அடுத்த வருஷம் புரமோஷன்... : அதுக்குள்ள துவங்கிருச்சி, போஸ்ட்டிங கலெக் ஷன்!| Dinamalar

அடுத்த வருஷம் புரமோஷன்... : அதுக்குள்ள துவங்கிருச்சி, 'போஸ்ட்டிங' கலெக் ஷன்!

Updated : அக் 30, 2018 | Added : அக் 29, 2018
Share
ஏற்கனவே, போட்டிருந்த பட்ஜெட்டை விட, 'தீபாவளி பர்ச்சேஸ்' எகிறிப் போய் விட்டாலும், சுற்றிச்சுற்றி அடிக்கும் விளம்பரச் சூறாவளியில், சித்ராவும், மித்ராவும் தப்பவில்லை. மீண்டும், கிராஸ்கட் ரோட்டில் கடை கடையாக, புதையல் வேட்டையில் இருந்தனர்.''அக்கா...ரெண்டு நாள் 'சி.எம்.,விசிட்'ல சிட்டியில ஆளுங்கட்சிக்காரங்க, பயங்கர உற்சாகமாயிட்டாங்க!'' என்று ஆரம்பித்தாள்
 அடுத்த வருஷம் புரமோஷன்... : அதுக்குள்ள துவங்கிருச்சி, 'போஸ்ட்டிங' கலெக் ஷன்!

ஏற்கனவே, போட்டிருந்த பட்ஜெட்டை விட, 'தீபாவளி பர்ச்சேஸ்' எகிறிப் போய் விட்டாலும், சுற்றிச்சுற்றி அடிக்கும் விளம்பரச் சூறாவளியில், சித்ராவும், மித்ராவும் தப்பவில்லை. மீண்டும், கிராஸ்கட் ரோட்டில் கடை கடையாக, புதையல் வேட்டையில் இருந்தனர்.''அக்கா...ரெண்டு நாள் 'சி.எம்.,விசிட்'ல சிட்டியில ஆளுங்கட்சிக்காரங்க, பயங்கர உற்சாகமாயிட்டாங்க!'' என்று ஆரம்பித்தாள் மித்ரா.''அதுக்கு முத நாள்தான், கோர்ட்ல சாதகமா ஜட்ஜ்மென்ட் வந்ததால, அவரும் தான் படு உற்சாகமா இருந்தாரு; அதான், பேனர், கட் அவுட், கொடி தோரணம்னு சிட்டியையே ஒரு வழி பண்ணீட்டாங்களே!'' என்றாள் சித்ரா.''அவருக்கு இதெல்லாம் காமிக்கணுங்கிறதுக்காகவே, சர்க்யூட் ஹவுஸ்ல இருந்து, திருச்சி ரோடு, பாரதியார் ரோடு, ஹோப்ஸ்ன்னு ஊரெல்லாம் சுத்திச்சுத்திக் கூப்பிட்டுப்போயிருக்காங்க...அது சரி...சர்க்யூட் ஹவுஸ்ல நடந்த 'மீட்டிங்'ல சில ஆபீசர்களுக்கு செம 'டோஸ்' கொடுத்தார்ன்னாங்க...நிஜமாவா?'' என்றுகேட்டாள் மித்ரா.''நிஜம் தான்...ஏர்போர்ட் எக்ஸ்பேன்ஷன் பத்திதான், மெயினா 'டிஸ்கஷன்' நடந்துச்சாம்...ஏன் இவ்ளோ 'லேட்' பண்றீங்கன்னு கேட்டு, மாவட்ட ஆபீசரைக்காய்ச்சி எடுத்துட்டாராம். அவரு, 'எல்லாமே பைனான்ஸ் டிபார்ட்மென்ட்ல போயிதான் 'பெண்டிங்' ஆயிடுதுன்னு சொன்னாராம். அதுக்கு, 'அதை நான் பாத்துக்கிறேன்'னு சொன்னாராம். அதனால, இனிமே அந்த 'பைல்' வேகமாகும்னு நினைக்கிறேன்'' என்றாள் சித்ரா.''எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி பாலத்துக்கு, 'லேண்ட்' எடுக்கிறதுலயும், 'பண்ட்' ஒதுக்காம, பைனான்ஸ் டிபார்ட்மென்ட்ல பெண்டிங் போடுறதை, ஹைவேஸ்காரங்களும் நைஸா போட்டு விட்டாங்க; அநேகமா அதுவும் முடிவுக்கு வந்திரும் போலிருக்கு!'' என்றாள் மித்ரா.''இந்த மேட்டரைக் கேளு...நம்ம ஊருல, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்துல, குளங்கள்ல நடக்குற வேலையை அவர் ஆய்வு பண்ணுனப்போ, குளங்களை எப்பிடி மேம்படுத்தப்போறாங்கன்னு, ஒரு வீடியோ போட்டுக் காமிச்சிருக்காங்க...அதைப் பாத்துட்டு, 'இப்பிடியே வருமா, இப்பிடியே வருமா'ன்னு திரும்பத் திரும்பக் கேட்டாராம்; அதிகாரிகள் 'ஆமா'ன்னு சொன்னதுக்கு 'வந்தா நல்லாத்தான் இருக்கும்'னாராம்!'' என்றாள் சித்ரா.இருவரும், பேன்சி கடைக்குள் நுழைந்து, ஆளுக்கொரு அயிட்டமாக பொறுக்கிக் கொண்டே, 'ஹஸ்கி வாய்ஸ்'சில் பேச்சைத் தொடர்ந்தனர். மித்ரா கேட்டாள்...''நம்ம ஊர்ல இருந்த மிச்சம் சொச்சம் ஓ.பி.எஸ்., ஆதரவாளர்களும், இப்போ இ.பி.எஸ்., பக்கம் போயிட்டாங்க... அவரை வரவேற்க, பெருசா கூட்டத்தைக் காணோமாமே!''''உண்மைதான்...ஜெயராமன் வீட்டுக் கல்யாணத்துக்கு, ஏழரை மணிக்கெல்லாம் ஓ.பி.எஸ்., வந்துட்டாரு; ஆனா, நைட் 9:45க்கு இ.பி.எஸ்., வர்ற வரைக்கும், காத்திருந்து, அப்புறம் தான் அவரோட சேர்ந்து மேடையில ஏறுனாரு. பார்க்க பாவமாத்தான் இருந்துச்சு!''''அக்கா...ஒரு டிஎம்கே மேட்டர் சொல்றேன்...மதுரைக்கார அஞ்சா நெஞ்சர், நம்ம ஊர்ல முக்கியமான பொறுப்புல இருக்குற உடன் பிறப்புகள் ஒவ்வொருத்தரையும், போன்ல கூப்பிட்டு, 'டைரக்ட்டா' பேசுறாராம்...அடுத்து நம்ம கட்சி ஆட்சிக்கு வரணும்னா நீங்களெல்லாம் எனக்கு ஒத்துழைப்புக் கொடுங்க'ன்னு துாண்டில் போடுறாராம். ஆனா, இதை யார்ட்ட போய் சொல்றதுன்னு, எல்லாருமே 'கமுக்கமா' இருக்காங்களாம்!''''இருக்கலாம்...ஆனா, போன எலக்ஷன்ல, சிட்டிக்குள்ள கோவை வடக்கு உட்பட பல தொகுதிகள்ல, டிஎம்கே தோக்குறதுக்கு, மதுரைக்காரரோட சேர்ந்து, சத்தமில்லாம வேலை பார்த்த பல பேருக்கு மறுபடியும் பொறுப்பு கொடுத்திருக்காங்கன்னு உடன் பிறப்புகள் பல பேரு உஷ்ணமாத்தான் இருக்காங்க!'' என்றாள் சித்ரா.பொருட்களை வாங்கி, பில் செட்டில் செய்து விட்டு, மீண்டும் கடை வீதி கூட்டத்தில் இருவரும் கலந்தனர்.''ஊருக்குள்ள எந்த ஹாஸ்பிடல், கிளினிக்குகளைப் பார்த்தாலும், டெங்கு, ஸ்வைன் ப்ளூ, வைரஸ் காய்ச்சல்னு, மக்கள் கூட்டம் கூட்டமா காத்துக் கெடக்குறாங்க; இந்த ஹெல்த் டிபார்ட்மென்ட் எந்த வேலையுமே செய்யுற மாதிரித் தெரியலையே?'' என்று கொதித்தாள் மித்ரா.''உண்மை தான்...ஒரே நாள்ல காய்ச்சலுக்கு மட்டும் ஏழு பேரு செத்திருக்காங்க...டிடி மேடத்து கிட்ட கேட்டா, 'அது சிட்டியில வருது; எங்க பட்டியல்ல வராது'ன்னு கதை சொல்றாங்க. டெங்குல இறந்தவரை நிமோனியாவுல இறந்தார்னு 'கேஷ் ஷீட்'டை மாத்துறாங்க; கவர்மென்ட் பேரைக் காப்பாத்துறதுக்காக, இன்னும் எத்தனை மக்களை சாகடிக்கப் போறாங்கன்னு தெரியலை!'' என்று மேலும் கொந்தளித்தாள் சித்ரா.''பாதிப்பு அதிகமா இருந்தா, தகவலை மறைக்கணும்னு தான் கவர்மென்ட் சொல்லும்; ஒழுங்கா, வேலை பார்த்தா, இந்த பிரச்னையே வராதே; இந்த வருஷம் 'அவேர்னஸ்'க்குன்னு எதுவுமே பண்ணுனதாத் தெரியலை!'' என்றாள் மித்ரா.''கார்ப்பரேஷன்லயும் அதே நிலைமைதான்...கொசுத்தொல்லை, தாங்க முடியலை; குப்பையும் அள்ளுறது மாதிரியே தெரியலை. அந்த குப்பை இன்ஜினியர்க்கு எப்போ, யாரு போன் போட்டாலும், 'நான் ரொம்ப பிஸி'ன்னு சொல்லக்கூட முடியாத அளவுக்கு, பிஸியா இருக்காரு; போனையே எடுக்குறது இல்லை!'' என்றாள் சித்ரா.''ஜே.என்.என்.யு.ஆர்.எம்., போஸ்ட்டிங்கிற்கான பீரியடு முடிஞ்சே ரெண்டு வருஷமாச்சு; ஆனா, அந்த பேருல, 'லேடி இன்ஜினியர்'க்கு போஸ்ட்டிங் போட்டு, இன்னும் சம்பளம் எடுத்துட்டு இருக்காங்க...ஸ்கீமே இப்போ இல்லை; எப்பிடி சம்பளம் எடுக்க 'ஆடிட்'ல 'அலவ்' பண்றாங்கன்னு தெரியலை!'' என்றாள் மித்ரா.''இப்பல்லாம் 'ஆடிட் டிபார்ட்மென்ட்'டை யாரு மதிக்கிறா...ஸ்கூல் எஜூகேஷன் டிபார்ட்மென்ட்ல இருந்து, 'ஜோனல் லெவல்'ல புதுவகை விளையாட்டுப் போட்டிகளை நடத்த, கவர்மென்ட் காசு கொடுத்திருக்கு...ஆனா, டிஸ்ட்ரிக்ட் பிஸிக்கல் டைரக்டரா இருக்குற லேடி ஆபீசர், துட்டை வெளியேவே எடுக்க மாட்டேங்கிறாங்களாம்!'' என்றாள் சித்ரா.''விளையாடிட்டாங்களா?'' என்று சிரித்தாள் மித்ரா.''சி.இ.ஓ., சத்தம் போட்ட பிறகு, பாதிக்காசை கொடுத்திருக்காங்க; மீதிக்காசு வருமா, வராதான்னே தெரியலை!'' என்றாள் சித்ரா.''சத்தம் போட்ட ஆபீசர், கலெக்டராபீஸ்ல நடக்குற எந்தக் கூட்டத்துக்கும் வர்றதே இல்லைன்னு, மாவட்ட ஆபீசர் சத்தம் போட்டாராமே...எனக்கு தெரிய, அந்த 'அய்யா' ஆபீஸ்லயும் இருக்குறதில்லை; ஆய்வுக்கும் போறதில்லை; எந்த மீட்டிங்லயும் கலந்துக்கிறதில்லை; அப்பிடின்னா, எங்க தான் போறாரு?'' என்று கொக்கி போட்டாள் மித்ரா.''அடுத்த வருஷம், நம்ம டிஸ்ட்ரிக்ட்ல ஆறு 'ஹைஸ்கூல்'களை, 'ஹையர் செகண்டரி ஸ்கூல்'லா அந்தஸ்து உயர்த்தப் போறாங்க; அங்க வேலை பாக்கிறதுக்கு, பி.ஜி., அசிஸ்டென்ட்கள் நிறைய தேவைப்படுவாங்க; ஏற்கனவே, பல ஸ்கூல்கள்ல போஸ்ட்டிங் காலியா இருக்கு. எல்லாத்துக்கும் இப்போ பேரம் நடக்குது...ஒரு போஸ்ட்டிங் ரேட்... ரொம்பல்லாம் இல்லை; ஜஸ்ட் ஏழே லட்சம்!'' என்று மிரட்டினாள் சித்ரா.''ஸ்கூல் எஜூகேஷன்ல அப்பிடியா...நம்ம கவர்மென்ட் ஆர்ட்ஸ்ல கெஸ்ட் லெக்சரர் போஸ்ட்டிங்ல, ஒரு லேடியை போட்ருக்காங்க...அதுலயே ஏகப்பட்ட 'வயலேஷன்' நடந்திருக்காம்...இப்போ, அந்த லேடி, 'மாநிலம் முழுக்க கெஸ்ட் லெக்சரர் போஸ்ட்டிங் போடுறதுக்கு நான் தான் ஏஜன்ட்'ன்னு வசூல் தட்டி எடுக்குறாராம்!'' என்றாள் மித்ரா.அதைக் கவனிக்காத சித்ரா, அலைபேசியை எடுத்து, 'அனிதா! வீட்டுக்கு வந்துட்டு, நானே கூப்பிடுறேன்' என்று இணைப்பைத் துண்டித்து விட்டு தொடர்ந்தாள்...''மித்து...நம்ம மாவட்டத்துல கோவில்களைப் பாக்குற முக்கியமான ஆபீசர், பொள்ளாச்சி ஊஞ்சவேலாம்பட்டி யில பிரமாண்டமா ஒரு பங்களா கட்டி, போன வாரம் தான் கிரஹப்பிரவேசம் நடத்திருக்காராம். பழநியில தனக்குக்கீழ வேலை பார்த்த லேடி ஆபீசரை, இதே மாவட்டத்துக்குக் கொண்டு வந்து, மருதமலை, வாழைத்தோட்டத்து அய்யன் கோவில்னு ரெண்டு கோவிலை கவனிக்கச் சொல்லிருக்காராம்!'' ''ரெண்டுமே நல்ல வருமானம் வர்ற இடமாச்சே!'' என்றாள் மித்ரா.''ஆமாமா...அந்த வருமானமும் போதாதுன்னு, கோயம்புத்துார்ல 10 கோவில்கள்ல, சிசிடிவி, பர்க்லர் அலாரம் பொருத்துற கான்ட்ராக்ட்டை, பழநி கம்பெனிக்கு எடுத்துக் கொடுத்திருக்காராம். மீதிக்கோவில்களுக்கு 'டெண்டர்' எடுக்கவும் ஏற்பாடு பண்ணிட்டு இருக்காராம்!'' என்றாள் சித்ரா.மித்ரா, 'அக்கா...எனக்கு சூடா ஒரு டீ சாப்பிடணும்!' என்று கூறி, பேக்கரிக்குள் சித்ராவை இழுத்துச்சென்றாள்; பேச்சுக்கு இடைவேளை விழுந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X