தமிழ் வானில் தவழும் திங்கள்... தடையின்றி தமிழ் பேசும் தென்றல், இதழ் அசைவில் உதிர்ந்திடும் சொற்கள், இவள் புன்னகை பார்த்து பூத்திடுமே பூக்கள்... என தமிழ் எழுத்துக்களும் எழுந்து நின்று வர்ணிக்கும் நிகழ்ச்சி தொகுப்பாளர், தமிழ் சினிமாக்களின் செய்தி வாசிக்கும் நடிகை, தேன் குரல் அழகி அனிதா பேசுகிறார்...
* தமிழ் மீது ஆர்வம் எப்படி ?எனக்கு சொந்த ஊர் சென்னை. பள்ளியில் படிக்கும் போதே தமிழ் மீது எனக்கு தீராத காதல் இருந்தது. நான் 8ம் வகுப்பு படிக்கும் போது என் தமிழய்யா தமிழின் பெருமைகளை கூறி கற்றுக் கொடுத்தார். அதற்கு பின் பி.இ.,படித்தும் தமிழ் சார்ந்த வேலைக்கு செல்வதையே லட்சியமாக கொண்டு வேலை தேடினேன்.
* ஊடகத்துறையில் வந்தது ?கல்லுாரியில் இறுதி ஆண்டு தேர்வின் போது செய்தி வாசிப்பாளர் தேர்வுக்கு சென்றேன். என் உச்சரிப்பு பிடித்து போனதால் அன்றே அந்த வேலைக்கு தேர்வானேன்.
* தெளிவான தமிழ் உச்சரிப்பு எப்படி சாத்தியமானது ?என் தந்தை சம்பத் நிறைய புத்தகங்கள் எழுதி இருக்கிறார். தந்தையின் பேச்சை கவனித்து வளர்ந்த எனக்கும் தமிழ் உச்சரிப்பு தெளிவாக வந்துவிட்டது. தமிழனாய் தமிழ் நிகழ்ச்சிகளில், தமிழ் தெரிந்தவர்களுடன் பேசும் போது 'ஹாய்', 'ஹலோ' என்று ஏன் ஆங்கிலம் பேச வேண்டும். தமிழை கட்டுப்படுத்தி அல்லது குறைத்துக் கொண்டு ஆங்கிலத்தில் பேச விருப்பம் இல்லை. தமிழனாக, நீங்களும் தமிழ் பேசுங்க தமிழா!
* தமிழுக்கு பாராட்டு?ஒரு திரை நிகழ்ச்சியை நான் தொகுத்து வழங்கியதை பார்த்துவிட்டு இயக்குனர்கள் பேரரசு, ஏ.எல்.விஜய் நல்லா 'தமிழ் பேசுறீங்க' என்று பாராட்டினர்.
* சினிமா செய்தி வாசிப்பாளரானது ?இன்றைய மக்களின் நிஜ வாழ்வில் செய்திகள் பெரியளவில் இடம் பிடித்துள்ளது. இந்த தாக்கம் சினிமாவில் பிரதிபலிப்பதால் அங்கும் செய்தி வாசிப்பாளர்களாக நடிக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. இது வரை நான் காலா, கபாலி, கொடி, கவண், இப்படை வெல்லும், லட்சுமி, எந்திரன் 2.0, வர்மா, சர்க்கார் போன்ற படங்களில் செய்தி வாசிப்பாளராக நடித்து இருக்கிறேன்.
* இயக்குனர் பாலாவின் 'வர்மா'?இயக்குனர் பாலா படத்தில் நடிக்க வேண்டும் என்றதும் முதலில் பயம் இருந்தது. அவர் எதிர்பார்த்தபடி பேசி ஒரே டேக்கில் நடித்து முடித்ததும் தான் நிம்மதியாக இருந்தது.
* 'டிவி', சினிமா நடிப்பு ?'டிவி'யில் செய்தி வாசிப்பதும், சினிமாவில் செய்தி வாசிப்பாளராக நடிப்பதும் சிரமம் தான். ஏதாவது ஒரு வார்த்தை தவறானால் கூட முதலில் இருந்து வர வேண்டும்.
* நட்பு, ரசிகர்கள், பயம் ?பெரியளவில் எனக்கு நண்பர்கள் இல்லை, சமூகவலைதளங்களில் பலர் ரசிகர்களாக தொடர்கிறார்கள். என் மேல் தான் எனக்கு பயம் இருக்கிறது. மற்ற எந்த ஒரு விஷயங்களையும் பார்த்து பயப்படுவது இல்லை.
* நடிப்பு தவிர ?மாடலிங் செய்ய அதிகம் வாய்ப்பு வருகிறது. ஆனால் நேரம் இல்லை. பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை தடுக்க வேண்டும் என்ற சமூக அக்கறையும் இருக்கிறது. அது குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறேன். anithasampath_offical
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE