சிறப்பு பகுதிகள்

சத்குருவின் ஆனந்த அலை

உறவுகள் சிறக்க செய்ய வேண்டியதும் செய்யக்கூடாததும்!

Added : அக் 05, 2018 | கருத்துகள் (1)
Advertisement
உறவுகள் சிறக்க செய்ய வேண்டியதும் செய்யக்கூடாததும்!

நீங்கள் சொர்க்கத்தின் தன்மையோடு இருந்தால் உங்கள் மணவாழ்வும் சொர்க்கமாக இருக்கும். நீங்கள் நரகத்தின் தன்மையோடு இருந்தால் உங்கள் மணவாழ்வும் நரகமாகத்தான் இருக்கும். எனவே, உங்கள் மணவாழ்க்கை எப்படியிருக்கும் என்று கவலைப்படுவதை விடுத்து, உங்கள் தன்மையை எப்படி மேம்படுத்துவது என்பதைப் பாருங்கள்.

சத்குரு:
குடும்பங்களுக்குள் எத்தனையோ விதமான உறவுகள் உண்டு. காலங்காலமாகவே மாமியார்-மருமகள் உறவு பற்றி பரவலாகப் பேசப்படுகிறது. ஒரு குடும்பத்தில் மாமியாருக்கென்று சில வேலைகளும், மருமகளுக்கென்று சில வேலைகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஒருவர் வேலையில் மற்றொருவர் தலையிடும்போது அது சிக்கலுக்குள்ளாகிறது. அல்லது ஒருவருடைய வேலை இன்னொருவருக்குத் தரப்படும்போது சிக்கல் ஏற்படுகிறது. வேலையில் உங்களுக்கு ஏதும் சிரமமில்லை. ஆனால், அந்த உறவின்மேல் உங்களுக்கிருக்கும் வெறுப்பு காரணமாக வேலையைக் காரணம் காட்டி சிக்கல் செய்துவிடுகிறீர்கள். ஒரு மருமகள் மாமியாரின் வேலையை செய்யச் சொன்னால் கோபப்படுவதில்லை. ஆனால் தான் செய்யும் வேலையில் மாமியார் தலையிட்டால் அவருக்கு கோபம் வருகிறது. உறவுமுறை பற்றிய அபிப்பிராயம்தான் அதற்குக் காரணம்.

அதேபோல பெற்றோர், குழந்தை உறவு முறையும் முக்கியமானது. ஒரு குழந்தை பிறக்கும்போது பெற்றோர்கள் அதற்கு ஏதாவது கற்றுத்தர வேண்டும் என்று கருதுகிறார்கள். இந்த உலகில் பிழைப்பு நடத்துவதற்கான சில வழிமுறைகளை வேண்டுமானால் நீங்கள் கற்றுத் தரலாம். ஆனால் இந்த உயிர் குறித்தோ, ஆனந்தமாக வாழ்வது குறித்தோ உங்கள் குழந்தைக்கு நீங்கள் கற்றுத்தர முடியுமா என்ன? உங்களைவிட உங்கள் குழந்தைகள்தான் ஆனந்தமாக இருக்கிறார்கள். அப்படியானால் வாழ்வின் அடிப்படையை நீங்கள் அவர்களுக்கு கற்றுத்தர முடியாது. மாறாக நீங்கள் தான் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள முடியும். ஒரு வீட்டில் குழந்தை பிறக்கிறதென்றால் வாழ்க்கை குறித்து நீங்கள் கற்றுக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பு அது. குழந்தைக்கு நீங்கள் முதலாளி இல்லை. ஒரு குழந்தையின் வருகை உங்கள் வாழ்வையே இன்பமயமாக்குகிறது. எனவே ஒரு கடவுளைப் போல அந்த குழந்தையை நீங்கள் நடத்த வேண்டும். அன்புமயமான வாழ்வை நீங்கள் நடத்துவீர்களேயானால், அந்த குழந்தை வளர்ந்த பிறகு அதற்குள் ஒரு நன்றியுணர்வு மலரும். எனவே குழந்தைக்குள் உங்கள் போதனைகளை திணிக்காமல் குழந்தைகளைப் பார்த்து வாழ்க்கை என்றால் என்ன என்று கற்றுக்கொள்ளுங்கள்.
கணவன், மனைவி, தாய், தந்தை, குழந்தை, சகோதரன், சகோதரி என்று பலவிதமான உறவுகள் உள்ளன. அவர்கள் மேல் பற்று வைக்கிறீர்கள். முதலில் மகிழ்ச்சியாக இருந்தாலும் பிறகு அந்தத் தன்மை மெல்ல மெல்ல மாறுகிறது. குரு என்கிற ஓர் உறவும் உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. இதிலும் பற்று வைக்கிறீர்கள். ஆனால் மற்ற உறவுகள் போல் சிக்கிப்போவதில்லை. ஏனென்றால் உங்கள் குரு அத்தகைய தன்மையில் இல்லை. உங்களுக்கு அவர் மீது பற்று போகிறபோது அவர் உங்களைப் பற்றிக் கொள்வதில்லை.

உறவுகளுக்கு ஆதார சுருதியே அன்புதான். ஒருவர் நலனுக்காக உயிரையே தரும் அளவு அன்பு இருக்குமேயானால் சிக்கல் வராது. உறவுகளில் வரும் பிரச்சினைகளுக்குக் காரணம் கணவனோ, மனைவியோ அல்ல. வாழ்க்கையில் அடித்தளத்தை உறுதிப்படுத்திக் கொள்ளாமல் மேற்கூரையை மட்டும் சரிசெய்து கொண்டிருக்கிறோம். எந்த நேரத்திலும் கூரை தலையில் விழும் என்பதால் அதனைப் பிடித்துக் கொண்டிருக்கிறோம். வாழ்க்கையின் அடிப்படையை சீர்செய்து கொள்ளாமல், சின்னச்சின்ன விஷயங்களை சரி செய்வதால் பயனில்லை. திருமண வாழ்க்கையில் ஜாதகப் பொருத்தம் பார்க்கிறார்களே தவிர இரண்டு முட்டாள்களுக்கிடையில் பொருந்திப் போகிறதா என்று பார்ப்பதில்லை. எவ்வளவு தூரம் ஏற்றுக் கொள்கிறீர்கள், எவ்வளவு தூரம் பொறுப்பேற்கிறீர்கள் என்பதில்தான் பொருத்தம் இருக்கிறது. முதலில் உங்கள் இயல்பை நீங்கள் மதிப்பதில்லை. நாளை என்ன நடக்கப்போகிறது என்றுதான் கவலைப்படுகிறீர்கள். உங்களுக்கு உண்மையிலேயே கடவுள் நம்பிக்கையிருந்தால் எது வேண்டுமானாலும் நடக்கட்டும் என்று விடுவீர்கள். ஆனால் நீங்கள் விரும்புவது நடக்கவேண்டும் என்றுதான் கடவுளிடம் எதிர்பார்க்கிறீர்கள். இதே எதிர்பார்ப்புதான் உங்கள் கணவனிடமும், மனைவியிடமும், குழந்தையிடமும் உங்களுக்கு இருக்கிறது. நீங்கள் சொல்வதை உங்கள் குழந்தை கேட்காவிட்டால் நீ என் குழந்தையே இல்லை என்று சொல்லி விடுவீர்கள். உங்கள் அகந்தைக்கு யார் துணை புரிகிறார்களோ அவர்களைத்தான் நீங்கள் ஏற்கிறீர்கள். ஒரு குரு உங்கள் அகந்தைக்கு துணை நிற்கமாட்டார். ஆனால் உங்களுக்கு நெருக்கமானவராக இருப்பார்.
கௌதம புத்தர் ஞானமடைந்தபோது அவருடன் ஏழெட்டு பேர்தான் இருந்தார்கள்.

ஞானமடையும்வரை தீவிரமான ஆத்மசாதனையில் இருந்த அவர் ஞானமடைந்த பிறகு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினார். உடனே அவர்கள் புத்தர் சராசரி மனிதராகிவிட்டார் என்று நினைத்து அவரை விட்டு விலகினார்கள். கௌதமருடன் இருந்த ஆனந்ததீர்த்தர் அவருக்கு ஒன்றுவிட்ட சகோதரர். அப்போது புத்தர் பலருக்கு ஆன்மீக வாழ்வில் தீட்சை தந்துகொண்டிருந்தார். ஆனந்தர் அவருடன் வந்து "நானும் சாது ஆகிறேன். ஆனால் ஒரு நிபந்தனை. நான் உங்களுக்கு மூத்த சகோதரர். எனவே, நீங்கள் போகும் இடமெல்லாம் நானும் வருவேன்" என்றார். சீடராக விரும்புகிற ஒருவர் நிபந்தனையும் விதிப்பார் என்றால் ஒரு சீடர் பெறக்கூடிய பயனை அவர் பெறவே போவதில்லை. புத்தர் சிரித்துக் கொண்டே ஒப்புக் கொண்டார். ஆனந்தரும் சூத்திரங்களைக் கற்கத் தொடங்கினார். எட்டு வருடங்களுக்கு முன்பு தான் பிரிந்து வந்த தன் மனைவி யசோதையை சந்திக்க புத்தர் சென்றார். பிரிந்து வந்தபோது அவர் மகனுக்கு ஒரு வயது கூட ஆகியிருக்கவில்லை. ஆனந்தரிடம் கௌதமர் சொன்னார், "நான் பிரிந்து வந்தபோது ஒரு வார்த்தை கூட சொல்லாமல் நள்ளிரவில் வந்தேன். அதனால் என் மனைவி கடுங்கோபத்தில் இருப்பாள். நான் தனியாகவே சந்தித்து வருகிறேன்" என்றார். ஆனந்தர் ஒப்புக்கொள்ளவில்லை. கௌதமருக்கும் வேறு வழியில்லை. கௌதமரைப் பார்த்த மாத்திரத்தில் அவர் மனைவி கடுங்கோபம் கொண்டார். வசைமாரி பொழிந்தார். அவரை ஒரு கோழை என்று திட்டினார். கௌதமர் அமைதியாகக் கேட்டுக் கொண்டார். பிறகு, "நீ மணந்து கொண்ட மனிதர் இப்போது இல்லை. நான் தற்போது தன்னை உணர்ந்த நிலையில் வந்திருக்கிறேன். முன்புபோல் இருந்திருந்தால் மேலும் சில குழந்தைகளை பெற்றெடுத்திருப்பேன். ஆனால் இப்போது நிலையே வேறு" என்றெல்லாம் கூறினார்.

யசோதரை ஒப்புக்கொள்ளவில்லை. கௌதமரோடு கடுமையாக வாதமிட்டார். பிறகு வழக்கமான தந்திரத்தை வைத்திருந்தார். "உங்கள் குழந்தைக்கு என்ன கொண்டு வந்திருக்கிறீர்கள்" என்று யசோதரை கேட்டார். கௌதமர் அதற்கும் தயாராகவே வந்திருந்தார். ஆனந்தரை அழைத்து தன் பிச்சை பாத்திரத்தை கொண்டுவரச் சொன்னார். அதனைத் தன் மகனிடம் தந்து, "உனக்கு நான் உச்சகட்ட சுதந்திரத்தைத் தருகிறேன். அரச வாழ்க்கையின் அவதி உனக்கு வேண்டியதில்லை. உனக்கு நான் தரும் சொத்து இந்த பிச்சைப் பாத்திரம்" என்றார்.

ஒரு நிபந்தனை விதித்ததன் வாயிலாக ஒரு மகத்தான வாய்ப்பை ஆனந்தர் இழந்தார். 40 ஆண்டுகள் கௌதமரோடு இருந்தும் அவர் ஞானமடையவில்லை. கௌதமர் இறந்தபோது ஞானமடைந்த அவரது சீடர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் வெளியே நிறுத்தப்பட்டனர். ஆனந்தர் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. ஒரு குவளை ரசத்தில் இருக்கும் கரண்டி அந்த ரசத்தை எப்படி பருகமுடியாதோ அப்படியானார் ஆனந்தர். இன்னொரு மனிதரை நீங்கள் ஒரு கருவியாக மாற்ற முயல்கிறீர்கள். ஆனால் புத்தரை இப்படி மாற்றமுடியாது. இந்த உலகில் இப்படி நிறைய ஆனந்தர்கள் தங்கள் குருமார்களுக்கு நிபந்தனை விதிப்பதன் மூலம் மகத்தான வாய்ப்புகளை இழக்கிறார்கள். இதற்கு பழைய வாழ்க்கையையே வாழ்ந்திருக்கலாம். ஆத்ம சாதனைகள் செய்தும் எந்த வளர்ச்சியையும் பெறாதது பயனற்ற வாழ்வு. இப்படி பலரும் இருக்கிறார்கள். எறும்புகளுக்காக யானைகளைக் கொல்வார்கள். சிறிய விஷயங்களுக்காக பெரிய விஷயங்களை இழப்பார்கள். பிறப்பையும், இறப்பையும் கடந்த அம்சங்களை சின்னச்சின்ன வசதிகளுக்காகவும், சலுகைகளுக்காகவும் இழப்பார்கள். குருவுடனான உறவை கையாளத் தெரியாமல் இந்த தவறை பலரும் செய்கிறார்கள்.எல்லா உறவுகளுமே எல்லைகளுக்கு உட்பட்டவை. உங்கள் மனைவி, உங்கள் குழந்தை, உங்கள் நண்பர்கள், உங்கள் பெற்றோர் எல்லாமே வழியில் வந்த உறவுகள்தான். ஏதோவொரு நாள் அவர்கள் உங்களைக் கைவிடுவார்கள். அல்லது நீங்கள் அவர்களைக் கைவிடுவீர்கள். வாழ்வின் வழியாகவோ, சாவின் வழியாகவோ இது நிகழும். இப்போது இந்த உறவுகள் உங்களுக்கு மிக முக்கியமாகத் தோன்றுகின்றன. ஓர் உறவு அகற்றப்பட்டால் பெரும் பதட்டத்திற்கு ஆளாகிறீர்கள்.

உணர்வுநிலையில் நீங்கள் வாழ்வதற்குரிய ஆதாரமாகவே அந்த உறவு அமைகிறது. வாழ்க்கைக்கான ஆதாரங்கள் உணவாகவும், உயிர்வாழ்வதாகவும் இருக்க வேண்டிய அவசியமில்லை. இத்தகைய பல ஆதாரங்கள் வாழ்க்கைக்குத் தேவைப்படுகின்றன.
ஒருகாலத்தில் திருமணங்கள் மிகவும் புனிதமானவையாய் கருதப்பட்டு சடங்குகளோடு நிகழ்த்தப்பட்டன. இப்போது நீதிமன்றங்களிலும் திருமணங்கள் நடக்கின்றன. திருமணம் எப்படி நடக்கிறது என்பது முக்கியமில்லை. திருமண வாழ்க்கை எப்படி நடக்கிறது என்பதுதான் முக்கியம். மண்டபத்தில் திருமணம் நடந்தால் ஆயிரம் பேர் வருவார்கள். பதிவுத் திருமணம் என்றால் இரண்டு சாட்சிகள் போதும். அந்தத் திருமண வாழ்க்கை எப்படி நடக்கிறது என்பதுதான் முக்கியம்.

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டதாக ஏன் சொல்லத் தொடங்கினார்கள் தெரியுமா? பலர் தங்கள் திருமண வாழ்வை நரகமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். எனவே திருமண வாழ்வையும் சொர்க்கமாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் அப்படி சொன்னார்கள். நீங்கள் சொர்க்கத்தின் தன்மையோடு இருந்தால் உங்கள் மணவாழ்வும் சொர்க்கமாக இருக்கும். நீங்கள் நரகத்தின் தன்மையோடு இருந்தால் உங்கள் மணவாழ்வும் நரகமாகத்தான் இருக்கும். எனவே, உங்கள் மணவாழ்க்கை எப்படியிருக்கும் என்று கவலைப்படுவதை விடுத்து, உங்கள் தன்மையை எப்படி மேம்படுத்துவது என்பதைப் பாருங்கள். நீங்கள் கிளைகளில் கவனம் செலுத்துகிறீர்களே தவிர வாழ்வின் வேர்களை உறுதி செய்வதில்லை. வேர்களை பலப்படுத்தாமல் கனிகளில் செயற்கை ஊசி போடுவதால் எந்தப் பயனும் கிடையாது.

இன்று திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்கிற வழக்கமும் ஆங்காங்கே தென்படுகிறது. இதில் என்ன சிக்கல் என்றால் உங்களுடன் சேர்ந்து வாழ்பவர் வெளியே போனால் திரும்ப வருவார் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. இந்த நிச்சயமின்மை, பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியுள்ளது. மேலை நாடுகளில் இதுதான் நிகழ்கிறது. நாகரீகத்தின் பெயரால் சிலவற்றைச் செய்துவிட்டு பிறகு அவதிப்படுபவர்கள் தான் அதிகம். உத்திரவாதம் இல்லாத உறவுகளால் பாதுகாப்பின்மையும், நிச்சயமின்மையும் நிலவி வருகிறது. இந்த உலகின் எந்தவொரு வாழ்க்கைமுறையும் மிகச்சரியாக வாழ்வதற்கும் பயன்படுத்த முடியும். மிகத் தவறாகவும் பயன்படுத்த முடியும். நிச்சயமில்லாத உறவுகளாலேயே பலருக்கு பைத்தியம் பிடித்துக் கொண்டிருக்கிறது.

உறவுகளை வெறும் ஒப்பந்தங்கள் போல் நிகழ்த்துவது ஒருவகை. இந்த ஒப்பந்தங்களில் அன்பு காணப்படாது. அன்பை உணராத வாழ்க்கை விரயமானதாகத்தான் பொருள். ஒப்பந்தங்கள் செய்வதில் நீங்கள் சாமர்த்தியம் மிக்கவர்கள். ஆனால் உறவுகள் ஒப்பந்தமானால் அது வாழ்க்கையாக இருக்காது. ஒருவரின் தேவைகளை இன்னொருவர் நிறைவேற்றுவதற்குப் பெயர் அன்பு அல்ல. அது பரஸ்பர உதவித்திட்டம். உங்கள் விழிப்புணர்வை அது உயர்த்தாது. மாறாக உங்கள் மனச்சாட்சியை அது மலினப்படுத்தும். அன்பு உங்கள் இயல்பான தன்மையாக இருந்தால் உங்கள் எல்லா செயல்களிலும் அது பரவும். 'நான் உன்னை நேசிக்கிறேன்' என்று வெறுமனே சடங்கு பூர்வமாக சொல்லி வந்தால் உங்களை நீங்களே ஏமாற்றி கொள்கிறீர்கள். உலகத்தை நீங்கள் ஏமாற்றினால் உங்களை சரிசெய்ய சட்டம் இருக்கிறது. உங்களையே நீங்கள் ஏமாற்றினால் அதை சரிசெய்வது தான் என் வேலை. மற்றவர்கள் உங்களைக் கண்ணிவைத்துப் பிடித்தால் நீங்கள் தப்பிப்பீர்கள். நீங்களே கண்ணிவைத்து நீங்களே மாட்டிக் கொண்டால் என்ன செய்வீர்கள்?

எப்போதும் ஒப்பந்தங்கள், ஒப்பந்தங்கள் என அதைப் பற்றியே கவலைப்பட்டுக் கொண்டிருக்காதீர்கள். உங்களையே அர்ப்பணிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அதுமட்டுமே இந்த முழுச்சூழலுக்கும் நீங்கள் வழங்கக்கூடிய மிகச்சிறந்த ஒன்றாக இருக்கும். ஒப்பந்தங்கள் அவர்களுக்குத் தேவைப்படும் பட்சத்தில் அவர்கள் இயல்பாகவே அதை எடுத்துக் கொள்வார்கள்.
கடவுளின் நோக்கம் அதுவல்ல. உங்கள் வாழ்க்கை முழுவதுமே ஒப்பந்தங்களை உருவாக்குவதைப் பற்றியே இருந்தால், நீங்கள் சாத்தானின் சீடராகவே ஆகிறீர்கள். சாத்தான் எப்போதும் யாரோ ஒருவருடன் ஒப்பந்தத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. கடவுள் ஒருபோதும், யாருடனும் எந்த ஒப்பந்தத்தையும் உருவாக்கவில்லை. ஒருமுறை இவ்வாறு நிகழ்ந்தது. ஒரு பாதிரியார், தெருவில் நடந்து கொண்டிருக்கும்போது, சற்றுமுன் கத்தியால் குத்தப்பட்ட ஒரு மனிதரைப் பார்த்தார். அந்த மனிதன் வலியால் துடித்தவாறு, மூச்சுவிட போராடிக் கொண்டு தெருவில் தலைகுப்புறக் கிடந்தான். "கருணையே உயர்ந்தது, அன்பே வழி" போன்ற விஷயங்களே எப்போதும் அவருக்கு போதிக்கப்பட்டிருந்தது. இயல்பாகவே அந்த மனிதனை நோக்கி அவர் விரைந்தார். அவனைப் புரட்டிப் பார்த்தபோது, அது சாத்தான் தான் என்பதை அறிந்தார். அவர் அச்சமும் அதிர்ச்சியும் அடைந்து வேகமாக பின் வாங்கினார். சாத்தான் அவரிடம் கெஞ்சியது, "தயவுசெய்து என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஏதாவது செய்" என்று. பாதிரியார் தயக்கமுற்று, "நான் ஏன் ஒரு சாத்தானைக் காப்பாற்ற வேண்டும்? நீ கடவுளுக்கு எதிரானவன்? ஏன் உன்னைக் காப்பாற்ற வேண்டும்? நீ சாகத்தான் வேண்டும்" என்றார். "மதபோதகரின் முழு செயல்பாடுமே, எப்படியேனும் சாத்தானை அழிப்பதுதான். யாரோ ஒருவர் சரியான செயலைத்தான் செய்திருக்கிறார் எனத் தெரிகிறது. நான் அப்படியே உன்னை சாகவிடப் போகிறேன்" என்று எண்ணினார். சாத்தான் சொல்லியது, "அவ்வாறு செய்து விடாதே! பகைவனை நேசி என்று இயேசுநாதர் உனக்கு கூறியுள்ளார். நான் உன் பகைவன் என்று உனக்குத் தெரியும். நீ என்னிடம் அன்பு செலுத்தத்தான் வேண்டும்" என்று. பிறகு பாதிரியார், "சாத்தான் எப்போதும் வேதங்களிலிருந்து மேற்கோள் காட்டுமென்பதை நான் அறிவேன். அதற்கு நான் பலியாகப்போவதில்லை" என்று கூறினார். எனவே சாத்தான், "முட்டாளாக இருக்காதே, நான் இறந்துவிட்டால் தேவாலயத்திற்கு யார் வருவார்கள்? கடவுளை யார் தேடப்போகிறார்கள்? பிறகு உனக்கு என்ன நேரிடும்? நீ வேதாகமங்களை கவனிக்காவிட்டால் பரவாயில்லை. ஆனால், நான் இப்போது வியாபாரம் பேசுகிறேன். இதையாவது கேள்" என்றது. பாதிரியார் இதனை உண்மைதான் எனப் புரிந்துகொண்டார். சாத்தான் இல்லையெனில் தேவாலயத்திற்கு யார் வரப்போகிறார்கள்? இது வியாபார உணர்வை ஏற்படுத்தியது. அவர் உடனடியாக சாத்தானை தனது தோள்களில் சுமந்து மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார்.

எனவே சுயநலத்தேவைகளுக்காக ஒப்பந்தங்களை உருவாக்கிக் கொண்டே செல்லாதீர்கள். நீங்கள் உங்களது முழுமையான தெய்வீகத் தன்மையை அடையாமல் இருக்கலாம். ஆனால் இந்த ஒரு விஷயத்திலாவது கடவுளைப்போல் சிறிதுநேரம் நடந்து கொள்ளலாம். கடவுள் ஒருபோதும் ஒப்பந்தங்களை உருவாக்குவதில்லை.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gunasekaran Ganapathy - karaikal,இந்தியா
15-அக்-201806:50:45 IST Report Abuse
Gunasekaran Ganapathy miga arumai
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X