என, எதிர்பார்க்கும் தொண்டர்களும் தான், அரசியல் அரங்குகளில் இன்று ஆதிக்கம் செலுத்தும் ஆபத்துகளாக வளர்ந்து வருகின்றனர்.இவர்கள் தாமாக வளரவில்லை; தலைவர்களால் வளர்த்து விடப்பட்டுள்ளனர் என்பதே உண்மை.கைகளை வீசி நடப்பது கூட, கர்வத்தின் அடையாளமாகி விடும் என்பதால், 'கையுற வீசி நடப்பதை நாணி, கையை மெய்யுறக் கட்டியே நடந்தேன்' என பாடுகிறார், வள்ளலார் பெருமான்.ஆன்மிக பணிகளில் ஈடுபட்டவரிடமே இவ்வளவு பணிவு இருந்தது என்றால், மக்களுக்காக தொண்டாற்ற வேண்டிய அரசியல் தலைவர்கள், கட்சியினர் எவ்வளவு பணிவுடனும், அடக்கத்துடனும் இருக்க வேண்டும்...எட்டி உதைத்தவன் காலுக்கு, புதிய காலணிகளை பரிசாக வழங்கிய கருணை மனம் காந்தியம்! அதை எண்ணிப் பார்க்கும் எவருக்கும், பிறர் மீது வெறுப்பு எனும் பகைமை உணர்வு தோன்றாது; நெருப்பை அள்ளி வீச மனம் வராது.'கொள்கை இல்லாத அரசியல்; உழைக்காமல் வரும் செல்வம்; நேர்மை இல்லாத வியாபாரம்; ஒழுக்கம் இல்லாத கல்வி; மனிதாபிமானம் இல்லாத விஞ்ஞானம்; தியாகம் இல்லாத தேசப்பற்று விலக்கப்பட வேண்டும்' என்றார் காந்தி.ஒழுக்கமில்லாத கல்வி, இன்று நம் சமூகத்தை பெருமளவு உருக்குலையச் செய்துள்ளது என்பதை ஒப்புக்கொள்ள, வெட்கப்படத் தேவையில்லை. இத்தகைய கல்வியால், உழைக்காமல் பணம் பண்ணப் பார்க்கும் புத்தி வளர்கிறது. உழைக்காமல் பணம் பண்ண, வியாபாரத்தின் நேர்மையே, விலை போய் விடுகிறது. இந்தத் தவறுகளை மூடி மறைக்க, ஏதாவது ஒரு அரசியல் சார்பு அடையாளம் தேடிக் கொள்ள நேரிடுகிறது.இப்படிப்பட்டவர்கள் எண்ணிக்கை கூடக்கூட, அரசியலில் கொள்கை என்பது, எடுப்பார் கைப்பிள்ளையாக, வலிமையுள்ளோர் வசப்படுத்திக் கொள்ளும் ஏலப் பொருளாகி விடுகிறது.எனவே, வெறுப்பு அரசியலை விட்டொழிக்கப் பழகுங்கள்; பற்றி எரியும் பகை நெருப்பை, சகிப்புத்தன்மையால் அணைக்க பாருங்கள்; எவரையும் ஏசாது, அரவணைத்துச் செல்லுங்கள், வெறுப்பு அரசியல் விலகி விடும்!இ -மெயில்: karthikkleela@gmail.com

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறதுவாசகர் கருத்து (2)

Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
04-அக்-201805:31:56 IST Report Abuse
Matt P காமராஜை திட்டியதாக அண்ணாதுரை என் வி நடராஜனின் சட்டையை பிடித்து மன்னிப்பு கேட்க செய்தார். ..சரி ..அண்ணாதுரை இருக்கும்போதே, மறைந்த தானை ..அந்தநாயகி அம்மையாரை இரட்டை பொருள் தொனிக்க பேசினார். ..அண்டங்காக்கா எருமை மாடு என்றெல்லாம் பெருந்தலைவர் என்று போற்றப்படுகிறவரை சொன்னார். என்று சொல்கிறார்கள் நாகரிகமற்ற முறையில் மேடைகளில்,இந்துமதம் புண்படுகிற முறையில் பேசியிருக்கிறார். அவரை ஏன் ஒரு தடவையாவது சட்டையி பிடித்து இழுக்கவில்லை. ..இவரு மேல கையை வைச்சா நடக்கிறதே வேற மாதிரி ஆகிவிடும் என்று பயந்திருப்பாரோ ...என் வி என் வேற ஒட்டடை குச்சி மாதிரி இருப்பார். ஈவேரா அவர்கள் என்றைக்கோ தமிழன் காட்டு மிராண்டி என்றார். அவர் வழியில் அரசியல் செய்யும் தமிழர்கள் அதை நிரூபிக்கிறார்கள்...
Rate this:
Cancel
KSK - Coimbatore,இந்தியா
30-செப்-201811:40:34 IST Report Abuse
KSK தற்போதய சூழலில் நம் நாட்டுக்கு ஜனநாயகம் சரிப்படாது அறியாமை அதிகம் உள்ள நாட்டில் மிதமிஞ்சிய ஜனநாயகம் உகந்தது இல்லை என்பது தான் நமக்கு கிடைக்கும் அனுபவம் / பாடம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X