இன்றைய பெண்கள் சிறகுகளை சுருக்கி, ஆளுமைக்குள் அடங்கும் அடிமைகள் அல்ல... புதுமை பதுமைகள் பலர் கனவுகளை தொலைத்து கானல் நீருக்குள் கரைபவர்கள் அல்ல... மலையென எழுந்த மங்கைகள் சாத்திர பேய்களை விரட்டும் சூத்திரம் அறிந்து சரித்திரம் படைக்க படையெடுக்கிறார்கள், பணப் பாதையில் குறுக்கிடும் தடைக்கற்களை தடம் தெரியாமல் உடைத்தெறிய துணிந்து விட்டனர்... இந்த புதுமைப் பெண்களின் வரிசையில் இன்று, 'மிசஸ் இந்தியா யுனிவர்ஸ் 2018' பட்டம் வென்ற நெஞ்சை அள்ளும் தஞ்சை பெண் ஸ்ரீதேவி ரமேஷ் பேசுகிறார்...
* அழகின் ஆரம்பம் ?நான் தஞ்சாவூர் பொண்ணு ஆனால், சென்னைவாசியாக மாறி பல ஆண்டுகளாயிருச்சு. 'ஹோம் சயின்ஸ்' படித்த எனக்கு அழகியல் துறையில் அதிக ஆர்வம் இருந்ததால் அதை கற்றேன். 10 ஆண்டுகளாக குடும்பத் தலைவியாக இருந்த நான் இன்று 'இன்டர்நேஷனல் செலிபிரட்டி மேக் ஓவர் ஆர்டிஸ்ட்'டாக இருக்கிறேன்.
* வெளியுலகில் நீங்கள் ?நான் வெளியுலகிற்கு வந்த பின் துபாய், மஸ்கட், லண்டன் சென்று 'மேக் ஓவர்' செய்வது குறித்து படித்தேன். 'பிரைடல் ஸ்டுடியோ' ஆரம்பித்து பெண் தொழில்முனைவோரானேன். வெளிநாடுகளுக்கு சென்று அழகியல் பயிற்சி முகாம் நடத்துகிறேன். தற்போது 'மாடலிங்' செய்யவும் வந்து விட்டேன்.
* உங்கள் மேக் ஓவரில் பிரபலங்கள் ?இதுவரை 400 'பேஷன் ஷோவி'ற்கு 'மேக் ஓவர்' செஞ்சிருக்கேன். எனக்கு எல்லோரும் பிரபலங்கள் தான். சிலர் 'மேக்கப்' பண்ண உட்காரும் போது பெயரை கூட கேட்பது இல்லை. யார் வந்தாலும் அவர்கள் அழகை மெருகேற்றி காட்டுவது தான் என் வேலை.
* பெண்களுக்கு மேக்கப் சாதனங்களால் ஆபத்து ?அப்படி பார்த்தால் 'ஸ்மார்ட் போன்' அதிகம் பயன்படுத்தினால் கூட ஆபத்து தான். அந்த மாதிரி தான் அழகு சாதனங்களிலும் கெமிக்கல் இருக்கத் தான் செய்யும். கொஞ்சம் தரமானதாக தேர்ந்தெடுத்து வாங்கணும். மேக்கப்புக்கு எல்லாம் 'ஆர்கானிக்'கை தேடி போனால் ரிசல்ட் இருக்காது.
* மிசஸ் இந்தியா 2018 ?இலங்கையில் நடந்த இந்த போட்டியில் தமிழ்நாட்டில் இருந்து பங்கேற்று முதல் இடத்தில் வெற்றி பெற்ற ஒரே பெண் நான் தான். 'மிசஸ் வேல்ர்டு' போட்டியிலும் பங்கேற்பேன்.
* வெற்றிக்காக உங்கள் உழைப்புஇந்திய அளவில் முதல் இடம் பிடிப்பது சாதாரண விஷயம் இல்லை. பணம் கொடுத்தெல்லாம் பட்டம் வாங்க முடியாது. இதற்காக கடும் உடற்பயிற்சி செய்து 110 கிலோ எடையில் 33 கிலோ குறைத்தேன். பொது அறிவு, டான்ஸ், உடல் அழகு, ஜிம் என என்னை நானே செதுக்கி என்னையே எனக்கு ரோல் மாடலாக்கி கொண்டு உழைத்தேன்.
* திடீரென மாடலிங் துறையில் ?எனக்கு என் குடும்பம் உற்சாகம் கொடுத்ததால் தைரியமாக களமிறங்கினேன். 'மாடலிங்'கில் கொஞ்சம் கிளாமர் இருக்கும். பண்ணலாமா' என மகனிடம் கேட்டதற்கு 'என் அம்மா அழகாக தெரிந்தால் சந்தோஷம் தான்'னு நம்பிக்கை கொடுத்தான். பின் ஜூவல்லரி, ஆடை விளம்பரங்களில் நடிக்க வந்தேன். சமூகத்தில் பத்து பேரு பத்து விதமா பேசுறதுக்கு எல்லாம் பயந்தால் சாதிக்க முடியாது.
* விளம்பர நடிப்பு தவிர ?'டிவி' நாடகத்தில் நடித்தேன். குழந்தைகளுக்கான சினிமா ஒன்றிலும் நடித்து இருக்கிறேன்; அந்த படம் இன்னும் வெளிவரவில்லை.
* உங்கள் 'டயட்' உணவு மெனு ?காலை: 5 பாதாம், கிரீன் டீ, முட்டை, ஏதாவது ஒரு ஜூஸ். மதியம்: வேக வைத்த காய்கறி, மீன் அல்லது சிக்கன். இரவு: சூப், காய்கறிகள். ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை இளநீர், மோர், ஜூஸ். வெள்ளை சர்க்கரையை சேர்ப்பதே இல்லை. sridevirameshartist
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE