பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
முற்றுகிறது!
சி.பி.ஐ., இயக்குனர்கள் இடையே நீயா - நானா போட்டி
ராகேஷ் அஸ்தானா மீது நடவடிக்கை எடுக்க தடை

புதுடில்லி:சி.பி.ஐ., இயக்குனர், அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே, மோதல் முற்றியுள்ளது. அஸ்தானா மீதான, லஞ்ச புகார் வழக்கை விசாரித்த டில்லி உயர் நீதிமன்றம், '29ம் தேதி வரை, அவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது' என, உத்தரவு பிறப்பித்துள்ளது.முக்கிய புலனாய்வு வழக்குகளை கையாண்டு வரும், சி.பி.ஐ., இயக்குனராக, அலோக் வர்மா பதவி வகித்து வருகிறார்.

சி.பி.ஐ., இயக்குனர்கள்,நீயா - நானா,போட்டி,முற்றுகிறது!,ராகேஷ்,அஸ்தானா,நடவடிக்கை,தடை


இவருக்கு அடுத்து, இரண்டாம் நிலையில், சி.பி.ஐ., சிறப்பு இயக்குனராக, ராகேஷ் அஸ்தானா உள்ளார்.மாட்டிறைச்சி ஏற்றுமதியாளர், மொயின் குரேஷி தொடர்பான வழக்கை, அஸ்தானா உத்தரவுப்படி, சி.பி.ஐ.,யில், டி.எஸ்.பி.,யாக உள்ள தேவேந்திர குமார் விசாரித்தார்.இந்த வழக்கில் இருந்து விடுபட, அஸ்தானாவுக்கு, தொழிலதிபர் சதீஷ் ஸனா, மூன்று கோடி ரூபாய் லஞ்சம் தந்ததாக புகார் எழுந்துள்ளது.அந்த புகாரை மறுத்துஉள்ள அஸ்தானா, 'லஞ்சம் தரப்பட்டது உண்மை. ஆனால், அந்த பணம், சி.பி.ஐ., இயக்குனர் அலோக் வர்மாவுக்கு தரப்பட்டுள்ளது' என, குற்றஞ்சாட்டி உள்ளார்.

உறுதி அளித்தார்


கடந்த ஜூலையில், சதீஷ் ஸனாவிடம் பதிவு செய்யப்பட்ட வாக்குமூலத்தில், 'தெலுங்கு தேசம் கட்சி, ராஜ்யசபா, எம்.பி., ரமேஷுடன் வழக்கு தொடர்பாக பேசினேன். சி.பி.ஐ., இயக்குனரிடம், அவர் பேசியபின், இனி உங்களுக்கு, 'சம்மன்'வராது' என உறுதி அளித்தார்' என, கூறப்பட்டுள்ளது.

இந்த வாக்குமூலம், சி.பி.ஐ., இயக்குனர் அலோக் வர்மா மீது, சி.வி.சி., எனப்படும், மத்திய ஊழல் கண்காணிப்பு துறையிடம், அஸ்தானா கூறியுள்ள புகார்களை உறுதிப்படுத்தும் வகையில் மாற்றி எழுதப்பட்டுள்ளதாக, சி.பி.ஐ., குற்றஞ்சாட்டி உள்ளது.இந்த மோசடியில், அஸ்தானா தலைமையிலான சிறப்பு விசாரணைக்குழுவை சேர்ந்த வேறு அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளனரா என்பதை விசாரித்து வருவதாக, சி.பி.ஐ., கூறியுள்ளது.

லஞ்சம் பெற்ற வழக்கில், அஸ்தானா, டி.எஸ்.பி., தேவேந்திர குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, நேற்று முன்தினம், தேவேந்திர குமார் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், தன் மீது, எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக்கூடாது எனக் கோரி, டில்லி உயர் நீதிமன்றத்தில், அஸ்தானா மனு தாக்கல் செய்தார்.

அதேபோல், தேவேந்திர குமாரும், தனியாக மனு தாக்கல் செய்தார்.இந்த மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க சம்மதித்த, தலைமை நீதிபதி,

ராஜேந்திர மேனன், வழக்கை, நீதிபதி, வாஸிரி தலைமையிலான அமர்வின் விசாரணைக்கு ஒதுக்கினார்.

இந்த வழக்கு, நீதிபதி, வாசிரி முன் விசாரணைக்கு வந்தபோது, சி.பி.ஐ., தரப்பு வழக்கறிஞர், 'அஸ்தானா மீதான குற்றச்சாட்டுகள் மிக தீவிரமானவை. அவற்றை, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. அஸ்தானாவுக்கு எதிரான, எப்.ஐ.ஆரில், மேலும் பல புதிய குற்றச்சாட்டுகள் இடம்பெறலாம்' என்றார்.

அஸ்தானாவின் வழக்கறிஞர், அமரேந்திர ஷரண் வாதிடுகையில், ''குற்றவாளியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், சி.பி.ஐ., சிறப்பு இயக்குனருக்கு எதிராக, எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்படுவது சட்ட விரோதம்,''என்றார்.

தடை எதுவும் இல்லை


இதைத் தொடர்ந்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:அஸ்தானா மீது, 29ம் தேதி வரை, எந்தவித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது; அதே சமயம், விசாரணை நடத்த தடை எதுவும் இல்லை.இந்த வழக்கு தொடர்பாக, சி.பி.ஐ., அதன் இயக்குனர் அலோக் வர்மா, இணை இயக்குனர், ஏ.கே.சர்மா ஆகியோர், தங்கள் நிலையை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்.

வழக்கு தொடர்பான ஆவணங்கள், மொபைல் போன் பதிவுகள் ஆகியவற்றை, குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அஸ்தானாவும், தேவேந்திர குமாரும், பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். வழக்கு, 29க்கு தள்ளி வைக்கப்படுகிறது.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

சி.பி.ஐ.,யில் இரண்டாம் நிலையில் உள்ள அஸ்தானா மீதான விசாரணையை, இயக்குனர் அலோக் வர்மா துரிதப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. அதேசமயம், அலோக் வர்மா மீது, அடுக்கடுக்கான புகார்களை, அஸ்தானா கூறி வருகிறார்.உயர் பதவியில் உள்ள இருவருக்கு இடையிலான மோதல் முற்றி வருவதாக, சி.பி.ஐ., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பொறுப்புகளை இழந்த அஸ்தானா


சி.பி.ஐ., சிறப்பு இயக்குனர், ராகேஷ் அஸ்தானாவை, அனைத்து பொறுப்புகளில் இருந்தும், சி.பி.ஐ., இயக்குனர், அலோக் வர்மா விடுவித்துள்ளார். 'சி.பி.ஐ., சிறப்பு இயக்குனர் பொறுப்பில் அஸ்தானா இருந்தாலும், எந்த பணியிலும் அவர் ஈடுபட முடியாது' என, சி.பி.ஐ., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பல முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை அஸ்தானா தலைமையிலான குழு விசாரித்து வந்தது. இனி, அவரால் எந்த வழக்கையும் விசாரிக்க முடியாது. சி.பி.ஐ.,யில், எஸ்.ஐ.டி., எனப்படும் சிறப்பு விசாரணைக்குழுவின் தலைவர் பொறுப்பில் இருந்தும், அஸ்தானா விலக்கப்பட்டுள்ளார்.வெளிநாட்டுக்கு தப்பியோடிஉள்ள தொழிலதிபர் விஜய் மல்லையா, மாட்டிறைச்சி ஏற்றுமதியாளர், மொயின் குரேஷி, காங்கிரசை சேர்ந்த முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் ஆகியார் தொடர்பானவழக்குகளை, எஸ்.ஐ.டி., விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

டி.எஸ்.பி.,க்கு காவல்


சி.பி.ஐ., இயக்குனர், ராகேஷ் அஸ்தானா தலைமையிலான குழுவில், டி.எஸ்.பி.,யாக

Advertisement

இடம்பெற்றிருந்த, தேவேந்திர குமார், லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த டில்லி உயர் நீதிமன்றம், தேவேந்திர குமாரை, சி.பி.ஐ., காவலில், ஒரு வாரம் வைத்து விசாரிக்க அனுமதி அளித்துள்ளது.தேவேந்திர குமார் கட்டுப்பாட்டில் இருந்த விசாரணைக் குழுவே, அவரிடம் தற்போது விசாரணை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

1க்கும் 2க்கும் மோதல் ஏன்?


சி.பி.ஐ., இயக்குனர், அலோக் வர்மா - சி.பி.ஐ., சிறப்பு இயக்குனர், ராகேஷ் அஸ்தானா இடையிலான மோதல் குறித்து, சி.பி.ஐ., வட்டாரங்கள் கூறியதாவது:சி.பி.ஐ., சிறப்பு இயக்குனராக, 2017, அக்டோபரில், குஜராத்தை சேர்ந்த, ராகேஷ் அஸ்தானா, மத்திய அரசால் நியமிக்கப்பட்டார். அதற்கு முன், 2016 முதல், சி.பி.ஐ., உயரதிகாரியாக அவர் பணியாற்றி உள்ளார்.

சி.பி.ஐ., சிறப்பு இயக்குனராக, அஸ்தானா நியமிக்கப்படும் முன், 2017, ஆகஸ்டில், ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவன மோசடிகளை, சி.பி.ஐ., விசாரித்து வந்தது. அப்போது, ஸ்டெர்லிங் நிறுவனம், 3.8 கோடி ரூபாய் லஞ்சம் தந்ததாக புகார் எழுந்தது. இதில், அஸ்தானா பெயர் அடிபட்டது.கடந்த, 2017, அக்டோபரில், சி.பி.ஐ., சிறப்பு இயக்குனராக, அஸ்தானாவை நியமிப்பது தொடர்பான பேச்சு எழுந்தபோது, ஸ்டெர்லிங் பயோடெக் லஞ்ச விவகாரத்தை காரணம் கூறி, அலோக் வர்மா எதிர்ப்பு தெரிவித்தார்.

ஆனால், சி.பி.ஐ.,யில், இரண்டாவது உயர் பதவியான, சிறப்பு இயக்குனராக நியமிக்கப்பட்ட பின், சி.பி.ஐ., இயக்குனர் போலவே செயல்பட துவங்கினார், அஸ்தானா.சி.பி.ஐ., இயக்குனர் கூட்ட வேண்டிய முக்கிய கூட்டங்களை, அஸ்தானா கூட்டி விவாதித்தார். இதனால், அஸ்தானா - அலோக் வர்மா இடையே பனிப்போர் வெடித்தது.

கடந்த ஜூலை, 12ல் நடக்கவிருந்த, சி.பி.ஐ., தேர்வு குழு கூட்டத்தில், சி.பி.ஐ., சார்பில் பங்கேற்பவரின் பெயரை தெரிவிக்கும்படி, சி.வி.சி., எனப்படும் மத்திய ஊழல் கண்காணிப்பு துறை கேட்டிருந்தது. அப்போது, சி.பி.ஐ., இயக்குனர், அலோக் வர்மா, வெளிநாட்டுக்கு சென்றிருந்தார்.

இதையடுத்து, சி.வி.சி.,க்கு, சி.பி.ஐ., எழுதிய கடிதத்தில், 'சி.பி.ஐ., இயக்குனர் அலோக் குமார், வெளிநாட்டில் இருப்பதால், கூட்டத்தை, 19க்கு தள்ளி வைக்க வேண்டும். இரண்டாம் இடத்தில் உள்ள, சி.பி.ஐ., சிறப்பு இயக்குனர், அஸ்தானா மீது, ஊழல் வழக்கில் விசாரணை நடத்தப்பட உள்ளது' என, குறிப்பிடப்பட்டிருந்தது.இதனால், சி.பி.ஐ., இயக்குனர் - சி.பி.ஐ., சிறப்பு இயக்குனர் இடையிலான மோதல் வெளிச்சத்துக்கு வந்தது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.


Advertisement

வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
24-அக்-201819:27:49 IST Report Abuse

Kasimani Baskaranசிதம்பரத்தை அடுத்த தேர்தலுக்குள் சிறை வைக்க ஏற்பாடு ஒரு பக்கம் வேகமாக நடந்துகொண்டு இருந்தது... அதற்க்கு காங்கிரஸ் காளான்கள் முட்டுக்கட்டை போட்டன... அதுதான் மோடி நியமித்த இணை இயக்குனர் மீது பொய்யான புகார்களை கூறி வழக்குப்போட முயன்றார்கள்... மோடி சுதாரித்துக்கொண்டார்... இனி CBI சீரமைக்க்கப்படுவது உறுதி...

Rate this:
புதிய தமிழ்மைந்தன் - Dindigul India,இந்தியா
24-அக்-201819:14:44 IST Report Abuse

புதிய தமிழ்மைந்தன்இருவரில் ஒருவர் குற்றவாளிதான் சந்தேகமில்லை .அந்த குற்றவாளிதான் காங்கிரஸ் ஆள்தான்

Rate this:
24-அக்-201814:35:38 IST Report Abuse

ஆப்புரெண்டு பேரும் திருட்டு முழி முழிக்கிற மாதிரி தெரியுது...எவரையும் நம்ப முடியலே...

Rate this:
மேலும் 14 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X