நிழல் கதாநாயகர்கள் நிஜமாவது சாத்தியமா?| Dinamalar

நிழல் கதாநாயகர்கள் நிஜமாவது சாத்தியமா?

Added : நவ 10, 2018 | கருத்துகள் (5) | |
அரசையும், அரசு அதிகாரிகளின் செயல்பாடுகளையும் விமர்சித்து வெளியாகும், பத்திரிகைகளாகட்டும், திரைப்படங்களாகட்டும், மக்களின் வரவேற்பை வெகுவாகப் பெறுகின்றன. எதிரிக்கு எதிரி நண்பன் என்பது போல.அரசின் மீது ஆத்திரத்துடன் இருக்கும் மக்களின் மனதினுள் புழுங்கிக் கிடக்கும் ஆதங்கங்கள், அபிலாஷைகள், அரசை தட்டிக்கேட்க ஆளில்லையே என்ற ஏக்கம்... இவையெல்லாம், ஒரு திரைப்படத்தின்
நிழல் கதாநாயகர்கள் நிஜமாவது சாத்தியமா?

அரசையும், அரசு அதிகாரிகளின் செயல்பாடுகளையும் விமர்சித்து வெளியாகும், பத்திரிகைகளாகட்டும், திரைப்படங்களாகட்டும், மக்களின் வரவேற்பை வெகுவாகப் பெறுகின்றன. எதிரிக்கு எதிரி நண்பன் என்பது போல.அரசின் மீது ஆத்திரத்துடன் இருக்கும் மக்களின் மனதினுள் புழுங்கிக் கிடக்கும் ஆதங்கங்கள், அபிலாஷைகள், அரசை தட்டிக்கேட்க ஆளில்லையே என்ற ஏக்கம்... இவையெல்லாம், ஒரு திரைப்படத்தின் கதாநாயகன் மூலமாக நிறைவேறுவதைக் காணும் போது, அது கற்பனையாக இருந்தாலும், பார்ப்போரின் மனதுக்கு இதமாக, கோபத்திற்கு வடிகாலாக இருக்கிறது.இதை நன்கு புரிந்து கொண்ட திரைப்பட இயக்குனர்கள், அதற்கு ஏற்றார்போல் கதையைத் தேடிப்பெற்று படமாக்குகின்றனர். அதில் கதாநாயகனாக நடித்த நடிகர், மக்களுக்கு இந்த சமுதாயத்தை உய்விக்க வந்த உத்தமனாக, காக்க வந்த உண்மைக் கதாநாயகனாகவே காட்சிஅளிக்கிறார்.பழங்கால சரித்திரக் கதைகளை பின்னணியாகக் கொண்ட திரைப்படங்களில் கூட, அரசை எதிர்த்த புரட்சியாளனாக, கதாநாயகன் சித்தரிக்கப்பட்ட போது தான், மக்களின் வரவேற்பைப் பெற்றது. ஆனால், வெளியில் இருந்து விமர்சித்தவர்கள் எல்லாம், அரசு பொறுப்பேற்ற பிறகு, யாரும் கடுமையான விமர்சனத்துக்கு தப்பியதாக வரலாறில்லை, ஒரு சில விதிவிலக்குகளைத் தவிர! அதிகாரிகள் ஆகட்டும், ஆளும் அரசியல்வாதிகளாகட்டும்... வருகிற கோரிக்கை மனுக்களை அப்படியே, 'தக்க நடவடிக்கைக்காக அனுப்பப்படுகிறது' என்று முகாம் எழுத்தர் அல்லது செயலர் எழுதி வைப்பதில், 'இனிஷியல்' என்ற தன் சிறிய கையொப்பத்தை இட்டு, அனுப்பி விடுகின்றனர். எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவம்... ஒரு உயர் அதிகாரியிடம் அவருக்கு கீழ் பணியாற்றும் ஒரு விசாரணை அதிகாரி, ஒரு வழக்கை மிக மோசமான முறையில், அந்த வழக்கின் உண்மைக் குற்றவாளி தப்பிப்பதோடு இல்லாமல், அவர் மோசடியாக ஈட்டிய பணமும் கைப்பற்றப்படாமல் விடுபடும் வகையில் விசாரணை செய்திருப்பதை சுட்டிக்காட்டி, எழுத்து மூலமாகவே புகார் கொடுத்தால், அவரிடம் இருந்து வந்த பதில், 'நான், அவரது விசாரணையில் தலையிட முடியாது' என்பது தான்.இது, மிக கேவலமான, நகைப்புக்கிடமான பதில். 'தலையிடுவது' என்ற வார்த்தையை, மிகச் சாதுர்யமாக, தனக்கு சாதகமாக, பொறுப்பைத் தட்டிக் கழிப்பதற்காக, பயன்படுத்திக்கொண்டார். அவரது பணியே, அவருக்கு கீழ் பணியாற்றும் அதிகாரியின் பணியை கூர்ந்து கவனித்து, மேற்பார்வையிட்டு, தவறு கண்ட இடத்தில் திருத்துவது அல்லது அவரது பணியில் திருப்தியில்லை என்றால், வேறொரு அதிகாரியிடம் அந்தப் பணியை ஒப்படைப்பது; அவர் மிக மோசமாக செயல்பட்டிருந்தால், நேர்மை தவறி பாரபட்சமாக செயல்பட்டிருந்தால், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டியது, இவை தான்.அவருக்கு எந்த அளவுக்கு அதிகாரம் இருக்கிறது என்பது கூட தெரியாமல், தன் பொறுப்பை உணராமல் ஒரு அதிகாரி இருப்பது, எந்த அளவுக்கு பணிகளின் தன்மையை பாதிக்கும் என்பது அவருக்கே தெரியவில்லை.இதைத்தான், கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், 'பொறுப்புள்ள மனிதரின் துாக்கத்தினால் பல பொன்னான வேலையெல்லாம் துாங்குதப்பா' என்று பாடினார்.அந்த முறை தவறிய விசாரணையால், பாதிக்கப்பட்டவரின் நிலையை எண்ணிப் பார்க்க வேண்டும். இதை விட கொடுமை, காவல்துறையில் விசாரணை அதிகாரிக்கு, சட்ட ஆலோசனை கொடுப்பதற்கென்றே நியமிக்கப்பட்டுள்ள, அரசு சட்ட வழக்கறிஞர், அந்த பதிலை சொன்னது தான். நீதிமன்றத்தில் பல வழக்குகள் தோல்வியை சந்திப்பதற்கு காரணம், இதுபோன்ற அதிகாரிகளும், அரசு வழக்கறிஞர்களும் தான். விசாரணை அதிகாரி, அவ்வப்போது அனுப்பும் வழக்கு, நாட்குறிப்பை ஊன்றிப்படித்து, எழுத்து மூலமாக தக்க அறிவுரை வழங்கும் பொறுப்பிலுள்ள உயர் அதிகாரிக்கு, வழக்கு விசாரணையில் போதிய சட்ட அறிவும், அனுபவ அறிவும் இருக்க வேண்டும். அப்போதுதான், அவர் கொடுக்கும் அறிவுரை, சட்டப்படியானதாகவும், நியாயமானதாகவும் இருக்கும். அந்தத் திறமையில்லாதவர்கள், இப்படித்தான் தலையீடு என்ற சொல்லைப் பயன்படுத்தி, தப்பித்துக்கொள்ள நினைப்பர்; நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளாவர்.அரசின் மிக உயர்ந்த பதவிகளுக்கான, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., தேர்வில் வெற்றி பெறுபவர்கள், இளைஞர் சமுதாயத்தில் கல்வியறிவிலும், பகுத்தறிவு மற்றும் நுண்ணறிவில் சிறந்தவர்களாக கருதப்படுவர். அந்தத் தேர்விலேயே ஏற்கனவே வெற்றி(?)பெற்று, ஐ.பி.எஸ்., பதவியில் இருந்த ஒரு அதிகாரி, ஐ.ஏ.எஸ்., பதவி பெற வேண்டும் என்ற ஆசையில், தன் பதவியின் பெருமை, பொறுப்பு ஆகியவற்றை மறந்து, பின்விளைவுகளைப் பற்றி சிறிதும் சிந்திக்காமல், அறிவியல் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தி வெற்றிபெற முயற்சித்திருக்கிறார். இவர் பயன்படுத்திய தொழில்நுட்ப தந்திரம், சில ஆண்டுகளுக்கு முன், இரண்டு திரைப்படங்களில் நகைச்சுவையாக காட்டப்பட்டது. இரண்டு படங்களும் இன்று, மிகப் பரபரப்பாக பேசப்படும் இரண்டு கதாநாயகர்கள் நடித்து, மிகப் பிரபலமான திரைப்படங்கள். இப்போது, அவர் முன்பு பெற்ற வெற்றி மட்டுமல்லாமல், இவரின் தவறுக்கு உடந்தையாக இருந்த பயிற்சியாளரிடம், பயிற்சி பெற்றவர், இவரும், இவரது மனைவி பெயரில் நடத்தி வரும் பயிற்சி நிலையத்தில், இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் வெற்றியும், சந்தேகத்துக்கு இடமாகிவிட்டது. அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், சமீபகாலமாக அடிக்கடி சாலை மறியல், தீக்குளிப்பு போன்ற போராட்டங்களில் ஈடுபடுவதும், அதிகாரிகளுடன் வாய் தகராறில் ஆரம்பித்து, கைகலப்பு வரை போய் விடுவதில், திரைப்படங்களின் தாக்கமும் உள்ளது, என்பதை மறுக்க முடியாது. ஒருபக்கம் ஊடகங்கள், மக்களை விழிப்புணர்வு அடையச் செய்வது என்ற போர்வையில், வன்முறைக்கு அவர்களை ஆயத்தம் செய்துக் கொண்டிருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை. அதேநேரத்தில், காலத்தின் சூழலைப் புரிந்துக் கொள்ளாமல், அரசு அதிகாரிகள் எல்லாம் தங்களின் ஆசைக்கும், சுயநலத்துக்கும் ஒரு வரம்பை ஏற்படுத்திக் கொள்ளாமல், சிக்கலில் மாட்டிக்கொள்ளும் நிகழ்வுகளும் அரங்கேறிக் கொண்டு தான் இருக்கின்றன. நாளுக்கு நாள் அவர்களின் மெத்தனமும், பொறுப்பின்மையும் அதிகரித்துக் கொண்டு தான் போகின்றன. அதை வெளிச்சம் போட்டுக்காட்டும் செய்திகளும், திரைப்படங்களும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வரவேற்பை பெறுகின்றன. எங்கோ, அங்கொன்றும் இங்கொன்றுமாக, சில அதிகாரிகள் தவறு செய்தது செய்தியாக வந்த நிலை போய், அங்கொன்றும் இங்கொன்றுமாக, விஜய குமார், சகாயம், ரூபா போன்ற நல்ல அதிகாரிகள் அடையாளம் கண்டுகொள்ளப்படுகின்றனர். அவர்களையும் மையமாக வைத்து, திரைப்பட இயக்குனர்கள் படம் எடுத்து, தங்களின் வியாபாரத்தை வளப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.அரசு அதிகாரிகளுக்கு, மக்கள் ஒத்துழைக்காமல் நடப்பதற்கு காரணம், அவர்கள் பொதுமக்களிடம் நெருக்கமில்லாமல் இருப்பதும், அலட்சியப்படுத்துவதும் தான். தங்கள் பொறுப்பில் இருக்கும் மக்களிடம், நட்புடன் இருக்க வேண்டிய களப்பணியாளர்களான காவலர் முதல், ஆய்வாளர் வரை, வி.ஏ.ஓ., முதல், தாசில்தார் வரை, நல்ல முறையில் பழகி, உதவி செய்து, நற்பெயர் சம்பாதித்து வைத்திருந்தார்களேயானால், பிரச்னை வரும் போது அதை தீர்த்து வைக்க, அவர்களுக்கு உடன் நின்று, மக்கள் செயல்படுவர், ஒத்துழைப்பர்.பொதுமக்கள் ஏதாவது ஒரு கோரிக்கையுடன் அவர்களை அணுகும் போதெல்லாம், 'அய்யா கலெக்டர் மீட்டிங் போயிருக்கார்; எஸ்.பி., மீட்டிங் போயிருக்கார்' என்ற பதில்களைக் கேட்டு கேட்டு, மனம் வெறுத்துப்போன மக்கள், அவர்களைத் தங்கள் இடத்துக்கு வர வைப்பதற்கு ஒரே வழி, சாலை மறியல் தான் என்று முடிவெடுக்கின்றனர்.தலைவர்கள் எனக் கூறிக்கொள்பவர்கள், தம்மிடம் உள்ள சில நல்ல பழக்க வழக்கங்களுக்காக மதிக்கப்படுபவர். ஆம்... இறைவன், இயற்கை அவர்களுக்கு வழங்கியுள்ள வரப்பிரசாதம், அடுத்தவரைக் கவர்ந்திழுக்கும் பேச்சு, தவறுகளைச் சுட்டிக்காட்டும் துணிவு. இதை மூலதனமாக வைத்து தான், ஒவ்வொரு அரசியல்வாதியும் பொது வாழ்க்கையில் நுழைகிறார். திரைத்துறையில் இருந்த போது, மக்களின் ஏகோபித்த அபிமானத்தையும், ஆதரவையும் பெற்றிருந்த, எம்.ஜி.ஆர்., - என்.டி.ஆர்., போன்றவர்கள் கூட, அரசியல் வாழ்க்கைக்கு வந்ததும், அதில் ஒரு பகுதியை இழந்து, பல எதிர்ப்புகளைச் சந்திக்க நேர்ந்தது என்பதும், மறுக்க முடியாத உண்மை. முழுக்க முழுக்க வில்லனாகவே சித்தரிக்கப்பட்ட, நம்பியாரிடம் இருந்த நல்ல குணங்கள், பல கதாநாயக நடிகர்களிடம் கிடையாது என்பதை, அறிவுப் பூர்வ சிந்தனையாளர்கள் அறிவர். எனவே, திரைப் படம் வேறு, நிஜ வாழ்க்கை வேறு. திரைப்படம் என்பது, மக்கள், ஒரு கலைஞனின் தோற்றத்தை நினைவில் நிறுத்திக்கொள்ள கொடுக்கப்பட்ட வாய்ப்பு தானே தவிர, அவரது உண்மை இயல்பையும், பண்பையும் வெளிக்காட்டும் ஆதாரம் இல்லை என்பதை, நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
மா.கருணாநிதி
காவல்துறை கண்காணிப்பாளர் - ஓய்வு


இ - மெயில்:spkaruna@gmail.com

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X