அரசியல் கட்சிகளின் துர் பிரசாரம், சமுதாயங்களை பிரிக்கும் பிரிவினைவாத பேச்சு போன்ற பல காரணங்களால், கோவில்களும், மண்டபங்களும் பாழடைய துவங்கின. அவற்றை நிர்வகிக்க, தானமாக வழங்கப்பட்டிருந்த சொத்துகளும், கொஞ்சம் கொஞ்சமாக, பிறரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டன; கோவில்களும், மண்டபங்களும் பொலிவிழந்தன.பல ஆயிரம் ஆண்டு
களாக, ஜாதி வேற்றுமையின்றி, இணக்கமாக கோவில்களை நிர்வகித்து வந்த கிராமத்தினர் இடையே, அரசியல் கட்சியினரால் துாண்டி விட்ட விவகாரங்களால், கோவில்களை நிர்வகிப்பதில் ஜாதி பிரச்னை தலை துாக்கியது.கோவிலை நிர்வகிக்கும் பொறுப்பு, உள்ளூர் மக்களிடம் இருந்து, அறநிலையத்துறை எனும், அரசு அதிகாரிகள் வசம் சென்றது. அதன் பிறகு ஆரம்பித்தது தான் பாதிப்பு.கோவிலின் புனிதத் துவத்தை மறந்து, சம்பளம் வாங்குவதை மட்டுமே குறிக்கோளாக வைத்து செயல்பட்ட அறநிலையத்துறை அதிகாரிகளால், கோவில்கள் மேலும் சிதிலடைந்தன. கோவில் வழிபாடுகளுக்கான முக்கியத்துவம் குறைந்தது; அதற்காக செலவுகளும் அதிகாரிகளால் கணிசமாக குறைக்கப்பட்டன.கோவிலை நம்பி இருந்த குருக்கள், வயிற்றில் அடிக்கப்பட்டனர். அவர்களின் வாரிசுகள் வறுமையில் உழன்றனர். வேறு வழியின்றி, அவர்கள் தங்கள் பாரம்பரிய தொழிலை மறந்து, அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை பார்க்க, நகரங்களுக்கு சென்று விட்டனர்.கோவில்களுக்கு பாதுகாவலர்களே இல்லாத நிலையில், கோடிக்கணக்கான சொத்துகளும், பல நுாறு கோடி ரூபாய் மதிப்புள்ள சிற்பங்களும், இருப்பதை நோட்டமிட்ட சமூக விரோதிகள், கோவில்களை கொஞ்சம் கொஞ்சமாக சூறையாடினர்; அதிகாரிகள் அதை வேடிக்கை பார்த்தனர்.படிப்படியாக கோவில்கள், வியாபார கேந்திரங்களாக மாற்றப் பட்டன. சிறப்பு தரிசனத்திற்கு தனி கட்டணம்; சிறப்பு பூஜைகளுக்கு கட்டணம்; செருப்பு வைக்க கட்டணம் என, கோவில்களில் நுழைந்தாலே, கட்டணம் செலுத்த வேண்டிய நிலை
உருவாயிற்று.பிற மத விவகாரங்களை கண்டுகொள்ளாத அரசும், அதன் துறைகளும், இந்து மதத்தின் அடையாளங்களாக விளங்கும் கோவில்களின் வழிபாட்டில், மூக்கை நுழைத்தன.
அதை கண்டும், காணாமல் இருந்த பக்தர்கள் கண் முன்னே, பல ஆயிரம் கோவில்கள் அழிந்தன; சொத்துகள் ஆக்கிரமிக்கப்பட்டன.பல கோவில்களில், மூலவர் கற்சிலை தவிர்த்து, பிற சிலைகள், பூஜை பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன. ஏன்... கோவிலை தாங்கி நின்ற, சிற்ப வேலைப்பாடுகள் மிகுந்த கல் துாண்களும், தளக்கற்களும் கூட களவாடப்பட்டுள்ளன.
கேளிக்கை விடுதிகள், பொழுதுபோக்கு பூங்காக்களை நடத்தும் தொழிலதிபர்கள், அடிமாட்டு விலைக்கு, அந்த அற்புத சிலைகளை வாங்கி, தங்கள் இடங்களை அழகுபடுத்திக் கொண்டு
உள்ளனர். இந்த அநியாயத்தை தட்டிக் கேட்ட, கோவில் பூசாரிகளும், மத ஆர்வலர்களும், மத விரோத கும்பலால் வேட்டையாடப்பட்டனர்.இப்படியே நிலைமை போன நிலையில், ஐரோப்பிய நாடுகளின் அருங்காட்சியங்களில் இருந்த கடவுளர்களின் உலோக சிலைகளை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், அரும் பாடுபட்டு, நாட்டுக்கே திருப்பி கொண்டு வந்துள்ளனர்.
கதவு, பூட்டு கூட இல்லாத, பல கிராம கோவில்களில் இருக்கும், கலைநயம் மிக்க உலோக சிலைகளுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி, அவற்றை அள்ளி, மூட்டை கட்டி, நகர்ப்
புறங்களில் உள்ள, பெரிய கோவில்களின், இரும்புக் கதவு இருப்பறையில் போட்டு
வைத்துள்ளனர்.பல நுாறு ஆண்டுகளாக, பூஜிக்கப்பட்ட அந்த சிலைகள், அறநிலையத்துறை
கட்டுப்பாட்டில், இரும்பு கதவுகளுக்குள் பூட்டி வைக்கப்பட்டுஉள்ளன.பாழடைந்த கோவில்கள் மற்றும் மண்டபங்களில் பெயர்த்து எடுக்கப்பட்டு, பலரிடம் விலை பேசப்பட்டது போக, மீதமிருக்கும் பழங்கால சிலைகள், சமீப காலமாக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால், நுாற்றுக்கணக்கில் மீட்கப்படுகின்றன.'சைடு பிசினசாக' அவற்றை விற்று, பணம் பார்த்த பெரும் பணக்காரர்கள், தங்கள் பண்ணை வீடுகள், தோட்டங்களில் பதுக்கி, புதைத்து வைத்திருந்தவற்றை, நுாற்றுக்கணக்கில் போலீசார் மீட்டு வருகின்றனர். அத்தனையும்
மீட்கப்பட்டு, போலீஸ் கட்டுப்பாட்டில் உள்ள பாழடைந்த அறைகளில், குப்பை போல போட்டு வைக்கப்பட்டுள்ளன. மீட்கப்படும் அந்த சிலைகள், மீண்டும் வழிபாட்டை சந்திக்கப் போவதில்லை. குப்பையோடு குப்பையாக போடப்பட உள்ளன. எனவே, இப்போதே விழித்தெழுந்து, மீட்கப்படும் சிலைகளை, கோவில்களில் பாதுகாப்பாக வைத்து, அவற்றின் கீழ் விளக்க குறிப்புகளை எழுதி வைத்து, வருங்கால சந்ததியினர் அறிந்து கொள்ளவும், வழிபாடு செய்யவும் ஏற்பாடு செய்ய வேண்டும்.அது போல, கோவில்களின் இரும்புக் கதவுகளுக்கு பின், பூஜைகள் இன்றி போடப்பட்டிருக்கும், உலோக சிலைகளை, கோவிலின் ஒரு பகுதியில், அருங்காட்சியம் போல, பாதுகாப்பான அறை அமைத்து, அங்கு வைத்து, தினமும் பூஜை செய்து, பராமரிக்க வேண்டும்.கடவுள் பக்தி கொண்டவர்கள், கோவிலை நிர்வகிக்க வேண்டும். கோவில் நிர்வாகம், அரசு வசமிருந்து, அந்தந்த பகுதி மக்கள் வசம் செல்ல வேண்டும். அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு, வேறு அரசு பணி வழங்க வேண்டும். அவர்கள் இது வரை பராமரித்தது போதும் என, அவர்களை கவுரவமாக நடத்தி, அனுப்பி வைக்க வேண்டும்.ஏனெனில், முஸ்லிம் சொத்துகளை நிர்வகிக்க, அந்த மதத்தினரே ஒரு அமைப்பை ஏற்படுத்தியுள்ளனர். மசூதிகளின் நிர்வாகத்தை அவர்களே மேற்கொள்கின்றனர்; அரசு அவற்றில் தலையிடுவதில்லை; தலையிட முடியாத வகையில் பார்த்துக் கொள்கின்றனர்.அது போல, கிறிஸ்தவ சொத்துகளும், வழிபாட்டுத்தலங்களும், அந்த மதத்தவர்களால் தான் பராமரிக்கப்படுகின்றன; அரசின் தலையீடு அறவே இல்லை. தமிழகத்தின் சில நகரங்களில் இருக்கும், சீக்கியர் கோவில்களும், அவற்றின் சொத்துகளும், சீக்கியர்களால் தான் பராமரிக்கப்படுகின்றன.எனவே, இந்து கோவில்களை நிர்வகிக்கும் உரிமை, அதிகாரத்தை இந்துக்களுக்கே வழங்க வேண்டும்; அரசு ஊழியர்களான, அறநிலையத்துறையினரிடம் பறித்து, அந்தந்த பகுதி மக்களிடம் ஒப்படைக்க வேண்டும்.டாக்டர்களின் நியமனம், அவர்களின் செயல்பாடுகளை, டாக்டர்களை கொண்ட மருத்துவ கவுன்சில் கண்காணிக்கிறது.
வழக்கறிஞர்களுக்கு என தனியான, வழக்கறிஞர் குழு உள்ளது. நீதிபதிகள் நியமனம் மற்றும் பிற விவகாரங்களை, 'கொலீஜியம்' எனப்படும், நீதிபதிகள் குழு பார்த்துக் கொள்கிறது.
ஆனால், கோவில்களின் கட்டுப்பாடு மட்டும், அரசு துறையிடம் இருக்கிறது. இது என்ன நியாயம்... இதை மாற்ற வேண்டும். இல்லையேல், இன்னும் சில ஆண்டுகளில், அறநிலையத்துறை மற்றும் தொல்பொருள் ஆய்வுத்துறை வசம் இருக்கும் கோவில்கள் அழிந்து விடும்.
அதற்கு பின், குய்யோ முறையோ என கத்தி, பிரயோஜனம் இல்லை; இப்போதே விழித்தெழ வேண்டும்!
எஸ்.ராமசுப்ரமணியன்
எழுத்தாளர்