போட்டோவை காட்டி முதல்வரிடமே மோசடி! ஒப்பந்ததாரர் - அதிகாரிகள் கைகோர்ப்பு புழல் கால்வாய் பராமரிப்பு நிதி, 'அபேஸ்'- படுமோசமானது பொதுப்பணித்துறை-| Dinamalar

தமிழ்நாடு

போட்டோவை காட்டி முதல்வரிடமே மோசடி! ஒப்பந்ததாரர் - அதிகாரிகள் கைகோர்ப்பு புழல் கால்வாய் பராமரிப்பு நிதி, 'அபேஸ்'- படுமோசமானது பொதுப்பணித்துறை-

Updated : அக் 10, 2018 | Added : அக் 10, 2018 | கருத்துகள் (2)
Advertisement

புழல் ஏரி உபரிநீர் கால்வாயை புனரமைப்பது போல எடுக்கப்பட்ட புகைப்படங்களை, முதல்வரிடம் காட்டி, ஒப்பந்ததாரரும், அதிகாரிகளும், 15 லட்சம் ரூபாய் மோசடி செய்த தகவல் வெளியாகி உள்ளது.
பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளில், பரவலாக முறைகேடுகள் நடப்பதாகவும், இதற்கு பொதுப்பணித் துறை அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாகவும், புகார் எழுந்துள்ளது.வட கிழக்கு பருவமழை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக, பொதுப்பணித்துறையில், பல கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள், மேற்கொள்ளப்படுவது வழக்கம்.அத்துறை பராமரிப்பில் உள்ள ஆறுகள், கால்வாய்கள், ஏரிகளால், வெள்ள பாதிப்பு ஏற்படாமல் இருக்க, துார்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும்.இந்த பணிகளில், சமீபகாலமாக பெரும் கொள்ளை அடிக்கப்படுகிறது.
அதாவது, செலவிடப்படும் நிதியில், 30 சதவீதம் அளவிற்கு கூட, பணிகள் நடக்காது.இதில், ஒப்பந்ததாரருக்கு நல்ல லாபம் என்பதால், அதிகாரிகளுடன் கைகோர்த்து, இந்த டெண்டரை எடுக்க, பெரும் போட்டியே நிலவும்.பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளில், பெரும் முறைகேடுகள் நடப்பதாக, அடிக்கடி புகார் எழுந்தாலும், புழல் ஏரி உபரிநீர் கால்வாய் விவகாரத்தில், தற்போது அது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இம்முறை அதிகாரிகள் ஒரு படி மேலே சென்று, சித்தரிக்கப்பட்ட புகைப்படத்தை காட்டி, முதல்வரையே ஏமாற்றிய தகவல், தற்போது வெளியாகி உள்ளது.சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரி நிரம்பும்போது, அதில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படும். இந்த நீர், உபரிநீர் கால்வாய் வழியாக, 12 கி.மீ., பயணித்து, சடையங்குப்பம் அருகே வங்க கடலில் கலக்கிறது.உபரிநீர் கால்வாயை ஒட்டி, சாமியார்மடம், தண்டல்கழனி, பாபாநகர், கிராண்ட்லைன், காவாங்கரை, வடபெரும்பாக்கம், கொசப்பூர், ஆமுல்லைவாயில், சடையங்குப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன.ஒவ்வொரு ஆண்டும், மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புழல் ஏரி உபரிநீர் கால்வாயை புனரமைப்பதற்கு, அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது.அதை, பொதுப்பணித்துறையினர் முறையாக செலவிடுவது இல்லை.
இதனால், 2015ல், புழல் ஏரியில் இருந்து திறக்கப்பட்ட உபரிநீரால், கரையோர பகுதிகள் மட்டுமின்றி, ஊர்களுக்கும் வெள்ளம் சூழ்ந்ததால், அதிகளவில் பொருட்சேதம் ஏற்பட்டது.இந்த பாதிப்பில் இருந்து, அப்பகுதி மக்கள், படிப்படியாக மீண்டு வந்துள்ளனர். 'இந்தாண்டு, வட கிழக்கு பருவமழை அபரிமிதமாக பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புழல் ஏரி உபரிநீர் கால்வாயை புனரமைப்பதற்கு, 15 லட்சம் ரூபாயை, ஒரு மாதத்திற்கு முன், அரசு ஒதுக்கீடு செய்தது.இது குறித்து, அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:பருவமழை துவங்கவுள்ள நிலையில், இதுவரை, புழல் ஏரி உபரிநீர் கால்வாயை, பொதுப்பணித் துறையினர் சீரமைக்கவில்லை. இதற்காக நியமிக்கப்பட்ட ஒப்பந்ததாரர், சில இடங்களில், ஜே.சி.பி., வாகனங்களை இறக்கி, பணி செய்வது போல, படம் பிடித்துள்ளார்.
இந்த புகைப்படங்களை, சமீபத்தில் ஆய்வு கூட்டம் நடத்திய, முதல்வர் பழனிசாமியிடம், பொதுப்பணித் துறை உயர் அதிகாரிகள் காட்டியுள்ளனர்.அவரும், பணி சிறப்பாக நடந்துள்ளதாக, அதிகாரிகளை பாராட்டியுள்ளார்.ஆனால், உண்மையில், 12 கி.மீ., கால்வாயில், 1 கி.மீ.,க்கு கூட முறையாக புனரமைப்பு பணிகள் நடக்கவில்லை.ஆகாய தாமரை மட்டு மின்றி, வேலிகாத்தான் மரங்கள், புதர்கள் அதிகளவில் கால்வாயில் மண்டியுள்ளன.கரைகளும் பலப்படுத்தப்படாமல், பாபாநகர், திருநீலகண்டன் நகர் உள்ளிட்ட இடங்களில் உடையும் நிலையில் உள்ளது.
இதனால், ஏரியில் இருந்து உபரிநீர் திறக்கும் பட்சத்தில், இந்த பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.எனவே, மழை தீவிரம் அடைவதற்குள், புழல் ஏரி உபரிநீர் கால்வாயை புனரமைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை முன்னெச்சரிக்கை பணிக்கு, அரசு நியமித்துள்ள, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், இதை ஆய்வு செய்ய வேண்டும்.முதல்வரை ஏமாற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
christ - chennai,இந்தியா
11-அக்-201810:45:10 IST Report Abuse
christ முதல்வரே மாநிலத்தின் அணைத்து இடங்களுக்கும் நேரம் ஒதுக்கி நேரில் சென்று ஆய்வு நடத்தவேண்டும் .(தேர்தல் நேரங்களில் வாக்கு சேகரிக்க தமிழகம் முழுவதும் கிராமம் கிராமமாக செல்வதுபோன்று ) நம் நாட்டில் லஞ்சம் வாங்குபவரையும் ,ஊழல் செய்பவர்களையும் தூக்கில் போட சட்டம் இயற்றினால் மட்டுமே உழலும் லஞ்சமும் காணாமல் போகும் .
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
13-அக்-201823:01:43 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்அதுவே சம்பந்திக்கும், மோசடி மஸ்தானுக்கும் முறைவாசல் பண்ண, ஹைவேஸ், பொதுப்பிணிதுறை ன்னு இருக்குற ஊழல் எல்லாம் உலகளாவிய அளவில், உலகவங்கி கிட்டே தமிழ்நாட்டை அடமானம் வெச்சி கொலைவெறியோடு கொள்ளை, லஞ்சம்ன்னு ராஜ்ஜியம் பண்ணிக்கிட்டு இருக்காப்புலே. அவருக்கிகிட்டே முறையீடு பண்றானாம் இவன்.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X