'சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க லாம்' என்ற, உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த, கேரள, மார்க்சிஸ்ட் அரசு காட்டும் அவசரமும், 'மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவது இல்லை' என்ற, தேவசம் போர்டின் முடிவும், நாடு முழுவதும் உள்ள,
அய்யப்ப பக்தர்கள் மனதை புண்படுத்தி உள்ளது. நம் நாட்டில் உள்ள, அனைத்து மத வழிபாட்டு இடங்களும், ரயில்வே நிலையம், பஸ் நிலையம் போல, பொது இடங்கள் அல்ல; எப்படியோ அல்லது எப்படியும் நுழைந்து விட முடியாது. அவற்றுக்குள் நுழைய, பாலின கட்டுப்பாடு, ஆடை கட்டுப்பாடு, வயது நிபந்தனைகள் உண்டு. மதத்திற்கு மதம், இடத்திற்கு இடம் இவை வேறுபடுகின்றன. 'வேற்றுமையில் ஒற்றுமை' என்ற நமது கலாசாரமே, இதில் தான் அடங்கியுள்ளது.
சீக்கியர்களின் புனித கோவிலான, பஞ்சாபின், அமிர்தசரஸ் நகரில் உள்ள, பொற்கோவிலுக்குள், தலையில் துண்டு கட்டி தான், பிற மதத்தினர் உள்ளே செல்ல முடியும்.
பல கோவில்களில், ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு அப்பால், பிற மதத்தினரை அனுமதிப்பது இல்லை. துாத்துக்குடி மாவட்டத்தில் உள்ள, திருச்செந்துார், சுப்பிரமணிய சுவாமி கோவில், குமரி மாவட்டத்தில் உள்ள கோவில்கள், கேரளாவில் உள்ள கோவில்களில், ஆண்கள் சட்டை அணிந்து செல்ல முடியாது. அப்போதைய பிரதமர், காங்கிரசை சேர்ந்த, ராஜிவ், பாதுகாப்பு காரணங்களுக்காக, சட்டையை கழற்ற மறுத்ததால், கேரளாவின், குருவாயூர் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட வில்லை. கேரளாவின், கண்ணுாரில், பல கோவில்களில் இரவு பூஜையில், பெண்களுக்கு அனுமதி இல்லை. அங்குள்ள திருவனந்தபுரம், ஆற்றுகால் பகவதி கோவில் பொங்கல்நிகழ்ச்சியில், ஆண்களுக்கு அனுமதி இல்லை. ராஜஸ்தானின் பிரசித்தி பெற்ற, புஷ்கர் கோவிலில், திருமணமான ஆண்களுக்கு அனுமதி இல்லை. பீஹாரின், முஸாபர்பூர் தேவி கோவிலில், குறிப்பிட்ட மாதங்களில், ஆண்களுக்கு அனுமதி இல்லை; ஏன்... பூசாரிகளே செல்ல முடியாது. இப்படி, ஒவ்வொரு, ஹிந்து கோவில்களுக்கும், அதற்கான விதிமுறைகள், நம்பிக்கைகள், ஐதீகங்கள் உள்ளன. கோவிலில் உள்ள சுவாமி பிரதிஷ்டையை பொறுத்து, அவை வேறுபடும். ஆனால், அத்தனை கோவில்களை விடவும், சபரிமலை, அய்யப்பன் கோவில் வித்தியாசமானது. பிரம்மச்சாரியாக, தியான கோலத்தில், அய்யப்பன் வீற்றிருக்கிறார் என்பது ஐதீகம். இதனால், இதுவரை, 10 முதல், 50 வயதிற்கு உட்பட்ட, பெண்கள் அனுமதிக்கப்படுவது இல்லை. சபரிமலை ஆகம விதிகள் வேறு; பிற பகுதிகளில் உள்ள அய்யப்பன் கோவில்கள் வேறு. பிற, அய்யப்பன் கோவில்களில், பெண்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
சபரிமலையின் இருப்பிடம் போல, அங்கு செல்லும் பக்தர்களின் விரதம், வழிபாட்டு முறைகள் போல, இந்தியாவில் வேறு எங்கும் இல்லை. பிற கோவில்களுக்கு செல்லும் ஹிந்துக்கள், பக்தர்களாகவே செல்கின்றனர். ஆனால், சபரி மலைக்கு, 48 நாட்கள் பிரம்மச்சாரிய விரதம் இருந்து செல்லும் பக்தரை, நாம் பெயர் சொல்லிக் கூட அழைப்பது இல்லை. சபரிமலையில் வீற்றி ருக்கும் சுவாமியின் பெயரால், 'அய்யப்ப சாமி' என்றே, வயது வித்தியாசம் பார்க்காமல் அழைக்கிறோம். முதன் முதலாய் மலை ஏறும், சின்னக்குழந்தைக்கு கூட, மரியாதை தந்து,
'கன்னிச்சாமி' என்றும், குருவாக வழி நடத்துபவரை, 'குருசாமி' என்றும் பக்தியுடன் அழைக்கிறோம். இப்படி, எல்லா விதத்திலும், தனித்துவமான சபரிமலையில், 'பெண்களுக்கு அனுமதி இல்லை' என்ற, தவறான பிரசாரம், நாடு முழுதும் சில அமைப்பினரால் செய்யப்பட்டது.
உண்மையில், அங்கு, வயது கட்டுப்பாடு தானே தவிர; பாலின கட்டுப்பாடு இல்லை.
பதினைந்து ஆண்டுகளாக, உச்ச நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், கேரளாவில் மாறி மாறி வந்த, காங்.,- மற்றும் மார்க்சிஸ்ட் அரசுகள், ஒவ்வொரு முறையும் அறிக்கைகள் தாக்கல் செய்தன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த, அச்சுதானந்தன், முதல்வராக இருந்த போது, 'அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம்' என, முடிவு எடுத்தது.
தொடர்ந்து வழக்கு நடந்த நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, உம்மன் சாண்டி முதல்வராக இருந்த போது, அவரின் அரசு, 'பெண்களை அனுமதிக்க வேண்டாம்' என, கருத்து தெரிவித்தது. தற்போது மீண்டும் வழக்கு வந்த போது, ஆளும், மார்க்சிஸ்ட் அரசு, 'அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும்' என, உச்சநீதிமன்றத்தில், 'அபிடவிட்' தாக்கல் செய்தது.
இந்த விஷயத்தில், கேரள அரசின், ஒரு சார்பான, மத விரோத போக்கு தான், உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு மூல காரணம் என, காங்., - பா.ஜ., கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
பக்தர்களின் காணிக்கை நிதியில் செயல்படும், தேவசம் போர்டு, கோவில் விதி முறைகளில் மாற்றம் ஏற்படுத்தும் போது, பக்தர்களின் உணர்வுகளுக்கு மரியாதை அளித்திருக்க வேண்டும்.
அய்யப்பன் பிறந்ததாக, நம்பப்படும், ஐதீகம் நிலவும், கேரளாவின், பந்தளம் மன்னர் குடும்பம் மற்றும் கோவில் பூசாரிகளான, தந்திரிகளின் கருத்துகளை கேட்டு, செயல்பட்டிருக்க வேண்டும்.
ஏற்கனவே, பல, உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை, துச்ச மென மதித்து, செயல்படுத்தாத, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த, முதல்வர், பினராய் விஜயன் அரசு, இந்த தீர்ப்பை அமல்படுத்த மட்டும் அவசரம் காட்டியுள்ளது! பெரியாறு அணை நீர் மட்டத்தை உயர்த்த, தமிழகத்திற்கு சாதகமான தீர்ப்பு வந்த போது, அதை உடனே அமல்படுத்தாமல், பல இடையூறுகளை கேரள அரசு செய்து வருகிறது. அங்கேயே இன்னொரு அணை கட்ட ஏதுவாக, கேரள நீர்ப் பாசன சட்டத்தை திருத்தி, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது. 'உச்ச நீதிமன்ற தீர்ப்பு, தங்களை கட்டுப்படுத்தாது' எனவும் கூறியது. காவிரி விஷயத்தில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை, கர்நாடகா அமல்படுத்தியதா என்ன... அது போல, பல, உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை அமல்படுத்தாமல், கோர்ட் அவமதிப்பிற்கு முன்னர் ஆளாகி இருக்கிறது, கேரள அரசு. பிற மத வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான தீர்ப்புகளுக்கு, மறு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு, சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாம் என்ற, உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக, 'மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய போவதில்லை' என, அடம் பிடிக்கிறது. 'மறு சீராய்வு மனு தாக்கல் செய்வோம். மத நம்பிக்கை உள்ள பெண்கள் யாரும், சபரிமலை வர மாட்டார்கள்; என் வீட்டு பெண்கள் வர மாட்டார்கள்' என்று, முதலில் கூறிய, கேரள கோவில்களை கட்டுப்படுத்தும், தேவசம் போர்டின் தலைவர், பத்மகுமாரை, முதல்வர் பினராய் கடிந்து கொண்டார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், 'மாஜி' எம்.எல்.ஏ.,வான அவரும், கட்சி கட்டுப்பாட்டை மீறாமல், முந்தைய முடிவில் பின் வாங்கினார். எனவே, தீர்ப்பை அமல்படுத்த, தேவசம் போர்டு அவசர கதியில் செயல்படுகிறது.
கட்சியின் கொள்கையா? : 'இது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை; அதுவே அரசின் கொள்கை' என்ற ரீதியில், முதல்வர் பினராயி விஜயனும் செயல்படுகிறார். முதல்வரோ, அமைச்சர்களோ, சபரிமலைக்கு ஆய்வு செய்ய சென்றாலும், சாமியை கும்பிடுவது இல்லை.
இப்படி, தெய்வ நம்பிக்கை இல்லாதவர்கள், நம்பிக்கையுள்ள பக்தர்களின் உணர்வுகளில் விளையாடுவது எப்படி சரியாகும்? 'மதச்சார்பற்ற நாட்டில், கட்சியின் கொள்கைகளை, மதத்தின் மீது திணிப்பது நியாயமா...' என, கேரள மக்கள், குறிப்பாக, பெண்கள் வெகுண்டெழுந்து உள்ளனர்.
அரசின் போக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து, கேரளா முழுதும், தினமும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. காங்., - பா.ஜ., ஹிந்து அமைப்புகள் அந்த போராட்டங்களில் பங்கேற்கின்றன.
'எங்களின் மத நம்பிக்கைக்கு மாறாக, சபரிமலை செல்ல விருப்பம் இல்லை; அவ்வாறு செல்ல, உச்ச நீதிமன்ற உத்தரவால் கிடைத்துள்ள அது எங்கள் உரிமை அல்ல' என்பதே, அவர்களின் கோஷமாக இருக்கிறது. 'தமிழகத்தில், ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்த, உச்ச நீதிமன்றம் தடை விதித்த போது, அதை எதிர்த்து, தமிழக அரசு, சிறப்பு சட்டம் இயற்றியது போல, கேரள அரசும், சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்' என்ற கோஷமும், கேரளாவில் வலுத்துள்ளது.
அய்யப்பன் கோவில் விரதங்களையும், கோவில் ஐதீகத்தையும், மிக சரியாக பின்பற்றுபவர்கள், தமிழக, கர்நாடக, ஆந்திர பக்தர்கள் தான்! சபரிமலை கேரளாவில் இருந்தாலும், அங்கு வரும் பக்தர்களில், 90 சதவீதத்தினர் பிற மாநிலத்தவர்கள் என்பதும் கவனிக்கதக்கது. எனவே, அந்த பக்தர்களின் உணர்வையும், கேரள அரசு மதிக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தில், மறு சீராய்வு மனு தாக்கல் செய்து, 10 முதல், 50 வயது வரையுள்ள பெண்கள் செல்ல அனுமதிக்கக் கூடாது என்ற, அவர்களின் உணர்வை பிரதிபலிக்க வேண்டும்.
-ஜி.வி.ரமேஷ் குமார்
பத்திரிகையாளர்
இ-மெயில்: rameshgv1265@gmail.com