நம் நாட்டில், அன்றாடம் நடக்கும், பிரபலங்களின் பிறந்த நாள் கொண்டாட்டங்களை பார்க்கும் போது, மண்டையில் சம்மட்டியால் அடித்தது போல இருக்கிறது...
ஆயிரம் கேள்விகள், குத்தல்கள், குடைச்சல்கள்!எதற்காக இந்த அலப்பறைகள்... இந்த பிரபலங்கள் மட்டும் தான், இந்த நாட்டில் பிறந்தனரா?மாதம் தோறும், குறைந்தது பத்து, அரசியல் அல்லது சினிமா பிரபலங்களுக்காவது, பிறந்த நாட்கள் வருகின்றன. அவற்றிற்காக தொண்டர்களும், ரசிகர்களும் படும் பாடு, பதற வைக்கிறது.
கட் - அவுட், பிளக்ஸ் பேனர்கள், பிரமாண்ட போஸ்டர்கள், அதற்கு மாலை, பாலாபிஷேகம், ஆரத்தி என, கிளம்பும், இந்த அப்பாவிகளுக்கு, இதனால் என்ன ஆதாயம்... இவர்களை நல்வழிப்படுத்துவது தான் யார்?
ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, இந்த நிலை, நம் நாட்டில் காணப்படுகிறது... தலைவர்களும், சினிமா பிரபலங்களும் தான், மாறுகின்றனர். அப்பாவி, ரசிகர்களும், கட்சியினரும், அதே மன நிலையில் தான் உள்ளனர்... இவர்கள் எண்ணத்தில் மாற்றம் வருவது எப்போது...
நியாயமான அரசியல் சூழல் மாறுவது எப்போது?அரசியல்வாதிகளுக்காக வெயில், மழை பாராது, ஓட்டு கேட்டு, 'போஸ்டர்' ஒட்டி, போராட்டம் நடத்தி, பட்டாசு வெடித்து, அங்க பிரதட்சனம் செய்து, போலீசிடம் அடி வாங்கி, மிதிபட்டு, நிதி திரட்டி, தன் சொந்த காசையும் போட்டு, பிரியாணி, '-டாஸ்மாக்' என, சீரழியும் தொண்டர்களுக்கு, ஏதாவது பிரயோஜனம் உண்டா?
இவர்களைப் பார்க்கும் போது--, இவர்களின் செயல்களை கவனிக்கும் போது, பரிதாபம் தான் ஏற்படுகிறது. அவர்களது நேரம், உழைப்பு, சக்தி, பணம், உடல் நலம் எல்லாம் கெடுவதுடன், போட்டி நடிகர் அல்லது தலைவரின் ஆட்களுடன் புகைச்சல் வேறு!
மேலும், உள்ளூரில் ஒருவருக்கு ஒருவர் எதிரியாகி, பகையையும் உண்டாக்குகிறது. 'அவன்- - அவனது அபிமான நபருக்கு, விமரிசையாக கொண்டாடினான். நாம், அதை விட அதிகமாய் செலவும், ஆடம்பரமும் செய்து, 'கலக்க' வேண்டும்' என்ற ஆவேசத்தை, எதிராளிக்கு வளர்க்கிறது.ஒரு பாமரன், தன் பிறந்த நாளுக்காக சீரழிகிறானே என, எந்த பிரபலமும் கவலைப்படுவதில்லை; அதை பெருமையாக பார்க்கின்றனர்.
துாபம் போட்டு, அவர்களின் வெகுளித்தனத்தை, தங்களுக்கு, முதலீடு ஆக்குகின்றனர்.இதில், சில பத்திரிகைகளும், மீடியாக்களும், சிறப்பு மலர்கள், சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தி, குளிர் காய்ந்து, வருமானத்தை பெருக்குகின்றன.பாமரன், தலைவருக்காக செலவு செய்து, நடிகரின் சினிமா வெளியாகும் போது ஆதரித்து, பூஜித்து, ஒன்றுக்கு, நான்கு மடங்காக பணம் போட்டு, 'டிக்கெட்' வாங்கி, படம் பார்த்து, பிரபலங்களின் வருமானத்தை உயர்த்துகிறான்.
அவனுக்காக எந்த பிரபலமும், எதுவும் செய்வதில்லை. குறைந்த பட்சம், 'தரிசனம்' கூட தருவதில்லை. பிறந்த நாள் சமயம், யாருக்கும் தெரியாமல், 'எஸ்கேப்' ஆகி விடுகின்றனர். ஆனாலும், அந்த அப்பாவி ரசிகன், மாறுவதே இல்லை; காத்துக்கிடக்கிறான், அந்த பிரபலத்தின் வீடு முன்!இங்கே தொண்டனும், ரசிகனும், பைத்தியக்காரத்தனமாக, 'காவடி' எடுத்துக் கொண்டிருக்க---, அந்த பிரபலங்களோ, தங்களுக்கு வேண்டிய முக்கிய பிரமுகர்களை அழைத்து, நட்சத்திர ஓட்டல்களில், விருந்து-, நடனம் என, லட்சக்கணக்கில் செலவு செய்வர்.
அவர்கள் விருந்துக்கு அழைக்கும் நபர்கள், தங்கள் சொந்த பணத்தை செலவழித்து, தியேட்டர்களுக்கு சென்று, சினிமா பார்ப்பதில்லை. 'ஓசி'க்கு, 'சிடி' கிடைத்தால், அதில் பார்ப்பவர்கள் தான் அதிகம்!கடைசியில்... உழைத்து, -களைத்து, உருகும் தொண்டனுக்கு நாமம்! ஆனால், இதை பற்றியெல்லாம், அவன் யோசிப்பதே இல்லை.தலைவன் நல்லவனா... நல்லது செய்கிறானா... அவனை பாராட்டு; ஓட்டு போடு. அதற்கு மேல் எதற்கு, ஆர்ப்பரிப்பு, கொண்டாட்டம்?
நடிகனின் படம் நன்றாக இருக்கிறதா... நன்றாக நடித்திருக்கிறானா... வாழ்த்து! போய் பார்...!அவர்கள் நம் காசை வாங்கிக் கொண்டு, நம்மை மகிழ்விக்க நடிக்கின்றனர். அவர்களின் உழைப்பை, நாம் சும்மா பெறவில்லை. நமக்கு வேண்டிய பொழுது போக்குக்கு, சந்தோஷத்துக்கான விலையை கொடுத்து தான் அனுபவிக்கிறோம். அதற்கு மேல், -எதற்கு அவர்களை கொண்டாட வேண்டும்?
அவர்களின் சம்பாத்தியத்திற்காக, அவர்கள் நடிக்கின்றனர். அவர்களின் பிழைப்பை, அவர்கள் பார்க்கட்டும்... நம் பிழைப்பை நாம் பார்க்கலாமே!எந்த தலைவனோ அல்லது நடிகனோ வந்து, தொண்டனின் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்கிறானா... அது தமிழகத்தில் நடக்கிற காரியமா...அவரவர்களின் பிறந்த நாளை, அவரவர்கள், தங்கள் வசதிப்படி கொண்டாடி விட்டுப் போகட்டும். இதில், நமக்கென்ன ஆச்சு?
பிரபலங்களின் பிறந்த நாளுக்கு மெனக்கெடும் தொண்டன் -அல்லது ரசிகன், தன் தாய், தந்தை, உடன்பிறப்பு, தன்னுடனே இருந்து, தன் நலம் காக்கும் மனைவியின் பிறந்த நாளை கொண்டாடுகிறானா? குறைந்தபட்சம் அவர்களின் பிறந்த நாட்களை ஞாபகமாவது வைத்திருந்து, வாழ்த்துகிறானா... அதை முதலில் செய்யுங்கப்பா... நிம்மதியாவது கிடைக்கும்!
பிறருக்கு, 'சொம்பு' துாக்காமல், சொந்த பிழைப்பை பாருங்கப்பா!இந்த மாதிரி போலி கொண்டாட்டங்களால், இளைஞர்கள் தங்களையும், தங்கள் குடும்பம், எதிர்காலம் போன்றவற்றையும் சீரழித்துக் கொள்கின்றனர் என, எந்த தலைவனாவது, நடிகனாவது சிந்தித்தால், பிறந்த நாளை ஆர்ப்பாட்டமாக கொண்டாட, நிச்சயம் அனுமதிக்க மாட்டார்கள்.
இளைஞர்களை பற்றி அவர்களுக்கென்ன கவலை... அவர்கள் முட்டாளாக இருக்கும் வரை தானே, இவர்கள் கோலோச்ச முடியும்!இது போன்ற, பிறந்த நாள் ஆர்ப்பாட்டங்களில், பாமரன் வீணாவது ஒரு புறமிருக்க, பகுத்தறிவாளர்கள் என, பீற்றிக் கொள்ளும் சில பகடிகள், பிரபலங்களின் சிலைகளுக்கு சென்று வணங்குவர்.ஊர்வலமாக போய், மாலையிட்டு, 'போஸ்' கொடுப்பதும், அதற்காக போலீசும், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து, போக்குவரத்தை மாற்றி விட்டு, பொதுமக்களை அவதிக்குள்ளாக்குவதும்... நம்ம ஊரில் மட்டுமே நடக்கும், மகா அவஸ்தை!
இவற்றிலிருந்து நமக்கு விமோசனம் கிடைக்கப் போவது எப்போது?அதோடு விடுகின்றனரா...உயிரோடு இருப்பவர்களின் பிறந்த நாள் ஆர்ப்பாட்டங்கள் போதாதென்று, மறைந்த தலைவர்களின் பிறந்த நாளை கொண்டாடுகிறோம் என்று, சில, 'தலை'களும், அரசும் படுத்தும் பாடு, இன்னொரு தொந்தரவு!மறைந்தவர்களுக்கு கொண்டாட்டம், ஓட்டு அரசியலின் ஓர் அங்கம் தான். உண்மையான பற்று எல்லாம் கிடையாது.
ஒரு தலைவருக்கு மரியாதை செய்து, மற்றொருவருக்கு மரியாதை செய்யா விட்டால், அந்த தலைவரின் ஆதரவாளர்கள் அல்லது ஜாதியினர், தங்கள் கட்சி அல்லது ஆட்சிக்கு எதிராகி விடுவர் என்ற பயம் தான் காரணம்!உயிரோடு இருப்பவர்களுக்கே, பொதுமக்களை அவதிக்குள்ளாக்கும் வகையிலான, பிறந்த நாள் கொண்டாட்டம் தேவையில்லை எனும் போது, மறைந்த பின் எதற்காக, அவர்களின் பிறந்த நாளை கொண்டாட வேண்டும்?
மறைந்த பின், அவரது நினைவு நாளை மட்டும் அனுசரித்தால், குறைந்தபட்சம் பாதி அலப்பறைகளாவது குறையுமே...!இந்த மாதிரி நிகழ்வுகளுக்காக, அரசு மற்றும் தனியார் செலவிடும் பணத்தையும், நேரத்தையும், ஆக்கப்பூர்வமான காரியங்களுக்கு பயன்படுத்தலாமே!
சாதாரண மனிதனுக்கு, எத்தனையோ அத்தியாவசிய தேவைகள் இருக்கும் போது, இப்படி வீண் ஆர்ப்பாட்டங்கள் எதற்காக?இது போன்ற ஆர்ப்பாட்டங்கள், வளர்ந்த நாடுகளிலும், அரசியல் நாகரிகம் மிக்க, ஐரோப்பிய நாடுகளிலும் இல்லை. தனி நபர் துதி, அங்கெல்லாம் கிடையாது. இங்கு, நம் நாட்டில் தான், சினிமா, அரசியல், தொழில் துறை என, எல்லா துறைகளிலும், தனி நபர் வழிபாடு தலை விரித்தாடுகிறது.
இந்நிலை எப்போது மாறுகிறதோ, அப்போது தான், நாடு முன்னேறும். வளர்ந்த நாடுகள் மற்றும் வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகளில் காண முடியாத, இந்த அவலங்களை, நம் நாட்டில் காணும் போது, நெஞ்சம் குமுறுகிறது... எப்போது மாறும் இந்த இழிநிலை?
-என்.சி.மோகன்தாஸ்
எழுத்தாளர்
இ - மெயில்: ncmohandoss@yahoo.com
மொபைல் எண்: 82204 4508598405 90442