விளையாட்டு போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பிடிப்பவர்களுக்கு, முறையே, தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களை வழங்குவர். அது, வீரர்களுக்கு வழங்கப்படும் கவுரவம். வெள்ளி, வெண்கல பதக்கங்களை பெற்றவர்கள், அடுத்த முறை, தங்கம் பெற முயற்சிப்பர். இது
கவுரமான செயல்.ஆனால், லஞ்சம், ஊழலில், நாட்டிலேயே மூன்றாவது இடத்தை பிடித்து, அவப்பெயரை சம்பாதித்துள்ளது,
தமிழகம். பிரபலமான ஒரு, 'சர்வே' நிறுவனம், நாடு முழுதும் நடத்திய ஆய்வின் முடிவை, சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதில், லஞ்சம், ஊழலில் முதல் இடத்தை பிடித்த மாநிலம் என்ற பெருமையை, பா.ஜ.,வைச் சேர்ந்த, முதல்வர், யோகி ஆதித்யநாத் தலைமையிலான, உத்தர பிரதேசம் பெற்றுஉள்ளது.இரண்டாவது இடத்தை, காங்கிரசைச் சேர்ந்த, முதல்வர், அம்ரிந்தர் சிங் தலைமையிலான, பஞ்சாப் மாநிலம் பெற்றுள்ளது. மூன்றாவது இடத்தை, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, முதல்வர், பழனிசாமி தலைமையிலான, தமிழகம் பெற்றுள்ளது.உலகிற்கே பல விதங்களில் முன்னுதாரணமாக இருந்த தமிழகம், இப்போது ஊழலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது, வேதனை அளிக்கிறது.இன்னும் கண்டு கொள்ளாமல் விட்டால், முதலிடத்தை பிடித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.நாடு முழுதும், 215 மாவட்டங்களில் எடுக்கப்பட்ட, ஊழல், லஞ்சம் குறித்த ஆய்வில், தமிழகத்தை சேர்ந்த ஏராளமானோரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
அவர்களில், 52 சதவீதம் பேர், 'காரியங்களை சாதிக்க, லஞ்சம் கொடுக்க வேண்டியது தமிழகத்தில் அவசியம்' என, தெரிவித்து உள்ளனர்.லஞ்சம், ஊழல் போன்ற முறைகேடுகள், புற்றுநோய் போன்றவை. ஒழிக்கா விட்டால், என்னென்ன அபாயகரமான விளைவுகளை, நாடு சந்திக்க வேண்டி இருக்கும் என்பதை, சொல்லித் தெரிய வேண்டியதில்லை.அரசு நிர்வாகம் மட்டுமின்றி, பல துறைகளிலும் லஞ்சம் பரவியுள்ளது. மாநில அரசின் துறைகள் என்றில்லை; மத்திய அரசு மற்றும் தனியார் துறைகளிலும், லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. பணமாகவும், பொருட்களாகவும், அன்பளிப்புகளாகவும், வேறு வேறு வடிவங்களில் லஞ்சம் புகுந்துள்ளது.
சமீபத்தில் படித்த கதை ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது...
இரு நண்பர்கள், அரசியலில் ஈடுபட்டிருந்தனர். அவர்களில் ஒருவர், பிழைக்கத் தெரியாத நபர். மற்றொருவரோ, கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி, ஏராளமாக பணம் சம்பாதித்து, கோடீஸ்வரராகி விட்டார்.ஒரு நாள், பிழைக்கத் தெரியாத நபரான அரசியல்வாதி, தன் செல்வந்த நண்பரை பார்க்க, அவர் ஊருக்கு சென்றார். அப்போது தான், நண்பர் எவ்வளவு சொத்துகளை சேர்த்துள்ளார் என்பது அவருக்கு தெரிந்தது.'இவ்வளவு பணம் உனக்கு எப்படி கிடைத்தது?' என, நண்பரிடம் கேட்டார். 'நாளை காலை சொல்கிறேன்' என்றார். மறு நாள் காலையில், அந்த ஊரின் ஆற்றுக்கு, நண்பரை அழைத்து சென்றார், பணக்கார நண்பர். 'அதோ பார், பாலம் தெரிகிறதா...' என்றார். 'ஆமாம், தெரிகிறது... அதற்கென்ன?' என்றார், நண்பர்.'அந்த பாலம் கட்ட, 30 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியது. கான்ட்ராக்ட் எடுத்த நான், அதில் பாதியை சுருட்டி விட்டேன். இதுபோல, ஏராளமான கான்ட்ராக்ட் எடுத்துள்ளேன்' என்றார், பெருமிதமாக. அரசு ஒப்பந்தங்களை எடுத்தால், கொள்ளை லாபம் பார்க்கலாம் என கூறி, அந்த, விவரம் இல்லாத நண்பருக்கு, ஏராளமான நெளிவு, சுளிவுகளை, சொல்லிக் கொடுத்து விட்டார், பணக்காரஅரசியல் நண்பர்.சில ஆண்டுகள் கழிந்தன. எளிமையாக இருப்பார் என்ற எண்ணத்தில், அந்த நண்பரை பார்க்க, பணக்கார நண்பர், அவரின் ஊருக்கு சென்றார்.
ஏழையாக இருந்த நண்பர், ஏராளமான வசதி, வாய்ப்புகளுடன், செல்வச் செழிப்பாக இருந்தார். அதை பார்த்த அந்த நண்பர், ஆச்சர்யத்துடன், 'எப்படி இந்த அளவுக்கு முன்னேறினாய்?' என்றார்.'என்னுடன் வா' என, நண்பரை கூட்டிக்கொண்டு, அவர் ஊரில் உள்ள ஆற்றுக்கு சென்றார், அந்த நண்பர். 'அதோ பார்... ஒரு பாலம்!' என்றார். நண்பர் கண்களை நன்றாக இடுக்கிப் பார்த்தும், பாலம் எதுவும் தெரியவில்லை.'பாலம் ஒன்றையும் காணோமே' என்றார். 'அதற்கான பணம் முழுதும் என் பையில் வந்து விட்டது. பிறகு பாலம் எப்படி தெரியும்...' என்றார், அந்த நண்பர் பெருமையுடன்!இது கதை தான்... ஆனால், நம் நாட்டில், நடைமுறையில் இது போல ஏராளமானோர், திடீர் கோடீஸ்வரர்கள் ஆகி விடுகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர், லஞ்சம், ஊழலில் தான், கோடிகளை குவித்துள்ளனர்.நம் நாட்டில், லஞ்சமும், ஊழலும், கைகோர்த்துக் களி நடனமாடுகின்றன, நாம் பார்க்கும் இடம் தோறும் லஞ்சம். அதை கொடுக்காதவர்கள், சேவைகளுக்காகவும், பணிகளுக்காகவும் அலைக்கழிக்கப்
படுகின்றனர்.
சாதாரண வேலைகளுக்கு கூட, லஞ்சம் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது. லஞ்சம் கொடுக்க மறுப்பவர்கள், சங்கடங்களை சந்திக்க நேருகிறது.அரசு பணிகள் ஒதுக்கீட்டிலும், பல்வேறு ஊழல்களைச் செய்து, திட்டங்களில் முழுப் பயன்களும், பொது மக்களுக்குப் போய் சேராது, செய்து விடுகின்றனர். சில உயர் அதிகாரிகள், வெளியூர்களுக்கு அரசு முறை ஆய்வு பயணம் செய்து திரும்பும் போது, லட்சக்கணக்கான பணத்துடன் திரும்புவதாக கூறப்படுகிறது.அவரின் தங்கும் செலவு, சாப்பாட்டு செலவு, இதர செலவுகளை, உள்ளூர் அதிகாரிகளின் தலையில் சுமத்தி விடுவர். அண்மையில் கூட, தமிழகத்தின் ஒரு நகரில், போலீஸ் உயரதிகாரி ஒருவரின், மனைவியின், 'ஷாப்பிங் பில்' அந்த நகரின், இன்ஸ்பெக்டர் தலையில் விழுந்ததாக, நாளிதழ்களில் செய்தி வந்தது.ஓட்டல்களில் சாப்பிட செல்லும் போது, உணவு பரிமாறும், 'சர்வருக்கு' சில ரூபாய்களை, 'டிப்ஸ்' என்ற பெயரில், அன்பளிப்பாக கொடுப்போம். சில ஓட்டல்களில், அனைத்து சர்வர்களின் டிப்ஸ் பணத்தையும் ஒன்றாக சேர்த்து, இரவில் பணி முடிந்து போகும் போது, சர்வர்கள் பிரித்துக் கொள்கின்றனர் என்பதை அறிந்தேன். நல்ல திட்டம் தான்!
அது போல, அரசு அதிகாரிகள் சிலர், லஞ்ச பணத்தை ஒன்றாக சேர்த்து வைத்து, பங்கிட்டு கொள்வதாகவும், தகவல்கள் வருகின்றன. இது, பணப் பங்கீடா அல்லது பாவப் பங்கீடா என்பது, கடவுளுக்குத் தான் வெளிச்சம்.சில அதிகாரிகள் நாணயமாக நடக்க விரும்பினாலும், அவர் வீட்டு, 'அம்மா'க்கள் விடுவதில்லை. அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் ஆடம்பர வாழ்க்கை, தனக்கும் வேண்டும் என்ற பேராசையில், தங்கள் வீட்டுக்காரர்களை, ஊழலில் ஈடுபடத் துாபமிடுகின்றனர்.ஊழல் ஒரு சாபம்! அதை ஒழிக்க, நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு தேவை.'ஊழலுக்கு ஒரு போதும் துணை போக மாட்டேன்' என்ற உறுதிமொழியை எல்லாரும் எடுக்க வேண்டும். அரசு வேலை கிடைத்து, வீட்டில் உள்ள பெரியவர்களிடம் ஆசி பெறும் இளைஞர்களுக்கு, 'லஞ்ச லாவண்யங்கள் வாங்காமல், நேர்மையாகப் பணியாற்றி, நற்பெயர் எடு' என, பெரியவர்கள் அறிவுறுத்த வேண்டும்.ஊழல் பற்றி ஒன்றும் தெரியாத பள்ளிக் குழந்தைகளுக்கும், அவர்கள் புரிந்து கொள்ளும் மாதிரி, நீதிக் கதைகளைப் போதிக்க வேண்டும். சமூக அமைப்புகளும், நீதித்துறையும், லஞ்ச ஒழிப்பு போலீசாரும் தான், லஞ்சத்தை ஒழிக்க பாடுபட வேண்டும் என்றில்லை... மகளிர் அமைப்புகளும் ஊழல் ஒழிப்புப் பிரசாரத்தில்ஈடுபடலாம்.ஊழலில் ஈடுபட்டு, சிறை செல்வோர் படங்களை, எல்லா அலுவலகங்களிலும் பார்வைக்கு வைக்க வேண்டும்.
'அடங்க மாட்டேங்கறாங்கப்பா' என்ற தலைப்பின் கீழ் வரும், லஞ்சம் வாங்கி, பிடிபடும் அதிகாரிகள் பற்றிய, 'தினமலர்' செய்திகள், லஞ்சம் வாங்குவோருக்கு, நல்ல சவுக்கடி! மொத்தத்தில் ஊழல், லஞ்சம் ஒழிய, எல்லாரும் முனைப்பு காட்ட வேண்டும். முயற்சிகள் தொடர வேண்டும். முயற்சிகளை நிறுத்தினால் தான் தோல்வி. லஞ்சமற்ற மாநிலம், நம்முடையது என்ற இனிய செய்தியை, கேட்க வேண்டும். இதற்காக நாம் காத்திருப்போம்.
கே.சிவகாமிநாதன்
சமூக ஆர்வலர்
இ-மெயில்: kasin2636@gmail.com
மொபைல் போன் எண்: 9344644522