கற்பனைக்கு எட்டாத ஆச்சரியங்களை காட்சிகளாக நம் முன்னே காண்பிப்பவர். சின்ன சின்ன காட்சிகள் என்றாலும் அதில் இடம்பெறும் பொருட்கள் இவரின் கலை வண்ணத்தை பிரதிபலிக்கும். இதனாலேயே 17 படங்களை கடந்து வெற்றி பயணத்தில் நடை போட்டு கொண்டிருக்கிறார் 41 வயதான பழனிவேல். மதுரை ஒத்தக்கடை மலையாளத்தன்பட்டியைச் சேர்ந்த இவர், பல போராட்டங்களுக்கு பிறகு சினிமாவில் அடியெடுத்து வைத்த கதை சுவராஸ்யமானது. சண்டே ஸ்பெஷலுக்காக அவரே சொல்கிறார்...
''மதுரைக்காரங்க சினிமாவில் தொடர்ந்து சாதிச்சு வர்றாங்க. அந்த வரிசையில நானும் வந்து கொண்டிருக்கிறேன் என்பது சந்தோஷம். ஒத்தக்கடை தியேட்டரில் டிக்கெட் கிழித்தேன். போஸ்டர் ஒட்டினேன். எனக்குள் கலைத்திறன் இருப்பதை 2000ம் ஆண்டில் வெளிப்படுத்த ஆரம்பித்தேன். சாக்பீஸ், மாத்திரைகளில் உருவங்களை செதுக்கி ஆச்சரியப்படுத்தினேன். ஒரே போஸ்ட் கார்டில் 250 ஓவியங்களை நான் வரைந்தது அப்போது சாதனையாக பார்க்கப்பட்டது.எங்க ஊர் வாசலிலேயே விவசாய கல்லுாரி இருந்ததால் அங்கேயே படித்து பட்டம் பெற்றேன். எனது கலை ஆர்வத்தை பார்த்த சிலர் 'நீ சினிமாவுக்கு போக வேண்டியது தானே' எனக்கூற, சென்னைக்கு இயக்குனர் கனவுடன் 15க்கும் மேற்பட்ட கதைகளுடன் வந்தேன். ஒரு மண்டபத்தில் சமையல் வேலை பார்த்துக்கொண்டே வாய்ப்பு தேடினேன். அப்போது ஒரு நண்பர், 'நீங்க நல்லா ஓவியம் வரையுறீங்க. ஏன் ஆர்ட் டைரக்டரா வரக்கூடாது' எனக்கேட்டார். அவர் மூலம் ஆர்ட் டைரக்டர் வைரன்பாலனிடம் சேர்ந்தேன். இவர் கும்கி, மைனா போன்ற படங்களில் பணியாற்றியவர்.
முதன்முதலாக 'காதல் சடுகுடு' படத்தில் அவரது உதவியாளராக பணிபுரிந்தேன். ஆறு படங்களுக்கு பிறகு ஏ.சி. பிள்ளை என்ற செல்லாவிடம் சேர்ந்தேன். இவர் ஆட்டோகிராப், ராம், பருத்திவீரன் போன்ற படங்களில் பணியாற்றியவர். நான் தனியாக ஆர்ட் டைரக்டராக முதன்முதலாக வேலை பார்த்தது 49 ஓ மற்றும் ரூபாய் படம். நல்லா 'ரீச்' ஆச்சு.
இதுவரை 17 படங்களில் பணிபுரிந்துவிட்டேன். இப்போது பல படங்கள் செய்கிறேன். அதில் 'எவனும் புத்தனில்லை' என்ற படத்திற்காக நான் அமைத்த மார்ச்சுவரி செட் சினிமா உலகில் நிச்சயம் பேசப்படும். டைரக்டரே ரொம்ப பெருமைப்பட்டார். மற்றொரு படத்தில் குகை ஒன்றையே செயற்கையாகவே உருவாக்கி வருகிறேன்.ஆர்ட் டைரக்டர் ஆனாலும் சினிமா இயக்குனராக வேண்டும் என்ற ஆசை இன்னும் எனக்கு குறையவில்லை.
தேசிய விருது பெறுகிற மாதிரி சூப்பர் கதை உள்ளது. அதுபோல் பிரம்மாண்டமான முறையில் படம் எடுக்கவும் கதை கைவசம் உள்ளது. தயாரிப்பாளர் கிடைத்தால் விரைவில் ஆரம்பித்துவிடுவேன்'' என நம்பிக்கையுடன் காத்திருக்கிறார் பழனிவேல்.இவரை வாழ்த்த 96770 64077
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE