சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காட்டுக்குள் சிக்கிய எஸ்.பி.,

Added : அக் 14, 2018
Advertisement
காட்டுக்குள் சிக்கிய எஸ்.பி.,

ஐ.பி.எஸ்., அதிகாரிகள் எல்லோருமே, திறமையானவர்கள், அறிவுப்பூர்வமாகச் செயல்படக்கூடியவர் என்ற முடிவுக்கு நாம் வந்துவிட முடியாது. சிலர் அந்தப் பதவிக்கு பொருந்தாதவர்களாகவும் இருக்கின்றனர்.
அன்றிரவு, 8 மணியிருக்கும். அலுவலகத்தில் இருந்தேன். கோவை மாவட்ட, எஸ்.பி., கேம்ப் ஆபீசில் இருந்து, போன்கால். 'தினமலர் நிருபர் ___ சாரா? வணக்கம். கொஞ்சம் லைன்ல இருங்க, எஸ்.பி., பேசுறார்...' என, இணைப்புக் கொடுத்தார் கேம்ப் ஆபீஸ் அசிஸ்டென்ட்.
'தம்பீ... எப்படி இருக்கீங்க? நாளை காலை, 5.00 மணிக்கு எஸ்.பி., ஆபீஸ் வந்துடுங்க. வால்பாறை
பாரஸ்ட்டுக்கு கஞ்சா ரெய்டு போறோம். மத்த பிரஸ் எல்லாரும் வர்றாங்க... வண்டி ஏற்பாடு செஞ்சாச்சு. திரும்பி வர ஈவினிங் ஆயிடும்...' என்றார்.
'இன்ட்ரஸ்ட்டிங்கான மேட்டர்தானே... போனா தேறும்' என்ற ஆவலில், 'நிச்சயமாக சார்...' என்றேன். அந்த எஸ்.பி., ஈசனின் பெயர் கொண்டவர். சுத்த தங்கத்தைச் சொல்ல, முன்வார்த்தை ஒன்றை சொல்வோமே... அதில்தான் துவங்குகிறது அவர் பெயர். பழக இனிமையானவர்; அவருக்குச் சாதகமாக செய்தி வெளியிடும் வரை...
சரி மேட்டருக்கு வருவோம்...
மறுநாள் அதிகாலை, 5 மணி. கிட்டத்தட்ட, 15 ரிப்போர்ட்டர்கள், போட்டோகிராபர்கள் எஸ்.பி., அலுவலகத்தில் பயணத்துக்கு ரெடி. எஸ்.பி.,யின் கார் முன்னே போக... போலீஸ் வேனில் நாங்களும் பயணம். வழியில் சிற்றுண்டி. காலை, 9 மணியிருக்கும், வால்பாறை வந்தாயிற்று.
ஜில்லென்ற காற்று வரவேற்றது. கண்ணுக்கு எட்டிய துாரம் வரை பச்சைப் பசேலென டீ எஸ்டேட்கள் கண்களுக்கு விருந்தளித்தன. வானுயர்ந்த மரங்களினுாடே முட்டி மோதி மிதந்து சென்றன மேகக்கூட்டங்கள். சுடச்சுட டீ வந்தது.
அடுத்த சில நிமிடங்களில், 'ஸ்டிரைக்கிங் போர்ஸ்' (அதிரடிப்படை) உள்ளிட்ட பெரும் போலீஸ் படையே வந்திறங்கியது. ஏறத்தாழ, 100 போலீஸ். கையில் ஏ.கே., 47, எஸ்.எல்.ஆர்., ரக துப்பாக்கிகளுடன்!
காரில் இருந்த, எஸ்.பி.,யிடம், 'இன்பார்மர்' (உளவாளி) ஒருவரை அழைத்து வந்து நிறுத்தினர், வால்பாறை போலீசார். கந்தலாடையும், தலைவாராத முகமும், ஆதிவாசி என அவரை அடையாளம் காட்டியது. கையிலிருந்த சிவப்புநிற ஈரிழை அழுக்குத்துண்டை எடுத்து, கையிடுக்கில் வைத்தவாறு குனிந்து காருக்குள் இருந்த, எஸ்.பி.,யிடம், வால்பாறை உச்சியிலுள்ள ஒரு இடத்தின் பெயரைச் சொல்லி பல ஏக்கரில் கஞ்சா பயிரிடப்பட்டிருப்பதாகச் சொன்னார்.
அந்த ஆளை அழைத்து வந்தவர், வால்பாறை இன்ஸ்பெக்டர்.அந்த ஆளின் பேச்சை நம்பி, பெரும்படையே, பொடிநடையாக மலை மீது கிளம்பியது, துப்பாக்கிகள் புடை சூழ... ஏதோ போருக்குப் போவதைப் போல பிரஸ்காரர்களும் பின் தொடர்ந்தோம். நடந்தோம்...
நடந்தோம்... நடந்துகொண்டே இருக்கிறோம், கஞ்சா பயிர் செய்யப்பட்டிருந்த இடமே தென்படவில்லை.
மதியம் ஆயிற்று. கட்டிக்கொண்டு போன உணவுப்பொட்டலங்களும் காலியாகின. மாலை, 4 மணியானதும் பாரஸ்ட்டிற்குள் இருள் சூழத்துவங்கியது. விதவிதமான ஒலியுடன் வண்டுகளும், பறவைகளும் ரீங்காரமிடத் துவங்க, பயம் எங்களைப் பற்றிக் கொண்டது. அப்படியொரு வண்டுகளின் கூட்டொலியை நாங்கள் கேட்டதில்லை.
எங்களுடன் வந்திருந்த ஸ்பெஷல் பிராஞ்ச் இன்ஸ்பெக்டர் சீனிவாசனிடம், 'என்ன சார், இருட்ட ஆரம்பிச்சுடுச்சு... ரெய்டு நடத்த வேண்டிய இடமெங்கே...' என்றேன். என்னுடன் இருந்த, 'தி இந்து' ஆங்கில நாளிதழ் நிருபர் பழனியப்பன், 'என்ன சார், பிரஸ்ஸ எல்லாம் கூட்டிட்டு வந்து விளையாடுறீங்களா...?' எனக் கேட்க...ஸ்பெஷல் பிராஞ்ச் இன்ஸ்பெக்டர் போட்டாரே ஒரு குண்டு... ஈரக்குலையே நடுங்கிவிட்டது எங்களுக்கு.
'கோபப்படாதீங்க; கொஞ்சம் பொறுத்துக்குங்க சார், 'இன்பார்மர நம்பி' இங்க வந்தது தப்பாப் போச்சு. கஞ்சா போட்டிருக்கிறதா அவன் சொன்ன இடமும் தெரியல.'இந்த மலையில நாம போக வேண்டிய டைரக்ஷன் வேற... இவன் கூட்டிட்டு வந்திருக்கிற டைரக்ஷன் வேற. இப்போ, இந்த காட்டுக்குள்ளாற இருந்து எப்படி வெளியே போறதுங்குற வழியும் கூட அவனுக்குத் தெரியல... எஸ்.பி., ரொம்பவே அப்செட்ல இருக்கார். பிரஷ்ஷரும் ஆயிடுச்சு. பிரச்னை ஏதும் பண்ணிடாதீங்க....' என்றார்.
மேட்டர் சீரியஸ் என்பதால், மற்ற நண்பர்களை அழைத்து உண்மையைப் போட்டு உடைத்தோம். அவர்களும் திடுக்கிட்டனர். எஸ்.பி.,யை காட்டிற்குள் சுற்றிவளைத்து, 'கன்னா பின்னாவென' வறுத்தெடுத்தனர். சாகப்போகிறோமென்ற பீதி ஏற்பட்டபின், மரியாதையாவது மண்ணாங்
கட்டியாவது... என்று தானே, யாருக்கும் தோன்றும்.
ஆனாலும், எஸ்.பி., கோபப்படாமல், சமாதானம் செய்தார். அதற்குள், விஷயம் மெட்ராசுக்கு ரீச் ஆகிவிட்டது. 'ரெய்டுக்குச் சென்ற, 100 போலீசாருடன், எஸ்.பி., மற்றும் பத்திரிகையாளர்களைக் காணவில்லை' என, 'டிவி'யில் நியூஸ் ஓடியது.
டி.ஜி.பி., ஆபீசிலிருந்து கோவை, ஐ.ஜி., - டி.ஐ.ஜி., ஆகியோரைத் துளைத்தெடுத்தனர். எங்களை மீட்கவும், ஒரு போலீஸ் படை கோவையில் இருந்து கிளம்பியதாக தகவல்கள் பரவின. விபரீதம் நடந்துவிட்டதை அறிந்த எஸ்.பி., பதட்டமானார்.
வால்பாறையில் இருந்து எங்களைத் தேடி கிளம்பிய போலீஸ் டீம், அடர்ந்த காட்டிற்குள் எங்களைக் கண்டுபிடித்தது. அப்போது தான், எங்களுக்கு உயிரே வந்தது. ஆனாலும், வெளியே செல்ல இன்னும், 5 கி.மீ., நடக்க வேண்டுமென்றனர் அவர்கள்.அடிக்கடி ரெய்டு போய் பழக்கப்பட்ட
போலீசாரே, அதற்கும் நடக்க திராணியில்லாமல் காட்டிற்குள் ஆங்காங்கு படுத்துவிட்டனர். முன்பின் அனுபவமற்ற எங்களைப் பற்றிச் சொல்லவா வேண்டும்...
இதற்கு மேல் என்னால் நடக்க முடியாதெனக்கூறி, காட்டுக்குள்ளேயே சுருண்டு விட்டேன்.
அதுவரை நடந்ததே பெரிது. ஆறுதல் கூறிய ஸ்பெஷல் பிராஞ்ச் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் என்னை, அவரது முதுகில் உப்பு மூட்டையாக காட்டிற்குள் சுமக்க, ஒரு வழியாக நடந்தும், அவர் முதுகில் பயணித்தும் சாலைக்கு வந்தோம். எஸ்.பி.,யை போனில் பேசச்சொல்லி, 'கிழிகிழி' என கிழித்தது மேலிடம்.
அப்போது இரவு, 10:30 மணி. நெடுந்துாரம் நடந்த களைப்பில் வயலில் ஆங்காங்கு கிடக்கும் ஆட்டு மந்தைக் கூட்டம் போல, அவ்வளவு பேரும் வால்பாறைச் சாலையில் விழுந்து கிடந்தோம்; சப்பிப்போட்ட மாங்கொட்டை போல மண்டையின் முடிகளும் ஒன்றுடன் ஒன்று ஒட்டிப் போயிருந்தன, உடலில் நீர்ச்சத்துக் குறைந்த காரணத்தால்...'இவர்களாக வீட்டுக்குப் போக முடியாது' என, முடிவு செய்த எஸ்.பி., - ஸ்பெஷல் பிராஞ்ச் இன்ஸ்பெக்டர் சீனிவாசனைக்கூப்பிட்டு, 'இவர்களை எல்லாம் அவரவர் வீட்டில் கொண்டுபோய் இறக்கிவிட்டுடுங்க... பாவம்' எனக்கூறி, எங்களை பார்சல் செய்ய ஆர்டர் போட்டார்.
ஒவ்வொருவரின் வீட்டு அட்ரசையும் கேட்டு வாங்கிய போலீசார், அவரவர் வீட்டில் கொண்டு
இறக்கிவிட்டனர். வேனில் இருந்து இறங்கி நடந்து போக முடியாமல் தவழ்ந்து வீட்டிற்குப் போனவர்களும் உண்டு; அதில் நானும் ஒருவன்.மறுநாள் விடிந்தது. எங்களுக்குத் தெரியவில்லை. மதியத்துக்குப் பிறகே சுயநினைவுக்குவந்தது போல எழுந்தோம். ஆபீஸ் சென்றேன்.
மறுநாள், 'வால்பாறை ரெய்டு கூத்துகள்' அப்படியே தினமலர் நாளிதழில் விலாவாரியாக செய்தி வெளியானது, கடுமையான விமர்சனத்துடன்...
மேற்கு மண்டல, ஐ.ஜி., நரேந்திரபால் சிங் ஐ.பி.எஸ்.,சும், கோவை சரக, டி.ஐ.ஜி., அசுதோஷ் சுக்லா ஐ.பி.எஸ்.,சும், அழைத்து நடந்ததைக் கேட்டனர்; ஒளிவு மறைவின்றி எடுத்துரைத்தோம்.
போதிய முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு ஏற்பாடுகளின்றி ஊடகக் குழுவினரை சிறுபிள்ளைத்தனமாக காட்டிற்குள் ரெய்டுக்கு அழைத்துப்போனதற்காக, 21 கேள்விகளை எழுப்பி, எஸ்.பி.,க்கு மெமோ கொடுத்தனர். அவருக்கு அவமானமாகப் போயிற்று!
இதனால், என்னை எதிரியாக பாவித்துக்கொண்ட அவர், பின்னாளில், திருட்டு வழக்கில் சிறையில் தள்ளவும் துணிந்தார்.'DCRB' (District Crime Record Bureau) என்றழைக்கப்படும், மாவட்ட குற்ற ஆவணக் காப்பக இன்ஸ்பெக்டரிடம், 'எனது அறையில் வைத்திருந்த, எஸ்.பி.,க்கு சமர்ப்பிக்கப்பட வேண்டிய மிகமுக்கியமான வழக்கு ஆவணங்களை தினமலர் நிருபர் அத்துமீறி அலுவலகத்திற்குள் நுழைந்து திருடிச் சென்றுவிட்டார்' என, புகார் எழுதி வாங்கினார்.
அதன் அடிப்படையில் ரேஸ்கோர்ஸ் போலீசுக்கு புகாரை அனுப்பி, 'திருட்டு கேஸ்' போடும் முயற்சியில் இறங்கினார். இதையறிந்து, என்னை நேரில் அழைத்த, கோவை, டி.ஐ.ஜி., அசுதோஷ் சுக்லா, 'உங்க மீது, 379 செக்ஷனில், எப்.ஐ.ஆர்., போட, 'உங்கள்' எஸ்.பி., அனுமதி கேட்கிறார்; தரட்டுமா?' என்றார், சிரித்தவாரே... அப்போது, அசுதோஷ் சுக்லாவே கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பொறுப்பையும் கூடுதலாக வகித்து வந்தார்.
'போலீஸ் அதிகாரிகளை அழைத்து, எஸ்.பி., நடத்தவிருந்த மாதாந்திர, 'கிரைம் ரிவ்யூ மீட்டிங்'கிற்காக தயாரிக்கப்பட்ட வழக்கு ஆவணங்களின் முழு விபரத்தையும், 'தினமலர்' நாளிதழில் வெளியிட்டதே, 'எஸ்.பி.,யின் ஆத்திரத்திற்கு காரணம்' என, விளக்கினேன்.
அவர், மேற்கு மண்டல ஐ.ஜி., நரேந்திரபால் சிங்கிடம் விஷயத்தைச் சொல்ல, அதிர்ச்சி அடைந்து, எஸ்.பி.,யை கடுமையாக எச்சரித்தார்;
'திருட்டு கேஸ்' முயற்சி, 'புஸ்' ஆனது.
அடுத்த சில நாட்களில் ஒட்டுமொத்த தமிழக போலீசுமே அதிரும் வகையில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. ஆம்... அந்த எஸ்.பி., 'கொடுங்குற்ற வழக்கில்' முக்கிய குற்றவாளியாக சேர்க்கப் பட்டு, பணி நீக்கம் செய்யப்பட்டார்.'எந்த ஒரு நடவடிக்கையை மேற்கொள்ளும் முன்பும், தமக்கு கிடைத்த ரகசிய தகவல் உண்மை தானா என்பதை, மற்றொரு உளவாளி மூலமாக உறுதி செய்து கொள்ள வேண்டும்' என்கிறது வள்ளுவனின் வைர வரிகள்.
ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல்.

-இதுவே, அதிகாரத்தில் இருப்போருக்கு அழகு! இதை செய்யத் தவறியதால்தான், வால்பாறை அடர்வனத்தில், 'கஞ்சா ரெய்டு' தோல்வியில் முடிந்து, எஸ்.பி., அவமானப்பட நேர்ந்தது!
அடுத்து, வரும் ஞாயிறு

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X