லஞ்ச குற்றச்சாட்டில் சிபிஐ, ராவின் முக்கிய அதிகாரிகள்| Dinamalar

லஞ்ச குற்றச்சாட்டில் சிபிஐ, 'ரா'வின் முக்கிய அதிகாரிகள்

Added : அக் 22, 2018 | கருத்துகள் (30)
Moin Qureshi , Rakesh Asthana,  Alok Verma ,  லஞ்ச குற்றச்சாட்டு, சிபிஐ, ரா, ராகேஷ் அஸ்தானா, மொயின் குரேஷி, ஏ.பி. சிங்,  ரஞ்சித் சின்ஹா,  சாவந்த் குமார் கோயல், அலோக் வர்மா, Bribery allegation, CBI, Raw, AP Singh, Ranjit Sinha, Sawant Kumar Goyal, FIR,

புதுடில்லி : லஞ்சம் வாங்கியதாக, சி.பி.ஐ., உயரதிகாரியான, ராகேஷ் அஸ்தானா மீது, அந்த அமைப்பு, வழக்கு பதிவு செய்துள்ளது. உளவு அமைப்பான, 'ரா' வின், முக்கிய அதிகாரி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இறைச்சி ஏற்றுமதி செய்யும் பிரபல தொழிலதிபரான, டில்லியைச் சேர்ந்த, மொயின் குரேஷி, பல்வேறு மோசடிகள் செய்ததாக புகார்கள் எழுந்தன. அவர் மீதான மோசடி வழக்குகளை, சி.பி.ஐ., விசாரித்து வந்தது. பல்வேறு அரசு அதிகாரிகளுக்கு, மோயின் குரேஷி, லஞ்சம் கொடுத்ததும் தெரியவந்தது.


விலகல் :

சி.பி.ஐ., முன்னாள் இயக்குனராக இருந்த, ஏ.பி. சிங், லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது. இதையடுத்து, யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய பணியாளர் தேர்வாணையத் தலைவர் பதவியில் இருந்து, அவர் விலகினார். அதேபோல், சி.பி.ஐ.,யின், மற்றொரு முன்னாள் இயக்குனராக இருந்த, ரஞ்சித் சின்ஹாவையும் மோயின் குரேஷி பலமுறை சந்தித்ததாக புகார்கள் எழுந்தன.

மோயின் குரேஷி தொடர்பான வழக்குகளை, சி.பி.ஐ.,யின் இரண்டாவது உயர் அதிகாரியான, சிறப்பு இயக்குனர், ராகேஷ் அஸ்தானா விசாரித்து வருகிறார். இந்நிலையில், லஞ்சம் வாங்கியதாக, ராகேஷ் அஸ்தானா மீதும், சி.பி.ஐ., தற்போது வழக்கு பதிவு செய்துள்ளது. மோயின் குரேஷியுடன் தொடர்புள்ள, மனோஜ் என்பவனை, சி.பி.ஐ., சமீபத்தில் கைது செய்தது. விசாரணையில், ராகேஷ் அஸ்தானாவுக்கு, 2 கோடி ரூபாயை, குரேஷி லஞ்சமாக கொடுத்தது தெரிய வந்தது.


விசாரணை :

இதற்கு, உளவு அமைப்பான, 'ரா' வின் இரண்டாவது உயர் அதிகாரியான, சாவந்த் குமார் கோயல் உதவியதாகவும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, ராகேஷ் அஸ்தானா மற்றும் சாவந்த் குமார் மீது, லஞ்சம் வாங்கியதாக, சி.பி.ஐ., வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த சம்பவம், சி.பி.ஐ., அதிகாரிகள் இடையேயான அதிகார மோதலை வெளிப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

சி.பி.ஐ., இயக்குனராக உள்ள, அலோக் வர்மாவுக்கும், ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் இருந்து வந்துள்ளது.தன் நடவடிக்கைகளில், அலோக் வர்மா தலையிடுவதாக, அஸ்தானா பகிரங்கமாக புகார் கூறியுள்ளார். இந்த நிலையில், அஸ்தானா மீது, லஞ்சம் வாங்கியதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சி.பி.ஐ., வட்டாரங்கள் கூறுகையில்,'இந்த விவகாரங்களில், முதல் கட்ட விசாரணை துவங்கியுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் மட்டுமே, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க முடியும். 'விசாரணை முடிவடைவதற்கு முன், அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க முடியாது' என்றன.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X