பொது செய்தி

இந்தியா

பூடானில் பெட்ரோல் விலை குறைவு: மேற்கு வங்க வாகன ஓட்டிகள்,'குஷி'

Added : அக் 14, 2018
Advertisement

அண்டை நாடான பூடானில், பெட்ரோல், டீசல் விலை, நம் நாட்டில் உள்ள விலையை விட குறைவாக இருப்பதால், மேற்கு வங்கத்தை சேர்ந்த வாகன ஓட்டிகள், அந்த நாட்டில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில், தங்கள் வாகனங்களுக்கான எரிபொருளை நிரப்பி வருகின்றனர்.
மேற்கு வங்க மாநிலத்தில், 1 லிட்டர் பெட்ரோல், 84 ரூபாய்க்கும்; 1 லிட்டர் டீசல், 76 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.இந்நிலையில், இந்த மாநில எல்லையை ஒட்டி அமைந்துள்ள, அண்டை நாடான பூடானில், பெட்ரோல், டீசல் விலை, மேற்கு வங்கத்தில் விற்பனை செய்யப்படுவதை விட, லிட்டருக்கு, 12 ரூபாய் குறைவாக உள்ளது.
பூடான் எல்லையை ஒட்டியுள்ள, மேற்கு வங்க மாநில மாவட்டங்களில் வசிப்போர் மற்றும் பூடான் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பயணிப்போர், பூடானில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில், வாகன எரிபொருள் நிரப்புகின்றனர்.வாகன எரிபொருள் விலை, லிட்டருக்கு, 12 ரூபாய் வரை குறைவு என்பதால், அவ்வழியாக, தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் பெரும்பாலான வாகனங்கள், பூடானுக்குள் சென்று, அங்கேயே தங்கள் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்கின்றனர்.
இதனால், மேற்கு வங்க மாநில, பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கவலை அடைந்திருப்ப தோடு, மத்திய, மாநில அரசுகளின் வரி வருவாயும் குறைந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து, மாநில, பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கத்தினர் கூறியதாவது: நம் நாட்டை சேர்ந்தோர், அண்டை நாடான பூடானுக்குள் நுழைய, 'விசா' தேவையில்லை என்பதால், மேற்கு வங்கத்தை சேர்ந்த வாகன ஓட்டிகள், எளிதாக அந்த நாட்டிற்குள் நுழைகின்றனர். நம் நாட்டு எல்லையை கடந்து, பூடான் எல்லைக்குள் நுழைந்த, 10 கி.மீ., துாரத்திற்குள்ளாகவே, நெடுஞ்சாலையில் ஏராளமான பெட்ரோல் பங்க்குகள் உள்ளன.
இதனால், பெரும்பாலானோர், பூடான் நாட்டிற்கு சென்று பெட்ரோல், டீசல் நிரப்புவதையே விரும்புகின்றனர். இதனால், இங்குள்ள பெட்ரோல் பங்குகளில், ஒரு நாளைக்கு சராசரியாக, 20 சதவீதம் விற்பனை பாதிக்கிறது.இதன் மூலம், பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு, ஆண்டுக்கு, 750 கோடி ரூபாய் வருவாயும், மாநில அரசுக்கு, 176 கோடி ரூபாய் வரி வருவாயும் இழப்பு ஏற்படும். இதை தவிர, மத்திய அரசுக்கான வரி வருவாயிலும் இழப்பு ஏற்படும் என்பதால், மத்திய, மாநில அரசுகள், இந்த விவகாரத்தில் தலையிட்டு, உடனடி தீர்வு காண வேண்டும்.இவ்வாறு, அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X