சென்னை: ''திராவிடர்களை வந்தேறிகள் எனக்கூறிய, பிஷப் கால்டுவெல்லுக்கு, தமிழகத்தில், சிலையும், மணிமண்டபமும் அமைத்தது எப்படி சரியாகும்,'' என, பா.ஜ., தேசிய செயலர், எச்.ராஜா பேசினார்.
உமரி காசிவேலு எழுதிய, 'பிஷப் கால்டுவெல் - பிழையுரையும், பொய்யுரையும், திராவிட இனவாதமும்' என்ற நுாலை, சென்னையில், நேற்று வெளியிட்டு அவர் பேசியதாவது:
கால்டுவெல், நாடார் சமூகத்தை பற்றி குறிப்பிட்டதை சமீபத்தில், ஒரு மேடையில் பேசினேன். அது, என் கருத்து என்பது போல, சமூக ஊடகங்களில் பரப்பி, என்னை சர்ச்சைக்குள்ளாக்கினர். நான், எதை பேசினாலும், சர்ச்சைக்குரியதாய் மாற்ற, பலர் ஆர்வம் காட்டுகின்றனர்.
கால்டுவெல் எழுதிய, 'ஆரியர் குடியேற்றக் கோட்பாடு' என்பதை வைத்து, தமிழகத்தில், அரை நுாற்றாண்டாக, தமிழக இளைஞர்களின் மூளையை குப்பைத் தொட்டியாக, திராவிடக் கட்சிகள் மாற்றி உள்ளன. 'ஆரியர்களுக்கு முன், திராவிடர்களும், இங்கு குடியேறியவர்கள் தான்' என, கால்டுவெல் கூறி உள்ளார். அவருக்கு, சிலையும், மணிமண்டமும் கட்டப்பட்டது எப்படி சரியாகும்.
அவர் கூற்றுப்படி, அறிவற்ற, கருமை நிறம் உடைய, குட்டையான, சுருட்டை முடி கொண்டவர்களே திராவிடர்கள். திராவிடத்தை போற்றிய கருணாநிதியின் குடும்பத்திலேயே, பல்வேறு உருவமைப்புகள் உள்ளவர்கள் இருக்கும் போது, கால்டுவெல்லின் திராவிடக் கூற்று எப்படி சரியாகும். திருவள்ளுவரை, ஏழாம் நுாற்றாண்டைச் சேர்ந்தவர்; தாமஸின் நண்பர்; கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார் என்றெல்லாம் குறிப்பிட்டுள்ள கால்டுவெல்லின் கூற்றை, திராவிடக் கட்சிகள் ஏற்கின்றனவா?
தமிழக அரசு, 1926ல் வெளியிட்ட அரசாணையில், தமிழகத்தில், தெலுங்கு பேசும் பட்டியல் இனத்தினரை, ஆதி தெலுங்கர்கள் என்றும், தமிழ் பேசுவோரை, ஆதி திராவிடர் என்றும் பிரித்துள்ளனர்; ஏன், ஆதி தமிழர் என, பிரிக்கவில்லை. தமிழகத்தில், தமிழும், சமஸ்கிருதமும் கலந்தே வழங்கின. வணிகர்களுக்கு கூட, சமஸ்கிருதம் படிக்க தெரிந்தது.
இதற்கு, தமிழின் முதல் காப்பியமான சிலப்பதிகாரத்திலேயே நிறைய சான்றுகள் உள்ளன. திராவிட மொழிகளைப் பற்றி அறியாமல், திராவிட ஒப்பிலக்கணம் என்ற நுாலை, ஆங்கிலத்தில் எழுதி உள்ளார். ஆங்கிலம், நம் பூர்வ மொழியா. தன் மதத்தை பரப்ப, நம் மண்ணின் மைந்தர்களிடம், பொய்யுரைகளைக் கூறி, நம்ப வைத்து, பிரித்தாளும் சூழ்ச்சியை செய்துள்ளார், கால்டுவெல்.
'திராவிடம் என்பது ஒரு இடம்; இனமல்ல' என, ஆதிசங்கரர் கூறி உள்ளார். அதை, இனமாக்கியது, கட்சிகள் தான். திராவிடக் கட்சிகள், தமிழர்களின் வழிபாட்டு முறைகளை உடைத்து, அவர்களுக்கு பக்தியின் மீதிருந்த நம்பிக்கைகளை அழித்து, கொள்ளையடிக்கும் செயலில் ஈடுபட்டன. இதுவரை, கோவில் சொத்துக்கள் மட்டும், பல லட்சம் கோடி ரூபாய், கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
'பல சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன; அவை, எந்த கோவிலுக்கு உரியது என்பது தெரியவில்லை' என, தமிழக தொல்லியல் துறை அமைச்சர், பாண்டியராஜன் கூறி உள்ளார். கோவில் சொத்துக்களை பற்றி, அந்தந்த கோவில் அதிகாரிகள், பதிவேட்டில் குறித்து, சரிபார்க்க வேண்டும். ஆனால், அதற்குப் பதில், பத்து லட்சம் கோடி ரூபாய்க்கு மேல், கொள்ளையடித்துள்ளனர். கோவில் நிலங்களும், கோவில்களும், மடங்களும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
தற்போது, இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள், 'தங்களுக்கு பணிப்பாதுகாப்பு இல்லை; வேறு துறைக்கு மாற்ற வேண்டும்' என, கோரிக்கை வைத்துள்ளனர். அவர்கள் எங்கு சென்றாலும், வழக்கு பாயும்.
துாத்துக்குடி கலவரத்தை, கிறிஸ்த பாதிரியார்கள்தான், தேவாலய மணியடித்து, துவக்கி வைத்தனர். அவர்கள், நம் மக்களின் ஒற்றுமையை குலைக்க திட்டமிட்டுள்ளனர்.
இவ்வாறு, எச்.ராஜா பேசினார்.
நுாலின் முதல் பிரதியை பெற்ற வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் பேசியதாவது:
தமிழகத்தில், நீதித்துறையை நம்பி, நீதிமன்றத்தை நாடினால், நல்ல பலன் கிடைக்கிறது. பசுவதை, சிலை திருட்டு உள்ளிட்டவற்றிற்கு, நான் போட்ட ரிட் மனுவிற்கு, நீதிமன்ற உத்தரவு படி, தமிழக அரசு நல்ல பதில் அளித்துள்ளது. இந்து மதம், பழமையானது; அதன் கோட்பாடுகள் மக்களுடன் இணைந்தவை. அவற்றை யாராலும் அழிக்க முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.