பொது செய்தி

தமிழ்நாடு

மலேஷிய இந்தியர்கள் ஏன் கிரிமினல்கள் ஆயினர்?

Added : அக் 07, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 மலேஷிய இந்தியர்கள் ஏன் கிரிமினல்கள் ஆயினர்?

மலேசிய மக்களில் வெறும், 7 சதவீதம் தான், இந்தியர்கள். ஆனால், அங்கு செயல்படும் கேங்ஸ்டர் அல்லது தாதாக்களில் பெரும்பான்மையானவர்கள் இவர்கள் தான்.
குறிப்பாக சொல்வதென்றால், தமிழ் வம்சாவளியினர். எஸ்டேட் தொழிலாளர்களாக அழைத்துச் செல்லப்பட்ட இந்தியர்கள், கேங்ஸ்டராக மாறியதற்கு பின்னணியில் உள்ள வரலாறு என்ன? பொருளாதாரத் தட்டின் கீழ்நிலையிலேயே இந்தியர்கள் இன்னும் இருக்க, மலேசிய அரசின் பாரபட்ச கொள்கை ஒரு காரணமா?மலேசிய போலீசின், நிழலுலக குழுக்கள் கண்காணிப்பு பிரிவின் கணக்குப்படி, மலேசியாவில் மொத்தம், 106 ரகசிய குழுக்கள் இயங்குகின்றன. இவற்றுக்கு, 576 கிளைகளும், அதில், 9,042 பேரும் உறுப்பினர்களாக உள்ளனர்.

அவற்றில், மக்கள் தொகையில், 23.2 சதவீதம் - ஏறக்குறைய 70 லட்சம் - உள்ள சீன இனத்தவர்களால், 65 நிழலுலக குழுக்கள் நடத்தப்படுகின்றன. அதற்கு, 167 கிளைகளும், 3,113 பேர் உறுப்பினர்களும் உள்ளனர்.
ஆனால், மக்கள் தொகையில் வெறும், 7 சதவீதமே, அதாவது, 20லட்சம் பேர் உள்ள இந்தியர்களால், 18 நிழலுலக தாதாக் குழுக்கள் இயக்கப்படுகின்றன. அதற்கு, 267 கிளைகளும், 4,143 உறுப்பினர்களும் உள்ளனர். மற்ற சீன, மலேசிய குழுக்களை விட, இந்திய தாதா குழுக்கள் பயங்கரமானவை.பெரும்பாலான தமிழ் குழுக்கள், மலேசிய குழுக்களைப் போல் உட்பகைக் கொண்டு இரண்டு படுவதில்லை. விசுவாசமும், நீண்ட பாரம்பரியமும் கொண்டவை என்பதால் தமிழ் குழுக்களே மலேசியாவில் வலுவாக உள்ளன.
தோட்டத் தொழிலாளர்களின் வம்சாவளியினர், கொடூரக் குற்றவாளிகளாக உருமாறக் காரணம் என்ன?அதன் வரலாறு:தென்னிந்திய தோட்ட தொழிலாளிகள்கடந்த, 1786இல் சர் பிரான்சிஸ் லைட் எனும் ஆங்கிலேயர் மலேசியாவில் பினாங்கை உருவாக்கியதிலிருந்து, தென்னிந்தியர்களின் குடியேற்றம் தொடங்குகிறது. ஒவ்வொரு வருடமும், 2000 தென்னிந்திய தொழிலாளர்கள், மலேசிய ரப்பர் தோட்ட வேலைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
குடியேற்றவாசிகளில் பெரும்பாலானோர், ஆந்திரா மற்றும் தமிழகத்திலிருந்து வந்த ஆதிதிராவிடர்கள்.தமிழகத்தைப் பொறுத்தவரை, தஞ்சாவூர், சேலம், செங்கல்பட்டு, திருச்சி மற்றும் சென்னையிலிருந்து சென்றவர்கள். வடஇந்தியர்களும் பிரிட்டிஷாரால் பணியமர்த்தப்பட்டனர்.
ஆனால், அவர்களுக்கு போலீசிலும், பாதுகாப்புப் பணியிலும் வேலைகள் தரப்பட்டன. அரசு பணியிலும், எழுத்தர் பணியிலும் மலையாளிகளும், யாழ்ப்பாண தமிழர்களும் அமர்த்தப்பட்டனர். செட்டியார்கள் தன்னிச்சையாக, வர்த்தக மற்றும் வியாபாரத்துக்காக மலேசியாவுக்கு குடியேறினர்.
மலேசிய இந்தியர்களில் பெரும்பான்மையானவர்கள் ரப்பர் தோட்ட தொழிலாளர்கள். இவர்கள், ஏழைகளாகவும், படிப்பறிவற்றோருமாக இருந்தனர். முறையான கல்வியோ, இன்னபிற தொழிலோ கற்றுக் கொள்ளும் சூழலின்றி , எஸ்டேட்டுகளிலேயே நீண்டகாலம் தனிமைப்பட்டு கிடந்தனர். இந்த தனிமையே, அவர்களின் வம்சாவளியினர் குற்றச்செயல்களில் ஈடுபட முக்கிய காரணிகளில் ஒன்றாக மாறியது.
ஐரோப்பிய தோட்ட முதலாளிகள், தென்னிந்திய தொழிலாளர்களையே பெருமளவில் பயன்படுத்தினர். சீனத் தொழிலாளர்களைவிட, இந்திய தொழிலாளர்கள் குறைவான சம்பளம் பெற்றனர். சீனத் தொழிலாளர்களுடன் ஒப்பிடும்போது, தோட்ட வேலையில் 2க்கு 10 என்ற அளவில் இந்திய தொழிலாளர்கள் இருந்தனர்.
சீனத் தொழிலாளர்கள், சொந்த குடியிருப்புகளில் வசிக்க, இந்தியத் தொழிலாளர்களோ முதலாளிகள் அமைத்துக்கொடுத்த குடியிருப்பில் தங்கிக்கொண்டனர். வீடு உள்ளிட்ட வசதிகள் செய்துகொடுக்கப்பட்டு, இந்தியத் தொழிலாளர் சமூகம் முழுக்கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்தது.தொழிலாளர்களின் நலனைக் காட்டிலும், மேற்கத்திய கம்பெனிகள் தங்கள் நலனையே முன்னிறுத்தின.
மிகவும் நலிவடைந்த நிலையில் வைக்கப்பட்டிருந்த இந்தியத் தொழிலாளர்கள், தோட்ட வேலையை விட்டு வெளியேறி செல்ல அனுமதிக்கப்படவில்லை. குறைவான செலவில், சாதுவாக வேலைப்பார்க்க, சீன, வடஇந்தியர்களைவிட, தென்னிந்திய தொழிலாளர்களே பிரிட்டிஷாருக்கு தோதாக இருந்தனர். இதனால், அவர்களுக்கு வேலையில் முன்னுரிமை அளிக்கப்பட்டது.
ஆங்கிலமோ, மலாய் மொழியோ தெரியாததால் இந்தியத் தொழிலாளர்கள் இன்னும் தனிமைக்குள்ளாயினர். முழுக்க தோட்டம் சார்ந்து, வறுமைப்பிடியில் அகப்பட்டு வாழும் நிலையில் இந்தியத் தொழிலாளர்கள் இருந்தனர்.கைவிடப்பட்ட இந்தியர்கள்கடந்த, 1980களில் தொடங்கி, இந்தியத் தொழிலாளர்கள் எஸ்டேட்டுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். எஸ்டேட்டுகள் தனியார்மயப்படுத்தப்பட்டு உரிமையாளர்கள் மாறியதும், புதிய நகரங்கள் உருவாக்கப்பட்டதும் இதற்கு காரணம்.

அதேநேரம், வங்கதேச, பாகிஸ்தான், இந்தோனேஷியா மற்றும் மியான்மர் தொழிலாளர்களுடன் இந்தியர்கள் வேலைக்காக போட்டியிடும் நிலைக்கு தள்ளப்பட்டனர். மறுபுறம், பாமாயில் தொழிலுக்கு, ரப்பர் தோட்டங்கள் பெருமளவில் மாறின.இதனால், இந்தியத் தொழிலாளர்கள் பெற்றிருந்த ரப்பர் தோட்ட வேலை அனுபவம், அவர்கள் பயனளிக்காமல் போனது. இரண்டு பெரும் பாதிப்புகளுக்கு இந்தியத் தொழிலாளர்கள் உள்ளாயினர்.
ஒன்று, குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்டது; அடுத்து புதிய நகர சூழலில் பிழைப்பதற்கு உரிய திறமையின்றி காணப்பட்டது. மேலும் எஸ்டேட்டுகளில் இருந்தவர்களிடம் அடையாள அட்டையோ, நிரந்தரக் குடியிருப்பு சான்றோ இல்லை. புதிய குடியேற்ற சட்டம், அவர்களை மலேசியாவில் உள்நாட்டு அகதிகள் என்ற நிலைக்கு மாற்றியது.
மலேசிய இந்தியர்கள் சரியான கல்வி பெற முடியாதது, அவர்களுக்கான பிரச்னையை மேலும் சிக்கலாக்கியது.இன்றைய நிலையில், மலேசியாவில், மூன்று லட்சம் இந்தியர்களுக்கு குடியுரிமை ஆவணம் இன்றி, கல்வி மற்றும் மருத்துவ வசதிகள் மறுக்கப்படும் நிலையில் உள்ளதாக கூறுகிறார் பி.வேதமூர்த்தி.
அமைச்சரும், பிரபல வழக்கறிஞருமான இவர், 'ஹிண்ட்ராப்' என்ற இந்துக்களுக்கான உரிமை நடவடிக்கை அமைப்பை நடத்தி வருபவர். கட்டாய மதமாற்றம், கல்வி, வேலைவாய்ப்பில் பாரபட்சம், இந்துக் கோயில்களைப் இடிப்பது உள்ளிட்டவற்றுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். 'லண்டனின் ராயல் கோர்ட் ஆப் ஜஸ்டிஸ்' நீதிமன்றத்தில், இங்கிலாந்துக்கு எதிராக 4 டிரில்லியன் டாலர் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
பலகாலம் எஸ்டேட்டில் அடிமைப்படுத்தி வைத்திருந்த இந்தியத் தொழிலாளர்களை, மலேசியாவுக்கு சுதந்திரம் கொடுத்துச் சென்றபோது, இங்கிலாந்து எந்த பாதுகாப்புமின்றி விட்டுச் சென்தாக, வேதமூர்த்தி குற்றஞ்சாட்டுகின்றார். இதனால், பெரும்பான்மை இனமான மலாய் அரசின் தயவில் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவிக்கிறார்.
2007இல், கோலாலம்பூரில் உள்ள பாரம்பரியமான இந்துக்கோயில் இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற பேரணியை நடத்தி கவனத்தை ஈர்த்தார். கடந்த மே மாதம் நடந்த மலேசிய தேர்தலில் ஆளும் கட்சி தோல்வியுற்றதற்கு ஹிண்ட்ராப் அமைப்பின் பிரச்சாரமும், ஒரு முக்கியக் காரணம்.நிஜத்திலிருந்து நிழல் உலகுக்கு... தாங்களாகவே தங்கள் வாழ்க்கையைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற நிலைக்கு, இந்தியர்கள் தள்ளப்பட்ட சூழலில், இந்திய இளைஞர்களுக்கு நிழல் உலக குழுக்கள் மீது இயல்பாய் கவனம் திரும்பியது.
சீனர்களால் ஆரம்பிக்க இந்த ரகசியக் குழுக்கள், ஆரம்பத்தில், சமூக பாதுகாப்பு நோக்கத்துக்காக ஆரம்பிக்கப்பட்டவை. ஆனால், 20ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில், மலேசியாவின் சட்ட ஒழுங்குக்கு பெரும் அச்சுறுத்தலாய் மாறின. போதைப்பொருள் கடத்தல், பணத்துக்காக கொலை செய்தல், சூதாட்ட சங்கங்கள், ஆயுதமுனையில் கொள்ளை, அடாவடி கடன் வசூல், ஆட் கடத்தல், விபச்சாரம் என்று கொடுங்குற்றங்கள் செய்யும் குழுவாக அவை மாற்றமடைந்தன.
வேலையில்லாமல் இருந்த இந்தியர்களுக்கு, இந்த ஆபத்தான தொழில்கள் பெரும் வாய்ப்பாய்,
ஈர்ப்பாய் அமைந்தன. 80களில், இந்த தொழிலில் இந்தியர்கள் கோலோச்ச ஆரம்பித்தனர்.கடந்த, 2013இல், சி.ஐ.டி. இயக்குனரான ஹாதி அப்துல்லாவின் கூற்றுப்படி, 40 ஆயிரம் ரவுடிகளில், 70 சதவீதம் பேர் இந்தியர்கள். இந்த நிலைக்கு, ரவுடிகளை கதாநாயகர்களாக சித்தரிக்கும் சீரியல்களும், சினிமாக்களும் பெரும் பங்கு வகிப்பதாக சமூகவியலாளர்கள் தெரிவிக்கினறனர்.
' மலேசிய தமிழ் சீரியல்கள், கேங்ஸ்டர்கள் வாழ்க்கை முறையை மிகவும் கவர்ச்சியாக காட்டின. பெற்றோரும், பிள்ளைகளும் குடும்பமாய் இந்த சீரியல்களை கண்டுகளித்தனர். பிள்ளைகளின் மனதில், கேங்ஸ்டர் வாழ்க்கை அழகானதாய் பதிந்தது. நிஜவாழ்க்கையிலும் அப்படி ஏதேனும் ஒரு வாய்ப்பு கிடைத்தால், உடனேயே அதை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் தான் அவர்கள் இருந்தனர்.
சீரியல்களை மட்டும் நான் குறை சொல்ல மாட்டேன். தினமும் தந்தை வீட்டுக்கு போதையுடன் வந்தால், பிள்ளைகளும் அதைத்தானே செய்வர். தாய் சீரியலைப் பார்த்தபடி, பிள்ளைகளை, 'படி' என்றால் அவர்கள் எப்படி படிப்பர்? 'இந்தியர்களிடையே, தற்கொலை எண்ணம், தாதாயிசம், மிகை உணர்ச்சி போன்றவை பரவியவதற்கு இக்காட்சி ஊடகங்கள் முக்கியப் பங்குண்டு' என்கிறார் திரைப்பட இயக்குனரான சஞ்சய் குமார் பெருமாள்.
மலேசிய நிழலுலக தாதாக்களின் வரலாற்றில், துணிகர கொள்ளைகள், போலீஸ் சேஸிங், கவர்ச்சி போன்றவற்றுக்கு பெயர் பெற்றவர் பென்டாங் காலி என்கிற காளிமுத்து. 1990களில், பெரிய திருட்டு சம்பவங்களுடனான தொடர்பில் தலைப்பு செய்திகளில் வந்தவர். 14 வயதில் தெருசண்டைகளில் வாழ்க்கையை ஆரம்பித்து, சீன நிழலுலக கும்பல் ஒன்றோடு தன்னை இணைத்துக் கொண்டார். பின், கொள்ளை, போதைப் பொருள் கடத்தல் என்று அடுத்தடுத்த நிலைக்குப் சென்றார்.
ஒருகட்டத்தில், கோலாலம்பூரில், 'கேங்க் 04' என்று சொந்தமாக குழுவைத் தொடங்கும் அளவுக்கு வளர்ந்தார். கடைசியாக, சொகுசு பங்களா ஒன்றில் தலைமறைவாக இருந்தபோது, காளியை போலீசார் சுட்டுக் கொன்றனர். இன்றும் இந்தக் குழுவைச் சார்ந்தவர்கள் கூலிக்காக கொலை செய்யும் தொழிலில் ஈடுபடுவதாக போலீசார் தெரிவிக்கின்றனர். ஒருநபரைக் கொல்ல, இவர்களுக்கு இந்திய மதிப்பில், 80 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் போதுமானது.


அரசியல்வாதிகளின் ஆசிர்வாதம்பென்டாங் காளியின், 'கேங்க் 04' ஐ விட, மோசமான இந்திய தாதாக்கும்பல் என்றால் அது, '36' தான். பழங்கால சீன நிழலுலக கும்பலான, 'ஹாங் மென்'லிருந்து பிரிந்த குழு, '36' தான். நவீன பயங்கரவாத குழுவைப் போன்று, ஆன்லைன் வழியாக உறுப்பினர்களை சேர்த்து வருகிறது '36!' இவர்களுக்கு இந்திய சமூகத்தில் செல்வாக்கு இருக்கிறதா என்றால், 'மலேசியன் இந்தியன் காங்கிரஸ்' கட்சியினரே கேங்ஸ்டர்கள் தான் என்கின்றனர் பொதுமக்கள்.
அவர்களுக்கும் நிழலுலக கும்பலுக்கான தொடர்பு, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் ரீதியானதாக உள்ளது. கேங்ஸ்டர்களை மலேசிய இந்திய அரசியல்வாதிகள் பெருமளவு ஆதரித்து வளர்க்கின்றனர். ஒவ்வொரு ரவுடி, நிழலுக தாதா கும்பல்களின் பின்னணியிலும், சமூகத்தின் முக்கியப் பிரமுகர்களும், அரசியல்வாதிகளுமே தலைமை வகிக்கின்றனர்.
அரசியல்வாதிகள் உடனடித் தீர்வுகளை முன்வைத்து மக்களை ஏமாற்றுகின்றனர். கல்வி, பழக்கவழக்க மற்றும் பண்பாட்டு மேம்பாடு, திறன்வளர்ச்சி போன்றவற்றுக்கு, நீண்டகால உழைப்பு தேவை. அதற்கு மக்களின் கூட்டுமுயற்சி மற்றும் உழைப்பு தேவை. ஆனால், பெரும்பான்மையான தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், இத்தகைய தன்மையில் இல்லை.
மலேசிய இந்தியர்களின் வறுமை நிலைக்கு இன்னொரு முக்கியக் காரணமாக, அந்நாட்டின் பொருளாதாரக் கொள்கையில் கடைபிடிக்கப்படும் பாராபட்சமும் சுட்டிக்காட்டப்படுகிறது. 1969ல் சீன- மலாயர் இனக்கலவரத்தின் பின்னணியில், மலேசிய புதிய பொருளாதாரக் கொள்கை கொண்டு வரப்பட்டது. 'எல்லா இனத்தினரிடமும் வறுமையை ஒழிப்பதே' இதன் அதிகாரப்பூர்வ நோக்கமெனினும், இந்திய சிறுபான்மையினர் இத்திட்டத்தினால் புறக்கணிக்கப்படுவதாக கருதுகின்றார்கள்.
சீன சிறுபான்மையினருக்கும் மலாய் பெரும்பான்மையினருக்கும் இடையேயான பொருளாதார வித்தியாசத்தைக் குறைப்பதற்கான இத்திட்டம், எதார்த்தத்தில் வேறுவிதமாக செயல்படுகிறது; மலாய் அல்லாத மலேசிய இந்தியர்கள், மலேசிய சீனர்கள் போன்ற சிறுபான்மையினரை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிவிட்டதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.


மாற்றத்துக்கான ஏக்கம்மலேசிய இந்தியர்களின் பொருளாதார பங்கு நிலை தற்போது, 1 .3 சதவீதம் மட்டுமே உள்ளது. வருமான பேதம் இந்தியர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. 2014 க்கும், 2015 க்கும் இடைப்பட்ட காலத்தில், இந்தியர்கள் வெறும் நான்கு சதவீதம் மட்டுமே பல்கலைக்கழக நுழைவுகளை பெற்றுள்ளனர். மலேசிய இந்தியர்களில், 40 சதவீதத்தினரின் குடும்ப வருமானம் மாதமொன்றுக்கு, 2,000 ரிங்கிட்டுக்கும் குறைவாகவே உள்ளது. வறுமை என்பது தேசிய பிரச்சனையாக இருந்தாலும், இந்தியர்களின் பிரச்சினை திறமையுடன் கையாளப்பட வேண்டியது.
கடந்த 25 ஏப்ரல் 2017 ஆம் தேதி மலேசிய இந்தியர்களுக்கான புளுபிரிண்ட் எனப்படும் வியூகச் செயல் வரைவுத் திட்டத்தை அரசு அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது.இந்தியர்கள் மற்றும் பிற மலேசிய சமுதாயங்களுக்கு இடையில் பொருளாதார இடைவெளியை குறைக்க,இதை அரசாங்கம் அறிமுகப் படுத்தியது.
இந்திய சிறு மற்றும் நடுத்தர தொழிலதிபர்களுக்கு அரசாங்க கொள்முதல் ஒப்பந்தங்களை வழங்கும் வாய்ப்பினை அதிகரித்தல், மத்திய அரசாங்கம் , மாநில அரசாங்கம் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களில் வேலைவாய்ப்பு அதிகரித்தல், கடன்கள் மற்றும் மானியங்கள் வழங்குவதை அதிகரித்தல், இளம் இந்திய தொழிலதிபர்களை ஊக்குவித்தல், இந்தியர்களுக்கு மலிவு வீடுகள் கிடைக்கச் செய்தல் போன்ற திட்டங்களை மலேசிய இந்தியர்களுக்கான புளுபிரிண்ட் அறிக்கை முன்மொழிகிறது.
மலேசிய இந்தியர்களுக்கான புளூபிரின்ட் போன்றவை தேர்தலுக்காக வெளியிடப்பட்ட திட்டம் என்று கருதப்பட்டாலும், மலேசிய இந்தியர்கள் வாழ்வில், மாற்றங்களை கொண்டு வருவது, மலேசிய அரசின் மீதுள்ள கடமையாகும். மலேசிய இந்தியர்கள் குறைந்த வருவாய் பிரிவில் இருந்து வெளியே வர, குறைந்தபட்சம் இரண்டு தலைமுறையாவது தேவைப்படும். மலேசிய அரசு மிகவும் அக்கறையுடன் செயல்பட்டு, மாற்றங்களை கொண்டு வந்தால் தான், இது சாத்தியமாகும். இந்தியர்களும் தாதா உலகத்திலிருந்து வெளியே வருவர்!
நன்றி: - பவுன்டெய்ன் இங்க்கட்டுரையாளர்: - எஸ்.கே. ஸ்ரீதேவி, மலேசிய எழுத்தாளர்

மொழியாக்கம்: - ஆரூர் சலீம்

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
13-அக்-201823:55:04 IST Report Abuse
கதிரழகன், SSLC ஏதாவது ஒரு இடத்துல ஏதாவது ஒரு துறையில தமிழன் முதல்ல வந்த்திட்டா போதும் குய்யோ முறையோன்னு கத்துவானுக. கிரிமினல் ஆனாலும் நம்பர் ஒன் அந்த பெருமை படுவீயாளா, அத்த உட்டுட்டு....
Rate this:
Share this comment
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
11-அக்-201806:13:29 IST Report Abuse
meenakshisundaram இலங்கையில் மட்டும் இலங்கை தமிழர்கள் என்றே சொல்கிறோம் ,இலங்கை வாழ் இந்தியர்கள் என்று கூறாமல். மலேஷியா இந்தியர்கள் என்று ஏன் கூறவேண்டும், அவர்கள் மலேஷியா தமிழர்களே
Rate this:
Share this comment
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
07-அக்-201809:44:32 IST Report Abuse
Pannadai Pandian மலாய் இந்தியர்கள் இந்திய தமிழ் சினிமாக்களையும் சீரியல்களை பார்ப்பதை விட்டொழிக்க வேண்டும். வட சென்னை தமிழனும் மலாய் தமிழனும் கிட்ட தட்ட ஒன்னு. மதராஸில் இருந்தாலும் உருப்புடாவட்டி பசங்க வட சென்னை பசங்க. படிப்பில் நாட்டமின்மை, வறுமை, தாதாயிசம், கடத்தல், கஞ்சா, போதை பொருள் என்று திளைக்கும் வடசென்னை சமூகத்தை எப்படி முன்னேற்றுவது. இது மலாய் தமிழ் குடிக்கும் பொருந்தும். முன்னேறுபவனை எந்த சக்தியாலும் கட்டிப்போட முடியாது. நமது இளைஞர்கள் இதனை புரிந்து கொண்டு நாள் வழியில் செல்ல தங்களை தயார் படுத்தி கொள்ள வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X