லாகூர்: பாகிஸ்தானில் சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு, தீர்ப்பு உறுதி செய்யப்பட்ட 24 மணிநேரத்திற்குள் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாக்.,கின் கசுர் பகுதியில் இந்த ஆண்டு ஜனவரி மாத இறுதியில் 7 வயது சிறுமி பலாத்காரம் செய்து, கொலை செய்யப்பட்ட வழக்கில், சம்பவம் நடந்த 2 வாரங்களில் குற்றவாளியான இம்ரான் அலி கைது செய்யப்பட்டான். சிறுமியை பலாத்காரம் செய்து, கொலை செய்து உடலை குப்பைத் தொட்டியில் வீசி விட்டு சென்றுள்ளான்.
இவ்வழக்கில் லாகூர் மத்திய சிறையில் அக்.,17 ம் தேதி இம்ரான் அலிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற வேண்டும் என பயங்கரவாத தடுப்பு கோர்ட் கடந்த வாரம் தீர்ப்பு வழங்கியது. இம்ரான் அலி சுமார் 9 சிறுமிகளை பலாத்காரம் செய்து, கொலை செய்ததாக தொடரப்பட்ட 5 வழக்குகளில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த தண்டனையை சிறையில் இல்லாமல், பொது இடத்தில் நிறைவேற்ற வேண்டும் என சிறுமியின் தந்தை கோர்ட்டில் மனு அளித்திருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த கோர்ட், மனுவை தள்ளுபடி செய்ததுடன் தூக்கு தண்டனையை சிறை வளாகத்தில் நிறைவேற்றும் தீர்ப்பை உறுதி செய்தது.
தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதை நேரடி ஒளிபரப்பு செய்யவும் கோர்ட் மறுப்பு தெரிவித்து விட்டது. இதனையடுத்து இன்று அதிகாலை, நீதிபதி, கொல்லப்பட்ட சிறுமியின் தந்தை, உறவினர் முன்னிலையில் இம்ரான் அலிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE