அமிர்தசரஸ் : ''தமிழகத்தில் என்னால் நீண்ட நாட்களுக்கு வாழ முடியாது; ஆனால், பாகிஸ்தானில் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் வாழ்ந்துவிடுவேன்,'' என, பஞ்சாப் மாநில அமைச்சரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான, நவ்ஜோத் சிங் சித்து கூறியது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில், முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, சுற்றுலா மற்றும் கலாசாரத்துறை அமைச்சராக இருப்பவர், நவ்ஜோத் சிங் சித்து. முன்னாள் கிரிக்கெட் வீரரான இவர், ஏற்கனவே, பா.ஜ.,வில் இருந்தார். கடந்த, 2017ல், பஞ்சாப் சட்டசபை தேர்தலுக்கு முன், காங்.,கில் சேர்ந்தார்.
சமீபத்தில், பாகிஸ்தான் பிரதமராக, இம்ரான் கான் பதவியேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற சித்து, விழாவில், அந்த நாட்டு ராணுவ தலைமை தளபதியை கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவித்தது, சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஹிமாச்சல பிரதேச மாநிலம், கசாலி நகரில், நேற்று முன்தினம் நடந்த இலக்கிய விழாவில், சித்து பேசியதாவது: நான் தமிழகத்துக்குச் சென்றால், அங்குள்ள மக்கள் பேசும் மொழியை புரிந்து கொள்ள முடியாது. அந்த மாநில மக்களின் உணவு பழக்கமும் எனக்குப் பிடிக்காது. அங்குள்ள உணவை என்னால் நீண்ட நாட்களுக்குச் சாப்பிடமுடியாது.
தமிழக மக்களின் கலாசாரம், முற்றிலும் வேறுபட்டது. உணவு விஷயத்தை பொறுத்தவரை, இட்லி மட்டும் சாப்பிடலாம். ஆனால், எத்தனை நாட்களுக்கு அதையே சாப்பிட முடியும். தமிழக மக்கள் கூறும், 'வணக்கம்' என்ற வார்த்தையைத் தவிர, எனக்கு வேறு வார்த்தைகள் புரியாது. அங்கு, என்னால் நீண்ட நாட்கள் வாழ முடியாது. பாகிஸ்தானுக்கு சென்றால், அங்குள்ள மக்கள், பஞ்சாப் மொழி பேசுகின்றனர்; ஆங்கிலம் பேசுகின்றனர்.
அவர்களுடன், என்னால் இயல்பாகப் பேசி வாழ முடியும். பஞ்சாபில் இருக்கும் கலாசாரமே, பாகிஸ்தானில் உள்ளது. அங்குள்ள மக்களுடன் சேர்ந்து வாழ்வதில், எந்தவிதமான கஷ்டமும் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.
சித்துவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, அகாலி தளம் கட்சியின் செய்தித்தொடர்பாளர், தல்ஜித் சிங் சீமா கூறியதாவது: மாநில அமைச்சராக இருக்கும் சித்து, வார்த்தைகளை மிகவும் கவனத்துடன் பேச வேண்டும். யாரையும் புகழ்ந்து பேசுவதில் தவறில்லை. எனினும், சொந்த நாட்டையும், சொந்த நாட்டில் உள்ள மக்களையும், தரம் குறைத்து பேசுவது கண்டிக்கத்தக்கது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (103)
Reply
Reply
Reply