நாளை கந்தசஷ்டி கவசம்; உன்னை சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நாளை கந்தசஷ்டி கவசம்; உன்னை சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா

Added : நவ 07, 2018 | கருத்துகள் (2)
Advertisement
நாளை கந்தசஷ்டி கவசம்; உன்னை சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா

கந்தசஷ்டி விரத நாட்களில் (நவ. 8 - 13) தினமும் காலை, மாலையில் படித்தால் நலம் சேரும்

* செந்தில்நகர் வாழும் சேவகனே! சூரனுக்கு பெருவாழ்வு தந்தவனே! குன்று தோறும் குடிகொண்ட முருகனே! சிவனின் நெற்றிக் கண்ணில் அவதரித்த சிவபாலனே! வடிவேலனே! கார்த்திகைப் பெண்களின் அரவணைப்பில் வளர்ந்த கார்த்திகேயனே! அகத்தியருக்கு உபதேசித்த குருநாதனே! உன் திருவடியைத் தஞ்சம் என வந்து விட்டோம்.

* ஆறுபடை வீட்டில் அமர்ந்திருக்கும் அண்ணலே! திருத்தணியில் வாழும் தணிகாசலனே! பழநி தண்டாயுதபாணியே! தமிழில் வைதாரையும் வாழ வைக்கும் கருணைக் கடலே! சிக்கல் சிங்கார வேலவனே! மயில்வாகனனே! சேவல்கொடி ஏந்தியவனே! உன் சன்னதியில் அடைக்கலம் புகுந்து விட்டோம். நீயே அருள்புரிய வேண்டும்.

* சூரனை அழித்து தேவர்களைக் காத்தவனே! தேவசேனாபதியே! தெய்வானை மணவாளனே! அருணகிரிநாதருக்கு அருள்புரிந்தவனே! ஆறுமுகனே! பன்னிரு கைகளால் வாரி வழங்கும் வள்ளல் பெருமானே! திருமாலின் மருமகனே! ஆனைமுகனின் தம்பியே! குழந்தை தெய்வமே! எங்களுக்கு வாழ்வில் ஆரோக்கியம், செல்வ வளத்தையும் தந்தருள்வாயாக.

* பார்வதி பெற்ற பாலகனே! கந்தனே! கடம்பனே! கதிர்வேலவனே! சிவசுப்பிரமணியனே! செந்துார் முருகனே! குறிஞ்சி ஆண்டவனே! அவ்வைக்கு கனி கொடுத்தவனே! மயிலேறிய மாணிக்கமே! முத்துக்குமரனே! சுவாமிநாதனே! சரவண பவனே! சண்முகனே! தாயினும் சிறந்த தயாபரனே! வாழ்வில் குறுக்கிடும் துன்பங்களைப் போக்கி வெற்றி தருவாயாக.

* வேதம் போற்றும் வித்தகனே! குகனே! வள்ளி மணவாளனே! பக்தர்கள் உள்ளத்தில் வாழ்பவனே! காங்கேயனே! கண்கண்ட தெய்வமே! கலியுக வரதனே! திருப்புகழ் நாயகனே! தமிழ்க் கடவுளே! வாழ்வில் எல்லா வளமும் பெற்று, இன்பமுடன் வாழ வரம் தருவாயாக.


பல்லக்கில் பவனி வரும் புத்தாடை:

நரகாசுரன் இறந்த நாளான தீபாவளிஅன்று மக்கள் புத்தாடை உடுத்தி மகிழ்கின்றனர். திருச்செந்துார் கோயிலிலும் அனைத்து சுவாமிகளுக்கும் தீபாவளியன்று புத்தாடை அணிவிக்கப்படும். அன்று அதிகாலையில் இக்கோயிலிலுள்ள பரிவார தெய்வங்களுக்கு சந்தனக்காப்பு செய்யப்பட்ட பின்னர் புத்தாடைகளை வெள்ளி பல்லக்கில் ஊர்வலமாக எடுத்து வந்து சாத்துவர். முருகப்பெருமான் தெய்வானையின் கரம் பிடிக்க காரணமாக இருந்த தலம் திருச்செந்துார் என்பதால், மாமனாரான இந்திரன் தனது மருமகன் மற்றும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் தீபாவளிக்கு புத்தாடை எடுத்து தருவதாகச் சொல்கின்றனர்.


ஒன்றல்ல... இரண்டு :

குழந்தைகளுக்கு தெய்வங்களின் ஆயுதத்தை பெயராக வைக்கும் வழக்கமில்லை. சூலம், உடுக்கை, ஈட்டி என்று யாராவது பெயர் வைக்கிறார்களா? ஆனால் முருகனின் வெற்றிவேலைச் சிறப்பிக்கும் விதத்தில் வெற்றிவேல், கதிர்வேல், தங்கவேல், சக்திவேல், வடிவேல், முத்துவேல், வேலாயுதம், என பெயரிடுகிறார்கள். கச்சியப்பர் கந்தபுராணத்தில் "திருக்கைவேல் போற்றி போற்றி!" என்று முருகனின் வேலினைப் போற்றுகிறார். முருகனுக்கு ஆறுமுகங்கள் போல வேலுக்கும் ஆறுமுகங்கள் உண்டு.


கண்ணாடிக்கு அபிஷேகம் :

திருச்செந்துாரில் உற்ஸவரான ஜெயந்திநாதர் கந்தசஷ்டியன்று சூரசம்ஹாரம் நிகழ்த்தியபின் பிரகாரத்திலுள்ள மகாதேவர் சன்னதிக்கு எழுந்தருள்வார். அப்போது சுவாமியின் எதிரே ஒரு கண்ணாடி வைக்கப்பட்டு அதில் தெரியும் ஜெயந்திநாதரின் பிம்பத்திற்கு அபிஷேகம் செய்வார். இதை 'சாயாபிஷேகம்' என்பர். 'சாயா' என்றால் 'நிழல்' என்பது பொருள். போரில் வெற்றி பெற்ற முருகனை குளிர்விக்கும் விதமாக இந்த அபிஷேகம் நடக்கும். முருகப்பெருமானே கண்ணாடியில் கண்டு மகிழ்வதாக ஐதீகம்.


சஷ்டி விரதமிருப்பது எப்படி

* கந்தசஷ்டி விரத துவக்கநாளான நாளை அதிகாலையில் நீராடி விரதத்தை தொடங்க வேண்டும். உடல்நிலை காரணமாக சாப்பிட வேண்டி இருப்பவர்கள் பால், பழம் உண்ணலாம்.
* முருக மந்திரங்களான 'ஓம் சரவணபவ' 'ஓம் சரவணபவாயநம' 'ஓம் முருகா' இவற்றில் ஏதேனும் ஒன்றை நாள் முழுவதும் ஜபித்து வர வேண்டும்.
* திருப்புகழ், கந்தசஷ்டிகவசம், ஸ்கந்தகுருகவசம், சண்முககவசம், சுப்ரமண்ய புஜங்கம் பாடல்களில் முடிந்ததை காலை, மாலையில் பாராயணம் செய்ய வேண்டும்.
* தினமும் முருகன் கோயிலுக்குச் சென்று விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்ய வேண்டும்.
* கோயிலுக்கு குழுவாகச் செல்பவர்கள் ஒருவர் முருக நாமத்தைச் சொல்ல மற்றவர் 'அரோகரா' கோஷமிடலாம். உ.ம்: கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா, வேலனுக்கு அரோகரா.
* மலைக்கோயில்களில் மலையை சுற்றிவர மிகுந்த புண்ணியம் உண்டாகும். கோயில்களில் தங்கி விரதமிருப்பது சிறப்பு.


மழலை தரும் மகத்தான விரதம் :

பார்வதிதேவி தாட்சாயினியாக அவதரித்த போது அவளுக்கு தந்தை ஆகும் பாக்கியம் பெற்றவன் தட்சன். ஆணவம் மிக்க அவன், மருமகன் சிவனையே அவமதித்தான். கடவுளை அவமதிப்பவர்கள் மறுபிறவியில் அசுரர்களாக பிறந்து இறைவனால் தண்டிக்கப்படுவர். தட்சன் மறுபிறப்பில் பத்மாசுரன் என்னும் அசுரனாக பிறந்தான். அவனது சகோதரர்கள் அவனைப் போலவே கஜமுகாசுரன், சிங்கமுகன், பானு கோபனும் அதர்ம வழியில் வாழ்ந்தனர்.

இந்நிலையில் சிவன் தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகளை வெளியிடவே, அவை குழந்தைகளாக மாறின. அவர்களை கார்த்திகைப் பெண்கள் பாலுாட்டி சீராட்டி வளர்த்தனர். ஆறு குழந்தைகளையும் ஒன்று சேர்த்த பார்வதி, குழந்தைக்கு 'கந்தன்' என பெயரிட்டாள். கந்தன் அழகானவன் என்பதால் 'முருகன்' என்று அழைக்கப்பட்டார். முருகன் நவவீரர்கள் என்னும் ஒன்பது வீரர்களுடன் இணைந்து போருக்கு தயாரானார். முதலில் பத்மாசுரனின் தம்பியரை அழித்தார்.

மாயையில் வல்ல பத்மாசுரன் மாமரமாக மாறி நின்றான். வேலினால் மரத்தை இருகூறாகக் பிளந்து, ஒரு பகுதியை சேவலாக்கி கொடியாகவும், மறு பகுதியை மயிலாக்கி வாகனமாகவும் ஏற்றுக்கொண்டார். இதனடிப்படையில் சூரசம்ஹார முடிவில் சேவலை பறக்க விடுவதோடு, சூரனின் தலைப்பகுதியில் மாவிலையைக் கட்டி வைப்பர். போரில் மாமரமாக மாறிய சூரனை வேலை ஏவி அழித்ததை நினைவுபடுத்தவே மாவிலை கட்டப்படுகிறது. முருகன் ஆறுமுகம் கொண்டவராக அவதரித்தார். திதிகளில் ஆறாவதுநாள் சஷ்டி. இந்நாளில் விரதமிருந்து முருகனை வழிபட்டால் மழலை பாக்கியம் உண்டாகும்.


ஆறுபடையா... ஆற்றுப்படையா!

முருகனுக்கு பல தலங்கள் இருந்தாலும் ஆறு தலங்களை மட்டும் படை வீடுகள் என அழைப்பர். போர் புரியச் செல்லும் தளபதி, தனது படைகளுடன் தங்கியிருக்கும் இடம் 'படைவீடு'. சூரபத்மனை வதம் செய்யச் சென்ற முருகன், படைகளுடன் தங்கிஇருந்த தலம் திருச்செந்துார். ஆனால், மற்ற ஐந்து தலங்களையும் சேர்த்து, 'ஆறுபடை வீடு' என்கிறோம். வறுமையில் வாடும் புலவர் ஒருவரிடம், அதில் இருந்து மீண்ட புலவர், வள்ளல் இருக்குமிடத்தை சொல்வதாக அமைந்த பாடல்கள் 'ஆற்றுப்படை' எனப்படும். இந்த வகையில் வள்ளல் முருகனிடம் சென்றால் குறை தீரும் என்னும் அடிப்படையில் அமைந்தது திருமுருகாற்றுப்படை. இதில் ஆற்றுப்படை வீடுகள் என ஆறு கோயில்கள் உள்ளன. அவையே 'ஆறுபடை வீடுகள்' என அழைக்கப்படுகின்றன.


'கிழவன்' முருகன் :

சிவனின் இளைய மகனான முருகனை 'குமரன்' (இளைஞன்) என்று சொல்லி தான் கேள்விப்பட்டிருக்கிறோம். முருகனுக்கு 'குறிஞ்சிக்கிழவன்' 'தமிழ்க்கிழவன்' என்றும் பெயருண்டு. 'கிழவன்' என்றால் 'உரிமை கொண்டவன் அல்லது தலைவன்' என பொருள். தமிழ் மொழிக்கு உரியவன் என்பதால் தமிழ்க் கிழவன் என்றும், மலைக்கு உரிய தெய்வமாக விளங்குவதால் குறிஞ்சிக்கிழவன் என்றும் அழைக்கப்படுகிறார்.


கடலில் கங்கை பூஜை :

தினமும் முருகப்பெருமானுக்கு உச்சிக்கால பூஜை முடிந்ததும் ஒரு பாத்திரத்தில் பால், அன்னம் எடுத்துக்கொண்டு மேள, தாளத்துடன் புறப்பட்டு கடலில் கரைக்கின்றனர். இதனை 'கங்கை பூஜை' என்கின்றனர். இங்குள்ள சரவணப்பொய்கையில் ஆறு தாமரை மலர்களில் முருகன் ஆறுகுழந்தைகளாக தவழ, நடுவே கார்த்திகைப்பெண்கள் வீற்றிருக்கும் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.


சந்தனக் காட்டுக்குள்ளே...

திருச்செந்துார் பகுதியினர் பாடும் நாடோடிப்பாடல்களில் 'சந்தனக் காட்டுக்குள்ளே கந்தனை நான் கண்டு கொண்டேன்' என்னும் வரி இடம் பெற்றுள்ளது. முருகன் கோயில் உள்ள பகுதிக்கு சந்தன மலை என்றும் பெயருண்டு. திருப்புகழில், 'சந்தனப் பைம்பொழில் தண் செந்தில்' என்று சந்தன சோலையாக திருச்செந்துார் இருப்பதை 15ம் நுாற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாதர் குறிப்பிடுகிறார். ஆனால் தற்போது சந்தனமரம் அங்கில்லை. பக்தர்களுக்கு சந்தனம், விபூதி பிரசாத தருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganapati sb - coimbatore,இந்தியா
12-நவ-201811:49:19 IST Report Abuse
ganapati sb குழந்தை பாக்கியம் தாமதம் ஆனவர்கள் விரைவில் குழந்தைப்பேறு பெற செய்யவேண்டிய விரதம் கந்த சஷ்டி விரதம். சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பது வெளியில் கந்த சஷ்டியில் விரதம் இருந்தால் உள்ளே அகத்தில் கருப்பையில் குழந்தை உருவாகும் என்பதன் சுருக்கமாம்
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
07-நவ-201812:13:11 IST Report Abuse
Nallavan Nallavan வெற்றிவேல் முருகனுக்கு வணக்கம் ..... தமிழ்க் குமரன் .... தமிழ்க் கடவுள் ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X