சிலிர்த்து எழும் பெண் சிங்கங்கள்!| Dinamalar

சிலிர்த்து எழும் பெண் சிங்கங்கள்!

Added : நவ 03, 2018 | கருத்துகள் (1)
கங்கை, காவிரி, கோதாவரி, யமுனை என, நதிகளை, பெண்களின் பெயரிட்டு அழைக்கிறோம். நாட்டையே, தாய் நாடு என்கிறோம்; தாய் மண் என்கிறோம். 'பெண் பாவம் பொல்லாதது; ஒரு பெண் பழித்தால், ஒரு தலைமுறையே பழித்த மாதிரி' என்கிறோம். 'தாயில் சிறந்த கோவிலுமில்லை' என, பெண்களின் புகழை பாடுகிறோம்.எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், தமிழ் தாய் வாழ்த்து பாடுகிறோம். 'பிரசவத்திற்கு போகும் பெண்களுக்கு
சிலிர்த்து எழும் பெண் சிங்கங்கள்!

கங்கை, காவிரி, கோதாவரி, யமுனை என, நதிகளை, பெண்களின் பெயரிட்டு அழைக்கிறோம். நாட்டையே, தாய் நாடு என்கிறோம்; தாய் மண் என்கிறோம். 'பெண் பாவம் பொல்லாதது; ஒரு பெண் பழித்தால், ஒரு தலைமுறையே பழித்த மாதிரி' என்கிறோம். 'தாயில் சிறந்த கோவிலுமில்லை' என, பெண்களின் புகழை பாடுகிறோம்.எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், தமிழ் தாய் வாழ்த்து பாடுகிறோம். 'பிரசவத்திற்கு போகும் பெண்களுக்கு இலவசம்' என, ஆட்டோக்களில் அருமையாக எழுதியுள்ளோம். பெண் குழந்தை பிறந்தால், 'நம் வீட்டிற்கு லட்சுமி வந்து விட்டாள்' என, புளங்காகிதம் அடைகிறோம்.ஒவ்வொரு குடும்பத்திற்கும், பெண் தான் அச்சாணி. பெண் தான், கொலை குற்றவாளியை பெற்றெடுக்கிறாள். அவள் போன்ற பெண் தான், உயர்ந்த ஞானிகளையும், மகான்களையும் ஈன்றெடுக்கிறாள். பெண் இன்றி, இந்த உலகில் எதுவும் இல்லை. இப்படி, பெண்களுக்கு புகழ் சேர்ப்பது ஒரு புறமிருக்க, இன்னொரு புறம் என்ன நடக்கிறது என்று ஆராய்ந்தால், அதிர்ச்சியாக இருக்கிறது. கேளிக்கை பொருளாக, இச்சையை தீர்க்கும் கருவியாக பெண்களை கருதுகிறோம்.ஆண்டாண்டு காலமாக பெண்களை அடிமையாக வைத்திருக்கிறோம். 'நீ பொம்பளை... உனக்கு என்ன தெரியும்...' என்று கேலி செய்கிறோம். எவ்வளவு பெரிய வேலையில் இருந்தாலும், அதிகாரத்தை தன் வசம் வைத்திருந்தாலும், பெண் என்றால் இளக்காரமாக பார்க்கும் நிலை தான், உலகம் எங்கும் நிலவுகிறது.சில ஆண்டுகளுக்கு முன் கூட, கணவன் இறந்து விட்டால், 'நீயும் போய் சேரு...' என்று வலுக்கட்டாயமாக தீயில் தள்ளினோம். மீறி, உயிர் வாழ்ந்தால், 'சுப காரியத்திற்கு வராதே; பொட்டு வைக்காதே. மொட்டை போட்டுக்க' என்று, 'ஆர்டர்' போட்டோம். ஆனால், பிற குடும்ப பெண்களை, தவறாக நடத்துபவர்கள், தங்கள் வீட்டு பெண்களை அவ்வாறு நடத்துவதில்லை.மனைவி இறந்து விட்டால், 'ஒத்தை ஆளா நீ என்ன செய்வே... இன்னொரு கல்யாணம் பண்ணிக் கொள்' என்று, கணவனை உற்சாகப்படுத்துகிறோம். சமுதாயத்திலிருந்து விலக்கி வைக்க, பயன்படும் சொற்கள், பெண்பாலாக இருந்தது, இருப்பது ஆச்சரியம்.வேசி என்கிறோம்; வேசன் என்று, எந்த ஆணையும் குறிப்பிடுவது இல்லை. கணவன் இறந்தால், விதவை என்கிறோம். மனைவியை பறிகொடுத்தவர்களை, விதவன் என்று கூறுவதில்லை. விபச்சாரி என்கிறோம்; அவளோடு இருந்த ஆண் மகனை, விபசாரன் என்று சொல்வதில்லை.மொத்தத்தில், பெண்ணுக்கென்று ஒரு நடைமுறை, ஆண்களுக்கு என, மற்றொரு செயல்முறை. பெண்களுக்கு ஆசை, உணர்ச்சி, ஏக்கம் இருந்து விடக் கூடாது என, மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறோம். ஆனால், ஆண் என்ற ஆணவத்தில், சொல்லக் கூசும் வக்கிரமங்களில் ஈடுபடுகிறோம்.காலப்போக்கில் சில சட்டங்கள், பெண்களுக்கு சாதகமாக இயற்றப்பட்டன. உதாரணமாக, உடன் கட்டை ஏறுதல் சட்ட விரோதம்; 18 வயது ஆகாத பெண்ணுக்கு கல்யாணம் பண்ணக் கூடாது; பால்ய விவாகம் பண்ணக் கூடாது என்பது போன்ற சட்டங்களால், பெண்களுக்கு இழைத்த தீங்குகளில், சில தடுக்கப்பட்டுள்ளன.ஆனாலும், இன்றும் நிறைய விஷயங்கள், பெண்களுக்கு பாதகமாகவே நடந்து கொண்டிருக்கின்றன. அவற்றை எதிர்க்கும் பெண்களை, மதிக்காத போக்கு தான் உள்ளது.ஆண்களின் பல அயோக்கியதனத்தை தட்டிக் கேட்காமல், தங்கள் மீதான பாலியல் அத்துமீறல்களை மட்டும், வெளிப்படுத்த துணிந்துள்ள பெண்கள், ஆண்களின் பல விதமான தாக்குதல்களை இன்னமும் சந்தித்தபடி தான் உள்ளனர்.ஆண்களின் அனைத்து அத்துமீறல்களையும் ெவளிக்காட்ட துவங்கி விட்டால், ஆண் சமூகம் வெட்கி தலைகுனிவதை தவிர்த்து, வேறு வழியில்லை. அந்த நிலை வந்தால் தான், ஆணுக்கு பெண் சமம் என்பது உறுதியாகும்.பாலியல் அத்துமீறல்களை சந்தித்த, அதனால் பாதிக்கப்பட்ட பெண்கள், அம்பலப்படுத்தும், இப்போது பூதாகாரமாக விரிந்து, அத்துமீறிய ஆண்களுக்கு, 'சுளீர்' கொடுக்கும், 'மீ டூ' விவகாரத்தை வரவேற்கவே வேண்டும்.முன்பெல்லாம், பெண்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தனர். வயதுக்கு வந்த பின், கல்யாணம் ஆகும் வரை, வெளியே வரக் கூடாது என்ற கடுமையான தடை இருந்தது. இப்போதும் சில, பழமைவாதிகள், தங்கள் வீட்டு பெண்களை இப்படித் தான் நடத்துகின்றனர்.அதையும் மீறி, ஏராள மான பெண்கள், பல துறைகளில் முன்னுக்கு வந்து, பேரெடுத்து வருகின்றனர் என்பது பாராட்டுதலுக்கு உரியது.சமுதாயத்தில் நேர்மையும், நாணயமும் பின் தள்ளப்பட்டு, வணிக மயமாக்கல், பிரதான இடத்தைப் பிடித்த பின், பெண்கள் தங்கள், வீட்டை விட்டு வெளியே வர வேண்டியதாயிற்று.பெண்களை, கல்வி மேம்படுத்திய பின், அவர்கள் பல விஷயங்களை யோசிக்க ஆரம்பித்தனர். 'நாமும் ஏன் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளக் கூடாது... நாம் ஏன் இந்த வேலையை, இன்னும் செம்மையாக செய்யக் கூடாது' என யோசித்து, சமுதாயத்தில் இன்னொரு நல்ல, பெரிய லெவலுக்கு தங்களை முன்னேற்ற, சிந்திக்க ஆரம்பித்தனர்.இங்கே தான், பிரச்னை ஆரம்பித்தது. பெண்களை பல நுாற்றாண்டுகளாக அடக்கி ஆண்ட ஆண் மகன், அவள் சரி சமமாக அல்லது அதற்கும் மேலே, நல்ல ஒரு இடத்தை பிடிப்பதை, தாங்கிக் கொள்ள முடியாமல், தவிக்க ஆரம்பித்தான்; எல்லா விதங்களிலும் அவளுக்கு கூடுதல் தொந்தரவு கொடுக்க ஆரம்பித்தான். இதில் அவனுக்கு திருப்தி கிடைத்தது.'உலகில் நடந்த போர்களில், முதல் பலி பெண்கள் தான்' என்கிறது, சரித்திரம். அவளுடைய பெண்மையை சூறையாடி, அவள் உடம்பை சின்னா பின்னமாக்குவது, படை வீரனுக்கு திருப்தியைக் கொடுத்தது. 'போரில் கிடைத்த வெற்றியால் பெற்ற திருப்தியை விட, இந்த திருப்தி தான், அவனுக்கு பெருமையாக இருந்தது' என்கின்றனர், வரலாற்று ஆய்வாளர்கள்.பெண்களை வன்புணர்ச்சி செய்வதிலும், தன்னைத் தேடி வரும் பெண்ணை நிர்ப்பந்தித்து அல்லது ஆசை காட்டி கெடுப்பதிலும், ஆண்களின் திருப்தி தொடர்கிறது.இதனால் பாதிக்கப்படும் பெண்கள், இந்த அவலத்தை வெளியே சொன்னால், 'கெட்டுப் போனவள்' என்று பட்டம் கட்டி விடுவரோ என்று பயந்து, வெளியே சொல்லாமல் இருக்கின்றனர்.ஆனால், இப்போது தனக்கு, தன் பெண்மைக்கு ஏற்பட்ட கஷ்டத்தை, அவலத்தை, தைரியமாக வெளியே சொல்ல ஆரம்பித்திருக்கின்றனர் பலர். சமுதாயம், தன் பக்கம் இருக்கும் நியாயத்தை புரிந்து கொள்ளும் என்ற நம்பிக்கையால் விளைந்த மாற்றம் இது.ஒரு பெண், ஒரு நிறுவனத்திற்கு, வேலை கேட்டு போகிறாள் என்று வைத்துக் கொள்வோம். வேலைக்கு போயே தீர வேண்டிய கட்டாயம். அங்கே பெரிய பதவியில் இருக்கும் ஆண், தன் ஆசைக்கு இணங்கினால் வேலை தருவதாக சொல்கிறான்.எதிர்பார்க்காத விஷயம், இது அவளுக்கு! தன் பெண்மைக்கு ஆபத்து வந்து விட்டதே என்ற மன உளைச்சல். இது, அவளைச் சிறிது நேரம், என்ன செய்வது என்று தெரியாமல், விழி பிதுங்க வைக்கிறது.இதை சாதகமாக எடுத்துக் கொள்ளும், உயர்ந்த பதவியில் இருக்கும் அந்த ஆண், தன் கொடூர புத்தியில் முன்னேறுகிறான். அவள் பெண்மை, நேர்மை, சத்தியம் விழித்துக் கொள்ள, அவனை தள்ளி விட்டு, ஓடி, தன் கற்பைக் காப்பாற்றிக் கொள்கிறாள்.அவளால் இதை, அந்த மனிதனின் அராஜகத்தை, மனதில் இருந்து சுத்தமாக துடைத்துப் போட முடியவில்லை. வேறு பெண்கள், என்னை மாதிரி கஷ்டப்படக் கூடாது என்று சமுதாய நோக்கமும் சேர்ந்து விட, சம்பந்தப்பட்ட ஆள், அவனுடைய கெட்ட நோக்கத்திற்காக, இனி மேல் இது போல் நடக்கக் கூடாது என்பதற்காகவும், அவன் தண்டிக்கப்பட வேண்டும் என்று நினைத்தும், வெளியில் வந்து, தனக்கு நேர்ந்த அவமானத்தை சொல்கிறாள்.அவளின் வெளிப்பாட்டில் தவறு ஒன்றும் கிடையாது என்று சமுதாயம் நினைத்து, அவளுக்கு ஆதரவு கொடுக்கும் என்று நம்புகிறாள். ஆனால், பெரும்பாலும் அப்படி கிடைப்பதில்லை.இத்தகைய சூழ்நிலையில், இப்போது நாம் செய்ய வேண்டியது, அவளுடைய நம்பிக்கையை கெடுக்காமல் இருப்பது தான். 'மீ டூ'வில் அம்பலப்படுத்தும் பெண்களை அப்படியே நம்ப வேண்டும் என்பதில்லை. அதில் இருக்கும் நியாயத்தை உணர்ந்து கொண்டால் போதும்.ஒரு பெண், தன் பெண்மைக்கு களங்கம் ஏற்பட்டிருக்கிறது என, நான்கு பேர் கேட்கும்படி, பார்க்கும்படி சொல்லும் போது, நாம் பொறுமையாக கேட்க வேண்டும்; அனுதாபத்துடன் பார்க்க வேண்டும். அதுபோன்ற செயல்களை செய்யக் கூடாது என, ஆண்கள் உறுதி எடுக்க வேண்டும்.நம் செயல்கள், வார்த்தைகள், அவளின் துணிச்சலைக் கெடுத்து விடக் கூடாது. மாறாக, தன் புகாரை, இந்த சமுதாயம் கேட்கும் என்று அவள் நம்பும் வகையில், ஆண்களின் செயல்பாடு இருக்க வேண்டும்.'ஒன்பது குற்றவாளிகள் தப்பித்தாலும், ஒரு குற்றமற்றவன் தண்டிக்கப்பட்டு விடக் கூடாது' என்ற நியாயத்தை அறியாதோர், குறைவாகத் தான் இருப்பர். அதற்கேற்ப, ஆண்கள் தம் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்.ஒரு பெண், ஆணின் தவறைச் சொல்லும் போது, உடனே, 'இதற்கு சாட்சி இருக்கிறதா... உடனே ஏன் நீ சொல்லவில்லை... நீ யோக்கியமானவளா... உனக்கு வேலை ஆகணும்னு சுயநல நோக்கத்தோடு போயிருப்பே...' என, அவசரப்பட்டு, யோசிக்காமல், கேள்விகள் கேட்டு, அவள் இதயத்திலிருந்து ரத்தம் வரும்படி செய்யக் கூடாது.ஏனென்றால், பெண் சிங்கங்கள் இப்பொழுது தான் சிலிர்த்து எழுந்திருக்கின்றன. அந்த வேகத்தை, இச்சமுதாயத்தின் நன்மைக்காக, முன்னேற்றத்திற்காக, கெடுத்து விடக் கூடாது. இதுவே, இன்றைய தேவை என்பதையும் மறந்து விடக்கூடாது.பாலியல் அத்துமீறல்களால் பாதிக்கப்பட்ட பெண்களில் சிலர், தைரியமாக, மீ டூ என, புகார் தெரிவித்து, சம்பந்தப்பட்ட ஆண் அல்லது பெண்ணை, தண்டிக்க முன் வந்திருக்கிறாள்... இதுவே, பெரிய முயற்சி! பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக இல்லா விட்டாலும், அவர்களை மேலும் பாதிக்கும் வகையில், தேவையற்ற கேள்விகளையும், சந்தேக பார்வைகளையும் தவிர்ப்பது நல்லது.தவறு செய்யும் ஆண் அல்லது பெண், எதிர்காலத்தில் தங்களுக்கு தண்டனை கிடைக்கும் என்ற எண்ணத்தை, மீ டூ ஏற்படுத்தியுள்ளது. ஆண்களின் அல்லது பெண்களின் அசிங்கங்களை அம்பலப்படுத்தும், இது போன்ற மேலும் பல ஊடகங்கள் முன் வரலாம். அப்போது, தலைகுனிவு மேலும் அதிகரிக்கலாம். அவ்வளவு வேண்டாமே!பெண்களிடம் நாகரிகமாக நடக்க இனிமேலாவது பழகுவோம். சதை பிண்டங்களாகவும், செக்ஸ் கருவிகளாகவும் கருதாமல், நம்மைப் போன்ற ஒரு ஜீவன், ஒரு உன்னத பிறவி என கருதி, தப்பு செய்யாமல், தலைகுனிவை சந்திக்காமல் இருப்போம்!
-எல்.வி.வாசுதேவன், சமூக ஆர்வலர்
இ - மெயில்: lvvasudev@gmail.comமொபைல் போன்: 99520 96296

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X