'ராத்திரி கூப்பிடும்மா...!'

Added : அக் 30, 2018
Advertisement
தீபாவளி பர்ச்சேஸூக்கு, புதுமார்க்கெட் வீதிக்கு சென்ற, சித்ராவும், மித்ராவும் கூட்ட நெரிசலில் சிக்கி, திண்டாடினர் ஒருவழியாக துணி எடுத்துக்கொண்டு, தப்பித்து வெளியே வந்த இருவரும், அருகிலுள்ள ஓட்டலுக்குள் புகுந்தனர். டிபன் ஆர்டர் செய்து காத்திருந்தனர். '''இழுத்து பூட்டிடுவேன்'னு அதிகாரி ஒருத்தர், விவசாயிகளிடம் பேசி மாட்டிட்டாரு. தெரியுங்களா?'' என்றாள்
'ராத்திரி கூப்பிடும்மா...!'

தீபாவளி பர்ச்சேஸூக்கு, புதுமார்க்கெட் வீதிக்கு சென்ற, சித்ராவும், மித்ராவும் கூட்ட நெரிசலில் சிக்கி, திண்டாடினர் ஒருவழியாக துணி எடுத்துக்கொண்டு, தப்பித்து வெளியே வந்த இருவரும், அருகிலுள்ள ஓட்டலுக்குள் புகுந்தனர். டிபன் ஆர்டர் செய்து காத்திருந்தனர்.

'''இழுத்து பூட்டிடுவேன்'னு அதிகாரி ஒருத்தர், விவசாயிகளிடம் பேசி மாட்டிட்டாரு. தெரியுங்களா?'' என்றாள் மித்ரா.
''என்னடீ சொல்றே? யாரு, எங்கே மாட்டிட்டாரு?'' கேள்வி கேட்டாள் சித்ரா.
''இருங்கக்கா, சொல்றேன். தெற்கு உழவர் சந்தை பக்கத்துல, மாநகராட்சி காய்கறி மார்க்கெட் இருக்கிறது பெரிய பிரச்னையா இருக்கு. விவசாயிகள் தொடர்ந்து புகார் கொடுத்ததால், சப்-கலெக்டர் தலைமையில், அமைதி பேச்சுவார்த்தை நடந்துச்சு. ஒருவழியாக, சப்-கலெக்டர், விவசாயிகளை சமாதானம் செய்து அனுப்பி வச்சிருக்காரு''
''கூட்டம் முடிஞ்சு வெளியே வந்த, கார்ப்ரேஷன் அதிகாரி, ஒருத்தர் ''அது கார்ப்ரேஷனரோட இடம். ஏதாவது பிரச்னை செஞ்சீங்கன்னா, இழுத்து பூட்டிடுவேன்,''ன்னு மிரட்டிட்டு போயிட்டார். அடுத்த நாள், கலெக்டர் ஆபீசில் நடந்த, விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்துல, விவசாய சங்க நிர்வாகிகள், இந்த பிரச்னையை, கலெக்டரிடம் சொல்லிட்டாங்க,''
''கலெக்டர் ஒண்ணும் கண்டுக்கலையா?''
''இவ்வளவு ஆன பிறகு, கலெக்டர் சும்மா இருப்பாரா. எல்லாமே கவர்மென்ட்டோட சொத்துதான். நிர்வாக வசதிக்குத்தான், அமைப்புகள் இருக்கு. கார்ப்ரேஷன் அதிகாரிங்க இப்படியெல்லாம் பேசக்கூடாது. நீங்க 'ரிட்டயர்டு' ஆயிட்டா, சாதாரண மனுஷன்தான். இதுக்கு மேல சொல்ல முடியாது, இனி கரெக்டா இருந்துக்கணும்,' 'சுள்ள்..'னு கண்டிச்சுட்டார்'' என்றாள் மித்ரா.
''அதுசரி.. கலெக்டர் டோஸ் விட்டதற்கு, அதிகாரி என்னதான் சொல்றாருடி?''
''நான் அப்படி பேசவே இல்லை. மார்க்கெட் கான்ட்ராக்டரை பத்திதான் பேசினேன். தப்பா புரிஞ்சிட்டாங்கன்னு அவர் தரப்பு விளக்கத்த கொடுத்து, எப்படியோ சமாளிச்சாராம்,'' என்ற மித்ரா, ''திருமுருகன் அங்கிள் வர்றேன்னு சொன்னாரு. இன்னும் வரலை பாருங்க்கா. இவரு இப்படியேதான். எத்தனை தடவை சொன்னாலும் திருந்தாம, கரெக்ட் டைமுக்கு வரவே மாட்டாரு,'' என சலித்து கொண்டாள்.
''ஏம்ப்பா, துணை முதல்வர் வந்தப்போ, முதல்வரே, மாஜியை மாட்டி விட்ட கதை, தெரியுமா?'' என்றாள் சித்ரா.
''என்னக்கா சொல்றீங்க, முதல்வரே, துணை முதல்வர்கிட்ட புகார் சொன்னாரா? ஒண்ணும் புரியலையே,''
''அட... துணை முதல்வர் ஓ.பி.எஸ்., திருப்பூர் குமரன் காலேஜில் ஆய்வு நடத்தினப்ப, அனுமதி பெறாம 'ஆடிட்டோரியம்' கட்டியிருந்ததை கண்டுபிடிச்சிட்டாரு. இப்படி அனுமதியில்லாம ஆடிட்டோரியம் கட்ட யார் அனுமதி கொடுத்தாங்கன்னு கேட்டதுக்கு, 'மாஜி' அமைச்சர் சொல்லித்தான் கட்டினோம்னு, பிரின்ஸிபால் சொன்னாராம். ஏதாவது, விபத்து நடந்தா யார் பதில் சொல்றதுன்னு, ஓ.பி.எஸ்., பேசிட்டு போயிட்டாராம்,'' என்று விளக்கினாள்.
அதற்குள் டிபன் வந்துவிடவே, இருவரும் சாப்பிட துவங்கினர்.
''இந்த டிபிராக் அதிகாரி, தப்பிச்சுட்டாரு தெரியுமா?'' என்றாள் சித்ரா.
''ம்..ஹூம். தெரியாதுங்க்கா,'' என்றவாறு, தண்ணீர் குடித்தாள் மித்ரா.
''டூயூட்டிக்கு ஒழுங்கா வராம இருந்த ேஹாம்கார்டை சேர்ந்தவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, கமிஷனர் சொல்லியிருந்தார். அதை தயாரிச்ச, டிராபிக் அதிகாரி, பட்டியலில், ஒரு லேடி பெயரை சேர்க்காம விட்டுட்டாராம்,''
''இந்த மேட்டர் அரசல்புரசலா வெளியே தெரிஞ்சுதால், மீண்டும் சேர்த்துட்டாராம். இந்த திடீர் பல்டிக்கு என்ன காரணமுன்னு விசாரிச்சதில், அதிகாரி தன்னுடைய 'பர்சனல்' நெம்பரை, அந்த லேடிகிட்ட கொடுத்து, 'ராத்திரி கூப்பிடும்மா,'ன்னு சொல்லியிருக்கார். இந்த மேட்டர் வெளியே வந்ததால், அதிகாரி தப்பிச்சா போதுண்டா சாமின்னு, பேரை மறுபடியும் சேர்த்துட்டாராம்,'' என்று கூறி சிரித்தாள் சித்ரா.
அப்போது, 'யானைகளின் அரசன் மார்க் லுங்கிகள் சிறப்பானது ,' என்ற விளம்பரம் ஒலிபரப்பானது. சாப்பிட்டு முடிந்ததும், ஆரஞ்ச் ஜூஸ் ஆர்டர் செய்த மித்ரா, ''அக்கா, 'பாத்திர' ஸ்டேஷனுக்கு, மலைகளின் அரசி ஸ்டேஷனிலிருந்த வந்த ஒருவர், வசூலில் பின்னி எடுக்கிறாராம். ஏக்ஸிடெண்ட்டுக்கு, எப்.ஐ.ஆர்., 2 ஆயிரம், ஸ்டேஷன் ஜாமின், 3 ஆயிரம், கேஸ் டீடெயில் சொல்ல, 3 ஆயிரம், வண்டி எப்.சி.,க்கு, 2 ஆயிரம், இப்படி லிஸ்ட் போட்டு, வசூல் பண்றாராம். பணம் கொடுக்காட்டி எந்த வேலையும் நடக்காதாம்,'' ''ஏட்டாக இருக்கும்போதே இப்படின்னா, எஸ்.ஐ., இன்ஸ்பெக்டர் ஆனா, ஒண்ணும் தாங்க முடியாது'ன்னு, மத்த போலீஸ்காரங்களே பேசிக்கறாங்களாம்,'' என்றாள்.
''என்ன செய்வது மித்து, அவங்களாக பார்த்து திருந்தினால்தான் உண்டு,'' என்று கூறிய சித்ரா, தனது மொபைல் போனில், 'சுரேஷ்' என்ற எண்ணை தேடி டயல் செய்து, ''வீட்டுக்கு ரெண்டு கேன் வாட்டர் கொண்டு வாங்க'' என்றாள்.
அதற்குள், ஜூஸ் வந்து விடவே, இருவரும் அருந்தி விட்டு, 'பில்' செட்டில் செய்து கிளம்பினர். திடீரென மழை வரவே, ஓட்டலுக்குள் சென்று அமர்ந்தனர்.
''அக்கா... வாட்டர் கேன் சொன்னதும், போலி 'சரக்கு' விற்பனை செய்யறது ஞாபகத்துக்கு வந்துடுச்சு. சூலுாரிலிருந்து போலி சரக்கு வாங்கிட்டு வந்து, பி.என்., ரோட்டிலுள்ள சில மதுக்கடை பார்களில், அமோகமாக விக்கறாங்களாம், ''
''இதில், தலையீடாமல் இருக்க 'டாஸ்மாக்' அதிகாரிகள், போலீசாருக்கு பலமாக 'கவனிக்கறாங்களாம்,' இதுமாதிரியே, 'பாத்திர' ஸ்டேஷன் எல்லையில், பூலுவபட்டி அம்மன் நகர், வஞ்சிபாளையத்தில், 'நாட்டு கோழி சமையல்'னு போர்டு போட்டுட்டு, 24 மணி நேரமும் சரக்கு சூப்பரா சேல்ஸ் பண்றாங்களாம்,'' என்றாள் மித்ரா.
அப்போது, கார்ப்ரேஷன் ஸ்டாப் ஒருத்தர், டிபன் பார்சலில் வாங்கி கொண்டிருந்தார். அவரை பார்த்த சித்ரா, ''கார்ப்ரேஷன் ஆபீசில், தெற்கு சர்வே பிரிவில் வரைபடம் வரைவதில் ஆரம்பித்து, எல்லாத்துக்கும் வைட்டமின் 'ப' கொடுத்தால் மட்டுமே, வேலை நடக்குமாம்,''
''கொடுக்காதவங்கிட்ட, 'போயிட்டு நாளைக்கு வாங்கன்னு,' அலைக்கழிக்கிறாங்களாம். அங்குள்ள, இரண்டு பேரின் கொட்டத்தை யார் அடக்கறதுன்னு தெரியலையே,'' என்றாள். அதே நேரம், போனில் பேசிய ஒருவர், 'ஏம்பா... மேனேஜர், இந்த பிரதீப்குமாரையும், தங்கவேலையும், பீல்டுக்கு போக சொன்னேன். போயிட்டாங்களா?' என்று மொபைல் போனில் பேசியபடி, அங்குமிங்கும் நடைபோட்டார்.
மழை நின்றபாடில்லை. ''ஏங்க்கா... இப்ப மட்டும் மழை வருமா? இல்லை தீபாவளிக்கு வருமா?'' என்றாள் மித்ரா.
''ஆமாண்டி. தீபாவளிக்கு மழைக்கு வாய்ப்புண்டுன்னு, போர்காஸ்ட் சொல்லியிருக்காங்க. இருந்தாலும், இங்கே வேலை செய்யற லட்சக்கணக்கான தொழிலாளர்கள், மழைக்குள்ள ஊருக்கு போயிடோணும் சொல்றாங்களாம்,''
''ஆமா.. அவங்க ஊருக்கு பஸ் ஏற்பாடெல்லம் எப்படி இருக்குங்க்கா,''
''அதுக்காக, பல ஏற்பாடு நடக்குதுன்னு. ஆனா, ஆளுங்கட்சி தொழிற்சங்கத்தை சேர்ந்த சிலர், 'டூயிங் டியூட்டி, ஆன் டியூட்டி'ன்னு சொல்லிட்டு, ஓ.பி., அடிக்கிறாங்களாம். இதை தெரிஞ்சுகிட்டு, இப்ப புதுசா வந்திருக்கிற எம்.டி., அடிக்கடி ஆய்வு செஞ்சு, 'எல்லோரும் கண்டிப்பாக, ஷிப்ட்டுக்கு போயித்தான் ஆகோணும்னு கறார் உத்தரவு போட்டிருக்காராம்.'' என்றாள் சித்ரா.
''ஏங்க்கா, நம் மாவட்டத்தில, டெங்கு, பன்றி காய்ச்சல் தடுப்பு எப்படி நடக்குது?'' என்றாள் மித்ரா.
''யாருக்காவது காய்ச்சல் வந்தா மட்டும்தான், அந்த ஏரியாவுக்கு போறாங்க. மோசமாக இருக்கற ஏரியாவை கண்டுபிடிச்சு, மொதலிலேயே 'ஸ்டெப்' எடுத்தா மட்டும்தான், கன்ட்ரோல் பண்ண முடியும். இல்லாட்டி, சிரமம்தான்,''
''ஏன்... சுகாதாரத்துறை உயரதிகாரி ரொம்ப கெடுபிடியாச்சே. அவங்க ஒண்ணும் பண்றதில்லையா?''
''அவங்க, மாவட்ட முழுவதும் போறதில்லையே. ஏதோ, பேருக்கு அங்குமிங்கும் போறாங்க அவ்ளோதான், சுகாதாரத்துறையிலேயே பேசிக்கறாங்க,'' என்றாள் சித்ரா.அப்போது, பல்லடம் செல்லும் பஸ் அதிக சத்தமாக 'ஹாரன்' ஒலித்து கொண்டே வந்தது.
அதைப்பார்த்ததும், மித்ரா, ''இந்த கோழிப்பண்ணையூரில், சரக்கு விற்க, போலீஸ் சொன்னப்போதுமாம். நாயக்கம்பாளையம் ஏரியாவில், ஓட்டல், பேக்கரி, பெட்டிக்கடைன்னு, சரக்கு வியாபாரம், 'துாள்' கிளப்புதாம்,''''அங்க மட்டுமில்ல. ரூரல் மாவட்டம் முழுவதுமே, சரக்கு, லாட்டரி, கஞ்சா.. இப்படி எல்லாமே, சர்வசாதாரணமாக கிடைக்குது. இது எங்கே போய் முடியப்போகுதோ?'' என்று வானத்தை பார்த்து கும்பிட்டாள் சித்ரா. அப்போது, மழை நின்றிருக்கவே, இருவரும் கிளம்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X