ஊக்க தொகைக்காக ஓட்டு... டீசலுக்கு வேட்டு!| Dinamalar

ஊக்க தொகைக்காக ஓட்டு... டீசலுக்கு வேட்டு!

Added : அக் 02, 2018
Share
காரமடை ரங்கநாதரை தரிசிக்க சென்றிருந்த சித்ராவும், மித்ராவும் கோவை நோக்கி காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். மேட்டுப்பாளையம் ரோட்டில், 'டிராபிக் ஜாம்'. பல கி.மீ., துாரத்துக்கு வாகனங்கள் தேங்கியிருந்தன. குறுக்கும் நெடுக்குமாக சென்றதால், காரை இயக்க முடியாமல் திணறிய சித்ரா, ''நம்மூரு அதிகாரிங்க, 'ஏசி' ரூமுக்குள்ள ஒக்கார்ந்துட்டு, வகை வகையா சாப்பிடத்தான் லாயக்கு.
ஊக்க தொகைக்காக ஓட்டு... டீசலுக்கு வேட்டு!

காரமடை ரங்கநாதரை தரிசிக்க சென்றிருந்த சித்ராவும், மித்ராவும் கோவை நோக்கி காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். மேட்டுப்பாளையம் ரோட்டில், 'டிராபிக் ஜாம்'. பல கி.மீ., துாரத்துக்கு வாகனங்கள் தேங்கியிருந்தன. குறுக்கும் நெடுக்குமாக சென்றதால், காரை இயக்க முடியாமல் திணறிய சித்ரா, ''நம்மூரு அதிகாரிங்க, 'ஏசி' ரூமுக்குள்ள ஒக்கார்ந்துட்டு, வகை வகையா சாப்பிடத்தான் லாயக்கு. வீதிக்கு வந்து, மக்கள் படுற கஷ்டத்தை உணர்ந்து, வேலை பார்க்க மாட்டாங்க,'' என, திட்டித் தீர்த்தாள்.

''அக்கா, விவரம் புரியமா பேசுறீங்க. பதவியை தக்க வைக்கவும், கைப்பத்தவும் கார் கதவை திறந்து விடுற அளவுக்கு நம்மூரு ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிங்க, ரொம்பவே கீழிறங்கி போயிட்டாங்க. அவுங்களாவது, மக்களுக்காக வேலை செய்யறதாவது...'' என, இழுத்தாள் மித்ரா.

''என்னப்பா, இப்படிச் சொல்லிட்ட... மழை பெஞ்சா பாதிக்கப்படுற எடத்துல, போலீஸ் தரப்புல போர்டு வச்சிக்கிட்டு இருக்காங்களே... அதெல்லாம் பெரிய விஷயம் இல்லையா...''

''அதெல்லாம்... கார்ப்பரேசன் செய்ற வேலை. போலீஸ் எதுக்கு மூக்கை நுழைக்குதுன்னு யோசிக்க வேண்டாமா... மேற்கு மண்டலத்துல பெரிய பதவி காலியா இருக்கு. அதை குறி வச்சு... கார் கதவு திறந்து விடுறது; 'சல்யூட்' அடிக்கிறதுன்னு, ரொம்பவும் பணிஞ்சு போறாரு... ஏகப்பட்ட பேரு முட்டி மோதுறதுனால... கெடைக்கிறது கஷ்டம்னு சொல்றாங்க...''

''ஏன், அப்படிச் சொல்ற... நம்மூர்க்காரரு கைதானே ஓங்கி இருக்கு...'' என, அப்பாவித்தனமாய் கேட்டாள் சித்ரா.

''அதெல்லாம் வேண்டாம்... நமக்கெதுக்கு வம்பு...'' என்றாள் மித்ரா.

''சரி... நம்மூர் சிறைச்சாலைக்கு புது எஸ்.பி., வந்திருக்காரே... எப்படி...''

''அவரு, ஏற்கனவே இங்க வேலை பார்த்தவருதான். பதவி உயர்வுல வந்திருக்காரு. இதுக்கு முன்னாடி வேலை பார்த்தப்ப, கைதிகளை வச்சு ஆடு, மாடு, கோழி வளர்த்து, காசு பார்த்ததா புகார் சொன்னாங்க. இப்பவும் அதுமாதிரி செய்யாம, கைதிகளை தீவிரமா கண்காணிச்சா நல்லா இருக்கும்,''

''ஆனா, ரூரலுக்கு புதுசா வந்திருக்கிற எஸ்.பி., பாண்டியராஜன், ஓட... ஓட விரட்டுறாராமே...''

''ஆமாக்கா... அவரோடு செவிக்கு புகார் போயிருச்சுன்னா... 'ஓபன் மைக்'கில் கடிச்சு துப்பிடுறாரு. செட்டிபாளையம் 'க்ரைம்' எஸ்.ஐ., திருட்டு நகையை திருப்பிக் கொடுக்க பேரம் பேசியிருக்காரு. விஷயம் கேள்விப்பட்ட எஸ்.பி., 'ஓபன் மைக்'கில அவர அலற விட்டுட்டாரு. இந்த எஸ்.ஐ., ஏற்கனவே வேலை பார்த்த இடங்கள்ல, 'நகை பிசினஸ்' செஞ்சுக்கிட்டு இருந்தாராம்.
ரெண்டு பெட்ரோல் பங்க்குளை குத்தகைக்கு எடுத்திருக்காராம். ஆறு கார் வச்சிருக்காரு. குற்றவாளிகளை பிடிக்கறதுக்கு அதுல ஒரு காரை எடுத்துட்டு போயி, வாடகை கணக்கு எழுதி, காசு பார்க்குறாரு. எஸ்.பி., கண்காணிப்பு வளையத்துக்குள்ள வந்துட்டதுனால, இனிமே ஒழுங்கா இருப்பாரான்னு பார்ப்போம்...''

''ஆனா, மதுவிலக்கு பிரிவுக்காரங்க காட்டுல கரன்சி மழை கொட்டுதே...''

''நானும் கேள்விப்பட்டேன். மதுக்கடையில, 'பார்' நடத்துற ஒவ்வொரு கடையில இருந்தும், மாசம் அஞ்சாயிரம் ரூபா மாமூல் வாங்கித் தரணும் உத்தரவு போட்டிருக்காங்க. மாமூல் வாங்கித்தரலைன்னா, அந்த ஏரியாவுக்கான போலீஸ்காரங்கள வேற இடத்துக்கு மாத்திட்டு, வேண்டப்பட்டவங்கள நியமிக்கிறாங்க...''

''அன்னுார் தாலுகாவுல, குப்பேபாளையம், காரேகவுண்டன்பாளையம், கஞ்சப்பள்ளி, பொன்னே கவுண்டன்புதுாருன்னு பல ஊர்கள்ல, தோட்டத்துல, கள் இறக்கி, 'சேல்ஸ்' பண்றாங்க. போலீஸ்காரங்க கண்டுக்கறதில்ல. தோட்டத்துக்கு ஆயிரம் ரூபாய்ன்னு நிர்ணயிச்சு, லைசென்ஸ் கொடுக்காத குறையா அனுமதி கொடுத்திருக்காங்க. இந்த பகுதியில மட்டும், 50 தோட்டங்கள், கள் இறக்கி விக்கிறாங்க,'' என்றாள், மித்ரா.

''என்னப்பா... வெறும் போலீஸ் பஞ்சாயத்தா சொல்லிக்கிட்டு இருக்கே... வேறு 'டிபார்ட்மென்ட் நியூஸ்' இல்லியா,'' என, கிளறினாள் சித்ரா.

''நம்மூரு மாவட்ட அதிகாரி, வியாழக்கிழமை சாயிபாபா கோவிலுக்கும், சனிக்கிழமையானா பெருமாள் கோவிலுக்கும் போறத வழக்கமா வச்சிருக்காரு. இவரோட, 'கேம்ப் ஆபீஸ்'ல என்ன நடந்தாலும் வெளியே தெரிஞ்சிடுது. இங்க வேலை பார்க்குற ஊழியர்கள், அடிக்கடி வந்துட்டு போறவங்க மொபைல் போன் நம்பர் பட்டியல் வாங்கி, போலீஸ்ட்ட கொடுத்திருக்காரு. யார் யாரு, வெளியாட்களிடம் தொடர்பு வச்சிருக்காங்கன்னு கண்டுபிடிக்கப் போறாங்களாம்; கலங்கி போயிருக்காங்க...'' என்றாள் மித்ரா.

''அதை கண்டுபிடிச்சு என்ன செய்யப் போறாரு... வேலையில கவனம் செலுத்துனா... மக்களுக்கு பிரயோஜனமா இருக்கும்...''

''யாரு ஒழுங்கா வேலை பார்க்குறாங்க. பதவிக்காக என்ன வேணும்னாலும் செய்றாங்க. நம்மூரு கார்ப்பரேசன் அதிகாரிங்க, வேலை செய்றாங்களோ இல்லீயோ, பதவியை கைப்பத்துறதுல குறியா இருக்காங்க'' என, கொக்கியை வீசினாள் மித்ரா.

''அதுவா, இன்ஜினியரிங் செக்ஷன்ல, ஞானமுள்ள இன்ஜினியரு இருக்காரு. இவருக்காகவே ஒரு அரசாணை வெளியிட்டுருக்காங்க. அதே அரசாணைய அடிப்படையா வச்ச, எங்களுக்கும் பதவி கொடுக்கணும்னு, மூணு அதிகாரிங்க கோர்ட்டுக்கு போயிருக்காங்க.இப்ப, துாத்துக்குடிக்கு விரட்டுன பெண் அதிகாரி, 'தாய்' துறைக்கே திரும்ப வந்ததுனால, ஞானமுள்ள இன்ஜி.,க்கு நெருக்கடி ஏற்பட்டு இருக்கு. மேலிடத்துல செல்வாக்கு இருக்கறதுனால, தப்பிச்சிட்டுக்கிட்டு இருக்காருன்னு சொல்றாங்க...''

''ஆனா, பதவி கெடைச்சாலும், 'போஸ்ட்டிங்' கெடைக்காததால, நம்மூரு அதிகாரி 'அப்செட்' ஆகி இருக்காராமே. எப்படியாவது இந்த ஊரை விட்டு கெளம்பிடனும்னு நெனைக்கிறாருன்னு கேள்விப்பட்டேன்,'' என, வம்புக்கு இழுத்தாள் மித்ரா.

''அவரா, இன்னும் மூணு மாசந்தாங்க இருக்கு. இதுக்கு மேல ஒசந்த பதவிக்கு போயிடுவாரு. அப்ப, விடுவிச்சாலும் விடுவிப்பாங்க. 'போஸ்ட்டிங்' போடாம தடுக்குறதுனால, 'சென்ட்ரல் கவர்ன்மென்ட்' சைடுலயும், எதிர்க்கட்சி சைடுலயும் நல்ல உறவு வச்சிக்கிட்டு இருக்காரு. ஆட்சி மாறினாலும், சிக்காத அளவுக்கு, 'பக்கா பிளான்' வச்சிருக்காராம்,''

''மாநகராட்சில இருந்து கோனியம்மன் கோவிலுக்கு நோட்டீஸ் அனுப்புனாங்களாமே...''

''அதுவா, ராஜவீதியில, தேர் நிக்கிற இடத்துக்கு பக்கத்துல, பல கோடி ரூபா மதிப்புள்ள, 30 சென்ட் இடம் இருக்கு. அதுல, கட்டடம் கட்டி, ஒருத்தரு வாடகை வசூலிக்கிறாரு. ஆனா, சொத்து வரி, குடிநீர் கட்டணம் செலுத்தலைன்னு, கோவிலுக்கு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி இருக்காங்க. அப்ப, அந்த சொத்து யாரோடதுன்னு கேள்வி எழுந்துருக்கு? பழைய ஆவணங்கள புரட்டிக்கிட்டு இருக்காங்க, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிங்க,'' என்ற சித்ரா, ''காலைல, 8:00 மணிக்கே ஆபீஸ் திறக்குறாங்களோமே,'' என, இழுத்தாள்.

''அதுவாக்கா, கோயமுத்துார் வடக்கு, மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலத்துல, காலைல, 8:00 மணியில இருந்து, 10:00 மணி வரைக்கும், ஏஜன்சிகாரங்களுக்காக வேலை பார்க்குறாங்க. 'நைட்', 8:00 மணியானாலும், வேலை பார்க்குறாங்க. கமிஷன் கரெக்ட்டா வர்றதுனால, சில ஊழியர்கள், 'ஓவர் டைம்' வேலை பார்க்குறாங்க...''

''லைசென்ஸ் வாங்குறதுக்கு அஞ்சாயிரம் ரூபா வாங்குறாங்க. அப்புறம் என்ன, அங்கேயே படுத்து துாங்கச் சொன்னாலும் துாங்குவாங்க...'' என, வசை பாடினாள் சித்ரா.

''டார்கெட் அடையறதுக்காக... வெறும் வண்டிய ஓட்டுறாங்களாமே...''

''போக்குவரத்து துறையில, 30 ஆயிரத்துல இருந்து, 35 ஆயிரம் கி.மீ., பஸ் இயக்கணும்னு இலக்கு நிர்ணயிச்சு இருக்காங்க. அவ்வளவு கி.மீ., ஓட்டுனா, ஊக்கத்தொகை கெடைக்குமாம். இதுக்காக, வெறும் வண்டிய ஓட்டச் சொல்லி, உயரதிகாரிங்க கட்டாயப்படுத்துறாங்களாம்.
டீசல் விக்கிற வெலையில, காலியா பஸ் ஓட்டுறது கஷ்டமா இருக்குன்னு, டிரைவர்க புலம்பிக்கிட்டு இருக்காங்க...'' என சித்ரா சொல்லி முடிப்பதற்கும், வீடு வந்து சேருவதற்கும் சரியாக இருந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X