சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

அறநிலையத் துறை விழிக்க வேண்டாமா?

Added : அக் 02, 2018 | கருத்துகள் (3)
Advertisement
அறநிலையத் துறை விழிக்க வேண்டாமா?

நான் நெல்லைக்காரன் இல்லை. ஆனாலும், நெல்லையை ரொம்பவே ஆராதிப்பவன். அதற்கு, அங்குள்ள கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் முதல், குளிர் அருவிகளை கொண்ட குற்றாலம் வரை, பல காரணங்கள் இருந்தாலும், தாமிரபரணி நதி தான் பிரதான காரணம்!பொதிகை மலையில் உள்ள அத்தனை மூலிகைகளின் நற்குணங்களையும் தன்னுடன் ஈர்த்து, தமிழகத்தின் வற்றாத நதியாக, ஆண்டு முழுவதும் ஓடும் ஒரே நதி என்பதால் தான் இத்தனை ஆசை!அண்டை மாநில அச்சுறுத்தல்களோ, நீர் பங்கீட்டு உரிமை என்ற மிரட்டல்களோ இல்லாமல், தமிழக மக்களுக்கு மட்டுமே பயன் தரும் வகையில், தமிழகத்தில் தோன்றி, தமிழகத்திலேயே நிறைவு பெறும் நதி என்பதாலும் தான், அதன் மீது இத்தனை பாசம்!காக்கை தட்டி விட்ட கமண்டலத்தில் இருந்து கொட்டிய நதியின் கதையாக இல்லாமல், அகத்தியருக்காகவே ஈசனால் உருவாக்கப்பட்ட புராணப் பெருமை கொண்ட நதி என்பதால் தான், இந்த மரியாதை!திருநெல்வேலி மாவட்டத்தின், பாபநாசம் முதல், துாத்துக்குடி மாவட்டத்தின் புன்னக்காயல் வரை ஓடி, கரையெங்கும் பழமையான பல கோவில்களையும், படித்துறைகளையும் கொண்டுள்ள நதி என்பதாலும் தான் இந்த நேசம்!நாட்டின், 12 முக்கிய நதிகளில் ஒன்றாக போற்றப்படுவதாலும், இது போன்ற இன்னும் பல காரணங்களாலும், தாமிரபரணி என்றாலே தனி ஆனந்தம் தான்; மனதிற்குள் தனி ஆவர்த்தனம் தான்!இந்த தாமிரபரணிக்கு, 144 ஆண்டுகளுக்கு பிறகு, புஷ்கரம் என்ற புனித நீராடல் விழா வருகிறது என்றால், அதை எப்படி எப்படி எல்லாமோ கொண்டாட வேண்டும்; கொண்டாட்டத்தை இந்த நேரம் ஆரம்பித்து இருக்க வேண்டும்,ஆனால், விழா நடத்த வேண்டிய, இந்து அறநிலையத் துறையினரோ, அடுத்தடுத்த முட்டுக்கட்டைகளை நேரடியாகவும், மறைமுகமாகவும் போடுவதைப் பார்த்தால், கோபம் தான் எழுகிறது.திருக்கணித பஞ்சாங்கப்படி, 'விருச்சிக ராசியில், அக்டோபர், 11ல் குரு பகவான் பிரவேசிக்கிறார். மறுநாள், 12ம் தேதி, தாமிரபரணியில் புஷ்கரம் ஆரம்பமாகிறது; 23ல் பூர்த்தியாகிறது' என்ற பஞ்சாங்க விபரத்தை, நான் இங்கு விவரிக்க போவது இல்லை!தாமிரபரணியின் புகழையோ, 'தாமிரம் கலந்த பரணி நதி, தாமிரபரணி நதியானது' என்ற பெயர் காரணத்தையோ, 'தாமிரச்சத்து நிறைந்த தாமிரபரணியில் குளித்தால், நோய் தீர்ந்து, அற்புதம் மலர்கிறது' என்ற மருத்துவ மகிமையையோ, நான் சொல்லப் போவது இல்லை.இதையெல்லாம், நாடெங்கும் பரவியிருந்து, தமிழ் தொண்டாற்றும், நெல்லை அன்பர்கள் இன்னும் நன்றாக விவரிப்பர்!இங்கே சொல்ல வருவது... எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல், காலம் காலமாக, 136 கி.மீ., பயணித்து, 86 ஆயிரத்து, 107 ஏக்கர் விவசாய நிலங்களை விளையச் செய்து, விருதுநகர் மாவட்டம் வரை, குடிநீர் பிரச்னையையும் தீர்த்து கொண்டிருக்கும் தாய், தாமிரபரணியின் பெருமையை தான்!அந்த தாய்க்கு நன்றி சொல்ல வாய்ப்பு கிடைத்தும், தமிழக அரசும், அதன் ஒரு அங்கமான, அறநிலையத் துறையினரும் சும்மா இருக்கின்றனரே என்ற ஆதங்கம் தான், இந்த கட்டுரையாகியுள்ளது.இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால், மற்ற மாநில அரசுகள், இந்த நேரம், இதை தேசிய திருவிழாவாக்கி இருப்பர். அனைத்து துறை அலுவலர்களையும் ஒருங்கிணைத்து, அடுத்த நுாற்றாண்டு வரை பேசும் படி, விழாக்களை நடத்தி அசத்தியிருப்பர்.ஆனால், தாமிரபரணி புஷ்கர விழா, ஏதோ, அடுத்த கிரக நிகழ்ச்சி என நினைத்து, எந்த முன்னெடுப்பும் இல்லாமல், அரசு துறையினர், குறிப்பாக, அறநிலையத் துறையினர் துாங்கி வழிவது தான் ஏன் என, புரியவில்லை. இது, மிகவும் கண்டனத்திற்கும், வெட்கத்திற்கும் உரியது.தேசமெங்கும் நடந்து வரும், பல புண்ணிய நதிகளின் புனித நீராடல் விழாக்களிலிருந்து, தாமிரபரணி புஷ்கர விழா, எந்த வகையிலும் வேறுபட்டதல்ல; அவை போலவே, மிகவும் உயர்வானது. இது, இந்து மத வழிபாடு மட்டுமல்ல; இயற்கைக்கு காட்டும் மரியாதை!கங்கை, நர்மதை, கோதாவரி நதிகளில், அண்மை காலத்தில் நடந்த புஷ்கர நிகழ்வுகளின் போது, அந்த மாநில அரசுகள், நீராட வந்தவர்களுக்கு தங்குமிடம், பாதுகாப்பு, போக்குவரத்து வசதி என, பல்வேறு ஏற்பாடுகளையும் அருமையாக செய்திருந்தன.ஃஇந்த விழா காலத்தில், எந்த கட்சியின் அரசு, மாநிலத்தில் இருந்தாலும், தங்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பாக அதை கருதி, செயல்படுத்தி இருக்கும்.தலைமை பொறுப்பில் இருப்பவர்கள், தங்கள் இஷ்ட தெய்வத்திற்கு செய்யும் மரியாதையாக, கவுரவமாக கருதி, தாமிரபரணியை வழிபாடு செய்திருப்பர்; அந்த நதியை துாய்மைப்படுத்தி இருப்பர்.பிற மாநிலங்களில், அந்த மாநில முதல்வர் முதல், கவர்னர் வரை, சகலரும் தங்களின் முக்கிய கடமையாக கருதி, புனித நதியில் நீராடி, பங்கேற்க வரும் பக்தர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுத்துள்ளனர். ஆனால், தமிழகத்தில் மட்டும், நேர் மாறான, எதிர்மறை அலை ஏன் வீசுகிறது என்பது புரியவில்லை.அதிலும், சில அரசியல் கட்சியினருக்கு, எதில் தான் அரசியல் செய்வது என்ற விவஸ்தையே இல்லை. 'தாமிரபரணி புஷ்கர விழா கூடாது' என, அரசியல் செய்கின்றனர்.'நீ யார், கூடாது என சொல்ல... எங்கள் பாட்டன், முப்பாட்டன்கள் பாதம் பதித்து, குளித்து, குடித்த தாமிரபரணியை கொண்டாட, எங்களுக்கு தெரியும். உங்கள் ஜாதி, மத அரசியலை, தாமிரபரணியில் கலந்து அழுக்காக்காதீர்கள்.'அப்படி செய்தால், வீணாக நீங்கள் தான் அசிங்கப்பட்டு போவீர்கள். முடிந்தால் எங்களுடன் கை கோருங்கள்; இல்லையேல் ஒதுங்கிக் கொள்ளுங்கள்' என, மக்கள் ஆவேசமான பிறகே, அரசியல்வாதிகள் அடங்கிஇருக்கின்றனர்.விமர்சனங்களுக்கும், விவாதங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்து, இந்நேரம் அனைவரையும் இணைத்து, விழாக்கால கோலாகலத்தில் இறங்கிஇருக்க வேண்டும்.ஆனால், அதற்கான ஏற்பாடு செய்ய வேண்டிய, இந்து சமய அறநிலையத்துறையின் நிலைப்பாடு தான் மிகவும் கவலைஅளிக்கிறது.அதன் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு நிலங்கள், கட்டடங்கள், உண்டியல் உள்ளிட்ட பல வகைகளில் வருமானம் வருகிறது. அந்த வருமானத்தில், ஒரு தம்பிடி காசு கூட பக்தர்களுக்கோ, கோவிலுக்கோ செலவு செய்வதில்லை.பாரம்பரியமாக, கோலாகலமாக நடந்த விழாக்களுக்கு நிதியுதவிகளை குறைத்து, பெயரளவுக்கு நடத்தும் அறநிலையத் துறையினர், தாமிரபரணி புஷ்கரத்தையும் முடக்கப் பார்ப்பது சரியா?கோவில்களுக்கு எதைச் செய்தாலும், யாராவது ஒரு உபயதாரர் மூலமாகவே செய்வது என்பது, எல்லா கோவில்களிலும், எழுதி வைக்காத சாசனமாகி விட்டது,பக்தர்கள் தரும் பணத்தில் தான், தங்களுக்கு சம்பளம் வருகிறது என்பதையும், அலுவலக அறைகள், அந்த பணத்தில் தான், குளுகுளு வசதி செய்யப்பட்டுள்ளது என்பதையும், அறநிலையத் துறையினர் சிந்தித்து பார்த்திருக்க வேண்டும்.அவ்வாறு செய்திருந்தால், இந்நேரம், தாமிரபரணி புஷ்கரம் விழாவிற்கு எதிராக, 'கதை' சொல்லாமல், கரையை சுத்தம் செய்து, புண்ணியம் தேடி கொண்டிருப்பர்.தமிழக கோவில்களை நிர்வகிக்கும் அறநிலையத் துறையினர் முன்னின்று நடத்த வேண்டிய விழா இது. அவர்களே முட்டுக்கட்டை போட்டால், அவர்களை கண்டிப்பது, நம் கடமை அல்லவா!மாறாக, 'அங்கே குளிக்கக் கூடாது... இங்கே போகக்கூடாது' என்று சொல்லிக் கொண்டிருப்பது, பக்தர்களை வேதனை அடையச் செய்கிறது.சரி... நீங்கள் தான் புஷ்கர விழாவை நடத்த முன் வரவில்லை... நடத்தும் ஆன்மிக அமைப்புகளுக்காவது வழி காட்டலாமே!எனவே, தாமிரபரணி புஷ்கர விழாவிற்காக, ஒரு பெரும் தொகையை தமிழக அரசு ஒதுக்க வேண்டும். அதில், பாபநாசம் முதல், புன்னக்காயல் வரை பாழடைந்து கிடக்கும், மண்டபங்களையும், உடைந்த படித்துறைகளையும் சீரமைக்க வேண்டும்.நாடு முழுவதும் இருந்து, சாதுக்களையும், சன்னியாசிகளையும், மத பெரியவர்களையும் நெல்லைக்கு அழைத்து, அவர்களுக்கு வேண்டிய சவுகரியங்களை செய்து, புஷ்கர விழாவை, பிரமாண்ட, புனித விழாவாக மாற்ற, தமிழக அரசு உரிய ஆணை பிறப்பிக்க வேண்டும்.அடுத்து வரும் புஷ்கரம் வரை, தாமிரபரணி தாயின் புகழ், மனதில் நிற்க வேண்டும்; நிலைக்க வேண்டும். அந்த அளவுக்கு திட்டமிட்டு, தமிழக அரசு செயலாற்ற வேண்டும்.'தாமதம் ஆன போதிலும், தவறை உணர்ந்து, சுதாரித்த தமிழக அரசு, அருமையாக ஒரு விழாவை நடத்தியது' என, நம் தேச மக்கள் மலைக்க வேண்டும்.இதற்கான காலமும், களமும், அரசின் கையில் தான் இருக்கிறது. செய்ய வேண்டும் என்பது தான், நெல்லை, துாத்துக்குடி மாவட்டங்கள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த மக்களின் விருப்பம்!இ-மெயில்: murugaraj@dinamalar.in

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
King of kindness - muscat,ஓமன்
05-அக்-201812:29:15 IST Report Abuse
King of kindness திராவிட அரசியல், ஜாதி அரசியல் கம்யூனிச அரசியல் மற்றும் கடவுள் மறுப்பு இயக்கங்களின் நேர் மற்றும் மறைமுக எதிர்ப்புகளே இதன் பின்னணியில் இருந்து இயக்குவதாகும். இவர்களின் இந்த கீழறுப்பு நடவடிக்கைகள் .வேரறுக்கப்பட வேண்டும்.இவர்களின் கைப்பாவையாகவே அறநிலைய துறை இயங்குகிறது என்பது மிக பெரிய அவலமாகும்.மாநிலத்தில் தூர்வாரப்பட வேண்டிய துறைகளில் அறநிலைய துறை தான் முதலாவதாகும்.
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
02-அக்-201814:11:18 IST Report Abuse
மலரின் மகள் முருக ராஜ் அவர்களின் கட்டுரைகள் மனதிற்கு இதமாகவும் அமைதி தருவதாகவும் எளிய தமிழில் குற்றம் குறையில்லாமல் இருக்கும். இந்த கட்டுரையில் அவரின் மனதின் வழியை பகிர்ந்துள்ளார். தாமிரபரணி பற்றிய அறியாத இந்து அரா நிலையத்துறை எத்துணையோ வாட்சப்பில் அதன் சிறப்பை பற்றி நெல்லை மக்கள் பரப்பி வருவதை கண்டு கொள்ளாதவர்களாக இருக்கிறார்களே. முருகராஜ் அவர்களின் மனவேதனையை படிக்கும் பொது எனது நெஞ்சமும் கணக்கத்தான் செய்கிறது. நான் பிறந்த அம்பைக்கு கல்லிடைக்கும் தாமிரபரணி அமிர்தம். நதிநீர் அவ்வளவு தித்திக்கும் உடலையும் மனதையும் குளிரிச்சி படுத்தும். சுற்றுலாத்துறையும் தூங்கி வழிகிறது. முன்பு மொத்த தாமிரபரணியும் திருநெல்வேலி மாவட்டத்திலேயே வாழ்கையையே கழித்து கொண்டிருந்தாள். இப்போது நெல்லை தூத்துக்குடி என்று இரு சகோதரிகள். இரண்டு கலெக்டர்கள் இரண்டு மாவட்ட நிதிகளும் சுற்றுலாத்துறைக்கு. இரண்டு சுற்றுலா அலுவலகங்கள் அதற்கு சுற்றுலாத்துறை அதிகாரிகள் வேறு. இவர்கள் வெறும் உணவு திருவிழாவும் குற்றால சாரல் மற்றும் கட்டபொம்மன் விழாவும் அரசியல் காரணங்களுக்காக எடுப்பார்கள் போலும். சிறப்பாக தாமிர பருணிக்கு மகா புஷ்கரம் நடத்த வேண்டாமா. சிவா விஸ்ணு தளங்கள் அனைத்துமே அங்கு தாமிரபரணியில் சிறப்பு பெற்றவை. பாபநாசம் சிவன் கோவிலாகட்டும், ஸ்ரீவைகுண்டம் பெருமாள் சன்னதி ஆகட்டும் இரண்டும் பிரசித்தி பெற்றவை. இரண்டும் தாமிரபரணியின் நதியடிவாரத்தில் உள்ளவை. அனைவரும் இணைந்து கோவில் அதிகாரிகள் உள்ளூர் அன்பர்கள் சேர்ந்து மொத்த உலகிற்காகவும் மகா புஷ்காரம் தாமிரபரணியில் கொண்டாடவேண்டும், இன்னும் ஒருவார காலம் இருக்கிறது. இப்போது கூட ஆரம்பிக்கலாம். எம் ஜி ஆர் நூற்றாண்டை விட மஹா புஷ்காரம் முக்கியமானது பரிசுத்தமானது.
Rate this:
Share this comment
Cancel
ILANGO - MADURAI ,இந்தியா
02-அக்-201808:15:01 IST Report Abuse
ILANGO என்று “இந்து அறநிலையத்துறை “ வெறும் “அறநிலையத்துறை “ ஆக மாற்றப்பட்டதோ ( மாற்றிய பெருமைக்குரியவர் ஶ்ரீ ராமரின் கல்வித்தகுதியை அறிய ஆசைப்பட்டவர்) அன்றே அது வெற்றுத்துறையாக மாறி விட்டது. ‘அம்மா’ இல்லாத குறை பட்டவர்த்தனமாக தெரிகிறது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X